காதல் படப் போட்டி கதை: புன்னகை பூவே…

by admin 2
19 views

எழுதியவர்: சந்துரு மாணிக்கவாசகம்

உத்தரகாண்டின் ஏரி நகரமான நைனிடால்.
நைனி ஏரியின் கரையில் கைகளை இறுகக் கட்டிக்கொண்டு உடலையும் உதடுகளையும் நடுக்கிக் கொண்டிருந்தாள் மெர்லின். குளிருக்கு பஷீர் மூட்டியிருந்த தீ எந்தவிதத்திலும் போதாமலிருந்தது.
பஷீருக்கோ யோசித்து யோசித்து மூளை சூடாகிப் போயிருந்ததில் குளிரெதுவும் பெரிதாக உறைக்கவில்லை.
“என்னடா நெருப்பு வச்சுருக்க நீ…? எங்க பாட்டியோட அடுப்பு நெருப்பு ஹீட்ல பத்து பர்செண்ட் கூட வரல”. சொல்லிவிட்டு நக்கலாகச் சிரித்தாள். மெர்லினுக்கு மட்டும் எப்படி இது சாத்தியமாகிறது என
வியந்துகொண்டேயிருந்தான் பஷீர். ‘எத்தனை முயற்சித்தும் என்னால் சாதாரணமாகக்கூட பேசமுடியாத நிலையில், நான் சொன்ன விஷயத்தை இத்தனை லேசாக எடுத்துக்கொண்டு இவளால் மட்டும் எப்படி புன்னகைக்க முடிகிறது?’
“ஏய்… நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லல” என்றாள் அவள். “என்ன கேட்ட?” “ப்ச்… நீ எந்த உலகத்துல இருக்க? நான் கேட்டது எதுவுமே உன் மூளையில ஏறலையா?”
“இன்னொருதடவை கேளேன் ப்ளீஸ்”
“எப்புடியும் நீ பதில் சொல்லப் போறதில்ல. மொக்கை கேள்வின்னு கமெண்ட் அடிச்சுட்டு மூஞ்சியை திருப்பிக்கப் போற. அதை விடு. யோசிச்சு யோசிச்சு என்னதான் முடிவெடுத்துருக்க? அதையாச்சும் சொல்லித் தொலை”
“எந்த முடிவுக்கும் வர முடியல. அதே நெலமையிலதான் இருக்கேன்”
“நான் சொல்ற ஐடியா எல்லாத்தையும் வேணாம் வேணாம்னு ரிஜக்ட் பண்ணுவ… நீயும் ஒழுங்கா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரமாட்ட. என்னதான் பண்ணப் போறியோ தெரியல”
“முடிவுக்கு வரமுடியாம தவிர்க்கறதுக்கு ஒரே காரணம் தம்பியும் தங்கச்சியும்தான். என் இஷ்டத்துக்கு முடிவெடுத்து அப்ளை பண்ணமுடியும்னு தோணல” பெருமூச்சு விட்டாள்.
“தெரியாமதான் கேக்கறேன், நாம லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கு அப்பறமாவா அவங்க ரெண்டுபேரும் பொறந்தாங்க? இவங்களால பிரச்சனை வரும்கறதை பத்தியெல்லாம் யோசிக்காம எப்புடி என்கிட்ட ப்ரப்போஸ் பண்ணின?”
“ப்ளீஸ் மெர்லின்… ஏற்கனவே குழம்பி, நொந்து போயிருக்கேன். மேல மேல கஷ்டப்படுத்தாத”
“நான் உன்னை நோகடிக்கறதுக்காக கேக்கல. பிராக்டிகலாதான் கேக்கறேன். உங்க வீட்ல என்ன மாதிரி பிரச்சனையெல்லாம் வர வாய்ப்பிருக்குன்னு இவ்வளவுநாள் யோசிக்கவே இல்லியா நீ?” பதிலின்றி அமைதியாக இருந்தான்.

