எழுதியவர்: குட்டிபாலா
“என்ன ஆன்ட்டி, தனியாவா வரீங்க என்ற குமாரிடம் “என்னப்பா செய்வது. மகளும் வருவதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஏதோ அவசர வேலை வந்து விட்டதாம். நெருங்கின உறவுக்காரங்க வீட்டு திருமணம். வராமல் இருக்க முடியுமா? நமக்கும் நாலு பேர் வேணும் இல்ல” என்று சொல்லிக் கொண்டே பையை இரயில் பெட்டியிலிருந்து இறக்க முயற்சித்தாள் ராஜி என்ற ராஜலட்சுமி. “விடுங்க ஆன்ட்டி” என்று அந்தப் பையை இறக்கி வைத்த குமார் “எங்கே போகணும்? யாராவது வராங்களா கூட்டிப் போக?” என்று கேட்டான். “நேரா மண்டபத்துக்கு தான் போகணும். கூட்டிப் போக கல்யாண வீட்டுக்காரங்ககிட்ட ஏற்பாடு செய்திருப்பதாக என் மகள் சொன்னாள். ஆனால் யாரையும் காணோம். ஏதாவது ஆட்டோவில் ஏற்றி விட்டால் பரவாயில்லை” என்று கைப்பையிலிருந்து கல்யாண பத்திரிக்கையை எடுத்து அவனிடம் கொடுத்தாள். பத்திரிக்கையைப் படித்த குமார் “ஆன்ட்டி, இந்த மண்டபம் எங்க சித்தப்பா வீட்டுக்கு
பக்கத்தில்தான். சேர்ந்தே போகலாம். உங்களை மண்டபத்தில் இறக்கிவிட்டு நான் போய்க்கொள்கிறேன்” என்றவனிடம் “மகிழ்ச்சி தம்பி.நல்லாயிரு” என்று சொன்னாலும் மனதுக்குள் ‘நல்லதம்பி என்ற கெட்டவனுக்கு இப்படி ஒரு மகன்’ என்று கடவுளின் படைப்பினை நினைத்து வியந்தாள்.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தால் முப்போகம் விளையும் நெல் வயல்களால் நிரம்பியது அவர்கள் கிராமம். ராஜியின் கணவன் ராஜவேல் ராணுவத்தில் பணிபுரிந்து இவர்கள் திருமணம் முடிந்த ஐந்து ஆண்டுகளில் சுகந்தியை இரண்டு வயது குழந்தையாக கொடுத்துவிட்டு இறைவனடி சேர்ந்து விட்டான். அவளிடம் இருந்த கொஞ்ச நிலத்தில் விவசாயம் செய்து கொண்டு ராஜவேலுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைத்த தொகையையும் சிக்கனமாக கையாண்டு ஓஹோ
என்றில்லை என்றாலும் கௌரவமாக வாழ முடிந்தது அவளால். சுகந்தியையும் பி.காம். படிக்க வைத்து முன்னாள் ராணுவ வீரர் மகள் என்ற தகுதி அடிப்படையில் நெல்லையில் ஒரு வங்கியில் வேலைக்கு சேர்த்து விட்டாள். தற்போது நெல்லையில் வாசம். அவ்வப்போது கிராமத்திற்கு சென்று வருவாள். அந்த கிராமத்தில் அமைதியாக வாழும் பலரில் அவள் குடும்பமும் ஒன்று. அதே கிராமத்தில் கணவன் ராஜவேலுடன் படித்தவன் இந்த குமாரின் தந்தை நல்லதம்பி. பரம்பரை பணக்காரன் போதாதற்கு அரசியல் வேறு. ஆளுங்கட்சி எதுவானாலும் ஒட்டிக்கொள்வான். அதை வைத்து ஆற்று மணலை திருட்டுத்தனமாக விற்பது, மதுக்கடை ஏலம், குளங்களில் மீன் பிடி ஏலம் போன்ற எல்லாவற்றிலும்
அவன் வைத்ததே சட்டம். மொத்தத்தில் பெயர் தான் நல்ல தம்பியே தவிர ஊருக்குள் பெரும்பாலோருக்கும் அவன் கெட்ட தம்பியே. அதனால்தான் குமார் வலுவில் வந்து உதவி செய்தது அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
ஆட்டோவில் வரும்போது “ஆன்ட்டி. ஊருக்கு எப்போது திரும்ப வேண்டும்?” என்று கேட்டான்.
“நாளை இரவு இரயிலுக்கு போக வேண்டும்” என்ற போது “கவலைப்படாதீர்கள் ஆன்ட்டி. நானும் அதே இரயிலில்தான் ஊருக்கு திரும்புகிறேன். ஆகவே நானே மண்டபத்திற்கு வந்து உங்களை கூட்டிப் போகிறேன்” என்று அவன் சொன்னது அவளுக்கு அவன் மீதிருந்த மதிப்பினை அதிகரித்தது.
மறுநாள் அவளை மண்டபத்திலிருந்து அழைத்து வந்த குமார் இரயிலில் அவளுக்குரிய பெட்டியில் உட்கார வைத்துவிட்டு தன் இருக்கைக்கு சென்றான். நெல்லை இரயில் நிலையத்தில் ராஜியை வரவேற்ற சுகந்தி “பயணம் சவுகரியமாக இருந்ததா? முதன் முதலாக சென்னைக்கு போகிறாயே -அதுவும் தனியாக என்று இரண்டு நாட்களாக தூங்கவே இல்லைமா” என்றாள். “எனக்கும் கவலையாகவும் பயமாகவுமே இருந்தது. நல்ல வேளையாக தெய்வம் போல் நம்மூர் பையன் வந்து எல்லா உதவிகளையும் செய்தான்” என்றதும் “யாரம்மா அது?” என்று கேட்டாள் சுகந்தி. “நம்மூர் நல்லதம்பியின் மகன்தான்” என்றதும் “என்னம்மா இது. அவர்களை கண்டாலே ஆகாதேமா உனக்கு. ஒரே பள்ளியில் படித்தாலும் என்னிடம் அவனைப் பார்க்கக்கூடாது பேசக்கூடாது என்பாயே. பெயர்தான் நல்லதம்பி. கெட்ட குடும்பம்
என்று கரித்துக் கொட்டுவாயே. இன்று மகன் உனக்கு சிறிய உதவி செய்ததும் கெட்டதம்பி நல்லதம்பியாகி விட்டாரோ!” என்று கோபத்துடன் கேட்டாள்.
“அப்படி சொல்லாதே சுகந்தி. அப்பா கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும் பிள்ளைகள் நல்லவர்களாக இருக்கலாமே” என்றாள். அப்போது அவர்களை நோக்கி வந்த குமார் “ஆன்ட்டீ, இனி பயமில்லை. அதான்
உங்கள் மகள் வந்துட்டாங்களே. நான் வருகிறேன்” என்றான். அவனைப் பார்த்து திரும்பி நின்ற சுகந்தியிடம் “ஒரு நன்றி சொல்லேன் இந்த தம்பிக்கு” என்றதும் அவன் பக்கம் பார்க்காமல்
திரும்பி நின்றபடியே “தேங்க்ஸ்” என்றாள் சுகந்தி.
அதை கண்டு கொள்ளாமல் “பிறகு பார்க்கலாம் ஆன்ட்டி” என்று சொல்லிவிட்டு வேகமாக சென்றான் குமார். “பாவம் அந்தப் பையன். இப்படியா அநாகரீகமாக நடந்து கொள்வது” என்று மகளை கடிந்து கொண்ட ராஜியிடம் “போதும் போதும் இவனுக்கு இவ்வளவு மரியாதை” என்றாள் சுகந்தி.
அன்று மதிய இடைவேளையின்போது மொபைலில் அழைத்த குமார் “சுகா, வருகிற வெள்ளிக்கிழமை பரிசம் போட வரலாமா?” என்று கேட்டான்.
“களுக்” என்று சிரித்த சுகந்தி “இப்போது தானே உன்னை நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள் என் அம்மா. நீ எப்படியோ உங்க அப்பாவை சம்மதிக்க வைத்துவிட்டாய். உங்க அப்பாவை அடியோடு வெறுக்கும் என் அம்மாவை சமாளிக்க நம்ம போட்ட திட்டப்படி கூடவே சென்னை வரை போய் மாமியார் மனதில் இடம்
பிடித்து விட்டாய். நான்கு ஆண்டுகளாக வீட்டுக்கு தெரியாமல் காதலித்து வரும் நமக்கு இப்போது தானே காலம் கனிய தொடங்கி இருக்கிறது. தைப்பூசம் வரை பொறு. வாரம் ஒரு முறையாவது அம்மாவை- உன் மாமியாரை வந்து பார். குறிப்பாக நான் இல்லாத நேரமாக. கொஞ்சங் கொஞ்சமாக மருமகனாக அம்மா மனதில் கெட்டியாக உட்கார்ந்து விடு. நீதான் நல்ல நடிகனாயிற்றே” என்றாள். “என்னை நடிகனாக்கிய இயக்குனரே நீதானே. சரி. அடுத்து எப்போது சந்திக்க போகிறோம்?” என்று கேட்ட குமாரிடம் “வழக்கம்போல் ஞாயிறு காலை ஏதாவது ஒரு தியேட்டரில்” என்று இணைப்பை துண்டித்து விட்டு தன் மேஜைக்கு விரைந்தாள் சுகந்தி.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.