காதல் பேசும் பிப்ரவரி: வளையோசை

by admin 2
20 views

எழுதியவர்: குட்டிபாலா 

களை கட்டியது  கல்லூரியின் ஆண்டு விழா. இருபாலாரும் பயிலும் கலைக்கல்லூரியாதலால் கோலாகலத்திற்கு குறைவில்லை. மாலை 3 மணிக்கு தொடங்கிய விழாவின் கடைசி சில நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் கலைவாணன் பங்கு கொள்ளும் ஓரங்க நாடகம்.
மறுநாள் நெல்லையில் நடக்கவிருக்கும் தன் சகோதரியின் திருமணத்திற்காக அன்றைய இரவு நெல்லை விரைவு வண்டியில் முன்பதிவு செய்திருந்தான்.  நிகழ்ச்சி முடிய தாமதமானாலும் கல்லூரியிலிருந்தே ரயில் நிலையம் செல்ல தயாராக தேவையானவற்றை ஒரு பையில் எடுத்து வந்திருந்தான்.
அடுத்து அவனுடைய நிகழ்ச்சி. தனக்கு மிகவும் பிடித்தமான ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’
வேடமணிந்து மேடையில் நடிகர் திலகம் ஜாக்சன் துரையிடம் பேசும் வசனங்களை அப்படியே பேசி நடித்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றான். ” ஒன்ஸ்மோர், ஒன்ஸ்மோர்” என்ற பார்வையாளர்களின் குரலை லட்சியம் செய்யாமல் இரயிலுக்கு நேரமாகிவிட்டதால் மற்ற நிகழ்ச்சிகளுக்கு காத்திராமல் பையை எடுத்துக் கொண்டு புறப்பட விரைந்தான்.

ஆனால் பை அவன் வைத்த இடத்தில் காணவில்லை. சுற்று முற்றும் தேடினான். எங்கும் இல்லை. நண்பர்களிடம் விசாரித்தும் கிடைக்கவில்லை. மாற்றுடையும்அந்தப் பையில் மாட்டிக் கொண்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்.

நண்பன் ஒருவனிடம் கைச்செலவுக்கு கொஞ்சம் பணம் வாங்கிக்கொண்டு நேரமாகிவிட்டதால் ஆட்டோ பிடிக்க வெளியே வந்தான். தயாராக நின்றிருந்த ஆட்டோவில் ஏறி உட்கார்ந்தான். யாரோ ஒரு குறும்புக்கார மாணவன் ஒலிபெருக்கியில் “விடாதீர்கள், பிடியுங்கள் கட்டபொம்மனை” என்று சொல்வதைக் கேட்டு  கூட்டம் கரவொலி எழுப்பியது. அதைக் கேட்ட ஆட்டோ ஓட்டுநர் இவனைப் பார்த்து “என்ன தம்பி இது வேடம்?”  என்று சிரித்துக் கொண்டே கேட்டார்.

அதற்கு பதில் சொல்லாமல் கலைவாணன்  “அவசரம் உடனே போங்கள்”  என்றதும்  “கட்டபொம்பனை பானர்மேன் துரத்துகிறானா”  என்று கேலியாகக் கேட்டார். கலைவாணனும் “இல்லை இல்லை. ஜாக்சன் படைதான் துரத்துகிறது. உடனே வண்டியை எடுங்கள்” என்று  சிரித்தபடி விரட்டினான். அவரும் “அரசே! இது தங்கள் குதிரை அல்ல.  ஆட்டோ. கொஞ்சம் மெதுவாகத்தான் போகும்” என்று நக்கலடித்தார்.
வழி நெடுக கட்டபொம்மனைப் பற்றியே  பேசிக்கொண்டு வந்த அந்தப் பெரியவரிடம் தன்னுடைய நிலைமையை விளக்கிச் சொன்னான் கலைவாணன். ஆட்டோவிலிருந்து இறங்கி பணம் கொடுக்க வந்தவனைத் தடுத்து “வேடமணிந்திருந்தால் கூட  எனக்கு நீங்கள் வீரபாண்டிய கட்டபொம்மனே.நமது
இன்றைய சுதந்திரத்திற்கு வித்திட்டவர் வீரபாண்டிய கட்டபொம்மன். அவரிடம் காசு வாங்க மாட்டேன்” என்று மறுத்துவிட்டார். “நன்றி”  என்று அவசரமாக சொல்லிவிட்டு ரயிலைப் பிடிப்பதற்கு நடைமேடைக்கு
ஓடினான் கலைவாணன்.

அவன் நடைமேடையை அடைந்தபோது நெல்லை எக்ஸ்பிரஸ் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது.
கட்டபொம்மன் வேடத்தில் தலையில் தலைப்பாகையும் இடுப்பில் உடைவாளும் கத்தியும் கால்களில் வளைந்த காலணியும்  அணிந்து நடைமேடையில் ஓடும் அவனை அனைவரும் அதிசயமாக பார்த்தனர்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் கலைவாணன் இரயிலோடு இணையாக ஓடி தனது பெட்டியை நெருங்கினான். அந்த பெட்டியின் வாசலிலே நின்று யாருக்கோ கையை அசைத்துக் கொண்டிருந்த
அந்தப் பெண் வினோதமாக உடையணிந்து ஓடிவரும் இவனுக்கு கையை நீட்டி  பெட்டியில் ஏற உதவி செய்தாள். அதே நேரம் யாருடைய கைபேசியிலிருந்தோ ஒரு பாடல்— “வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது.  குளுகுளு தென்றல் காற்றும் வீசுது. சில நேரம் சிலு சிலுவென சிறு விரல் படபட துடிக்குது. எங்கும் தேகம் கூசுது” என்ற கமல்ஹாசன்-அமலா நடித்த ‘சத்யா’ திரைப்பட பாடல் இளையராஜாவின் இன்னிசையில் SPB மற்றும் லதாமங்கேஷ்கரின் அமுதக் குரலில் ஒலித்தது.
அந்தப் பாடல் கேட்டதும் இருவர் முகத்திலும் ஒரு மர்மப் புன்னகை.

உள்ளே ஏறியதும் அவளிடம் ‘தேங்க்ஸ்’ என்றான். அவள் கேலியாக சிரித்துக்கொண்டே “என்னங்க இது வேஷம்” என்றாள். “இதுவா? கட்டபொம்மன் அம்மா”  என்றதும் அவள்  “கட்டபொம்மன் என்றால்
‘தேங்க்ஸ்’ சொல்வதும் ‘அம்மா’ என்பதும்  சரியல்லவே” என்றாள். உடனே கலைவாணன் “நன்றி ஜக்கம்மா” என்று சொல்லிவிட்டு தன்னுடைய இருக்கைக்கு சென்றான்.
“சரிதான். நல்ல திமிர்  பேர்வழிதான்.  கை கொடுத்திருக்கக் கூடாது”  என்று முணுமுணுத்துக் கொண்டே தன்னுடைய இருக்கைக்கு சென்றாள். சற்று நேரத்தில் டிக்கெட் சரி பார்க்க வந்த டிக்கெட் பரிசோதரிடம் என்ன சொல்வது என்று யோசித்தான் கலைவாணன். ஆட்டோ ஓட்டுனர் சொன்னது போல ‘கட்டபொம்மனாகவே மாறி பேசிப்பார்க்கலாம்’ என தீர்மானித்து அவரிடம் அதே தோரணையில்
“யாரைக் கேட்கிறாய் டிக்கெட்?” என்று ஜாக்சனிடம் கேட்பது போல் கேட்கவும் சிரித்து விட்டார் அவர்.
இதுதான் தருணம் என்று நடந்தவற்றை அவரிடம் விவரித்து தன் பெயர் கலைவாணன் என்றும் மாற்றுடை, கைபேசி எல்லாமே பையோடு தொலைந்து விட்டது என்றும் மறுநாள் தனது சகோதரிக்கு நெல்லையில் திருமணம் என்பதால் நெல்லை வரை செல்வதற்கு உதவிடுமாறு பணிவோடு கேட்டுக்கொண்டான்.  பதிவு செய்த டிக்கெட் விபரம் எல்லாம் கைபேசியில் மாட்டிக் கொண்டதையும்
சொல்லி கெஞ்சினான். டிக்கெட் பரிசோதகர் சிரித்தபடியே “கட்டபொம்மன்  எக்காரணத்தைக் கொண்டும் கெஞ்ச மாட்டார்” என்றதும் நிம்மதியடைந்தான்.
மேலும் “ஜாக்சன் துரையிடம் நீங்கள் பேசிய வசனத்தை எனக்காக ஒருமுறை இங்கே பேசி நடித்துக் காட்ட முடியுமா?”  என்றதும் மற்ற பயணிகளும் உற்சாகமாக “ஆம், ஆம்” என்றனர்.
‘சரி’ என்று சொல்லி நடித்துக் காட்டினான். அனைவரும் கைதட்டி ரசித்தது அவனுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. வேறு சில பயணிகள் அவரவருக்குத் தெரிந்தவாறு கட்டபொம்மனின் மற்ற
வசனங்களையும் பேச சொல்லி அவனை நடித்துக்காட்ட சொன்னார்கள்.

அவனும் அவர்களின் ஆர்வத்தை மதித்து இயன்றவரை நடித்துக் காட்டினான்.

கடைசியாக ஒருவர் “போருக்குப் போகுமுன் ஜக்கம்மாவிடம் விடைபெறும்போது பேசும் வசனத்தை” நடித்துக் காட்ட சொன்னார். அதைப் பேசி முடிக்கும்போது எதிரே தனி இருக்கையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தபடி ” ஏனோ தெரியவில்லை ஜக்கம்மா. உன்னை உற்று உற்றுப் பார்க்கிறேன்”  என்றதை அவளும் வேறு எங்கோ பார்ப்பதுபோல சிரித்தபடியே  ரசித்தாள்.
ஒருவாறாக எல்லாம் முடிந்து  எல்லோரும் உறங்க செல்லும் பொழுது கிட்டத்தட்ட மூன்று மணி ஆகிவிட்டது. காலையில் ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் சூடான காபியுடன்
வந்து கலையை எழுப்பி “கட்டபொம்மன் காப்பி அருந்துவாரா” என்று சிரித்தபடி அவனை குடிக்க செய்தார். ரயில் நெல்லை நிலையத்தை அடைந்தபோது நடைமேடையில் தயாராகக் காத்திருந்த
மாமன் மகனைக் கண்டதும் இவனுக்கு அதிர்ச்சி. அவனும் இவன் வேடத்தை பார்த்து சிரித்து “நல்லவேளை உன் நண்பன் அப்பாவுக்கு போன் பண்ணியிருந்ததால் நான் மாற்றுடையோடு வந்தேன். இல்லையென்றால் நம்ம ஊரிலும் இதே கோலத்தோடு ஊர்வலம் தான். சரி.உடை மாற்றிக் கொண்டு வா. முகூர்த்தத்திற்கு நேரமாகிறது. உன் அப்பா மிகுந்த கோபத்தில் இருக்கிறார் ‘உன்னைப்போல் பொறுப்பற்ற பிள்ளையைப் பார்த்ததே இல்லை’ என்று உன் அம்மாவிடமும் தங்கையிடமும் புலம்பிக்
கொண்டிருக்கிறார் என்றான்.

திருமண மண்டபத்தில் நுழைந்த அவனை அவன் தந்தை “வாங்க வாங்க” என்று நக்கலாக வரவேற்றார்.
ஒரு வழியாக திருமண நிகழ்ச்சி முடிந்ததும் தந்தையையும் தாயையும் சமாதானப்படுத்துவதற்காக முந்தைய இரவில் நடந்தவற்றை முக்கியமான நெருங்கிய உறவினரிடம் விவரித்தான். 
அவனுடன் கூடவே இரயிலில் வந்த அந்தப் பெண் மாதவியும் இடையிடையே முந்தைய இரவில் நடந்தவற்றைப் பற்றி மிகுந்த ரசனையோடு விளக்கினாள்.
அவளிடம் இரகசியமாக ” ஜக்கம்மா நீ எப்படி இங்கே?”  என்று கேட்கவும் அவள் ” அரசே! நான்  மணமகனின் உறவினள்” என்று  நகைத்தபடி சொன்னாள். “அப்படியென்றால் நாம் ரொம்ப நெருங்கிவிட்டோம்” என்றவனைப் பார்த்து “என்ன? என்ன?”  என்று முறைத்தாள்.

“ஒன்றுமில்லை அப்பவே நெருங்கி விட்டோம் என்று சொன்னேன்” என்று மெல்லிய குரலில் அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லிவிட்டு கூடவே “வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது” என்றான் அவள் கன்னம் சிவப்பதை கள்ளத்தனமாக ரசித்தபடியே. ஐந்து ஆண்டுகளுக்குப் பின்.
 
கலைவாணன்-மாதவி திருமணம்—அதே மண்டபத்தில் முதலிரவு அறைக்குள் நுழைந்த மாதவியின் செவிகளில் “வளையோசை” பாடல் ஒலித்தது. 
சிரித்துக் கொண்டே கலைவாணனைத் தேடினாள் அவள். “வா ஜக்கம்மா” என்றபடி மறைவில் இருந்து வெளிப்பட்டான் கலைவாணன் கட்டபொம்மன் வேடத்தில்.

சிரித்தவள்  “இப்பவும் அதே வேடமும் வளையோசை பாடலுமா!!” என்றதும் “பாட்டை மாற்றுவோம்” என்றான் கலைவாணன்.
“மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்” “இந்தப் பாடல் எப்படி மாதவி”  என்றதும் இருவரும் குலுங்கிக் குலுங்கி சிரித்தனர்.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!