எழுதியவர்: Dr.சிவகாமசுந்தரி நாகமணி
அம்மா குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டிருந்தாள்.
“என்னாச்சும்மா?” அலுவலகம் போய்விட்டு வந்த சுகன்யா அலுப்புடன் கேட்டாள்.
“எத்தனை தரம் சொல்லியிருக்கேன்? டிபன் பாக்ஸை அலம்பாம வீட்டுக்குக் கொண்டு வரக்கூடாதுன்னு? வயசாகவில்லையா உனக்கு? உன் வயசில் எனக்குக் கல்யாணம் ஆகி நீ பிறந்தாச்சு”, அம்மா நொடித்தாள்.
“இன்னிக்கு பாஸ் லன்ச் முடிந்தவுடனே மீட்டிங் வெச்சிட்டாரும்மா ஸாரி”- இது சுகன்யா.
கணவனை இழந்த அம்மா மூன்று பெண்களை வைத்துக் கொண்டு வாழ்வதால் வரும் எரிச்சல் போலும் என்று நினைத்துக் கொள்வாள் சுகன்யா.
இத்தனைக்கும் இப்போது அவள் அம்மாவை முன்பு போல் விரல் அழுந்த வீட்டு வேலை செய்ய அனுப்புவதில்லை.
தான் வேலையிலமர்ந்ததும் அம்மாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டாள். ஆனாலும் காய்கறி பிஞ்சாக வாங்கவில்லை என்றால், பாலைப் பொங்க விட்டால் என எல்லாவற்றிற்கும் மேலே சொன்ன வயசாகவில்லையா என்ற டயலாக் தான் .
அன்று அலுவலகத்திலிருந்து வீட்டில் நுழைந்த சுகன்யா உள்ளே பேச்சுக் குரல் கேட்டதும் தயங்கி வெளியே நின்றாள்.
அம்மாவின் உறவுக்கார மாமா_ கல்யாணத் தரகர் _அவர்தான் பேசிக்கொண்டிருந்தார்.
“இதோ பாரும்மா.நான் சொன்ன மாப்பிள்ளை நல்ல பையன்.நல்ல வேலைல இருக்கான்.சுகன்யாவுக்கு முடிச்சிடலாம்.என்ன சொல்றே?”- இது அவர்.
” என்ன அண்ணா நீங்க? சுகன்யாவுக்கு இன்னும் வயசாகவில்லை.அஞ்சு வருஷம் போகட்டும். அதுக்குள்ள சின்னதுங்க ரெண்டும் படிச்சு ஆளாகிடுவாங்க. அப்புறம் பார்க்கலாம் “, _ இது அம்மா.
சுகன்யா திடுக்கிட்டாள். எப்போதும் வயசாகவில்லையா எனத் திட்டும் அம்மா,தன் சுயநலத்திற்காக ,தன் பொறுப்புகளை அவள் சுமப்பதற்காக இன்று வயசாகவில்லை என்கிறாளா?
முற்றும்.
📍அரூபி தளத்தில் உங்கள் படைப்பை பதிவிட இத்திரியை கிளிக் செய்யவும்.