“நீ லவ் பண்றதை முன்னாடியே கண்டுபுடிச்சுட்டதா சொல்ற உன்னோட பேரண்ட்ஸ், இத்தனைநாள் பேசாம இருந்துட்டு, கரெக்டா நாம ஆபிஸ் டூர் வரும்போது எதுக்காக அதைப்பத்தி பேசறாங்க? இங்கேயே என்னை எதுவும் கல்யாணம் கில்யாணம் பண்ணிட்டு வந்துருவியோன்னு பயந்தா?” – கேட்டுவிட்டு சிரித்தாள்.
“வெளையாடாத மெர்லின். அப்பா அம்மாவை ஒத்துக்க வைக்கறதுக்கு எப்புடி பேசணும்கறதையெல்லாம்கூட யோசிச்சுதான் வச்சுருந்தேன். தங்கச்சிக்கு மாப்ள வந்துருக்கறதா சொல்லி இப்புடி ஒரு குண்டை போடுவாங்கன்னு சுத்தமா எதிர்பார்க்கல”
“லவ்வை கட் பண்ணிவிடறதுக்கு இந்த மாதிரி மொக்கை சீன்லாம் எத்தனை படத்துல நாம பாத்துருக்கோம். உங்கப்பா சொல்றதை நிஜமாவே நம்புறியா நீ?”
“இல்ல மெர்லின். அவரு சொல்றது உண்மைதான் போலருக்கு. தம்பிகிட்டயும் பேசினேன். நான் அவங்க வீட்டு பொண்ணை கட்டுனா மட்டும்தான் என் தங்கச்சி அவங்க வீட்டுக்கு போகமுடியும்னு சொன்னான்”
“ஒரு கிறிஸ்டியன் பொண்ணை லவ் பண்றியே, உன் தங்கச்சி வாழ்க்கையைப் பத்தி கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தியா?ன்னு அவரு கேக்கவே இல்ல, அப்புடிதான?”
“ஆமா. கேக்கவே இல்ல”
“எனக்கு ஒரு அண்ணன் இருந்தா அவனை உன் தங்கச்சிக்கு கட்டி வச்சுட்டு உன்னை நான் கட்டிக்க விட்ருவாரு உங்கப்பா, அப்புடிதானே?”
அவளது பேச்சின் தன்மை புரியாமல் பார்த்தான். அவளது பேச்சு நக்கலா அல்லது உண்மையை அறிந்துகொள்ள இப்படி அழுத்திக் கேட்கிறாளா எனக் குழப்பமாக இருந்தது. எழுந்து நின்றவளைக் குழப்பத்துடன் நிமிர்ந்து பார்த்தான். கை கொடுத்தாள் அவள்.
“ஓகே… கங்கிராட்ஸ் பஷீர். ஒரு நல்ல பொண்ணோட, ஒரு நல்ல வாழ்க்கையை ஸ்டார்ட் பண்ணு. சந்தோஷமா இரு” கோபமெதுவும் தெரியவில்லை அவளது வார்த்தைகளில்.
“மெர்லின், என்ன மாதிரியான வார்த்தைகள் இது? இதை எப்புடி எடுத்துக்கறது?”
“சாபம், கோபம்னு எதுவும் கிடையாது. எந்த உறுத்தலும் இல்லாம, உன்னோட சிறந்த வாழ்க்கைக்கான வாழ்த்தாவே எடுத்துக்கோ”
“நம்மளோட காதல் பறிபோற வருத்தம் கொஞ்சம்கூட இல்லியா உனக்கு?”
“காதல் அப்புடியேதான் இருக்கும். வாழ்க்கைதான் மாறப் போவுது”
“காம்ப்ரமைஸ் பண்ணிக்க முயற்சிகூட பண்ண முடியல என்னால. ஆனா, நீ இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்து கை குடுத்துட்டு கிளம்பற? என்னால நம்பவே முடியல மெர்லின்”
“உக்காந்து புலம்பி, தேவையில்லாத வார்த்தைகள் பேசி அழுவறதுலயெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல பஷீர். லெட்ஸ் ப்ரொஸீட் ப்ராக்டிகல்லி…”
நடக்கத் துவங்கியவளை மெதுவாகப் பின்தொடர்ந்தான். தங்கையின் வாழ்க்கையைச் சொல்லி தன் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிட்ட பெற்றோரை எண்ணி அழுகை வந்தது அவனுக்கு.

இரவு.
ஓட்டல் அறை.
மெர்லினின் மொபைலில் எண்பதுகளின் பாடல் ஒன்று ரிங்டோனாய் ஒலித்தது.
“சொல்லும்மா”
“அந்த பையன் பேசினானா? என்ன சொன்னான்?”
“பஷீரோட அப்பாவுக்கு நீ குடுத்த ஐடியா ஒர்க்-அவுட் ஆயிருச்சு. நீ சொன்ன மாதிரியேதான் பேசியிருப்பாரு போலருக்கு. அவன் மனசு மாறிட்டான். உன் சர்ச் மெம்பரோட பையன்… அதான், அந்த கோடீஸ்வர க்யூட்டை தாராளமா ஃபிக்ஸ் பண்ணலாம். கல்யாணத்தை மட்டும் பஷீர் கல்யாணத்துக்கப்பறம் வைக்கறமாதிரி பாத்துக்க”
வழக்கம்போல் புன்னகையுடன் ஃபோனை வைத்தாள்.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!