எழில் கொஞ்சும்
குளிர் பூஞ்சோலை
தெளிந்த நீரோடையில்
ஒற்றை தோணி
இரட்டை துடுப்புகள்
தடாகமெங்கும்
அல்லி மலர்களும்
இலைகளும்
பரிதியின் காதலில்
தணலாய் தகித்து
மலர்ந்து சிரிக்க…
தோணியினுள்ளே
நீயும் நானுமாய்
விழிகளுடன்
நயன மொழி பேசி
இதழ் ஒற்றும் வேளையில்
தேனீக்களின்
ரீங்கார ஓசையில்
விழியுயர்த்தி பார்க்க
மாயச்சுழல் தடாகத்துள் இழுத்தது
கனவோ என்று விழி மலர்த்த…
தடாகத்தை கடந்து செல்லும்
பரிதியின் இல்லாமை
அல்லி மலரை
பசலை நோயாய் வாட்ட
இலையுடலோ வெம்பி நின்றது
கானல் பொய்கையில்…
திடுக்கிட்டு தோணியை பார்க்க
அது வெறுமையாய் இருந்தது…
அன்றொரு நாள்
நாம் பயணம் செய்த
தோணி நீரில் இழுபட
இன்று நிழலாய் நாம்
தன்னந்தனி தோணியும்
கானல் பொய்கையாய்
அல்லி மலர் நீர்த்தடாகம்…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
