ஒரு நாள் போட்டி கதை: இருளின் ஒளி

by admin 2
26 views

எழுதியவர்: புனிதா பார்த்திபன்

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் மரணித்த கர்ப்பிணியோடு!

நேரம் பதினொன்றைத் தொட்டு கடும் இருளைக் கசிய செய்திருந்தது. காலம் காலமாக கதைகளில் சொல்லப்படும் இரவுப் பயணிகளான பேய் போல், அந்த தேசிய நெடுஞ்சாலையில் பெருத்த மூட்டைகளை முதுகில் சுமந்து, பேயுருவமாய் இருளைக் கிழித்து விரைவு தொடர் வண்டி வேகத்தில் பறந்து கொண்டிருந்தன சரக்கு லாரிகள்.
நெடுஞ்சாலை ஓரத்தில், தேநீர் ஏந்திய மிதிவண்டியோடு ஒதுங்கி நின்றிருந்த ஒரு முதியவரின் அருகே, முன்னே சென்ற ஒரு லாரி வேகம் குறைத்து நிற்க, தானும் ஓரமாய் நிறுத்தினான் சுந்தரம்.
“அட சுந்தரம்தானா! என்னையா சட்டையெல்லாம் பளிச்சுன்னு இருக்கு. வீட்டுக்காரம்மா உபயமா?” என வாயில் ஒரு சிகரெட்டைக் கவ்வியபடி கேட்டான் முதலில் நிறுத்திய லாரியை ஓட்டிவந்த ரவி.
“அட ரவியா! ஆமாயா” என சிரித்தபடி சிறு குவளைத் தேநீரை உறிஞ்ச ஆரம்பித்தான் சுந்தரம்.
“குடுத்து வச்சவன்யா நீ. வீட்டம்மா வேலைக்குப் போகுது, புதுச் சட்டை எடுத்துத் தருது. அதான் சைடு மிரரத் தாண்டி சைடுல பாக்கவே மாட்றீயோ?” என்றபடி சிகரெட்டின் எஞ்சிய உடலை மிதித்து எறிந்துவிட்டு லாரி ஏறிப் புறப்பட்டான் ரவி.
தனது லாரியை உயிர்ப்பித்த சுந்தரத்திற்கு மனைவி ஆனந்தியின் நினைவு சட்டென திரையிட்டது.
உண்மையில் ரவி சொன்னது போல், தான் கொடுத்து வைத்தவன்தான் என நினைத்துக்கொண்டான். அன்போடும், அதன் அடையாளத்தோடும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றுத் தந்தவள். தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியாக இருப்பவள், வீட்டிலும் செவிலிக்கான பொறுமையோடும் புரிதலோடுமே வலம் வருகிறாள்.
இன்று இவர்களின் பதினோராவது திருமண நாளிற்காக புதுச் சட்டையோடு, புதிதாய் அவளையும் தந்து, புன்னகையோடு இரவுப் பணிக்கு புறப்பட்டுச் சென்ற அவள் முகம் நினைவில் வந்து சென்றபிறகு, “அடுத்த கல்யாண நாளைக்குள்ள ஒரு லாரி சொந்தமா வாங்கிடணுங்க” என்றவளின் வார்த்தைகள் அவன் காதுகளுக்குள் ஒலித்தன.

அதற்கான முக்கால் கிணறு தாண்டப்பட்டாயிற்று. நிச்சயமாக இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் லாரி வாங்கிட முடியும். வாழ்வின் அடுத்த படியில் நிச்சயம் ஏறி விட வேண்டும் என அவன் நினைத்துக் கொண்டிருந்த போது ஆனந்தி அலைபேசியில் ஒளிர்ந்தாள்.
“ஏங்க, தூக்கம் வந்தா கொஞ்ச நேரம் ஓரங்கட்டி டீ, காபி எதாவது குடிச்சுட்டு வண்டிய ஓட்டுங்க. இன்னைக்கு பூரா சரியா தூங்கலேல” என்றாள்.
“அது நான் பாத்துக்குறேன். உனக்கு கொஞ்சம் இன்னைக்கு ரெஸ்ட் கிடைக்குமா?”
