ஒரு பக்க போட்டிக்கதை: அவசரக்குடுக்கை

by admin
64 views

எழுத்தாளர்: சந்துரு மாணிக்கவாசகம்

நீண்டகாலத்திற்கு முன்பாகவே அவசரக்குடுக்கை என்ற பெயரை சிவாவிற்கு சூட்டியிருந்தாலும், தெரிந்தால் டென்ஷனாகிப் போவான் என்பதால், அவர்களுக்குள் பேசும்பொழுது மட்டுமே பயன்படுத்திக்கொண்டார்கள் அவனது நண்பர்கள்.

ஒருநாள், நெருங்கிய நண்பன் ராமலிங்கத்துடன் சாதாரணமாகத் துவங்கிய விவாதம், உச்சகட்ட சண்டையாக மாறியபொழுதுதான் விஷயம் தெரியவந்தது அவனுக்கு.

“முதல்ல இந்த அவசரபுத்தியை மாத்திக்கடா. இதனாலதான் உனக்கு அவசரக்குடுக்கைன்னு பேரு வச்சுருக்கானுங்க” என ராமலிங்கம் சொல்லிவிட, பயங்கர சூடாகிப்போனான்.

“எந்த ……..டா அப்புடி சொன்னது? காட்டு அவனை. உண்டு இல்லன்னு பண்ணிட்றேன்”

“உனக்கு அப்புடி ஒரு பேர் வச்சுருக்கறாங்கன்னா உன்கிட்ட இருக்கற பிரச்சனைய சரி பண்ணிக்கணும்டா. அதை விட்டுட்டு சொன்னவனை கூட்டிட்டு வா, ஒரு வழி பண்றேன்னு குதிக்கறது மடத்தனம்”

“அடுத்தவன் ‘இப்புடி சொல்றான், அப்புடி சொல்றான்’னுகிட்டு நீ எனக்கு புத்திமதியெல்லாம் சொல்லிகிட்டிருக்காத, புரியுதா?”

“உன் நல்லதுக்காகத்தான் சொன்னேன். இப்புடிதான் இருப்பேன்னா இருந்துட்டு போ” என்றுவிட்டு புன்னகையுடனே இடத்தைக் காலி செய்துவிட்டான் ராமலிங்கம்.

கணவன் மனைவிபோல் அவ்வப்போது இருவருக்குள்ளும் இப்படியான சண்டைகள் நடப்பதும், பிறகு அவற்றை மறந்துவிட்டு ஊர்சுற்றுவதும் தொடர்கதையாகியிருந்தது.

அந்த வணிக வளாகத்தின் வாகன நிறுத்துமிடம் வந்ததும் பின்னால் அமர்ந்திருந்த சிவா இறங்கி நின்றான்.

பைக்கை பூட்டிவிட்டு ராமலிங்கம் நிமிர, அவர்களருகில் உயர்ரக கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய ஜோடியும் அவர்களது குழந்தையும் கிட்டத்தட்ட உடலை முழுவதுமாக மறைக்குமளவிற்கு விலையுயர்ந்த நகைகளை அணிந்திருக்க, அவர்களிடமிருந்து பரவிய செயற்கை நறுமணம் அப்பகுதி முழுவதையும் மூச்சுமுட்டச் செய்தது.

கொழுகொழுவென்றிருந்த குழந்தையின் கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்துவிட்டு, ஓட்டுனரை நோக்கி குழந்தையை நீட்டினாள் அந்தப் பெண்.

“ராஜூ… பொருளெல்லாம் வாங்கி முடிக்க எப்புடியும் ஒரு மணிநேரத்துக்கு மேல ஆயிடும். குழந்தையை பாத்துக்கங்க”

“சரிங்கம்மா”

டிரைவர் குழந்தையை பவ்யமாக வாங்கிக்கொண்டான். புன்னகையுடனே பார்த்துக்கொண்டிருந்த அப்பெண்ணின் கணவன், குழந்தையை ஒருமுறை கொஞ்சிவிட்டு வளாகத்தை நோக்கி நடக்கத் துவங்கினான்.

ராமலிங்கம் அங்கிருந்து நகர, சிவாவோ ஆணி அடித்தாற்போல் நின்றிருந்தான்.

“டேய், என்னடா?”

“இவ்வளவு நகை போட்டுருக்கற குழந்தையையும், கார் சாவியையும் டிரைவர்கிட்டயே எப்புடி அலட்சியமா விட்டுட்டு போறாங்கன்னு பாருடா. பெரிய பெரிய க்ரைம் நடக்கறதுக்கு இவங்களே எப்புடியெல்லாம் வாய்ப்பை உருவாக்கி குடுக்கறாங்க பாரு” என்றான். அந்தக் குழந்தை, ஓட்டுனரைப் பார்த்து கன்னத்தில் குழி விழ வசீகரமாய் சிரித்துக்கொண்டிருந்தது.

சிவாவின் கவலையில் நியாயமிருப்பதாக மனதிற்குப்பட்டாலும், இது அவர்களது தனிப்பட்ட விருப்பம் எனும் நிலையில் நமது கரங்களில் எதுவுமில்லை என்ற எண்ணத்துடனே அங்கிருந்து அமைதியாக நடக்கத்துவங்கினான் ராமலிங்கம்.

