“என் ஆயிஷா”
“ஒரு ஆசிரியர் என்பவர் கற்பிப்பவராக மட்டும் இருக்கக்கூடாது கற்றுக் கொள்பவராகவும் இருக்க வேண்டும் ” என்பதை எனக்கு எடுத்துச் சொன்ன புத்தகம் “ஆயிஷா”,திரு.இரா. நடராஜன் அவர்கள் எழுதிய இந்தப் புத்தகம் என்னைச் சிந்திக்க வைத்ததுடன் ஒரு முழு நல்ல ஆசிரியராக மாற்றியது உண்மை. இது கதையல்ல நிஜம் .ஆம் ஒரு மாணவியைக் கலங்கடித்த ஆசிரியர்களின் கதை. ஒரு மிகச்சிறந்த ஆளுமையாக வளர வேண்டிய ஒரு குழந்தையைக் கதிகலங்கச் செய்து மண்ணில் மறையச் செய்த கொடுமை. இக்கதையில் வரும் கதாபாத்திரமான “ஆயிஷா “என்னைக கொள்ளை கொண்டவள் .எத்தனை ஆயிஷாக்களை நான் இது நாள் வரையில் கவனிக்காமல் இருந்து விட்டேன் என்று என்னை அலறவிட்ட கதறவிட்ட ஒரு மிகச்சிறந்த மாணவி. இனி என் பணி நாட்களில் ஒரு ஆயிஷாவைக் கூட நான் இழந்து விடக்கூடாது என்று முடிவெடுக்கச் செய்து என்னை மாற்றிய “என் ஆயிஷா” அவளைப் பற்றிச் சொல்ல வாய்ப்பு கிடைத்தமைக்கு பெரு மகிழ்ச்சி அடைகிறேன் .என் உள்ளத்தில் உறைந்த ஆயிஷாவைப் பற்றிய சிறு பாமாலை..
இயந்திரமாகிய என் பணி நாட்களை
இனிமையாக்கிட கிடைத்த என் பொக்கிஷம்
தவறுகளைச் சுட்டி ஓங்கியே அறைந்துத்
தன்னிகரில்லாப் பணியைச் சிறப்பாகச் செய்ய
உறைந்திட்ட உள்ளமதை உலுக்கி எழுப்பியே
உன்னதப் பணியை உணர்ந்து செய்யத்
தங்கச் சிலையாய் நானும் மிளிர்ந்திடத்
தன்னை வெளிப்படுத்திய என் ஆயிஷா
ஒல்லிய தேகம் துருத்தியப் பற்கள்
ஒருவரும் மயங்காத நினையாத உருவம்
புத்தகம் விரும்பி அறிவுப் பசி
மீத்திறன் அன்பிற்கும் பாசத்திற்கும் ஏக்கம்
ஆசிரியர்களை அலறியே ஓடவைத்த கேள்விகள்
ஆர்வம் மிகுதியால் வாங்கிய அடிகளால்
கதறித் துடித்து மறைந்த ஆயிஷா
கனலாய் நல்லாசிரியர் ஆக்கினாள்
என்னையே !!
புத்தக உலா போட்டி: மு. சாந்தகுமாரி
previous post