காதல் படப் போட்டி கதை: காணாமலே காதல்

by admin 2
30 views

எழுதியவர்: பெரணமல்லூர் சேகரன்

புலனத்தில் மூழ்கிக் கிடந்த என்னை யாழினியைப் பற்றிய நினைவே ஆக்கிரமித்தது. பெயருக்குக் கட்டை விரலால் திறன் பேசியில் புலனக்குழுக்களைத் தள்ளிக் கொண்டிருந்தேன். இப்போது தானாக ஒரு குழுவில் விரல் நின்றது. என் முகம் மலர்ந்தது.

வழக்கம்போல யாழினிதான் இப்போதும் சிறுகதைப் போட்டியில் வென்றிருந்தாள். அவள் முதலாவதெனில் இரண்டாவது மூன்றாவதாகக்கூட நான் வரக்கூடாதா என்று ஆதங்கப்பட்டேன். ஆனால் அவள் வழக்கம்போல முதலாவதாக வந்து பல மலர்ச் செண்டுகளைப் பெற்றுக் கொண்டிருந்தாள். நான் வழக்கம்போல் இருமுறை இதயத்தைப் பறக்க விட்டேன். தனியாக அவளது எண்ணிற்குச் சென்று அங்கேயும் இதயங்களைப் பறக்கவிட்டேன். “மேலும் மேலும் இலக்கியப் பரிசுகளையும் வெற்றிகளையும் குவிக்க வாழ்த்துகள்” என்ற குறுஞ்செய்தி யையும் அனுப்பினேன். அவள் அதைப் பார்த்தவடன் புலனித்தில் கும்பிடு போட்டாள். நான் முறுவலித்துக் கொண்டேன்.

நான் வாழ்த்தாவிட்டாலும் வாரம் முழுவதும் அவள்தான் இலக்கியப் பரிசுகளையும் சான்றுகளையும் அள்ளிச் செல்கிறாள். திங்கள் தோறும் சிறுகதை, செவ்வாய் தோறும் துவக்க வரிக்கான கவிதை, புதன் தோறும் இலக்கியம் தொடர்பான கேள்வி பதில், வியாழன் தோறும் நூல் விமர்சனம், வெள்ளி தோறும் வெண்பா, சனிக்கிழமை தோறும் குறிப்பிட்ட தலைப்புக்கான கவிதை, ஞாயிறு தோறும் ஒளிப்படக் கவிதை என போட்டிகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. அவளோ அனைத்து நாட்களிலும் அனைத்துப் போட்டிகளிலும் முதலாவதாக வந்துகொண்டே இருக்கிறாள். நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். ஆனால் எந்த வாரமும் எந்த நாளும் எந்தப் போட்டியிலும் முதல் பரிசை வென்றதில்லை. சில முறை இரண்டாவது மூன்றாவது பரிசுகளை வென்றிருக்கிறேன். அதற்குக் கூட அவள் வாழ்த்துகளைக் கட்டைவிரலை உயர்த்திக் காட்டியதன் மூலம் உணர்த்தியிருக்கிறாள். அதுவே எனக்கு மகிழ்ச்சியின் உச்சம் கிடைத்த மாதிரி.

அவளுடன் என்றாவது எப்படியாவது பேசிவிட வேண்டும் என்று சென்ற வாரம் தீவிரமாக முயற்சி செய்தேன். பேசியும் விட்டேன். 

“வணக்கம் யாழினியா? நான் சங்கரன் பேசுறேன். நல்லா இருக்கீங்களா? போட்டிகள்ள பரிசுகளையும் சான்றுகளையும் அள்றீங்க. ரொம்ப மகிழ்ச்சி. எப்படித்தான் இப்படி எழுதுறீங்களோ? உங்கக்கிட்ட பயிற்சி எடுக்கணும்னு ஆசை” என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தேன்.

பலமாகச் சிரித்தாள் யாழினி அவளது சிரிப்பைப் பார்க்க கண்கள் அலை பாய்ந்தன. வீடியோ காலாக இருந்தால் வாய்ப்பிருக்கிறது. ஆனால் சாதாரண கால்.
இதுவே முதல்முறையாகப் பேசுவது‌. அவளது எண்ணின் தொடர்பு கிடைத்ததே பெரிய சங்கதி. 

