சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: அவளுக்குள் எத்தனை மாற்றம்!

by admin
97 views

எழுத்தாளர்: ஆஷா கு.ந.

அன்று ஏனோ ஒரு களைப்பு..

உச்சி சூரியன் அனல் ஒளி இறக்க… பூமி காற்று அதை பெற்று வீச … கொஞ்சம் உடலும் சூடாகவே இருந்தது…..

பால்கனியில் இருந்த சாய்வு நற்காலியில் சற்று நேரம் சாய்ந்து அமர்ந்தாள்..கண்கள் லேசாய் ஓய்வுக்கு மூடிகொண்டன.. அவள் பள்ளிக்கூடம் செல்லும்போது வழியில், ஒரு பெரிய ஆலமரத்தடியில் பிள்ளையார் கோவில் ஒன்று இருக்கும்…..அங்கே போய் அவள் படித்தது எல்லாம் நினைவில் இருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டு பள்ளிக்கூடம் செல்வது வழக்கம்… பிள்ளையார் கோயிலுக்கு பின்புறம் தான் அவள் படிக்கும் நடுநிலை பள்ளி..அவள் மூன்றாம் வகுப்பு… அவள் அண்ணன் ஏழாம் வகுப்பு..

அன்று வகுப்பில் புகைப்படம் எடுக்கும் நாள்..அனைவரும் வரிசையில் அமர்ந்துவிட்டனர்..உடனே  அங்கன்வாடியின் ஆசிரியை கலா ‘ அமுதா! இங்கே வா’ ,என்று அழைக்க அவள் எழுந்து சென்றாள்.உடனே கையில் இருந்த மல்லிகை பூவை அமுதாவின் உச்சி கொண்டையில் வைத்து விட்டார்.சிறு பிள்ளையாக இருக்கும்போதே ஆசிரியை கலாவிற்கு அமுதா மேல் ஒரு தனிபாசம்…. புகைப்படம் எடுத்து முடிந்தது..வகுப்பில் வந்து அப்பா வாங்கி கொடுத்த ஆரஞ்சு முட்டாயி ஐந்து எடுத்து தன் தண்ணீர் பாட்டிலில் போட்டு குலுக்கி ஆரஞ்சு நிறம் வர ,அதை சிரிப்புடன் குடித்தாள்..பின்னர் தன் அண்ணாவிற்கு ஐந்து கொண்டு கொடுத்தாள்.அவன் நான்கு நண்பர்களுக்கு கொடுத்து விட்டு அவனும் ஒன்று சாப்பிட்டான்..

நாட்கள் சென்றன……..

அமுதா ஒன்பதாம் வகுப்பு சென்று விட்டாள்,அண்ணன் கல்லூரி சென்றுவிட்டான். ஒன்பதாம் வகுப்பில் அமுதாவிற்கு நண்பர்கள் ,தோழிகள் அதிகம்.எப்போதும் கலகல  என்று தான் அவர்கள் வகுப்பறை இருக்கும்.படிப்பிலும் அனைவரும் கவனமாய் இருப்பார்கள்.அவளுக்கு என்று ஒரு நண்பன் இருந்தான் .ஏனோ  இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவு கிடையாது. அவனுக்கு பள்ளிப்பாடம் எழுதி கொடுப்பது இவள் தான்.கணிதம் மிக சுலபமாக செய்து முடிப்பாள் அமுதா.கணித ஆசிரியை கலா முதலில் கணக்கு போடுபவருக்கு நன்று என்று சிகப்பு பேனாவில் எழுதி கொடுப்பார்,அது என்னவோ ,ஆயிரம் ரூபாய் பத்திரத்தில் பத்து லட்சம் ரூபாய் சொத்து எழுதி கொடுத்து போல இருக்கும்.எனவே அனைவரும் முதலில் கணக்கு போடுவதில் கவனமாக இருப்பார்கள்.அமுதா எப்போதும் முதலில் கணக்கு போடுவாள்,நன்றும் வாங்குவாள் . அவளுக்கும் நண்பனுக்கு இடையே நன்று வாங்குவதில் ஒரு போட்டி இருக்கும் எப்போதும்.

திடீரென்று நண்பன் அம்மா இறந்து விட்டார் என்ற செய்தி பள்ளிக்கு வந்தது,அவர்கள் அனைவரிடமும் கூறினார்கள், ஆனால் அவனுக்கு  மட்டும் கூறவில்லை ,அவன் மாமா வந்து அழைத்து சென்றார் அவனை. வகுப்பு மொத்தமும் அமைதியில் மூழ்கியது. அமுதாவின் கண்களில் ஏனோ ஒரு ஈரம்.மனதில் ஒரு பாரம். எண்ணம் ஏதேதோ யோசித்தது, மனம் பதறியது,அவன் எப்படி இதை தாங்கி கொள்வான்,’கடவுளே உனக்கு கண் இல்லையா ‘ என்று புலம்பினாள். அவன் வெகு நாட்கள் பள்ளிக்கூடம் வரவில்லை,காலாண்டு தேர்வு எழுத மட்டும் வந்திருந்தான், அவளால் அவனை நிமிர்ந்து  பார்க்க முடியவில்லை, எங்கே அழுது விடுவோமோ என்ற பயம்,தேர்வு நாட்களில் அவனிடம் ஒன்றும் பேசவில்லை.

