எழுதியவர்: தஸ்லிம்
தேர்வு செய்த படம்: படம் 2
“எப்படிடா இந்த அம்மாவோட செலக்சன்?” என்று பெருமிதத்தோடு தன் மகன் பிரவினிடம் சோஃபாவில் அமர்ந்தபடி வினவிக் கொண்டிருந்தார் அவனின் பாசமிகுத் தாயான சுபத்ரா.
“என்ன சுபத்ரா, அவனுக்கு மேரேஜ் ஆகி நாலு நாள் தான் ஆகி இருக்கு. அதுக்குள்ள அவனும் எப்படி நீ கேட்டதுக்கு பதில் சொல்வான்?” என்று மகனுக்கு ஆதரவாக பேசியபடி வந்து அமர்ந்தார் கணேசன்.
“என்னங்க நீங்க? அவனுக்காக நான் அவனுக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும்னு எத்தனைப் பொண்ணுங்களைத் தேடி அவன் சொன்ன எல்லாத்துக்கும் பொருந்தும் படி ஆதிரையைக் கண்டுபிடிச்சுக் கட்டி வச்சுருக்கேன். அதுதான் கல்யாணம் முடுஞ்சு நாலு நாளாச்சே இப்போ கூட அவனுக்கு சொல்ல முடியாதா என்ன?” என்று கேட்க..
“அவன் என்ன லவ் மேரேஜா பண்ணிருக்கான். நம்மப் பார்த்து முடித்து வைத்தப் பொண்ணு. இன்னைக்கு தான ஹனிமூன் போறாங்க. இனிமேல் பேசிப் பழகிப் புரிஞ்சுகிட்டு உன் பையன் உன் கிட்ட பதில் சொல்லுவான். என்னடா பிரவீன் நான் சொல்றது சரிதான” என்று அவர்கள் பேசுவதை சுவாரசியமாக கேட்டுக் கொண்டிருந்த பிரவீனிடம் அட்டகாசமான சிரிப்புடன் அவர் சொல்ல..
“ஆமாப்பா” என்று புன்னகையுடன் பிரவீன் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதிரை அவர்கள் அறையில் இருந்து வெளி வந்தவள் நேராக வந்து சுபத்திராவிடம்,”மாமா நீங்களும் வாங்க” என்று கணேசனையும் அழைத்தவள், அவர் வந்ததும், “என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க” என்றபடி இருவரின் காலையும் தொட்டு வணங்கினாள்.
அதில் முகம் கொள்ளா புன்னகையுடன், “நல்லா இருமா நல்லா இருமா” என்று அவளை ஆசிர்வாதம் பண்ணிய சுபத்ரா, “லவ் மேரேஜாம் லவ் மேரேஜ். இவன் லவ் பண்ணி இருந்தா இப்படி ஒரு அருமையான தங்க புள்ள நமக்கு கிடைச்சு இருக்குமா.. இப்ப எல்லாம் லவ் மேரேஜ் பண்ணிக்கிறவங்க தான் அதிகமா கோர்ட்டு வாசல்ல நிக்குறாங்க. நான் தேடி எடுத்த இந்த தங்கம் கண்டிப்பா அப்படி ஒரு காரியத்தை எப்பவும் பண்ண மாட்டா” என்று சந்தோஷமாக சொன்னவர், “டேய் பிரவீன் ஆதிரையை நல்லபடியா பார்த்துக்கோ.. எல்லா இடத்துக்கும் கூட்டிட்டு போய் காட்டு. அவளை எங்கேயும் தனியா விட்டுட்டு போய்டாத. பத்திரம்” என்று மகனிடம் கட்டளையாக சொல்ல…
“அம்மா உனக்கு நான் மகனா இல்ல ஆதிரை மகளான்னு எனக்கு அப்பப்போ சந்தேகம் வந்துடுது இப்ப எல்லாம்.. பத்து நாள் தானே போறோம் பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வருவேன். கவலைப்படாதீங்க” என்று கிண்டலாக சொல்லவும்..
“சரி சரி கிளம்புங்க நேரம் ஆகிடுச்சு” என்று அவர்களை ஏர்போர்ட் வரையிலும் வந்து வழி அனுப்பி விட்டு வீட்டிற்கு சென்றனர்..
விமானத்தில் ஏறிய இருவரும் ஒருவரை ஒருவர் ஆர்வமுடன் பார்த்துக் கொண்டவர்கள், இருக்கையில் அமர்ந்ததும் இருவரும் கைகோர்த்துக் கொண்டனர்..
ஸ்விட்சர்லாந்து வந்து இறங்கியதும் தங்கள் அறைக்கு வந்தவர்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சி..
இருவரும் கண்ணோடு கண்கள் பார்க்க ஒருவரை ஒருவர் ஆற தழுவிக் கொண்டனர்.
ஆதிரையின் கன்னங்களை இருக்கைகளிலும் ஏந்தியவன் சிரித்தபடி, “எத்தனைப் போராட்டம்” என்றான்.
“ஆமா அத்தைக்கு லவ் மேரேஜ் பிடிக்காதுன்னு எவ்வளவு ட்ராமா பண்ண வேண்டியதாப் போச்சு” என்றாள் அவள்.
“என் பிரண்டு கிட்ட சொல்லி அம்மாவுக்கு போன் பண்ணி உன்னோட போட்டோவ அனுப்பி வச்சு”..
“அவங்களுக்கும் என்னை பிடிச்சு..”
“உங்க வீட்டிலயும் டவுட் வராம..”
“உங்க வீட்டிலயும் டவுட் வராம..”
“அப்பப்பா இப்போ தான் நிம்மதியா மூச்சு விட முடுஞ்சது” என்று சொல்லியபடி தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினர் அந்த காதல் இளஞ்சோடிகள்.
“ஆனாலும் எனக்கு பயமா இருக்குங்க.. அத்தைக்கு உண்மை தெருஞ்சுடுமோன்னு.. அவங்களுக்கு என்னை ரொம்ப புடிச்சிருக்கு. நம்ம இவ்வளவு பொய் சொன்னோம்னு தெரிஞ்சா என்ன ஆகுமோன்னு எனக்கு பயமா இருக்கு” என்று குரலில் சிறு நடுக்கத்துடன் அவள் சொல்ல..
“அதெல்லாம் அவங்களுக்கு எதுவும் தெரியவராது. எல்லாம் பக்காவா பிளான் பண்ணி அரேஞ்ச் மேரேஜ் மாதிரியே பண்ணி முடிச்சாச்சு. ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணலாம்னு பெரியவங்களே சொல்லி வச்சிருக்காங்க. நீ ஒன்னும் கவலைப்படாத. நடந்து முடுஞ்சதைப் பத்தி பேசாம நம்ம இப்போ ஆக வேண்டிய வேலையை பார்ப்போமா!!” என்று இரு கைகளையும் தேய்த்தபடி அவள் மேல் பாய்ந்தான் அவளின் ஆசை காதலன் தற்போதய கணவனான பிரவீன்.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.