ஒரு பக்க போட்டிக்கதை: அம்மாவின் சந்தேகம்!

by admin
73 views

எழுத்தாளர்: வி.சி. கிருஷ்ணரத்னம்

 அதுவொரு அழகிய மலைப்பிரதேசம்.
    “நாம இப்ப பார்க்கப் போற இந்தப் பெண் நிமிலா நல்லா படிச்சிருக்கா. டீச்சரா வேலை பார்க்குறா…” அம்மா சொல்வதை கேட்டுக் கொண்டே வளைவில் கவனமாக காரை ஓட்டினான் ஆனந்த். 

    “ஆனா…”

    “என்னம்மா? ஆனா…ன்னு இழுக்குறீங்க?” என்று கேட்ட ஆனந்த், அப்பாவை சிறுவயதிலேயே இழந்தவன். அம்மாவின் நல்ல வளர்ப்பு. அவனுக்கு எல்லாமே அம்மாதான். அதனால், தாய்ச் சொல்லை தட்ட விரும்பாத மகன். 

    “ஆனா… வேலைக்கு போகும்போது, தினமும் ஒரு ‘டிரஸ் பேக்’ எடுத்துப் போவாளாம்…”

    “போகுறது டீச்சர் வேலைக்கு, அதுக்கு எதுக்கு டிரஸ் பேக்?” வினவினான். 

     “அதுதான் எனக்கும் புரியலே ஆனந்த்… அடிக்கடி டிரஸ் மாத்திக்கிட்டு இருந்தா… வேலை எப்படி பார்ப்பா?” கேட்டாள், மருமகள் நல்லபடியாக அமைய வேண்டுமே என்ற எதிர்ப்பார்ப்போடு. 

    அதற்குள் பெண்ணின் வீடு வந்துவிட்டது. இருவரும் காரை விட்டு இறங்கினர். பெண்ணின் அப்பா, அம்மா இருவரும் வரவேற்றனர். 

    எளிமையான பெண் பார்க்கும் படலம். பெண் உள்பட அவர்கள் மூன்று பேர். ஆனந்த் மற்றும் அம்மா ஆக மொத்தமே ஐந்து பேர்தான். 

    பெண் நிமிலா லட்சணமாக இருந்தாள். காபியை சுவைத்தபடி இரு குடும்பத்தாரும் பேசினர். முதலில், ஆனந்தின் குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், விருப்பம், குணம் ஆகியவை பேசப்பட்டது. 

    அதேபோல, நிமிலாவின் குடும்பம், படிப்பு, வேலை, சம்பளம், விருப்பம், குணம் பற்றிய பேச்சும் வந்தது

    பிறகு நிமிலாவின் அப்பா, “எங்களுக்கு உங்கள் பையனை மிகவும் பிடித்து விட்டது… உங்கள் எண்ணத்தைச்  சொன்னால், வரும் மாதத்தில் திருமணத்தை வைத்து விடலாம்…” என்று தங்கள் விருப்பத்தை பட்டென்று சொன்னார். 

    காரில் அம்மா சொன்ன, ‘வேலைக்கு டிரஸ் பேக் எடுத்துச் செல்லும் விஷயம்’ ஆனந்திற்கு நினைவுக்கு வந்தது. 

    “எனக்கு நிமிலா கிட்ட ஒரேவொரு கேள்வி கேட்கணும்…” என்று பீடிகையுடன் ஆரம்பித்தான் ஆனந்த். 

    நிமிலா அது என்னவாக இருக்கும் என்று ஆச்சரியமாகப் பார்த்தாள். 

    “நீ வேலைக்கு போகும்போது, தினமும் ஒரு டிரஸ் பேக் எடுத்துப் போவேன்னு கேள்விப்பட்டோம்… நீயோ பார்க்க ரொம்ப எளிமையாக தெரியுற… பார்க்குறதும் ஆடம்பரம் காட்டக்கூடாத டீச்சர் வேலை… அதுக்கு தினமும் உனக்கு எதுக்கு டிரஸ் பேக்?” ஆனந்த் கேட்டான். 

    ஆனந்தின் அம்மாவும், நிமிலா சொல்லப்போகும் பதிலை ஆவலோடு எதிர்பார்த்தாள்.

    “இது மலைப்பிரதேசம்… மலைகளுக்கு நடுவே பல ஆறுகள் உண்டு. அதுபோலவே நான் பள்ளிக்குப் போகும் பாதையில் இரண்டு ஆறுகள் உள்ளன… வேறு வழியுமில்லை… குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தினமும் இரண்டு ஆற்றை கடந்து சென்று மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பித்து வருகிறேன்… அப்படி கடக்கும் போது உடைகள் நனைந்து விடும்… அதற்கான மாற்றுத் துணியை தினமும் பேக்ல எடுத்துச் செல்வேன்…’

    அவள் சொல்லச் சொல்ல ஆனந்திற்கும், அவன் அம்மாவிற்கும் சந்தேகம் தீர்ந்தது. நிமிலாவின் அர்ப்பணிப்பு உணர்வு புரிந்தது. அந்த ஆடைகள் ஆடம்பரத்திற்காக அல்ல என்ற தெளிவு கிடைத்தது. நிமிலாவே, ஆனந்திற்கு பொருத்தமானவள் என்று அம்மா முடிவுக்கு வந்தாள். 

    ஆனந்தும் முகம் மலர்வதை கவனித்த அம்மா, “எங்களுக்கு நிமிலாவை ரொம்ப பிடித்துவிட்டது” என்று மகிழ்ச்சியோடு சொன்னாள். அதில் தனது அன்பு மகன் மீது, சிறந்த தாய்க்கு உள்ள அனுசரணை வெளிப்பட்டது! 

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!