“பயிற்சி கொடுக்கும் அளவுக்கெல்லாம் இலக்கியத்தில் நான் பெரிய ஆளெல்லாம் இல்லீங்க. இலக்கியப் போட்டிக் குழுவுல இருக்கிற பெண் எழுத்தாளர்கள் மொத்தமே மூனு பேர்தான். மத்த நாப்பத்தியேழு பேரும் ஆண்கள்தான். ஒருவேளை பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதற்காகக்கூட நான் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால் உங்களுடைய படைப்புக்கள் பல தருணங்கள்ள முதலாவதாக வரவேண்டிய தரத்துடன்தானிருக்கு. ஆனா என்னவோ பெரும்பாலும் நீங்க ரெண்டாவதாகத்தான் வர்றீங்க. ஆனா பாருங்க இப்பக்கூட இதோ புலனக்குழுவுல உங்க சிறுகதை ரெண்டாவதாதத்தான் வந்திருக்கு. நான் அந்தக் கதையைப் படிச்சேன். உண்மையிலேயே என்னோட சிறுகதையை விட உங்க கதை அற்புதமான அடித்தட்டு மக்களோட வாழ்வியலப் படம்பிடித்துக் காட்டுது. அனேகமாக இதுவரைக்கும் அப்படியொரு பன்னியாண்டி சமூகம் இருக்கிறதப் பத்தியோ அவங்க சாதிச்சான்ற வாங்கறதுல சிரமங்கள் இருக்கிறதப் பத்தியோ யாரும் எழுதல.‌ உங்க கதை அருமையா இருக்கு. ஆனந்தவிகடன், கல்கி, கணையாழி மாதிரி பத்திரிக்கைகளுக்கு அனுப்புங்க. நிச்சயமா இடம் பெறும். வாழ்த்துகள் மனோ” என்றபடி இணைப்பைத் துண்டித்தாள்.

இணைப்பைத் துண்டித்தது ஒருபக்கம் வருத்தத்தைக் கொடுத்தாலும் மனோகரன் என்ற முழுப்பெயரை மனோ என செல்லமாகக் குழைந்து அழைத்த விதத்தில் நான் சொக்கித்தான் போனேன். என் கட்டை விரல் தானாக அவளது புலனப் புகைப்படத்தை நோக்கித் தொட்டது. இப்போது அதைப் பெரிதுபடுத்தியது. இவ்வளவு நாட்களும் இயற்கைக் காட்சிகளையே ஐகானாக வைத்திருந்தவள் இப்போது தனது புகைப்படத்தை வைத்திருப்பதால் ஏதேனும் சிறப்பு அம்சங்கள் இருக்குமோ என்று என் மனம் என்னைத் தூண்டியது. அவளது புகைப்படங்களை ஆராய்ந்தேன். ஏழெட்டுப் படங்கள். எல்லாமே அவளது புகைப்படங்கள் தான்.

சற்று யோசித்த எனது விரல்கள் முகநூலைத் துழாவியது. இதுவரை முகநூலில் அவளைக் காண எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இப்போது அவளது பெயரை தட்டச்சு செய்ததில் நாலைந்து பேர் வரிசை கட்டினர்‌. அவளது பெயரிலுள்ள குழுக்கள் வரிசையாய் வந்தன. அவளது புகைப்படத்தை வைத்து அவளது சரியான முகநூல் கணக்கில் நுழைந்தேன். எனது முகம் மலர்ந்தது. அவளது படத்தை வைத்து அதற்குக் கீழே பிறந்த நாள் கேக்கை வைத்திருந்தாள். அடேயப்பா! ஐம்பதுக்கும் மேற்பட்ட வாழ்த்து மலர்களும் கேக்குளும் நிரம்பி வழிந்தன. 

இப்போதாவது முகநூலில் நுழைந்தோமே என திருப்திப்பட்டுக் கொண்டு எனது வாழ்த்துக் கவிதையை மடமடவெனப் பதிவு செய்து மலர்க்கொத்துகளைப் பதிவு செய்தேன். “நன்றி மலர்கள்” எனப் பதிவிட்டிருந்தாள் யாழினி. எனக்கு மன நிறைவாக இருந்தது. அவளது முகநூல் கணக்கில் அவளது குறிப்புக்களை ஆராய்ந்தேன். அவளுக்கு வயது 24. அவள் தமிழ் இலக்கியத்தில் இப்போதுதான் எம்.பில் பயின்று வருகிறாள். எம்.பில். முடித்த என்னால் வாங்க முடியாத இலக்கியப் பரிசுகளையும் விருதுகளையும் யாழினி வென்றிருப்பது இப்போது ஒரு பக்கம் தாழ்வு மனப்பான்மையைத் தந்தாலும் மறுபுறம் அவள் மீதான ஈர்ப்பைக் கூடியது. அவள் இன்னும் மணமாகாதவள் என்பது உறுதியானது. இருக்கும் ஒரே மூத்த சகோதரனுக்கு மணமாகி விட்டதைப் பதிவு செய்திருந்தாள் யாழினி. அம்மா இல்லை. அப்பா தாசில்தாராக வேலை செய்து வருகிறார். குடும்பப் பின்னணி குறித்த தகவல் தெரிந்ததும் மணமாகாதவள் என்பது தெரிந்ததும் மனசெல்லாம் மத்தாப்பூ ஆனது. 

இரவு மணி பத்தாகியும் உறக்கம் வரவில்லை எனக்கு. இதுநாள்வரை யாழினியின் உருவம் பலவிதமாக எனது கற்பனைத் திரையில் தோன்றிக் கொண்டிருந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அவளது மெய்யான உருவம் திறன்பேசி மூலமாக மனத்திரையில் பதிவானது‌. இதுவரை கற்பனைத் திரையில் பதிவானவற்றைக் காட்டிலும் உண்மையான அவளது உருவம் என்னை வெகுவாகவே ஈர்த்தது. எனவேதான் அவளை எண்ணியபடி மல்லாந்து படுத்துக் கொண்டிருந்த எனது கனவுலகில் யாழினி மெல்ல மெல்ல எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

-கைபேசி சினுங்கியது. எடுத்துப் பார்த்ததும் எனது முகம் தானாக மலர்ந்தது. 

“வணக்கம் யாழினி! எப்படி இருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சி. நீங்க ஃபோன் பன்னதுக்கு.”

கலகலவெனச் சிரித்தபடி,
“உங்க கவிதையை வாசிச்சேன். அற்புதமான படைப்பு. சர்வதேச மகளிர் தினமான இன்னிக்கிப் பொருத்தமான கவிதையைப் போட்டியில் குறிப்பிட்ட தொடக்க வரிய வச்சி அழகா எழுதியிருக்கீங்க. இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை வரிசைப்படுத்தி கவித்துவமா உங்க படைப்பு அருமையா இருந்துச்சி. அதான் ஃபோன்ல வாழ்த்து சொல்லலாம்னு நினைச்சேன். நிச்சயமா நீங்கதான் இன்றைய போட்டியில் முதலாவதா வருவீங்க”

“மிக்க நன்றி யாழினி, நீங்க இன்னிக்கி ஏன் உங்க கவிதையை இன்னும் பதிவு செய்யல. இன்னும் பத்து நிமிடந்தான் இருக்கு. உடனே பதிவு செய்ங்க.”

“கவிதை தயாராத்தான் இருக்கு. எப்படிப் பார்த்தாலும் உங்க கவிதையை விட அது தரமானதா இல்ல. எனக்கு என்னன்னா தரமான உங்க கவிதையை விட்டுட்டு தரமில்லாத என்னோட கவிதையை முதலாவதாத் தேர்ந்தெடுங்கன்னா எனக்கு வருத்தமா இருக்கும். அதான் கவிதையைப் பதிவு செய்வதையே தவிர்த்திருந்தேன்.”

“இல்ல யாழினி, உங்க கவிதையை உடனே பதிவு செய்யுங்க. தேர்வுக்குழு யாருடைய கவிதையை வேணும்னா தேர்த்தெடுக்கட்டும்.  ஆனா நீங்க கட்டாயம் போட்டியில் கலந்துக் கனும். அதான் என்னுடைய விருப்பம்.”

“சரி, அப்படியே செய்றேன்” எனத் துண்டித்தாள் திறன்பேசியை.

இலக்கியப் போட்டி புலனக்குழுவைத் திறந்தேன். அவளது கவிதை பதிவாகியிருந்தது. ஏராளமான விருப்பக் குறியீடுகள் அவளது கவிதைக்கு மளமளவெனக் குவிந்தன‌. முறுவலித்த நான் எனது கவிதைக்கு வந்திருந்த குறியீடுகளைப் பார்த்தேன். அவை யாழினிக்கு வந்ததை விட குறைவுதான். ஆனால் விடிந்தால் தான் முடிவு தெரியும். இப்போது நேரத்தைத் திறன் பேசியில் பார்த்தேன். இரவு பத்து மணி ஆகிவிட்டிருந்தது. 

படுக்கைக்குச் சென்றால் கனவுலகில் யாழினியுடன் சஞ்சரிக்கலாம். அந்த இன்பத்திற்கு ஈடு இணையேதுமில்லை என்று உள்மனம் சொன்னவுடன் முறுவலுடன் படுக்கையறைக்குச் சென்றேன். படுத்த சில மணித்துளிகளில் உறக்கம் என்னைத் தழுவிக் கொண்டது. கூடவே பயணித்த கனவுலகப் பூங்காவொன்றில் நானும் யாழினியும் புல்தரையில் அமர்ந்தபடி ஒருவரையொருவர் பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தோம்.

மார்ச் 9. தனியறையில் தங்கியிருந்த எனது முதல் வேலை தூங்கி எழும்போதே நாட்காட்டித் தாளைக் கிழிப்பதுதான். மார்ச் எட்டின் நாளைக் கிழிக்கும் போதே நேற்றைய இலக்கியப் போட்டியின்‌ முடிவுகளைக் காண மனம் உந்தித் தள்ளியது.

பாத்ரூம் சென்று வந்ததும் மீண்டும் படுக்கைக்கு வந்து படுக்கை மெத்தையில் அமர்ந்தபடி புலனக்குழுவைத் திறந்தேன். என்ன ஆச்சரியம். எப்போதுமே முதற்பரிசு ஒருவருக்குத் தான் கிடைக்கும் என்பதற்குப் பதிலாக நேற்றைய கவிதைக்கு எனக்கும் யாழினிக்கும் முதற் பரிசு அறிவிக்கப்பட்டு இருவரது புகைப்படங்களும் இணைந்து வந்திருந்தது. அதற்குள்ளாக இதுவரை காணாத அளவுக்கு பூச்செண்டுகள் குவிந்திருந்தன. இப்போது எனது எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியைக் காண ஆவல் தூண்டியது.

“யாயும் யாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” 
என்ற குறுந்தொகைப் பாடலைப் பதிவு செய்து மலர்ச்செண்டுகளுடன் நானும் யாழினியும் சேர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தாள் யாழினி.

அடுத்து,
“இன்று பிறந்தநாள் காணும் என் இனியவருக்கு இதயம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்” என்றபடி தனது இதயத்தைப் பதிவு செய்திருந்தாள் யாழினி. என்னைப்போலவே அவளும் முகநூலைத் தேடி எனது பிறந்தநாள் வாழ்த்தைப் பதிவு செய்து என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருந்தாள்.

இலக்கியப் போட்டி புலனக் குழுவில் முதன்முதலாக முதற் பரிசு வென்றது, கூடவே யாழினியும் முதற் பரிசை வென்றதால் இருவரையும் இணைத்து புகைப்படத்துடன் புலனக் குழுவினர் பதிவு செய்தது, யாழினி குறுந்தொகைப் பாடலைப் பதிவு செய்து தனது காதலை வெளிப்படுத்தியது, எனது பிறந்தநாள் வாழ்த்தை யாழினியிடம் முதலாவதாகப் பெற்றது என எல்லாமே அவளை நேரில் காணாமலேயே நிகழ்ந்தது என்மீது ஆச்சரியப் பூச்சொரிய வைத்தது. என்னையே நான் கிள்ளிப் பார்த்துக் கொண்டே படுக்கை மெத்தையில் இருந்து இறங்கி குதித்துக் கும்மாளமிட்டேன் தனியறையில் தானாகவே.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!