ஆனால் சிவாவின் மனமோ குழந்தையையே சுற்றிச்சுற்றி வந்தது. ராமலிங்கத்தின் பின்னால் யோசனையுடனே நடந்துகொண்டிருந்தான்.

“நீ போயி பர்ச்சேஸ் ஆரம்பி. வந்து ஜாயின் பண்ணிக்கறேன்” என்றுவிட்டு தம்பதியர் சென்ற திசையை நோக்கி நடக்கத் துவங்கினான் சிவா.

வளாகத்திலிருந்த கடைகளில் தம்பதியரை சல்லடைப்போட்டு தேடிய சிவாவின் கண்கள், ஒருவழியாக அவர்களைக் கண்டடைந்தது. தயங்கியபடியே அவர்களருகே சென்று நின்றான். குழப்பத்துடனே ஏறிட்டார்கள் இருவரும்.

“நான் உங்களுக்கு அறிமுகமில்லாத மூணாவது ஆள்தான். இருந்தாலும், நீங்க செஞ்சுருக்கற வேலை ரொம்ப பயத்தை குடுக்குது. எனக்கென்னன்னு நிம்மதியா போக முடியல. நீங்க ரெண்டு பேரும் எப்புடி இவ்வளவு அலட்சியமா இருக்கீங்கன்னு புரியல சார்”

விழித்தார்கள் இருவரும்.

“கொஞ்சம் புரியறமாதிரி சொன்னீங்கன்னா பரவால்ல” என்றான் கணவன்.

“ஒரு குழந்தையை தூக்கிகிட்டு நடக்கறதுல அப்புடி என்ன பெரிய சிரமம் இருந்துடப் போவுது உங்களுக்கு? கோவில் வாசல்ல செருப்பை கழட்டி விட்டுட்டு போனாலே நிம்மதியா சாமி கும்பிடமுடியல. நீங்க எப்புடி குழந்தையை மறந்துட்டு சந்தோஷமா பொருள் வாங்கிகிட்டிருக்கீங்க? தினமும் டிவியிலேயும் பேப்பர்லேயும் எந்த செய்தியையும் பாக்கறதில்லியா?”

சிவாவை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். புன்னகைத்துவிட்டு பேசினாள் அவள்.

“எங்க குழந்தைமேல நீங்க காட்டற அக்கறையை நினைச்சா ரொம்ப சந்தோஷமா இருக்கு. ரொம்ப நன்றி. உங்களோட பயமும் ரொம்ப நியாயமானதுதான். ஆனா, எங்களுக்கு அந்த கவலை துளியும் கிடையாது”

“என்ன சொல்றீங்க?”

“ஆமாம். எங்களுக்கு கல்யாணமாகி பத்து வருஷம் ஆச்சு. குழந்தைக்கு வாய்ப்பில்லன்னு டாக்டர் சொல்லிட்டாங்க. எங்க டிரைவர் ராஜூ இருக்காரே, அவருக்கு மூணு குழந்தைங்க. குழந்தைங்கள சரியா வளர்க்கமுடியாம ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டிருந்தாரு. ஒரு குழந்தைய வேணும்னா நாங்க வளர்க்கலாமான்னு தயங்கிக்கிட்டே கேட்டோம். ஒத்துகிட்டாரு. அதுக்கப்பறம் முறைப்படி ஒரு குழந்தைய தத்தெடுத்துகிட்டோம். இப்ப, அவரோட குழந்தை ராஜாமாதிரி எங்க வீட்ல வளருது. அதுமட்டுமில்லாம, ரெண்டு குழந்தைங்களோட படிப்பு செலவையும் நாங்களே பாத்துக்கறோம்”

“என்னதான் தத்து குடுத்துட்டாலும், பெத்தவரால தன்னோட குழந்தைய கொஞ்சாம வேடிக்கை பாத்துகிட்டிருக்கமுடியுமா, சொல்லுங்க? அதான்… இந்தமாதிரி நேரம் கிடைக்கறப்பல்லாம் குழந்தைய அவர்கிட்ட விட்டுட்டு வந்துருவோம். அவர் கொஞ்சறது மட்டுமில்லாம அவரோட ஒய்ஃபுக்கும் வீடியோ கால் போட்டு கொஞ்ச வைப்பாரு. குழந்தை பெத்துக்கலன்னாலும், நானும் ஒரு தாய்தான். தாய்மை உணர்வு எனக்கும் இருக்கு. பெத்தவளோட வலியை என்னால உணரமுடியும்”

பதில் சொல்ல வார்த்தைகளின்றி சிலையாகிப் போனவன், கைகூப்பியபடியே அங்கிருந்து கிளம்ப எத்தணித்து திரும்ப, எதிரே புன்னகையுடன் நின்றிருந்தான் ராமலிங்கம்.

“உன்னோட புன்னகைக்கு அர்த்தம் புரியது தம்பி. ஒத்துக்கறேன். நான் அவசரக்குடுக்கைதான். போலாமா?” என்றான்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!