எழுத்தாளர்: அனுராதா ஜெய்ஷங்கர்
” டாக்டர், குழந்தை நாலு மணி நேரமா குடிக்கிற பால் எல்லாம் வாந்தி எடுக்கறா “.
பரிதவிப்போடு ஆறு மாதக் குழந்தையை ஒரு பொக்கிஷம் போல மேசை மீது வைத்தவனை பார்த்தவாறு மீனா குழந்தையைப் பரிசோதித்தாள்.
” பாப்பாவோட அம்மா எங்கே?”
“அவங்களுக்கு ஒரு முக்கியமான வேலை, நாந்தான் பார்த்துக்கறேன், பாப்பாவுக்கு என்னாச்சு டாக்டர் ?”
” ஒன்னுமில்லை, குழந்தை வயிறு என்ன தொட்டியா? பசிச்சு அழும்போது மட்டும் பால் குடுங்க”
அப்போது அலைபேசி ஒலிக்க, எடுத்து பேசியவளின் குரலில் பதற்றம் தொற்றியது.
” உடனே வரேன்” என்று துண்டித்து விட்டு உதவியாளரை கூப்பிட்டாள்.
” நான் அவசரமா வீட்டுக்கு கிளம்பறேன், டாக்டர் மது மீதி பேஷண்ட்ஸை பார்ப்பாங்க. சேகரை வண்டியை எடுக்கச் சொல்லுங்க.”
மீனாவுக்கு காரில் உட்கார்ந்தவுடன் அந்த இளம் தகப்பனின் நினைவு வந்தது. அலைபேசியில் கேட்ட வார்த்தைகள் மனதில் அலையாடின. என் அப்பாவும் இப்படிதான் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனால் பரிதவித்து இருப்பாரோ… அப்பா.. கண்கள் நிறைந்தன.
**************
” அப்பா, நல்லா பிடிச்சுக்குங்க, பயமா இருக்கு”
” மீனுக்குட்டி, அப்பா கூடவேதான் வரேன்ல, நீ ஹாண்டில்பாரை நேரா பிடி, இடுப்பை வளைக்காம முழுசா பெடல் செய் “.
” அப்பா, நல்லா ஓட்டறேன்ல?”
” திரும்பி பாக்காத, நேரா போ”…அப்பா கத்திக்கொண்டிருக்கும்போதே மீனா இரண்டு பக்கமும் ஆடி சைக்கிளை ஓரத்திலிருந்த மணல் மேட்டின் மீது விட்டபோது அவர் ஓடி வந்து பிடித்து விட்டார்.
பின் இருவருமாக ஆளுக்கொரு சைக்கிளில் ஊர் சுற்றிய போதும் அவளுக்குத் தோன்றவில்லை. நாலாப்பு விடுமுறையில் காவிரியில் தண்ணீர் சுமாராக ஓடிக்கொண்டிருந்த ஒரு நாளில் அப்பா கூட இருக்கும் தைரியத்தில் சின்ன பாலத்தின் மேலிருந்து ஆற்றில் குதித்து இந்தக் கரைக்கும் அந்தக் கரைக்குமாக நீந்திக் கரை ஏறிய போதுதான் மீனாவுக்கு முதல்முறையாகத் தோன்றியது.
” என் அப்பா மாதிரி உலகத்துலயே வேற அப்பா இருக்க மாட்டாங்க!”.
************
” ஏங்க, புள்ளைக்கு பன்னெண்டு வயசாகப் போவுது, நான் இப்பவோ எப்பவோன்னு பயந்துட்டு இருக்கேன், நீங்க இப்ப சிலம்பம் கத்துக்க கூட்டிட்டுப்போறேன்னு சொல்றீங்க, பேசாம இருங்க “.
அப்பா கடகடவென்று சிரித்தார்.
“சுந்தரி, மீனா நாளைக்கு வெளியில போய் படிச்சு வேலை பாக்கப்போற பிள்ளை, நல்லா உடம்பும் மனசும் உரமா இருக்கணும். துணிச்சல் வரணும். அதுக்குதான் சிலம்பம்.”
” இப்பவே அக்கம்பக்கத்தில சிரிக்கறாங்க, உம் புருஷன் அதிசயமாத்தான் பொண்ண வளத்துறாருன்னு”
” சிரிக்கட்டுமே, நீ வா, உனக்கும் நாலே நாள்ல சைக்கிள் ஓட்ட சொல்லித்தர்றேன்!”
சட்டென்று காணாமல் போன கோபத்தை மறைப்பதற்காக அம்மா முகத்தை திருப்பிக்கொண்ட அந்த நொடியில் அவள் ஒளித்து வைத்திருந்த நாணம் கீழே சிதறி ஒரு புன்னகையாக மாறி அப்பா உதடுகளில் போய் ஒட்டிக்கொண்டது.
” மீனுக்குட்டி, நீ அம்மா மாதிரி பயந்தாங்குளியா இல்லாம அப்பா மாதிரி தைரியமா இருக்கணும் “
” சரிப்பா “.
‘என் அப்பா மாதிரி உலகத்துலயே வேற அப்பா இருக்க மாட்டாங்க’.
***********
கார் ஒரு குலுக்கலுடன் நின்றது.
” என்னாச்சு சேகர்?”
” சிக்னல் விழுறதுக்குள்ள போயிடலாம்னு நெனச்சேன்மா . முடியல. அதான்..”
முன்புற கண்ணாடியில் அவளைப் பார்த்து பதில் சொன்ன சேகர் அதிர்ந்தான்.
” டாக்டரம்மா, அழுவுறீங்களா? அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம்மா? “
மீனாவுக்கு அலைபேசியில் கேட்ட வார்த்தைகள் மேலெழும்பின.
” அம்மாடி, மீனா.. எனக்கு வீட்ல தனியா இருக்க ரொம்ப பயமா இருக்கும்மா…. நீ உடனே வீட்டுக்கு வரியா கண்ணு?”
எந்த நொடியும் உடையத் தயாராக இருந்த குரல்.
” என்னாச்சுப்பா, அட்டெண்டர் இருக்கார்ல?”
“கிளம்பிட்டாரு. எனக்கு ரொம்ப பயமா இருக்கும்மா, உடனேயே பாக்கணும்னு தோணுது”.
விட்டுச் சென்ற அம்மாவும், வந்து சேர்ந்த வியாதிகளும், ஏறுகின்ற வயதுமாய் சேர்ந்து அப்பா எப்படி உருக்குலைந்து விட்டார்!
” சேகர், நாளைக்கு நம்ம நர்சிங்ஹோம்ல என்னோட ரெஸ்ட்ரூம்ல ஒரு பெட் போட்டு ஒரு டிவியும் வைக்க ஏற்பாடு பண்ணிடுங்க. அப்பாவையும் தினமும் கூட கூட்டிட்டு போயிடலாம்”.
வீட்டிற்குள் சென்றவுடன் மீனா அப்பாவை அணைத்துக் கொண்டாள்.
“அப்பா, நான் இருக்கேன்ல, எதுக்கும் பயப்படாதீங்க”.
“டாய்லெட் போகணும்மா “.
அழைத்துச் சென்றாள். கதவுக்கு வெளியே நின்றாள். நிமிடங்கள் கரைந்தன.
“அப்பா..”
பதில் இல்லாமல் போகவே பயத்துடன் கதவைத் திறந்தாள்.
அப்பா அப்படியே நின்றார். கண்களில் நீர் பொங்கிக் கொண்டிருந்தது. கால்கள் நடுங்கின. வேட்டி தரையில் கிடந்தது.
” நழுவிடுச்சு.. குனிஞ்சு எடுக்க முடியலைம்மா.. ” இயலாமையும் பரிதவிப்பும் மோதின.
“பரவாயில்லைப்பா “. மீனா அருகில் தொங்கிய துண்டை வேகமாக
உருவினாள்.
” அப்பா உன் குழந்தையாவே ஆயிட்டேன்மா. நீ என் அம்மாதான்”. கைகளை கூப்பினார்.
மீனா துண்டை அவர் இடுப்பில் சுற்றினாள்.
” நான் உங்களுக்கு அம்மாதான்பா!”
அப்பாவின் கன்னத்தில் முத்தமிட்டாள் மீனாம்மா
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
.