ஒரு நாள் போட்டி கதை: சொப்பன சுந்தரி

by admin 2
44 views

எழுதியவர்: அருள்மொழி மணவாளன் 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகரோடு!

‘பேசாமல் அம்மா சொன்னதை கேட்டு இருக்கலாம். கேட்காமல் இப்படி நடுவழியில் வந்து மாட்டிக்கொண்டு முழிக்கிறேன்’ என்று தன்னையே நொந்து கொண்டான் சேகர். 

பொங்கலுக்கு தன் சொந்த ஊருக்கு ஐந்து நாட்களுக்கு முன்பே விடுப்பு எடுத்து வந்திருந்தான். நண்பர்களுடன் அரட்டை, சொந்தங்கள் வீட்டில் விருந்து, பொங்கல், ஊர் திருவிழா மற்றும் தங்கையின் நிச்சயதார்த்தம் என்று பத்து நாட்கள் போனதே தெரியாமல் ஓடி விட்டது. 

வரும் திங்கள்கிழமை வேலைக்கு செல்ல வேண்டும். ஆகையால் சனிக்கிழமை வீட்டில் இருந்து கிளம்பினால், ஞாயிற்றுக்கிழமை ஓய்வு எடுத்து விட்டு, திங்கட்கிழமை சுலபமாக அலுவலகம் செல்லலாம் என்று முடிவெடுத்து வீட்டில் கூறியதும், அப்பா “பத்திரமாக போயிட்டு வாப்பா” என்று சொல்லி அமைதியாகி விட்டார். 

ஆனால் அம்மாவும் தங்கையும்தான் “ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளப்ப வேண்டும்? நாளை இரவு கிளம்பலாம் அல்லவா?” என்று தொனதொனத்து கொண்டிருந்தார்கள். 

“பத்து நாட்கள் லீவு கிடைத்ததே பெரிய விசயம்மா. மீண்டும் தங்கச்சி கல்யாணத்திற்கு வேறு லீவு எடுக்கனும். நாளைக்கு கிளம்பினால் திங்கள் காலை லேட்டாகிடும். அப்புறம் ஆஃபீஸ்க்கு லேட்டா போவேன். 

மேலிடத்தில் எல்லோருக்கும் பதில் சொல்லனும். இப்ப கிளம்பினால் நைட் சென்னை போயிடுவேன். மறுநாள் முழுவதும் நல்லா ஓய்வு எடுத்து, டைம்க்கு ஆஃபீஸ் போயிடலாம். அப்ப தான் அடுத்து விடுப்பு கேட்கும் போது தருவாங்க” என்று கூறி பிடிவாதமாக கிளம்பினான். 

அவர்கள் ஊரில் இருந்து சென்னைக்கு நேரடியாக பேருந்து கிடையாது. மதுரைக்கு வந்து அங்கிருந்து தான் செல்ல வேண்டும். அவனைப் போலவே பலர் விடுமுறை முடிந்து வேலைக்கு செல்ல கிளம்பி இருக்கிறார்கள் போல. பேருந்து நிலையமே கூட்டமாக இருக்க, பேருந்து கிடைப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு கட்டத்தில் மீண்டும் வீட்டிற்கே சொன்றுவிடலாமா? என்று கூட நினைத்தான். 

நாளை இதை விட கஷ்டமாக இருந்தால் என்ன செய்வது என்று வந்த பஸ்ஸில் ஓடிச் சென்று ஏறிக்கொண்டான். பேருந்து கூட்டமாக இருந்தது கடைசிக்கு முந்தின இருக்கையில் தான் இடமும் கிடைத்தது. ஏதோ உட்கார இடம் இருக்கிறதே என்று அமர்ந்து கொண்டான். 

காலை பதினோரு மணிக்கு கிளம்பிய வண்டி ஒவ்வொரு ஊருக்குள்ளும் சென்று, இரவு பதினொன்று மணி தாண்டியும் சென்னையை நெருங்கவில்லை. இதற்கு மேலும் இதில் சென்றால் நாளை காலை தான் வீட்டிற்கு செல்வோம் என்று நினைத்த சேகர், பைபாஸ் ரோட்டிலேயே இறங்கிக் கொண்டான். 

அவன் நேரம் ஒரு வண்டியும் அவன் கை காட்டுதலுக்கு நிற்கவில்லை. இரவு ஒரு மணியை தாண்டிவிட்டது நேரம். அந்த வண்டியிலாவது போய் இருக்கலாம் போல இருக்கு என்று நினைத்து, தன் நேரத்தை நொந்து கொண்டு, ஏதாவது வண்டி வருகிறதா? என்று சாலையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தான். 

ஒரு வண்டி மெதுவாக ஆனால் வளைந்து வளைந்து வந்து கொண்டிருந்ததை பார்த்தான். டிரைவர் போதையில் ஓட்டுறானா? இல்ல தூக்கத்தில் ஓட்டுறானா? தெரியலையே! என்று பிளாட்ஃபாரத்தில் ஒதுங்கி நின்று கொண்டு பார்க்க, அந்த கார் அவனின் அருகிலேயே வந்து நின்றது. 

காரின் கண்ணாடியை இறக்கி, உள்ளிருந்த பெண் இவனைப் பார்த்து “உனக்கு கார் ஓட்ட தெரியுமா?” என்றாள். 

அப்பெண்ணின் வார்த்தைகளிலேயே தெரிந்தது அவள் முழு போதையில் இருக்கிறாள் என்று. இவ்வளவு போதையில் ஏன் தனியாக கார் ஓட்டிக் கொண்டு வந்தாள் என்று வெறுமையாக இருக்கும் காரை பார்த்துக் கொண்டு “தெரியும்” என்றான். 

“அப்படி என்றால் வந்து கார் ஓட்டு. என்னை என் வீட்டில் விட்டு விடு. என்னால் இதற்கு மேல் ஓட்ட முடியாது” என்று ஸ்டீரிங் மேலேயே கவிழ்ந்து கொண்டாள். 

‘யார் என்று தெரியாத பெண்ணுடன் எப்படி பயணிப்பது? என்ற ஒரு தயக்கம் இருந்தாலும், அவளை அந்த சாலையில் தனியாக விட முடியாது என்ற எண்ணமும் மாறி மாறி தோன்ற, வேறு வழி இல்லாமல் “சரி மேடம்” என்று அவளை நிமிர்த்தி கூறினான். இருக்கையில் சாய்ந்த பொழுது அவள் முகத்தை கண்டு அதிருந்தான். 

சினிமா உலகின் சொப்பன சுந்தரியாக வலம் வரும் கவர்ச்சி நடிகை ஷோபா. 

சினிமாவில் கவர்ச்சி நடிகை என்பது ஒரு வெளிய அடையாளம் தான். உண்மையில் அவள் கொடிக்கட்டி பறக்கும் … பட நடிகை. 

முன்பு வயதின் கோளாறினால் நண்பர்களுடன் சேர்ந்து சேகரும் அவளது வீடியோக்களை பார்த்திருக்கத்தான் செய்தான். அப்படிப்பட்ட பெண்ணுடன் எப்படி செல்வது என்று அடுத்த தயக்கம் வந்துவிட்டது. அவன் சரி என்றதும் தள்ளாடி இறங்கி, மறுபுறம் வந்து அமர்ந்து கொண்டாள். இப்பொழுது அவனல் மறுக்கவும் முடியாது. தனது பையை காரின் பின்புற இருக்கையில் போட்டுவிட்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டான். 

“மேடம் உங்க அட்ரஸ் சொன்னீங்கன்னா? நான் கொண்டு போய் விட வசதியாக இருக்கும்” என்று கேட்க, 

அவள் உளறலாக அவளது முகவரியை கூறினாள். 

அவள் கூறிய முகவரிக்கு கூகுள் மேப் போட்டுவிட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான். 

பணக்காரர்கள் வசிக்கும் ஏரியாவில் தான் அவளது தனி பங்களா இருந்தது. 

அவளது காரைக்கண்டதும் வாட்ச்மேன் கதவை திறந்து விட்டுவிட்டு, இவனை ஆராய்ச்சியாக பார்த்தான். 

அவனது பார்வையே இன்று இவனா என்பது போல் இருப்பதை கண்டு இவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. 

காரை நிறுத்திவிட்டு அவளை எழுப்பினான். அரைகுறையாக கண்விழித்து, தன் கைப்பையில் இருந்து சாவியை எடுத்து அவனிடம் கொடுத்து, “கதவை திற மேன் என்றாள். 

அவன் கதவை திறந்ததும் “என்னை உள்ளே கூட்டிட்டு போ” என்று காரிலேயே சாய்ந்து நின்று விட்டாள். அவளை விட்டு விட்டு செல்லலாம் என்று நினைத்தவன் அவள் நின்ற நிலையை கண்டு அப்படியே விட்டுச் செல்ல மனமில்லாமல், அவளை கை தாங்கலாக அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றான். 

அவளை சோபாவில் உட்கார வைக்க, “என்னுடைய அறை மாடியில் என்று கையை காண்பித்தாள்” 

‘இது வேற’ என்று நினைத்துக் கொண்டே அவளை அழைத்துக் கொண்டு அவளது அறையில் படுக்கையில் படுக்க வைத்து நிமிர, அவனையும் சேர்த்து படுக்கைக்குள் இழுத்தாள் ஷோபா. 

தொப் என்று அவளது செயலில் தள்ளாடி அவள் மீது விழுந்த சேகர், பதறி எழுந்து அமர்ந்தான். 

“சாரி மேடம். தெரியாமல் விழுந்துட்டேன்” என்றான்.

“மேடம் என்று சொல்லாதே ஹேண்ட்சம். நான் இன்று உனக்கு ஸ்வீட்டி. ப்ளீஸ் டேக் மீ” என்று இரு கைகளையும் விரித்து அவனை தன்னை அணைக்க அழைத்தாள். 

“மேடம் ப்ளீஸ். இது ரொம்ப தப்பு, நான் கிளம்புகிறேன்” என்று வெளியே செல்ல முயன்றவனை இழுத்து,

“என்னை பத்திரமா கொண்டு வந்து விட்டதற்கு என்னை எடுத்துக்கோ” என்று கூறி தன்னுடன் இருக்குமாறு கட்டாயப்படுத்த தொடங்கினாள். அவனை கட்டிப்பிடித்து அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து அத்துமீரா தொடங்கினாள். 

அவளிடமிருந்து சமாளித்து அவளை அறைக்குள் தள்ளிவிட்டு கதவை பூட்டிவிட்டு வெளியே வந்து விட்டான் சேகர். 

“ஏய் மேன், கதவை திற டா” என்று கதவை தட்டிய ஷோபா அவனை தன்னுடன் படுக்கைக்கு வரும் படி அழைக்க ஆரம்பித்தாள். 

வீட்டை சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் இல்லாத தனிமையான வீடு. அப்படியே அவளை விட்டு செல்லவும் மனதில்லை. வாட்ச்மேன் பார்வையும் சரியில்லை. இத்தனை நாள் அவன் தான் வீட்டை காவல் காத்தான் என்றாலும் இன்று அவள் இருக்கும் நிலையில் இப்படி விட்டுச் செல்வது சரியா என்று எண்ணம் தோன்றியது. 

அவளோ கதவைத் தட்டி தட்டி ஓய்ந்து போய்விட்டாள் போல். சிறிது நேரத்திற்கு பிறகு சத்தமே இல்லை. 

கொஞ்ச நேரம் அவனும் அமைதியாக இருந்தான். அறையில் இருந்து எந்த சத்தமும் வராததால், மெதுவாக கதவை திறக்க, கதவின் கீழேயே படுத்து உறங்கிக் கொண்டிருந்தாள் ஷோபா. 

அவளைத் தூக்கி படுக்கையில் போட்டு, போர்வை எடுத்து அவளை மூடி விட்டு வெளியே வந்தான். காலையிலிருந்து சரியாக சாப்பிடாதது வயிறு பசித்தது. ஏதாவது சாப்பிடலாம் என்றால், தெரியாத வீட்டில் இப்படி செய்யலாமா? என்றும் எண்ணம் தோன்றியது. பசி அதிகரிக்க வேறு வழியின்றி சமையலறை சென்றான். 

என்ன இருக்கிறது என்று பார்த்து இரண்டு ஸ்லைஸ் பிரெட்டும் முட்டையும் போட்டு சாப்பிட்டுவிட்டு ஹாலில் இருந்த சோபாவிலேயே படுத்து விட்டான். 

பகல் முழுவதும் பயணம் செய்ததில், உடல் அலுப்பு அதிகம் இருக்க படுத்தவும் சற்று நேரத்திற்கெல்லாம் உறங்கி விட்டான். 

அசந்து உறங்கிய சேகர் உறக்கம் கலைந்து கண் விழிக்கையில், அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஷோபா. 

அவளைக் கண்டு பயந்த சேகர் “சாரி மேடம். உங்க பர்மிஷன் இல்லாம இங்க தங்கிட்டேன், சாரி” என்று மீண்டும் மன்னிப்பு கேட்டு எழுந்து நின்றான். 

“இட்ஸ் ஓகே, உட்காருங்க” என்றாள். 

அவனும் அமைதியாக உட்கார, “என்னை யாருன்னு தெரியுமா?” என்று அவன் முகம் பார்க்க,

“தெரியும் மேடம். சினிமாவில் பார்த்திருக்கிறேன்” என்றான். 

“சினிமாவில் மட்டும்தானா?” என்று அவள் அவனை ஒரு மார்க்கமாக பார்க்க, 

அவன் மௌனமாக தன் பார்வையை அவளிடம் இருந்து திருப்பிக் கொண்டான். 

“அப்போ என்னோட வீடியோஸ் பார்த்து இருக்கீங்க இல்லையா?” என்றாள். 

அவன் அமைதியாகவே நிற்க, “அப்புறம் ஏன் மேன், நேற்று என்னை தனியா விட்டுட்டு இங்க வந்து படுத்த?” என்று கேட்டாள். 

“மேடம்” என்று அவன் அவளைப் பார்க்க, 

“சொல்லுங்க சார். நேற்று நானே வழிய வந்து உங்களுடன் இருக்கத்தானே முயன்றேன். உங்களுக்கு அது நல்ல சான்ஸ் தானே? அதை ஏன் பயன்படுத்திக் கொள்ளவில்லை?” என்றாள். 

“சாரி மேடம். என்னால் அப்படியெல்லாம் இருக்க முடியாது” என்றான். 

“ஏன்? உங்களுக்கு திருமணம் முடிந்து விட்டதா?” என்றாள்.

“இல்லை மேடம். ஆனால் ஊரில் தங்கை இருக்கிறாள். அவளுக்கு திருமணம் முடிந்ததும், என்னை திருமணம் செய்து கொள்ள காத்துக்கொண்டு என் முறைப் பெண் இருக்கிறாள். 

என் தங்கைக்கு எப்படி பிற பெண்களிடம் செல்லாத நல்ல பையன் வேண்டும் என்று நினைக்கிறேனோ? அதேபோல என் மனைவிக்கும் நான் இருக்க ஆசை படுகிறேன், அவ்வளவு தான். அந்த நினைப்பே என்னை தவறு செய்ய விடாது” என்றான். 

தன்னை பார்த்தவுடன் படுக்கைக்கு அழைக்கும் ஆண்கள் மத்தியில் இவன் தனியாக தெரிந்தான். அவனை ஆச்சரியமாக பார்த்த ஷோபா, 

“நான் பார்த்ததில் வித்தியாசமானவன் தான் நீ” என்றாள். “நேற்று இரவு முழுவதும் ஆபாச நடிகையான என்னுடன் இருந்து விட்டு எதுவும் செய்யாமல் போகிறாயே!” என்றாள். 

“நீங்க ஆபாச நடிகைதான் மேடம். அது உங்க வேலையாக தேர்ந்தெடுத்து உள்ளீர்கள். அதை நான் குற்றம் சொல்ல வில்லை. நீங்க சூழ்நிலை காரணமாக கூட இத்தொழிலுக்கு வந்து இருக்கலாம். அதை பற்றி எல்லாம் நான் பேச வில்லை. ஆனால் நீங்க கேமராக்கள் முன்பு மட்டும் அதை செய்யுங்கள். 

மற்றபடி உங்க படுக்கை அறைக்கு யாரையும் அனுமதிக்காதீர்கள். இதை நான் அட்வைஸ்சா சொல்லலை. உங்க நண்பனா கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறி விட்டு, 

“என் பெயர் சேகர். மதுரைக்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்தவன் என்று கூறி தான் வேலை பார்க்கும் அலுவலகத்தின் பெயரை கூறினான். 

நான் சொன்னதை முடிந்தால் கடைபிடியுங்கள். இல்லை என்றால் உங்கள் இஷ்டம். ஒரு நண்பனாக என்னை எப்பொழுதும் தொடர்பு கொள்ளலாம்” என்றான்.

“உங்க நம்பர்” என்று தன் ஃபோனை எடுத்தாள்.

“உடனே முடிவெடுக்காதீங்க. பொறுமையா யோசித்து பாருங்க. அப்புறம் முடிவெடுங்க. அப்புறம் ஃபோன் நம்பர் இருந்தால் தான் பேச முடியுமா? என்று சொல்லிவிட்டு, “நான் கிளம்புறேன்” என்று தனது அறைக்கு கிளம்பினான் சேகர்.

செல்லும் அவனை பிரமிப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஷோபா

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!