ஒரு பக்க போட்டிக்கதை: இறைவி

by admin
60 views

எழுத்தாளர்: மு.லதா

ஏட்டி கருப்பாயி மருமவ அஞ்சலதானே? எங்கடி போற இந்த ராத்திரில.. என்ற அங்கம்மாவின் குரல் கேட்கவே   பதட்டத்தை மறைத்துக்கொண்டு….இல்லாத்தா வவுறு நோவுது  அதான் செத்த ஒதுங்கிட்டு வரலாம்னு…..என்று இழுத்தாள் அஞ்சல.   அது சரி வவுத்துப் புள்ளத்தாச்சி ஏண்டி கம்மாக்கரப்பக்கம் இந்தேரத்துல ஒத்தைல போறவ?எங்கட்டி போனா இத்த கருப்பாயி? உம்புருசன் வீராண்டியவாச்சும் துணைக்குக் கூப்டுக்கலாம்ல? இல்லாத்தா அய்த்த மருத்துவச்சியக் கூட்டியாரப் போனாக,இவுகளப் பத்திதான் தெரியுமே, நெனப்பே இல்ல.. சரி சரி யதவா சூதானமாப் போய்ட்டு விரசா வாத்தா,,பேர் சொல்லாததும் வேப்பலயும் கைல வச்சிருக்கதானே,, ஆமாத்தா என்றாள் அஞ்சல.பாத்துப் போடி ,இன்னும் ரெண்டு மூனு நாள்ல பிரசவம் ஆயிடும்..பொட்டப்புள்ளயா இருந்தா சாமிக்குதான், ஆம்பள சிங்கமா இருந்தா நல்லது என்று முனகியபடி சென்றாள் அங்கம்மா

நிம்மதிப் பெருமூச்சுடன் நடையை எட்டிப் போட்டாள் அஞ்சல.வலி,காட்டு முட்கள்,இருட்டு, கரடு முரடான பாதை ….எதுவுமே அவளைத் தடை செய்யவில்லை. அவள் செவிகள் முழுதும் 10நாட்கள் முன்பு மருத்துவச்சிக்கும் கருப்பாயிக்கும் இடையே நடந்த உரையாடலே ஒலித்துக் கொண்டிருந்தது.ஏட்டி கருப்பாயி, பொட்டப்புள்ளதான்னு தோணுது என்றாள் அஞ்சலயின் நாடி பிடித்துப் பார்த்துக்கொண்டே. அடி ஆத்தி!என்ன சொல்லுதிக பொட்டக்கழுதயா,   ஆம்பள சிங்கம் பொறக்கப் போகுதுன்னு நெனச்சோம்.. வம்சம் வெளங்க ஆம்பளப்புள்ளதானே வேணும்,   மருந்தக் கொடுத்துக் கலச்சு விட்ராத்தாஎன்று மருத்துவச்சியிடம் கெஞ்சினாள் கருப்பாயி.அஞ்சலக்கு உசுரே போவது போல இருந்தது. அதே சமயம் அவள் முதுகைச் சேர்த்து எட்டி ஒரு உதை விட்டான் வீராண்டி, அவள் தலைமுடியைக் கொத்தாகப் பற்றி இழுத்தபடி,  ஏண்டி சிறுக்கிமவளே பொட்டக்கழுதயத்தான் இத்தனமாசமா சுமத்துக்கிட்டு திரியறவ என்று ஒரு அறை விட்டான்.வலியில் துடித்துக் கதறினாள் அஞ்சல.ஆத்தா பொட்டக்கழுத பூமியிலவிழாங்காட்டியும் சாவடிச்சுரணும். இப்பவே மருந்தக் கொடுக்கச் சொல்லு என்று உருமினான்.அடி ஆத்தி என்ன பேசுதிக, இப்பக் கொடுத்தா ரெண்டு உசுருக்கும் ஆபத்து.. பிரசவம் ஆகட்டும்,  தாயும் புள்ளயும் பிரியட்டும், உடனே சோலிய முடிச்சுப்புடுவோம் என்றாள் மருத்துவச்சி…இப்போது உடல் வலியை விட அஞ்சலயின் உள்ளம் தவித்தது.மகமாயி தாயே நீயே வந்து பொறக்கப்போறயா, எப்படியாச்சும் காப்பாற்றிவிட வேண்டும் என உறுதி பூண்டாள்.அதன் விளைவே அவளது இந்தப்பயணம்…கால்களெல்லாம் முடகள் தைத்த வலி,உடல் முழுவதும் கீறல்கள், ஒரு கல் வேறு தடுக்கி விட்டதில் ஆத்தா என்று அலறி விழ இருந்தவள்சமாளித்துக் கொண்டாள். அலறல் சத்தம் கேட்டு யாரது இந்நேரத்துல என்ற குரல் கேட்கவே சப்தநாடியும் அடக்கிக்கொண்டு புதருக்குள் தன்னை மறைத்துக்கொண்டாள் அஞ்சல.ஏலேய் அந்த மரத்துலதான் நம்ம முத்துப்பேச்சி தூக்குல தொங்குச்சு வாலே  ஓடிடுவோம் என்றபடி அதட்டிய குரல்கள் மறைந்தன.முத்துப்பேச்சியை மனதார வேண்டியபடி வயிற்றில் உள்ள சிசுவுடன் மானசீகமாகப் பேசினாள் அஞ்சல,   பாப்பா இன்னும் கொஞ்சத்தொலவுதாண்டா,ஹைவேஸ் வந்துடும் எப்படியாச்சும் தப்பிச்சுக்கலாம் என்றபடி பல்லைக்கடித்துக் கொண்டு நடந்தவள் சாலைக்கு வந்ததும் எதிரே வந்த காரை மறித்தபடி உட்கார்ந்தவாறே மயங்கிச்சரிந்தாள்.கண் விழித்துப் பார்த்தாள்அஞ்சல.ஆஸ்பத்திரி வாசம், உப்பியிருந்த வயிறு வடிந்து விட்டிருந்தது.ஐயோ என் குழந்த என்று கத்தினாள்.அம்மா உங்களுக்கு அழகான தேவதை பொறந்திருக்காஎன்றபடி வந்தாள் டாக்டர் ஷைலஜா. ரோஜாக் குவியலாகக் குழந்தையைக் கைகளில் வாங்கித் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள் அஞ்சல.ஒவ்வொரு மகவுடன் சேர்ந்து தாயும் அல்லவா பிறக்கிறாள்.ஆண் சிங்கங்களைப் பெற்றெடுப்பதும் ஒரு பெண்தான் என்பதைச் சில உள்ளங்கள் மறந்து போகின்றன.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!