எழுதியவர்: புனிதா பார்த்திபன்
மெய் எழுத்து வார்த்தை: ஆயுதம்/ம்
இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு வந்த இடத்தில் இரண்டு மணிநேரம் காத்திருக்க
வேண்டிய சூழ்நிலையாகிவிட, “நீ இங்க வெயிட் பண்ணு. பக்கத்துல ஒரு வேலை இருக்கு,
முடிச்சுட்டு வந்துடறேன்” என்றான் அரவிந்த் தன் மனைவியிடம். “அப்படினா, இந்த
ஏரியாவுலதான் என் ப்ரண்ட் வீடு இருங்குங்க,நான் அவளைப் பார்த்துட்டு வரவா”
எனக்கேட்டு அவள் தன் தோழிக்கு அழைக்க,அதே ஏரியாவில் இன்னொரு தோழியும்
இருப்பது தெரிந்து, மூவரும் பக்கத்திலிருந்த பூங்காவில் சந்திப்பதாய் முடிவானது.இரண்டு
மணிநேரத்தில் அரவிந்த் பூங்காவிற்கு திரும்ப, தோழிகளுடன் ஒரே பெஞ்சில் அமர்ந்து
சிரித்த முகம் மாறாமல் பேசிக்கொண்டிருந்தாள் மனைவி. தின்பண்டத்தைத்,தோழிகளுடன்
பகிர்ந்தபடி, குழந்தை போன்ற உடல் மொழியுடன் பேசிக்கொண்டிருந்தவளின் இத்தகைய
முகத்தை, இவ்வளவு கலகலப்பை இத்தனை நாட்களில் அவன் ஒருதடவை கூடப்
பார்த்தில்லை.அவன் வியந்தபடி நிற்க, முகமெங்கும் மகிழ்ச்சிப்பெருக்கோடு, ஒரு
சேட்டைக்காரக் குழந்தையின் சாயலில் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருந்தாள் அவள்.
அவன் வந்துவிட்டதைத் திரும்பிப்பார்த்தவளின் சிரிப்பு, விளக்கிலிட்ட விட்டிலின் இறகு
போல் கணநொடியில் சாம்பலாகிப்போனது. சிறு புன்னகையோடு அவள் தோழியர்
விடைபெற, விரல் பட்ட அனிச்சமாய் அருகில் நடந்துவந்து கொண்டிருந்தவளின் மெளனம்
அவனை ஆயுதமின்றி கொன்று கொண்டிருந்தது.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.