எழுத்தாளர்: சங்கீதா ராம்நாத்
இந்த பூமியில் நான் நீங்கி போனாலும் நீ இத்தனை வருடம் செய்த தவத்திற்கு உன் வயிற்றில் குழந்தையாய் வந்து பிறப்பேன்
மேக மண்டலத்தில் பெரிய அரங்கத்தில் மக்கள் கூட்டமாகயிருந்தனர் ஆங்காங்கே நுழைவாயில்களில் பலகையில் குறிப்பிட்ட சட்டங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நுழைவாயில்களில் அரங்கத்தில் உள்ளே சென்று கொண்டே இருந்தார்கள்
” அம்மா நீங்க இந்த நுழைவாயில் பகுதியில் உள்ள வரணும்”
” சரிங்கய்யா”
அங்கே பெரிய சிம்மாசனத்தில் நீதிபதியை போல் ஒருத்தர் அமர்ந்து கொண்டிருந்தார்
“சொல்லுங்கம்மா
இப்ப நீங்க இந்த இடத்துக்கு வந்து இருக்கீங்க உங்களோட மனநிலை என்ன?”
” ஐயா நான் இந்த இடத்துக்கு வருவேன்னு தெரியும் ஆனா இவ்வளவு சீக்கிரம் வருவேன்னு எனக்கு தெரியாது என் குடும்பங்களை எல்லாம் விட்டுட்டு வந்தது எனக்கு ஒரு வருத்தம் தான்”
” சரிமா உங்க வாழ்க்கையில நடந்த விஷயங்களை சொல்லுங்க அதுல நல்லது, கெட்டது பார்த்து நாங்க பிரிச்சி எழுதுவோம் உங்களுக்கு எவ்வளவு நினைவு இருக்கோ அது வரைக்கும் சொன்னா போதும் சிலருக்கு மறந்துவிடும் உங்களுக்கு நினைவுகள் இருக்கா?”
“இருக்கு ஐயா எனக்கு என் வாழ்க்கையில நடந்த விஷயங்கள் சொல்லணும்னா என்னோட சிறுவயது முதல் இளமை பருவம் வரை சொல்ற மாதிரி எதுவும் பெருசா கிடையாது ஆனா எனக்கு அந்த நேரங்கள்ல பொறுத்துக்க முடியாத அளவுக்கு தலைவலிகள் நிறைய வந்து இருக்கு இதுக்கு நிறைய மாத்திரை மருந்து வாங்கி போட்டு இருக்கேன் நான் பிறந்த ஊரை சேர்ந்தவரையே திருமணம் பண்ணிக்கிட்டேன் எங்களுடைய திருமண வாழ்க்கையும் நல்லா தான் போச்சு அவருக்கும் சிறுவயதுல உடல் நலம் சரியில்லாமல் இருந்தவர் தான் திருமண வாழ்க்கைக்கு பிறகு என்னோட அணுகுமுறையினாலும், பக்குவத்தினாலும் அவரை கொஞ்சம் சரி பண்ணிக்கிட்டே தான் இருப்பேன் எங்களுக்கு மூணு குழந்தைங்க மூத்தது ஒரு பொண்ணு சித்திரை மாதத்தில் பிறந்தவள் சித்திரை செல்வி, கதிரவனின் ஒளி பொருந்தியவன் இரண்டாவது மகன், மூன்றாவது மகன் பிறந்த புதுசுல வாழைப்பழத்தில இருக்க மினுமினுப்பு அவன் தேகமெல்லாம் இருந்தது என்னோட இரண்டு குழந்தைகளைவிட ரொம்ப அழகா இருந்தான் ஆனால் அவன் என் வயித்துல வந்ததுலிருந்து எனக்கு தீராத தலைவலி அதிக மாத்திரை எடுத்துக்கிட்டேன் எனக்கு அம்மையும் போட்டு இருந்தது அதனால ஏதோ ஒரு குறையோடு பிறந்துவிடுவானோனு பயந்தேன் ஆனால் எந்த ஒரு குறையும் இல்லாமல் நல்லா படியா பிறந்தான் ஆனால் அவன் பிறந்து கொஞ்ச நாளில காய்ச்சல் வந்தது அதுக்கு காதுல ஒரு மருந்து ஊத்தியிருந்தோம் அதுலிருந்து அந்த பிள்ளைக்கு காது சரியா கேட்காது அதனால மற்றவர்களிடமிருந்து அவன் வேறுபட்டேயிருந்தான் , எந்த ஒரு நண்பர்கள் கூட்டத்துக்கும் சொல்ல மாட்டான் தனித்தே தான் இருப்பான், அவனுக்கு நாங்க ரொம்ப செல்லமும் கொடுத்து வளர்த்தோம் என்னோட மூணு பிள்ளைகளுக்கும் நல்ல பொருத்தமான வாழ்க்கையை துணையை தான் அமைச்சு கொடுத்தோம்”
” உங்க கடைசிப் பையனுக்கு காது கேட்காதுனு நீங்க கடவுள் மேல ஏதும் கோபத்தில இருக்கீங்களா?”
” இல்லங்க ஐயா நாங்க பண்ண தப்புக்கு அவர் மேல எதுக்கு கோபப்பட்டு கிட்டு என்னோட கடைசி பையனுக்கு வாழ்க்கை துணைவி கொஞ்சம் நல்லாதா இருக்கணும்ங்குறதுக்காக சொந்தக்கார பொண்ணு தான் கட்டி வச்சோம் அந்த பொண்ணு நல்லவள் தான் ஆனா கல்யாணம் முடிஞ்ச புதுசுல எல்லாருக்கும் உண்டான பிரச்சனை அவங்களுக்கும் வந்தது ஆனால் என் மகன் மேல இருக்க பாசத்துல அந்த பிள்ளையை நான் திட்டுவேன் ஆனா அவ மேலயும் எனக்கு அளவு கடந்த பாசம் உண்டு, அவளுக்கும் என்னிடம் சண்டை போட்டாலும் அடுத்த நிமிஷமே மறந்துவிட்டு என்கிட்ட சகஜமா பேசுவா அவங்க ரெண்டு பேருக்கும் 12 வருஷமா குழந்தை இல்லாம இருந்துச்சு ஏறாத கோவிலில்ல, போகாத மருத்துவமனைல்ல எல்லா கோவிலுக்கும் அவ கூட துணைக்கு போவேன் என்னோட பையனுக்கு குழந்தை இல்லாத காரணமும், காது கேட்காத காரணமும் அதனாலயே அவன் தாழ்வு மனப்பான்மையிலிருந்து சண்டை வந்துகிட்டே இருந்துச்சு எனக்கும் உடல் நலம் ரொம்ப மோசமா போனதில “கடவுளே என் உயிரை எடுத்துக்கிட்டு என் பையனுக்கு ஒரு குழந்தையை கொடு” என்று சொன்னேன் அடுத்த மாதமே என் மருமகளும் கர்ப்பம் ஆனா”
” உங்ககிட்ட இன்னொரு விசாரணையும் பண்ண வேண்டியது இருக்கு நீங்க இறந்த பிறகு உங்க ஆன்மாவிலிருந்து ஒரு பகுதிய உங்க மருமகளோட வயித்துல செலுத்திட்டிங்க அதை எப்படி நீங்க எங்க கிட்ட கேட்காமலேயே நீங்க கொடுக்கலாம்?”
” ஐயா நான் பெற்றது என்னமோ என் பிள்ளை தான் ஆனால் என் மருமகள் அவனுக்கு ஒரு தாயா இருந்து எனக்கு பிறகும் பாதுகாக்கும் அந்தத் தாயுள்ளத்துக்காக தான் என்னோட ஆன்மாவை ஒரு பகுதியை என் மருமகளோட வயித்துல செலுத்திடேன்”
” நீங்க உங்க பையனோட சுயநலத்துக்காக உங்க மருமகளுக்கு இத செஞ்சிங்களா?”
” இல்லைங்க ஐயா என்னோட மருமகள் நான் உடல் நலம் சரியில்லாத போது என்ன ஒரு குழந்தை போல பார்த்துகிட்டா அப்படிப்பட்ட அந்த தாய் ஸ்தானத்தில இருக்கிறவள தாயாக வேணும்கிறதுக்காக தான் என் உயிரை எடுத்துக்கோ என்று கடவுளிடம் முறையிட்டேன் அவரும் என் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கிட்டு இருந்தாரு இங்கே என்னோட உயிர் குறைய குறைய என் மருமக வயித்துல குழந்தையோட உருவம் முழுமையாகிட்டே இருந்துச்சு என்னோட சிறு வருத்தம் அந்த குழந்தை முகத்தை பார்க்க முடியலன்னு தான் ஆனா நான் உயிரோட இருக்கணும்னு நினைச்சா அந்த குழந்தை இந்த பூமிக்கு வராம போயிறக்கூடாது அதனாலதான் என் உயிரை முழுமையா இந்த பூமியிலிருந்து எடுத்துக்கிட்டு என் மருமக வயித்துல என்னோட ஆத்மாவோட ஒரு பகுதிய கொடுத்துட்டு வந்துட்டேன்”
“சரிமா உங்களுடைய தீர்ப்பை நான் இப்போது எழுதுகிறேன் இதோ இப்பொழுது உங்களுடைய தீர்ப்பை நான் வாசிக்கிறேன் தான் பெறாத பிள்ளைக்காக தாயுள்ளம் கொண்டு தான் ஆத்மாவின் பாதியை அவள் வயிற்றில் விட்டுட்டு வந்த உங்களுக்கு இன்னும் மூன்று மாதங்கள் சொர்க்க வாழ்க்கை அனுபவித்து விட்டு தங்களுடைய மருமகள் மூன்று மாதங்களில் பிள்ளை பேரு நடக்கும் நேரத்தில் அந்தப் பிள்ளையாக நீங்கள் பிறப்பீர்கள் இதுதான் என்னுடைய தீர்ப்பு”
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: