ஒரு பக்க போட்டிக்கதை: அப்பா ஏன் வீட்டில் தங்குவதில்லை 

by admin
111 views

எழுத்தாளர்: வசந்தா கோவிந்தராஜன்

ஞாயிற்றுக்கிழமை காலை ஆறரை மணி.   பரிமளா  வழக்கம்போல் சுறுசுறுப்பாக சமையலறையில் இயங்கிக் கொண்டிருக்கிறாள்.   நாக்குச் செத்து வரும் சுதாகருக்கு ஞாயிறுதோறும்   தடபுடல் விருந்துதான். வழக்கம்போல் ஏழு மணிக்கு வந்துவிட்டார். சூடான டிகிரி காபி குடித்துக்கொண்டே அருண் தூங்கும் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அவன் கண்விழிக்கும் வரை அசையாமல் உட்கார்ந்திருப்பார். இப்போதெல்லாம் அருண்  அப்பாவுக்காகவே சீக்கிரம் எழுந்து விடுகிறான்.

இன்றைய ஒவ்வொரு மணித்துளியும் அப்பாவுக்கும் மகனுக்குமானது. பரிமளா  சமைத்து மேசையில் வைப்பதோடு ஒதுங்கி விடுவாள். அவர் அவனை நீச்சல் கற்றுக்கொள்ள அழைத்துச் செல்வார். மதியம் நல்லா  ஒரு வெட்டு வெட்டிட்டு மகனுடன்  சின்னத் தூக்கம். மாலைஅவன்  விரும்பும் இடத்துக்கு அழைத்துச் செல்வார்.

எட்டு வயதாகும் அருண் இன்று பட்டென்று அவரைப் பார்த்துக் கேட்டு விட்டான். “உங்களுக்கும், அம்மாவுக்கும் என்னதான்பா பிரச்சனை? ஏன் இந்த வீட்டுல தங்க   மாட்டேங்கறீங்க?” அவர் எதிர்பார்த்த கேள்விதான். “உங்கம்மா என்ன சொன்னா?” “அம்மா, நீ பெரியவன் ஆனப்புறம் சொல்றேன்”னு சொன்னாங்க. “நானும் அதைத்தான் சொல்றேன். இன்னும் இரண்டு, மூன்று வருடம் போகட்டுமே!”

“ஏம்பா, டைவோர்ஸ் பண்ணிட்டீங்களா? இரண்டு பேரையும் பார்த்தால் சண்டை போட்டவங்க மாதிரித் தெரியலையேப்பா!” “உங்கம்மா பெண் தெய்வம்பா. அந்த தெய்வத்துக்குக் களங்கம் வரக்கூடாதுன்னு தான் நான் தள்ளியிருக்கேன்! நேரம் வரும்போது சொல்றேன்பா” அருண்  புரியாமல் தலையாட்டினான்.

 ஏழரை வருடங்களுக்கு முன் : சுதாகர், அவனது  மனைவி  மோகனா, அவர்களது  கைக்குழந்தை அருண் மற்றும்  மோகனாவின் ஆருயிர்த் தோழி பரிமளா,  அவள் கணவன் சந்தோஷ் எல்லாரும் சேர்ந்து ஊட்டிக்குக் காரில் போனார்கள். போகும்போது நடந்த விபத்தில் பரிமளா கணவன் சந்தோஷும், சுதாகர் மனைவி மோகனாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். அப்போது பரிமளா கையில் அருண் இருந்ததால் குழந்தை உயிர்  தப்பியது. உயிர் பிழைத்த பரிமளா தன் தோழியின் குழந்தை அருணைத் தன் குழந்தையாக ஏற்றுக் கொண்டாள். அந்தக்  குழந்தைக்குத் தேவை ஒரு தாயின் அரவணைப்புதான் என்பதைப் புரிந்துகொண்ட சுதாகர், தனியே போய் விட்டான். ஆனாலும் வாரந்தோறும் வந்து  தகப்பனாய்த் தன் கடமையைச் செய்து கொண்டிருக்கிறான். பரிமளாவைத் தாயாகவே நினைத்துக் கொண்டிருக்கும் அவனிடம்  இதைச் சொல்லக் காலம் கனியட்டும்  என்று காத்திருக்கிறார்கள்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!