“இல்லங்க. பன்னெண்டரை போல ஒரு ஹார்ட் சர்ஜரி இருக்கு. நான் ஹெல்ப்க்கு ஆபரேஷன் தேட்டருக்கு உள்ளேயே இருக்கணும். முடிய எப்படியும் மூணு, நாலு மணி நேரம் ஆகிடும்” என்றாள்.
“ப்ச். சரி பாத்துக்க. இடையில எதாவது சாப்பிடு” என்றபடி அழைப்பைத் துண்டித்தவன்,
ஓரத்திலிருந்து நடு சாலையில் ஏறி வேகத்தைக் கூட்டினான். ஒரு மணி நேரப் பயணத்தில் கண்கள் நடனமாடுவது போலிருந்தது. ஓரிடத்தில் நிறுத்தி மறைவாய் சென்று வந்தவன், பாட்டில் தண்ணீரை எடுத்து முகத்தில் அடித்துக் கழுவினான். இனி இடையில் டீ, காபி கிடைப்பது கடினம். தேய்பிறையின் எல்லையில், நிலா ஒளியும் இல்லா அந்த இருட்டை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தான்.
சடசடவென அடித்த காற்று காதை அடைத்தது. ‘கல்யாண நாள்’ என நினைவுகளை மீட்டி பேசிக்கொண்டே இருந்தது, உயிரோடு இணைந்தது என தூக்கமின்றி கடந்திருந்த காலைப் பொழுது கண்களை இழுத்தது. அதோடு, லாரியின் பின்புறத்தில் பொருட்கள் இடித்துக் கேட்கும் சத்தம் அசௌகரியமாய் இருந்தது.
எப்போதும் லாரியை அடைத்து ஏற்றப்படும் சரக்கு, இன்று ஏதோ மர சாமான்கள் என்பதால் லாரியின் பாதிவரையே அடைத்திருந்தது. இறுக்கிக் கட்டாமல் லேசாக அசைந்தபடி வந்த பொருட்கள் லாரி கதவில் இடித்து இடித்து சத்தம் தந்தன.
“ப்ச்” என உச்சுக்கொட்டியபடி, இடம் பார்த்து ஓரங்கட்டியவன், இறங்கிச் சென்று லாரியின் பின் கதவை கீழே இறக்கி மேலே குதித்து ஏறினான். கால் வைத்த இடத்தில் கட்டைபோல் ஒன்று வழுக்கிவிட, வேகமாய் அலைபேசி டார்ச்சை அடித்தவனின் விழிகள் நிலை குத்திப் போயின. “ஆ…” என்ற பேயலறலோடு கத்தியவன் கீழே குதிக்க எண்ணி தடுமாறி விழுந்தான்.
வேகமாய் தன்னை சமாளித்து எழுந்து, நடுங்கிய விரல்களோடு அலைபேசி டார்ச்சை லாரிக்குள் அடிக்க, முகம் முழுவதும் நகக் கீறல்களால் இரத்தம் வழிந்து உறைந்திருக்க, உடைகள் கிழித்தெறியப்பட்டு, விழிகள் நிலைகுத்தியபடி ஒரு பெண் மல்லாந்து கிடந்தாள், வான் நோக்கி வளர்ந்திருந்த பெரும் வயிற்றோடு.
கூர்ந்த கண்ணாடித் துண்டால், குடல் மொத்தத்தையும் யாரோ குத்தி இழுப்பது போல் அவன் உடலும் மனமும் பேய் நடுக்கம் கொண்டிருந்தன. நிலைகுத்தியிருந்த அவள் கண்கள், அவள் இறப்பை உறுதி செய்திருந்தன. சுற்றி சுற்றிப் பார்த்தவனின் கை, கால்கள் செயலிழந்து போயிருந்தன. “யா .. யார் இது?” “யார் இது?” “யார் இங்கு போட்டது? “ஐயோ”,”இப்போது என்ன செய்ய வேண்டும்?”,”என்ன செய்ய வேண்டும்?” என முனகலாய் ஆரம்பித்து, குரலொலியை மெல்ல மெல்ல கூட்டி ஒரு கட்டத்தில் கத்த ஆரம்பித்தவனுக்குப் புரிந்தது, முகம் கழுவுவதற்காக லாரியை நிறுத்தி, அப்படியே உடல் உபாதையைக் கழிக்கச் சென்ற போது, தனது கைப்பேசி கீழே விழுந்து வெகுநேரம் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்,
யாரோ இப்பெண்ணை லாரிக்குள் போட்டிருக்க வேண்டும் என்பது. “இப்போது நான் என்ன செய்வேன்”, “ஐயோ” என விடையறியாது கத்திய மனதிற்கு விடையாய் கைப்பேசியில் அலறினாள் ஆனந்தி.
திடீரென ஒலித்த கைப்பேசி சத்தத்தில் அரண்டு அதைத் தூக்கி எறிந்திருந்தவன், இரண்டு முறை நடுக்கத்தில் தவற விட்டபின் அழைப்பை ஏற்று, “ஆனந்தி” என்றான் அலறல் குரலில்.
“ஆ.. ஆனந்தி, லா.. லாரில ஒரு பொண்ணு, மாசமான பொண்ணு… ஆனந்தி…பொண்ணு” என்றவனின் நா அறுபட்டது போல் வார்த்தை குழறியது.
“என்னாச்சுங்க.. பதட்டப்படாம சொல்லுங்க. மாசமான பொண்ணா. வலி வந்து கூட்டிட்டுப் போறீங்களா? பதட்டப்படாதீங்க” என்றவளின் நிதானக்குரல் அவன் பதற்றத்தை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தியது.
“இல்ல ஆனந்தி” என சற்று தெளிந்த வார்த்தையோடு, தான் நின்றிருக்கும் நிலைமையை  குரல் நடுக்கத்தோடு கூறி முடித்தான்.
அவன் சொன்னதை ஜீரணிப்பதற்கு அவளுக்கு சில நொடிகள் தேவைப்பட்டது. “ஒ.. ஒண்ணும் பதட்டப்படாதீங்க. அந்தப் பொண்ணு உயிரோட இருக்கப்போகுது. பக்கத்துல எதாவது ஹாஸ்பிடல்க்கு உடனே கூட்டிட்டுப் போங்க” என்றாள்.
“இல்ல ஆனந்தி. உடம்பெல்லாம் இரத்தம் வழிஞ்சு காஞ்சு போயிருக்கு. கண்ணு நிலக்குத்தி, துடிப்பு இல்ல. இந்தப் பொண்ண கொன்றுக்கானுங்க.. ரேப்… ரேப் பண்ணி, இரத்தம் அங்கெல்லாம் இரத்தம்” என்றவனின் வார்த்தைகள் ஆனந்தியை அச்சுருத்தியது.

“என்ன மிருகத்தனம்” என அவலப்படும் அதே நேரத்தில், தன் கணவன் மிக எளிதாகக் குற்றவாளியாக்கப்பட்டுவிடலாம் என அவளுக்குப் புரிந்தது. தொடாமல் அப்பெண்ணின் உயிரை மீண்டும் பரிசோதிக்கச் சொன்னாள்.
‘முடிவாகிவிட்டது, இரண்டு மரணம், இல்லை இல்லை இரண்டு கொலை. கணவன் ஓட்டிச் சென்ற லாரியில் அப்பிணம், சுற்றி யாரும் இல்லை. லாரி டிரைவர் என்ற ஒற்றை அடையாளமே போதும் தொன்னூற்றி ஒன்பது, ஏன் நூறு சதவீதமும் அவன் குற்றவாளி என எண்ணப்பட’ என மனதினுள் பல்வேறு கோணங்களில் அவளுடைய எண்ணங்கள் விரிய, நடந்த நிகழ்வினை முழுதாய் உள்வாங்கி யோசிக்கக் கூட முடியாதபடிக்கு,
“ஆனந்தி சிஸ்டர், அங்க ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ண தேடிக்கிட்ருக்காங்க. நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க? டாக்டர் பாத்தா சத்தம் போடப் போறாரு” எனக் கடந்து சென்றாள் மற்றொரு செவிலி.
பன்னிரெண்டில் இருக்கும் சின்ன முள்ளைப் பிரிந்து ஐந்தைத் தொட ஓடிக்கொண்டிருந்தது பெரிய முள்.
“ஆனந்தி, சொல்லு.. நான் என்ன பண்ண? எனக்கு பயமா இருக்கு ஆனந்தி. என்னக் கொலகாரன்னு அடையாளப்படுத்திருவாங்க. ஐயோ… அதுவும் ரேப் பண்ணுனவன்னு. ஆனந்தி…” என்றவனின் குரலுக்கு மறுமொழி பேசும் நிலையில் அவள் இல்லை. அவள் அருகிலே தலைமை மருத்துவர் நின்றிருந்தார்.
மெல்ல அலைப்பேசியைக் காதுக்கு கொடுத்தவள், “ஏங்க, உங்களோட கண்ணியமும், நம்ம கும்புடுற கடவுளும் கண்டிப்பா உங்களக் காப்பாத்தும். அவசரப்படாதீங்க. நிதானமா யோசிச்சு முடிவெடுங்க” என்றவள் அழைப்பைத் துண்டிக்க வேண்டிய கட்டாயத்தில் விடைபெறாமலே துண்டித்தாள்.
சுந்தரத்திற்கு இதயம் நடுங்கி செத்துக் கொண்டிருந்தது. ‘இனி ஆனந்தியைத் தொடர்பு கொள்ள முடியாது. என்ன செய்ய? என்ன செய்ய, யார் இவளை இங்கு போட்டது?’ எனப் பித்தவனாய் பிளிறியவன், தான் முகம் கழுவுவதற்காக லாரியை நிறுத்தி, இறங்கிய இடம் வரை அந்த ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வெறி பிடித்தவன் போல் ஓடினான்.
இருட்டுக்குள் அங்குமிங்கும் தேடினான். எதுவும் தென்படவில்லை. மீண்டும் லாரிக்கு வந்தவனுக்கு வெளிச்சம் அடித்து அந்த உருவத்தைப் பார்க்க பெரும் அச்சமாக இருந்தது. மின்னல் வேகத்தில் சில லாரிகள் கடந்து சென்றன. சந்தேகமாய் யாரும் லாரியை நிறுத்தி விசாரிக்கும் முன் இங்கிருந்து புறப்பட வேண்டும் என நினைத்தவன், ‘இல்லை, இல்லை. நான் புறப்படக்கூடாது. இங்கு தான் இப்பெண்ணைப்
பார்த்தேன். நிகழ்வு இந்த ஒரு கிலோ மீட்டருக்கு உள்ளாகத் தான் நடந்திருக்க வேண்டும்.

இதைவிட்டு நகர்ந்தால் சந்தேகமேயின்றி குற்றவாளியாக்கப்படுவேன்’ என நினைத்தபடி மீண்டும் இருட்டுக்குள் ஓடினான்.
‘எங்கு செல்வது, யாரை அழைப்பது, காவல்துறைக்கு அழைக்கலாமா?  ஆனால் தகவல் அங்கு சென்றால் விசாரணையேயின்றி நான் தான் இதை செய்தேன் என்றாகும்’ என எண்ணியவன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காவல்நிலையப் படி ஏறி அடிவாங்கும் அளவுக்கு சம்பவம் நேர்ந்திருந்ததை நினைத்துக் கொண்டான்.
மூன்று மாதங்களுக்கு முன்பு ஓர் இடத்தில் லாரி ஓட்டுநர்கள் உட்பட்ட பலரை, விபச்சார வழக்கில் காவல்துறை கைது செய்ய வந்திருந்தது. ஒருசில லாரிக்காரர்கள், சாலையோரத்தில் தவறிழைப்பதற்காக இறங்கியிருக்க, இவன் டீ குடிப்பதற்காகத்தான் அங்கு இறங்கியிருந்தான். சுற்றி வளைத்த காவல்துறையின் கையில் காரணமின்றி பிடிபட்டவன், எவ்வளவு வாதாடியும் தவறிழைத்தவனாக அறிவிக்கப்பட்டு அவன் புகைப்படமும், கையெழுத்தும் இதோ இங்கு சுற்றுவட்டாரத்தில் இருக்கும் ஒரு காவல் நிலையத்தில் பதியப்பட்டுவிட்டது.
இந்நிகழ்வை எண்ணிப் பார்த்து காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளும் எண்ணத்தை கைவிட்டபடி, ‘வேறு என்ன செய்வது? என்ன செய்வது?’ என புலம்பியவனின் வாழ்க்கை பயம் மனதின் அறத்தை அசைத்துப் பார்த்தது. கடந்த மாதம் சேலத்தில் நடந்ததாக கேள்விப்பட்ட ஒரு நிகழ்வு அவன் கண் முன் வந்தது. கடன் பிரச்சனையில் ஒருவனைப் பிடித்துச் சென்ற கும்பல், அவனுடைய கை, கால்களைக் கட்டி, வாயைப் பொத்தி ஹைவேஸில் போட்டுச் சென்றதில், வாகனங்களில் அடிபட்டு, ரோட்டோடு
ஒட்டிப்போன உடலை மீட்கக் கூட முடியவில்லை எனப் படித்த செய்தி அவனைத் தூண்டியது.
அவ்வெண்ணம் தோன்றியதும் பதறிய மனம் அடங்கி, செயல்படுத்த ஆயத்தமாகு என அவனை வற்புறுத்தியது. எதிர்பாரா நிகழ்வு, பிண பயம், வாழ்க்கை அச்சுருத்தல் எல்லாம் சேர்ந்து அவனை ‘இதிலிருந்து எப்படியாவது தப்பி’ என வரம்பின்றி சிந்திக்க வைத்தன. ‘இப்பெண்ணைக் கொன்றது நானல்ல எனும் பட்சத்தில், இப்போது அவளை நான் சாலையில் வீசி, அவள் அடிபட்டுக் கிடந்த பின் குற்றம் விசாரிக்கப்பட்டால்கூட தான் குற்றவாளியாகும் வாய்ப்பு குறைவு. குற்றவாளிகள் பிடிபட்டு உண்மையைச் சொன்னாலும், லாரியின் வேகத்தில் கிடத்தப்பட்ட சடலம் தானாக விழுந்திருக்கலாம்
எனும் முடிவுக்கு வர வாய்ப்பிருக்கிறது’ என அரை மணி நேரமாய் பல்வேறு சிந்தைகளைக் கசக்கி நுகர்ந்தவன், பெருமூச்சு விட்டபடி அருகே வந்து அப்பெண்ணை எட்டிப் பார்த்தான்.

“சீ.. என்ன கேவலமான எண்ணம்? ஏற்கெனவே ஈருயிராய் உருக்குலைக்கப்பட்டவள் அவள். அவளைப் போய்…ச்சே..எப்படி இத்தனை கேவலமாய் நான் யோசிக்க ஆரம்பித்தேன். ஐயோ” என அரற்றியவன், அப்பெண்ணிற்கு முன் கையெடுத்துக் கும்பிட்டு, மாறி மாறி கன்னங்களில் அடித்துக் கொண்டான்.
தலை சுற்றியது, கடந்து சென்ற லாரிகள் பெரும் ஹாரன் அடித்தபோதெல்லாம் உடல் நடுங்கியது. ‘புரியவில்லை புரியவில்லை’ எனத் திக்குத் தெரியாமல் திணறியவன் திண்டாடினான். மணி இரண்டைத் தொட்டிருந்தது. ‘அவ்வளவு தான், இனி நானே குற்றவாளியாக்கப்படுவேன். பிள்ளைகள் என்ன செய்யும். விசாரணையில் என்னைக் கொன்றாலும் கொன்றுவிடுவார்கள். இல்லையெனில், கோர்ட், கேஸ் என லாரி வாங்கவென சேமித்த மொத்த பணமும் போகப் போகிறது. கடன்காரனாகப் போகிறேன்’ எனத் தலையில் அடித்து அழுதவன்,
“ஏன் தாயி இந்நேரம் எந்த நாதாரிட்ட சிக்குன. நீயும் போயி, என் வாழ்க்கையையும் சீரழிச்சுட்டியே” என அப்பெண்ணைப் பார்த்து ஓவென அழுதபடி தரையில் அமர்ந்தான்.
நேரம் ஓடியது. முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் கழுத்தை நெறித்தது. ‘உன் கண்ணியமும், கடவுளும் உன்னக் காப்பாத்தும்’ என்ற மனைவின் வார்த்தை நினைவிற்கு வந்தது.
‘மூன்று மாதங்களுக்கு முன்பு அன்றும் கண்ணியம் காத்து தவறிழைக்கவில்லையே. அன்று மட்டுமல்ல இத்தனை ஆண்டு லாரி ஓட்டுனர் வாழ்க்கையில் இடப்பக்கம், வலப்பக்கமிருந்து எத்தனையோ டார்ச் லைட்கள் முகத்தில் அடித்தும் திரும்பிக் கூட பார்த்ததில்லையே. அப்படிப்பட்டவன் விபச்சார வழக்கில் அடைபட்டு அடிவாங்கிய போது எந்த அறமும், கடவுளும் காப்பாற்றியது? இன்று காப்பாற்ற!’ என எண்ணியபடி, யோசிக்கத் திறனற்ற மனதோடு மீண்டும் அப்பெண்ணின் மீது வெளிச்சத்தை அடித்தான்.
அடித்த பெரும் காற்றில், அப்பெண்ணின் கேசம் முழுவதும் முகத்தில் விழுந்து இன்னும் அவளைக் கோரமாக்கியிருந்தது.
ஏற்கெனவே அதிர்ந்து கொண்டிருந்த அவன் உடலில், மீண்டும் அப்பெண்ணைப் பார்த்து எழுந்த தீடீர் அதிர்வும் இணைய, இரத்த அழுத்தம் சரசரவென இறங்கி, பிராணவாயுவை சுவாசிக்க முடியாமல் மூச்சுமுட்ட வைத்தது. கண நொடியிலெல்லால் மயங்கிக் கீழே விழுந்தான். குற்றமும், அதைச் செய்த குற்றவாளியும் என்றபடியான சாயலில் விழுந்து கிடந்தவனுடைய காதுகளில் சற்று நேரத்தில் காவல் வாகனத்தின் சைரன் கேட்டது.
எழவோ, விழி திறவவோ அவனால் முடியவில்லை. இனி, தான் என்றுமே தன் வாழ்வில் எழப்போவதில்லை எனும் எண்ணத்தில் சிந்தை கலங்கி மயங்கியே கிடந்தான்.

கண்விழித்தபோது காவல் துறையின் செங்கற் சுவர்களோடு முதலில் தெரிந்தது, “ஏன்டா, நாயே வீட்ல பொண்டாட்டி இல்ல” என அன்றைய விபச்சார வழக்கில் முட்டியைப் பெயர்த்தெடுத்த அதே இன்ஸ்பெக்டர். ‘முடிந்தது என் கதை முடிந்து போய்விட்டது’ என்றபடி அவன் எழுந்து அமர,
“யோவ், எந்திருச்சு இங்க வா” என அதட்டினார் இன்ஸ்பெக்டர். எழுந்து வந்தவன் அவர் முன் நிற்க, உட்கார கை காண்பித்தவர், “யார் அந்தப் பொண்ணு. எதுக்கு அத லாரியில போட்ட? என்ன பண்ண?” எனக் கேட்டார்.
அவன் எதிர்பார்த்த நொடி வந்தததை உணர்ந்தவனுக்கு, வார்த்தை வரவில்லை. வாதாட மனமும், உடலும் திடமாய் இல்லை.
“சா… சார், எனக்கு எதுவுமே தெரியாது” என்ற வார்த்தைகள் மட்டும் ஒலியின்றி வந்தன. “எதுவும் தெரியாது, பொணத்தப் பார்த்ததும் பொண்டாட்டிக்கு ஃபோன் பண்ண மட்டும் தெரிஞ்சதோ? எங்களுக்கு சொல்லணும் முதல்ல புரியுதா. உன் நல்ல நேரம், அந்தப் பொண்ண கெடுத்து, கொன்னவன்ல ஒருத்தன் ரோந்து போன எங்க ஆள்ட்ட, சட்டையில இரத்தத்தோட மாட்டுனதுனால நீ தப்பிச்ச. இல்லேன்னா நீ தான் உன் லாரில போட்டு அந்தப் பொண்ண சீரழிச்சுக் கொல பண்ணன்னு கேஸாகியிருக்கும். ஏற்கெனவே
அன்னைக்கு இந்தப் பிராத்தல் கேஸூல மாட்னவன்தான நீ” என அவர் கேட்ட போது, அவனுக்கு வெளிவருவதாய் தோன்றிய மூச்சு மீண்டும் அடைத்து அழுத்தியது.
” சா… சார்… அன்னைக்கும் நான் எதுவும் பண்ணல சார்” என்றான்.
“ம், அன்னைக்கும் இதத்தான சொன்ன” என்றவர் அன்று விபச்சார பிரச்சனையில் பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்திய போது, “சார், இந்த மஞ்ச சட்ட போட்ட ஆளு மட்டும் ஒத்துக்கவே மாட்றான் சார்” என்றார் கான்ஸ்டபிள்.
“யாரு, அந்த சுந்தரங்குறவனா? யோவ் அவன் நிஜமாவே அவளுகட்ட போகலையா. மூஞ்சப் பாத்தாலே தெரியல. நா ஸ்பாட்டுக்கு போனப்ப டீ தான் குடிச்சுட்டு இருந்தான். இப்படி நாலு தட்டு தட்டுனாதான் இப்படி கண்ட இடத்துல இவனுங்க இறங்க மாட்டானுங்க. இவனுங்க இறங்குறதுனாலதான அவளுங்க நிக்குறாளுங்க. இவன மட்டும் சும்மா நாலு தட்டு தட்டி கையெழுத்து வாங்கி அனுப்பிரு” என்றபடியே அவனை அனுப்பியிருந்தார்.

” சார், நிஜமா நான் அன்னைக்கும், இன்னைக்கும் எதுவும் பண்ணல சார்” என சுந்தரம் சொல்ல,
“தெரியும்யா. இந்த, நாய் தின்னுட்டுப் போட்ட மிச்சத்தைப் பூன நக்கி மாட்டுனது கணக்கா, இந்த மாதிரி தேடித் தேடிப் போயி பிரச்சனையப் பிடிப்பியா? லாரி சொந்தமா?” எனக் கேட்டார்.
“இல்ல சார்”
“சரியாப் போச்சு. கேஸ் பைனலாகுற வர லாரி கிடைக்காது. ஓனர்ட்ட பேசிக்க. லாரி பத்திரமா இருக்கும், கவலப்படாத. என்ன நடந்துச்சுன்னு உன் கையெழுத்துல எழுதிக்குடுத்திட்டு, வெளிய மீடியாக்காரங்க இருக்கானுங்க அவனுங்கட்டயும் நடந்தத சொல்லு. சொல்லிட்டு….” என யோசித்தபடி நிறுத்தியவரை அதிர்வாய் அவன் பார்க்க, “ம்…சொல்லிட்டு கிளம்பு. ஃபோன்ல எப்பக் கூப்டாலும் அடுத்த அரை மணி நேரத்துல ஸ்டேஷன்ல இருக்கணும். புரியுதா? என்று அவர் சொல்ல,
“சார், இன்னும் கமிஷனர் வந்து விசாரிக்கலையே” என்றார் சப் இன்ஸ்பெக்டர்.
“ஆமா, அவர் வந்தாலும் இதே விசாரணதான. அதான் அந்த நாய்ங்க அப்ரூவர் ஆகிடுச்சுல. வீடியோ வேற எடுத்து வச்சுருக்காணுங்களே பொறிக்கிங்க. இந்தாளு ஒரு ஐ விட்னெஸ் மாதிரி தான. எத்தனை பேர ஸ்டேஷன்ல உட்கார வைக்கிறது. இதென்ன கல்யாண வீடா” என்றவர் கிளம்புமாறு அவனிடம் கையைக் காண்பித்தார். இறுகப் பற்றியிருந்த இதயத்துக்குள் மெல்ல நிம்மதி பரவிய படி அவன் கடந்து செல்ல, ” பாவம், குடும்பஸ்தனா இருக்கான். அவன இங்க உட்கார வச்சு என்னத்தையா பண்ண? அதுசரி, அந்தக் கான்ஸ்டபிள் மனோகர எங்கையா? பொணத்தப் பாத்ததும், அந்த லாரி டிரைவர மாதிரி அவனும் மயங்கி விழுந்துட்டானா, எதுக்கும் போய் பாரு” என்ற இன்ஸ்பெக்டரின் குரலோடு, எதிரிலிருந்த பிள்ளையார் கோயிலில், முதல் அபிஷேகத்திற்கு அடித்த மணியின் சத்தமும் இதமாய் அவன் காதுகளில் விழுந்தது.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!