எழுத்தாளர்: இந்துமதி நடராஜன்
காலையில் இருந்தே ராதை பரபரப்பாக வேலையை முடிப்பதை கவனித்தாள் அவள் தோழி கலா. அவளுக்கும் வேலை அதிகம் என்பதால் பேச முடியவில்லை.
அன்று பர்மிஷன் கேட்டு கொஞ்சம் சீக்கிரம் ஆபீஸ் விட்டுக் கிளம்பினாள் ராதை. என்னடி விஷயம் என கலா கேட்க என்னவோ அம்மாவைப் பார்க்கனும் னு தோணுது அதான் அங்கே போயிட்டு அப்புறம் என் வீட்டுக்கு போலாம்னு என்றாள்.
ராதை அவள் வீட்டில் ஒரே பெண். அப்பா ரெயில்வேயில் வேலை. அம்மா ஹோம் மேக்கர். படிப்பு மட்டுமே முக்கியம் என்று சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள்.
இயல்பான புத்திசாலித்தனத்தோடு அப்பா அம்மா தூண்டுதலால் பி.ஏ டிகிரியோடு படிக்கும் போதே ஹிந்தி மொழி கற்று அதிலும் டிகிரி எடுத்து முதல் முறையிலேயே பேங்க் பரீட்சை எழுதித் தேர்வானாள் .
வேலைக்குப் போன அடுத்த மாதம் ஒரு பேங்க் வரன் வர அப்பா அம்மா பேச்சைக் கேட்டு கல்யாணம் பண்ணி இப்போ இவள் பையன் காலேஜ் போகிறான்.
திடீரென போன மாதம் அப்பாவுக்கு தலைசுற்றல், மயக்கம் என அம்மா பதறிப்போய் போன் செய்தாள்.
அலறி அடித்து போய் சேர்ந்து பெரிய ஹாஸ்பிடல் வைத்து வைத்தியம் பார்த்தும் பலனின்றி ஏதோ காரணம் டாக்டர்கள் சொல்ல சட்டென உலகை விட்டுப் போனார்.
அப்பா சொன்ன பேச்சைக் கேட்டு அம்மா அப்படியே வாழ்ந்தவர். ராதைக்கு நினைவு தெரிந்த நாள் முதல் அவர்கள் சண்டை போட்டோ, கோபப்பட்டோ பார்த்ததேயில்லை.
ராதை எப்பவும் கிண்டலாக வாழ்க்கை போரடிக்குதுப்பா. நீ சொன்ன உடனே அம்மா சரியென சொல்ல அம்மா சொன்னா நீ சரியென சொல்ல ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் என்ன குடும்பம் பா இது என்பாள் ராதா.
அம்மா , பதினைந்து வயதில் அப்பா, அம்மா சொற்படி கேட்டு இவரை மணந்தேன். விவரம் தெரியாத என்னைக் கண்கலங்காம இத்தனை வருடங்கள் பார்த்துக்கிட்டவர் அவர். அவர் சொன்னா தப்பா இருக்காது.
அப்பா நாம் இருவர் மட்டும் தான் உங்க அம்மாவின் உலகம். அப்புறம் அவ நமக்கு கெடுதல் நினைப்பாளா என்ன சொல்லு .
இப்படி வாழ்ந்தவர்கள் திடீரென அப்பா போனதை அம்மா எப்படி தாங்குவாள் என்று ராதை ரொம்ப பயந்து போனாள். இரவில் அப்பப்போ எழுந்து அம்மா இருக்காளா என்று பார்ப்பாள். எதுவா இருந்தாலும் மனசு விட்டு என்கிட்ட சொல்லும்மா என்று கேட்டுக் கொண்டே இருப்பாள்.
ஒரு மாதம் அம்மாவோட இருந்தாள். பக்கத்தில் தான் இவள் வீடு என்றாலும் கணவன் , வயதான மாமியார், காலேஜ் போகும் மகன் எல்லோரும் கஷ்டப் படுவாங்கனு அம்மா தான் நீ கிளம்பு. நான் தேவைனா கூப்பிடுறேன். என்னை பற்றி கவலைப் படாதே என்றாள்.
தனியே விட மனசில்லாமல் தான் கிளம்பி வந்தாள். ஆபீஸ் ,வீடு என ஓட்டத்தில் ஒரு வாரமாகி விட்டது அம்மாவைப் பார்த்து.
என்ன தான் தினம் போனில் பேசினாலும் நேரில் போய் பார்த்துப் பேசுவது போல் ஆகாது என்று தான் சீக்கிரம் கிளம்பி வந்தாள்.
அம்மா ஜன்னல் அருகில் அப்பா எப்போதும் அமரும் சேரைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து ரோட்டில் போவோர் வருவோரை வேடிக்கை பார்த்தவாறு இருக்க அம்மா எப்படி இருக்கே ? சாரிம்மா ஒரு வாரமாச்சு .
வா ராதை ,நல்லா இருக்கேன். எதுக்கு சாரின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக் கிட்டு இருக்கே இப்போ. உட்காரு, காப்பி கொண்டு வரேன்.
ஏம்மா ரொம்ப கஷ்டமா இருக்கா ? அப்பா இல்லாமல் இந்த வீட்டில் எப்படி இருப்பியோன்னு எனக்கு பயம் மா.
காப்பி கொண்டு வந்து அருகில் அமர்ந்து நான் சொல்றதை நீ சரியா புரிஞ்சப்பேனு நினைக்கிறேன்.
பெண்கள் பூ, பொட்டோட போகணும் னு தான் நினைப்பார்கள்.
ஆனால் அப்பா முன்னால் போனது தான் நல்லது.
அப்பா போய் நான் இருப்பதை விட நான் போய் அப்பா இருந்தா அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. பொதுவாக ஆண்கள் யாரையாவது அம்மா , மனைவி அல்லது அக்கா, தங்கை என சார்ந்து வாழ்ந்து பழகியவர்கள்.
மனதளவில் வயதான காலத்தில் ஆண்களின் தைரியம் துணை தான். இல்லைன்னா உடைஞ்சு போயிடுவாங்க. நாம் பெண்கள் , சூழ்நிலைக்கு சட்டென்று நம்மை தயார் செய்து கொள்வோம் .
அதனால் அப்பா போய் நான் இருப்பதை நான் முன்பே விரும்பினேன்.
எனக்குப்பின் அவர் கஷ்டப் படக் கூடாது என்று கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன்.
இனி இருக்கும் காலத்தை அவரை நினைச்சு வாழ்ந்து முடிச்சுட்டு போவேன்.
இந்த நாற்காலி பக்கத்தில் இருப்பது அவரே அருகே இருப்பதாக நான் நினைக்கிறேன்.
வருத்தம் இருக்கு தான். வேறு வழியின்றி ஏற்றுக் கொள்ள மனசைப் பக்குவப் படுத்தி வைச்சுக்கிறேன்.
நீ தைரியமாக இரு. என்னைப் பற்றி கவலைப்படாமல் என்றாள்.
அம்மாவை இறுக்கமாக கட்டிப் பிடித்து முத்தம் தந்தாள் ராதை.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: