எழுத்தாளர்: எஸ். முத்துக்குமார்
அருண் ஸ்கூட்டர் ல போறேன்னு தான் சொன்னான். தலை கலையும், தூசி படியும்னு கட்டாயப்படுத்தி டாக்சியில் அழைத்து வந்தேன். இதோ பைனல் இன்டெர்வியூ..உள்ளே போயிருக்கான்.
ஜோல்னா பையிலிருந்து பாட்டில் எடுத்து தண்ணீர் குடித்து அப்படியே சேரில் சாய்ந்தேன்….
எங்கப்பா மிகவும் கண்டிப்பானவர். தினம் ஹிண்டு பேப்பர் படிக்கணும், ரெண்டு கிலோமீட்டர் பள்ளிக்கு நடந்து தான் போகணும். போன வருஷம் படிச்ச பழைய புத்தகம் தான் கிடைக்கும். தொண்ணுருக்கு மேல மார்க்ஸ் வாங்கணும்..சீருடையை நானே துவைச்சுகணும் ..தீபாவளிக்கு மட்டும் தான் புது டிரஸ்.. ஞாயித்து கிழமை வீட்டில் இருக்கும் போது எங்க எல்லோரிடமும் சிரித்து பேசுவார். மற்ற நாட்களில் அம்மாவிடம் கூட ஜாடை மொழி தான். அவர் மேல் எங்களுக்கு நெருக்கம் வந்ததில்லை. எப்போதும் சிரித்த முகத்தோடு அம்மா எப்படி இருந்தாள்? எங்க அப்பா இறந்தபோது நான் வேலைக்கு சேர்ந்திருந்தேன். “உன் வேலை எப்படி போறதுன்னு அப்பா கேக்கறார்” னு ஒரு நாள் அம்மா வழி நிறுத்தினாள். “ஏன், அவர் என்னை நேரே கேக்க மாட்டாரோ..” எதிர் கேள்வி கேட்டு போய் விட்டேன். ‘அப்பா தானே..அவரிடம் நானே போய் பேசி இருக்கலாமோ..’ குற்ற உணர்ச்சியில் குறுகினேன்.
அருண் கட்டை விரலை உயர்த்தி புன்னகைத்தபடி வெளியே வந்தான். முதுகோடு அணைத்தேன்..பக்கத்தில் கேன்டீன். அவனுக்கு பிடித்த சாக்லேட் ஐஸ்கிரீம், எனக்கு இஷ்டமான பட்டர்ஸ்காட்ச் இரண்டு கைகளில் ஏந்தி அவனை நோக்கி நடந்தேன்..தன் எதிரே உட்கார்ந்து இருந்தவனிடம் அருண் சொல்லிக் கொண்டிருந்தான்…”என்ன செய்யறது, எல்லாத்துலயும் மூக்கை நுழைப்பாரு..எனக்கும் தெரியும்னு யோசிக்கவே மாட்டாரு…சின்ன புள்ளையாட்டம் நடத்துவாரு.. வேலைல ஜாயின் பண்ணனும் ..ஐ’ம் ஜஸ்ட் வெயிட்டிங் …”
“அப்பா இது சதீஷ், இவருக்கும் கிளியர் ஆயிடுச்சு..” சாக்லேட் கப் ஐ அருணிடம் தந்து, எனக்கு வாங்கியதை சதீஷ் கையில் கொடுத்து, வாழ்த்தி விட்டு, “நீங்க பேசிட்டு இருங்க, வரேன் ..” என்றபடி மெளனமாக வெளியே நடந்தேன்.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!