தேர்வு முடிந்து பத்து நாட்கள் விடுமுறை சென்றது,அமுதாவின் மனம் ஏதேதோ நினைத்து வருந்தியது,இவ்வளவு நெருங்கிய தோழியாக இருந்தும் ஒரு வார்த்தை பேசாமல் இருந்து விட்டோமே ,அவன் வருந்தி இருப்பானே என்று…..விடுமுறை முடித்து பள்ளி தொடங்கிய அன்று, இவள் வகுப்பறைக்குள் செல்ல ,அவன் வெளியே வந்தான். என்ன பேசுவது என்று தெரியவில்லை,முகம் பார்த்ததும் அவள் கண் நிறைந்தது,அவனுக்கு புரிந்தது,மெல்ல புன்னகைத்து வெளியே சென்றுவிட்டான். பின்னர் சிறிது நேரத்தில் ”அமுதா குடிக்க தண்ணீர் கொடு” என்று ஒரு குரல் ,அவன் தான் கேட்டது.உடனே தான் கொண்டு வந்த தண்ணீர் எடுத்து கொடுத்தாள். மறுநாள் முதல் அவள் அம்மாவிடம் கூறி இரண்டு பாட்டில் தண்ணீர் எடுத்து வருவது வழக்கம்.ஒன்று அவனுக்கு ,ஒன்று அவளுக்கு. பேனா,பென்சில் எது வாங்கினாலும் இரண்டு வாங்குவது,அவனுக்கு ஒன்று கொடுப்பது என்று நாட்கள் சென்றன. அவன் விடுப்பில் இருந்த நாட்கள் வகுப்பில் நடத்திய பாடங்கள் அனைத்தும் அவனுக்கு புரிய வைப்பது அவளது வேலை. ஆண், பெண் நட்புக்கு சிலர் காதல் என்று பெயர் வைப்பது உண்டு அந்த காலத்தில் ,ஆனால் அப்படி ஒரு சந்தேகம் இவர்களது நட்பில் யாருக்கும் வந்தது இல்லை என்பதே உண்மை.

பத்தாம் வகுப்பில் பள்ளியில் மூன்றாம் இடம் அமுதாவிற்கு,மதிப்பெண் 500 க்கு 460 . பின்னர் உயர்நிலைக்கல்விக்காக அவள் வேறு பள்ளிக்கூடம் சென்றாள்.அவன் வேறு பள்ளிக்கூடம் சென்றான்.அதன் பின்னர் இருவரும் பார்க்கவே இல்லை.

உயர்நிலை கல்வி முடிந்தது.அவள் மேற்படிப்புக்காக சென்னை மருத்துவ கல்லூரியில் செவிலியம் படித்தாள்.மூன்றரை வருட படிப்பு முடித்து மீண்டும் சொந்த ஊரான குமரி மாவட்டம் வந்து ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை செய்தாள்.அப்போது தன் பத்தாம் வகுப்பு நண்பனை ஒரு நாள் பேருந்தில் பார்த்தாள்.அவள் மிகவும் மகிழ்ந்தாள்.அலைபேசி எண்கள் பரிமாறப்பட்டது.அவன் வெளிநாடு செல்ல போவதாக கூறினான்.ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறி அவளது புகைப்படம் காட்டினான்.மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.

அமுதா இறைவனை வேண்டிக் கொண்டாள். அவன் மகிழ்ச்சி அப்படியே இருக்க வேண்டும் என்று ….    பின்னர் அரசு போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு செவிலியர் ஆக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி யில் சேர்ந்தாள். அவள் சம்பளம் அவள் உரிமை என்று நினைத்து அனைத்தும் வாங்குவது வழக்கம்.அம்மாவிடம் ஊதியத்தில் முக்கால் பங்கு கொடுப்பது வழக்கம். பகல் நேரத்தில் முழு நேர தூக்கம்,வெகு தொலைவு பயணம், தான் கேட்டது உடனே கிடைக்க வேண்டும் என்ற பிடிவாதம்,அனைத்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம்,அண்ணன் என்றால் கொள்ளை பாசம்,இதுவே அந்த அமுதா…..

வயது 24,திருமணம் ஏற்பாடு செய்தார் அப்பா.

பழக்கம் இல்லாத ஒருவர் என்றாலும் அவர் நல்லவர்,விட்டு கொடுக்கும் குணம் உள்ளவர், அமுதாவின் ஆசைகளுக்கு மதிப்பு கொடுப்பவர்,அவள் நண்பர் ,தோழிகளிடம் பேச அவளுக்கு அனுமதி கொடுத்து இருந்தார்….இருவரும் ஒருவருக்கு ஒருவர் பாசம் காட்டுவதில் ஈடு இணையற்ற தம்பதிகள் .

திருமணமான ஒரு வருடத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இப்போது வருமானம் போதிய அளவில் இல்லை.அமுதா தனக்கு என்று செலவு செய்து ரொம்ப நாள் ஆகி இருந்தது.இப்போது அவளது தேவைகள் அனைத்தும் குடும்பத்தின் தேவைகளாக மாறி இருந்தது.வருடம்  மூன்று முடிந்தது.

 குடும்பம் சந்தோஷமாக இருந்தார்கள்.எனவே பணத்திற்கு முக்கியத்துவம் அங்கே இல்லை. திடீரென்று குட்டி குழந்தை ஒன்று அம்மா என்று அழைத்து அவள் மேல் ஏறி படுத்துக் கொண்டது. கண் விழித்து பார்த்தாள்.அவள் மகன் தான்.. கண் மூடிய ஐந்து நிமிடத்தில் அவள் மாற்றங்கள் அனைத்தும் கண் முன் வந்து சென்றது. தன் மூன்றாம் வகுப்பு பள்ளி புகைப்படத்தை பார்த்து சிரித்து விட்டு மகனை கொஞ்சினாள்…

அன்றைய பொழுது அவளது வாழ்க்கை நினைவை தூவி சென்றது.

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!