எழுத்தாளர்: பார்வதி நாகமணி
“கியாரா! ஏன் டல்லடிக்கிற? தலை,கால் புரியாம ஓவரா சிரிச்சி கும்மாளம் போடுவியே? இன்னிக்கு என்னாச்சு? கிஷோரோட பிரச்சினையா? ஏய்! உன்னத்தான் ? ” என்று அவளை உலுக்கினாள் தீபா.
” ஏன் நல்லாத்தான போயிட்டிருந்தது உங்களோட காதல்! உருகி உருகி காதலிச்சியே? கிஷோர் மாதிரி ஒரு நல்லவன பார்க்கவே முடியாதுன்னு சொன்னியே? அவனுக்கு வேற பொண்ணோட தொடர்பு இருக்கா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.
” அதெல்லாம் இல்லக்கா. அவன் பிரேக் அப் கொடுத்துட்டான். நீ எல்லாம் ஒரு பெண்ணா” ன்னு கன்னத்தில் அறையாத குறையா சொல்லிட்டு, குட் பை, கெட் லாஸ்ட் னு சொல்லிட்டு போய்ட்டான்” என்று அழாத குறையாய்ச் சொன்னாள் கியாரா.
” இன்று என்ன நடந்ததுன்னு தெளிவாச் சொல்லு?” என்றாள் தீபா.
இன்னிக்கு அவனோட பேசி முடிச்சிட்டு வீட்டுக்குக் கிளம்பும்போது , “எனக்குக் குழந்தை பெத்துக்கறதுல மட்டும் விருப்பம் இல்ல. அது வீண் அவஸ்தை. அதனால டெஸ்ட் ட்யூப் மூலமாவோ, வாடகைத்தாய் மூலமாவோ பெத்துக்கலாம்னு சொன்னேன். அவன் டென்ஷனாயிட்டுக் கிளம்பிட்டான். என்னத் திரும்பி கூடப் பார்க்கல. எனக்கு அவன் வேணும் தீபாக்கா” என்று அழுதாள் கியாரா.
கிஷோரின் அண்ணாவும், அண்ணியும் மூன்று ,நான்கு வருடங்களுக்குக் குழந்தை வேண்டாம் என்று முடிவெடுத்து, இப்பொழுது ஒரு குழந்தை பிறக்காதா எனத் தவியாய்த் தவித்து, டாக்டரிடம் அலையாய் அலைந்து கொண்டிருக்கின்றார்கள். இதுவே கிஷோரின் கோபத்திற்குக் காரணம்.
“ஏன் உனக்கு கர்பப்பைல எதாவது பிரச்சினையா? என்று கேட்டாள் தீபா.
” எனக்கு எங்கேயும் எந்தப் பிரச்சினையும் இல்ல. ஐ யாம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட் ” என்றாள் கியாரா.
” உங்க அம்மா உன்ன எப்படிப் பெத்தாங்க? இயற்கையான முறையில் கருத்தரித்து தானே. உனக்கு மட்டும் ஏன் புத்தி பேதலிக்குது.” என்று நாக்கைப் பிடுங்குவது போல் கேட்டாள்.
” இல்லக்கா. எதுக்கு தேவையில்லாத டென்ஷன்? பத்து மாதம் சுமந்துகிட்டு? ஃப்ரீயா இருக்கலாமேன்னு தோணுது.
” உங்க அம்மா அப்பிடி நினைச்சிருந்தா, நீ பிறந்திருக்கவே மாட்டே. கடவுள் தெரியாம மனுஷனுக்கு ஆறாவது அறிவைக் கொடுத்துட்டாரு. அதுக்காக அவரு வருத்தப்படுகிறமாதிரி நடந்துக்கறோம். நல்ல விஷயங்களுக்குப் பயன்படுத்தாம, இந்த மாதிரி ஆக்கங்கெட்ட விஷயத்துக்கு அந்த ஆறாவது அறிவ பயன்படுத்தறாங்க. என்ன மனுஷங்க?” என்று மிகவும் வருத்தப்பட்டுப் புலம்பித் தீர்த்தாள் தீபா.
தாய் என்பவள் கடவுளுக்குச் சமம். ‘தாய்மை’ ங்கறது மிகப் பெரிய வரம். அது உலகத்துல எல்லாருக்கும் கிடைச்சிடாது. தனக்கொரு குழந்தை இல்லையேன்னு எத்தனை பேர் தவியாய்த் தவிச்சிகிட்டு இருக்காங்க.
கருவுற்ற நாள் முதலாய் குழந்தை பிறக்கற வரைக்கும் அது ஒரு சுகானுபவம். அது கனமான சுமை இல்ல. சுகமான சுமை. அந்த உணர்வுகளை எல்லாம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. தன்னாலேயே உணர்ந்து புரிஞ்சுக்கணும்” என்று பொரிந்து தள்ளினாள்.
” உறவுகளிலேயே உன்னதமான உறவு தாய். தாய்க்கு நிகரானவர் இந்த உலகில் யாருமில்லை. தாய் இல்லையென்றால், மனிதப் பிறவியே இல்லை. உலகையே ஆட்டிப் படைக்கும் மனிதனைப் படைப்பது அன்னையே.
ஐந்தறிவு படைத்த மிருகங்களிடமும் தாயன்பைக் காணமுடியும். தாயன்பை விலை கொடுத்து வாங்க முடியாது” என்று கோபமாகப் பேசிய தீபா அலுவலகம் சென்று விட்டாள்.
எதுவுமே சொல்லாமல் டிஸ்கவரி சேனலின் இரண்டு, மூன்று கிளிப்பிங்க்ஸை அவள் மொபைலுக்கு அனுப்பிவைத்தாள்.
அதை உடனே திறந்து பார்த்த கியாரா, அந்த வீடியோக்களைத் திரும்பத் திரும்பப் பார்த்தாள்.
ஒரு கோழி தான் அடைகாத்த முட்டைகளை, விஷப்பாம்பிடமிருந்து காப்பாற்றப் போராடுவது, அணில் தன் குட்டியைப் பாம்பிடமிருந்து காப்பது, ஒட்டகச்சிவிங்கி, குட்டியைக் காக்கப் புலியுடன் போராடி உயிரை விடுவது போன்ற கிளிப்பிங்க்ஸைப் பார்த்து வியப்பின் உச்சிக்குச் சென்றாள் கியாரா.
நல்ல பருவத்தில் குழந்தை வேண்டாமென நினைத்துத் தவிர்த்து, பின் காலம் கடந்தபின், அதற்காக ஏங்கி டாக்டரிடம் படையெடுத்துப் பழியாய்க் கிடக்கும் தம்பதிகளைப் பற்றியும் அவளுக்கு மாலையில் மீண்டும் எடுத்துச் சொன்னாள் தீபா.
மாணிக்க வாசகர் “பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து நீ” என்று தாயை கடவுளுடன் ஒப்பிட்டுப் பாடுகின்றார். தாயும், தாய்மை உணர்வும் புனிதமானது. அதை அனுபவித்து மகிழணும்” என்று அழகாய் எடுத்துரைத்தாள் தீபா.
“சாரிக்கா. நீங்க சொல்றதெல்லாம் புரிஞ்சுகிட்டேன். நான் இப்பவே கிஷோர பார்க்கணும். அவன் எனக்கு வேணும். நான் ஃபோன் பண்ணினா அவன் எடுக்க மாட்டேங்கிறான். நீங்களும் கூட வாங்க. எனக்காகப் பேசுங்க. நான் அவன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்று மன்றாடினாள் கியாரா.
தீபா தன் மொபைலிலிருந்து கிஷோருக்கு ஃபோன் செய்தாள். தான் கியாராவுக்கு அக்கா போன்றவள் என்றும், அவளுக்குத் தாய்மையின் மகத்துவத்தையும், கருவுறுதலின் சிறப்பையும் எடுத்துச் சொல்லிப் புரியவைத்ததையும் அவனிடம் சொன்னாள். தாங்கள் இருவரும் அவனைச் சந்திக்க விருப்பப்படுவதாகவும் கூறினாள்.
மாலையில் மூவரும் சந்தித்துக் கொண்டனர். கிஷோரைப் பார்த்த கியாராவுக்கு பேச்சே வரவில்லை. அவன் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டாள்.
கிஷோரும் அவளை மன்னித்து அணைத்துக் கொண்டான்.
தீபா அங்கிருந்து நைஸாக நழுவினாள். கியாராவின் உள்ளத்தில் தாய்மையின் மகத்துவத்தைப் பதிய வைத்தது எண்ணி மிகவும் மகிழ்ச்சியுற்றாள் தீபா.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: