ஒரு பக்க போட்டிக்கதை: உறவொன்று கண்டேன்

by admin
59 views

எழுத்தாளர்: தி.வள்ளி

அக்னி நட்சத்திர வெயில் அனலாய் தகிக்க ..அடுக்களையில் எரிச்சலுடன் வேலையாயிருந்த சாரதாவை சஜனின் குரல் கலைத்தது …

“அம்மா அம்மா அண்ணன் ஒரு பாக்கெட்ட மறைச்சு மாடிக்கு கொண்டு போறான்”

சாரதா  அவசரமாக மாடிக்கு விரைந்தாள்…

” சஞ்சய் இங்க வா.. கைல என்ன கொண்டு வந்த” சஞ்சைக்கு முகம் மாறியது ..

” சுப்பிரமணியம் கோல்ட் பிஷ் ரெண்டு கொடுத்தான். அதத்தான் கொண்டு வந்தேன்”

 மனதிற்குள் நிம்மதி பிறக்க … சஜனை  திட்டிக் கொண்டே இறங்கினாள் சாரதா.

வருடங்கள் ஓடிவிட,  இப்போது சஞ்சய் பிளஸ் டூ மாணவன். ஸ்கூல்  முடிந்ததும் டியூஷன் போய்விட்டு வர மணி ஏழாகும்…அன்று வரும்போது கையில் ஒரு சின்ன டப்பா ஒரு கவரில் சுற்றி வைத்திருந்தான்

இப்போது எட்டாவது படிக்கும் சஜன் “அம்மா.. அண்ணன் கட்டிலுக்கு கீழ ஏதோ  ஒரு  டப்பாவ ஒளிச்சு வைச்சிருக்கான்  “

 சாரதா  மனதுக்குள் பக்கென்றது..சஞ்சய்  இப்போது  பதின்பருவத்து பையன். தனக்கு தெரியாமல் ஏதோ செய்கிறான் …போதைப் பொருள் கூட ஏதோ ஒரு பள்ளியில் புழங்குவதாக கீதா சொன்னாளே.. அது மாதிரி ஏதும் இருக்குமோ? ..இரவு தூக்கம் வரவில்லை

அன்று ஞாயிற்றுக்கிழமை .. …மாடியேறிய சாரதா   படித்துக் கொண்டிருந்த சஞ்சயிடம் “சஞ்சய் உன் கட்டிலுக்கு கீழே உள்ள டப்பாவில் என்ன வச்சிருக்க..  பொய் சொன்னா எனக்கு பிடிக்காதுன்னு ” என்றாள் கடுமையான குரலில் …

”  ஒன்னும் இல்லைம்மா” மழுப்பினான் சஞ்சய் .”எல்லாம் இந்த சஜன் வேலை ..”  சிடுசிடுத்தான்

“அவனை ஏண்டா கோபப்படுற ..நீ பண்ற திருட்டுத்தனத்தை என்கிட்ட சொல்லிட்டனாலயா …? “

சஞ்சய் குனிந்து அந்த அட்டை டப்பாவை எடுத்தான்.  …

“ஏன் தயங்குற சஞ்சய்  டப்பாவை தொற ” .

டப்பாவை திறக்க உள்ளே பல்லி போல ஒரு சின்ன ஜந்து…

கோபத்தில் கொதித்தாள் சாரதா .. ” பல்லியை போட்டு அடைச்சு வச்சிருக்கியே?  உனக்கென்ன பைத்தியமா?  ” கத்தினாள். ..

“அம்மா… அம்மா… இது பல்லியில்ல அணில் குஞ்சு “என்றான் சஞ்சய் .

“எங்க கிளாஸ்ல ஒரு மூலைல அணில் கூடு கட்டியிருந்தது .கிளாஸ் ரூமை கிளீன் பண்ணும் போது அந்த கூட்டை வெளியே தூக்கி போட்டுட்டாங்க அதுல இருந்த ரெண்டு குஞ்சு செத்துப்போச்சு.. இந்த ஒன்னு மட்டும் உயிரோட இருந்தது.. தனியா கிடந்தது.. விட்டா செத்துப் போயிடும் .. இதை எப்படியாவது காப்பாத்தனும் தான்  அத பெட்டியில் வைச்சு கொண்டு வந்தேன் ..

நீ தினமும் கொடுக்கிற பாலை  ஊட்டி விடுவேன்” என்று அந்த சின்ன உருவத்தை தன் கையில் விட்டுக்கொண்டு இன்ஃபில்லரில் பாலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் வாயில் கொடுக்க  ஆர்வமாக குடித்தது …

சாரதா வாயடைத்துப் போனாள். இதை எதிர்பார்க்கவில்லை. வேண்டாத கற்பனை பண்ணியதற்கு வெட்கமாக இருந்தது ..தினமும் கொஞ்ச நேரம் அந்த குஞ்சை சஞ்சய் கவனிப்பதை பார்த்துக் கொண்டிருப்பாள்..ஒரு மாதத்தில்

வளர்ந்து சின்ன குஞ்சாக இருந்தாலும், அணில் உருவமாக தெரிந்தது ..

சஞ்சையை கண்டதும் தாவி பெட்டியிலிருந்து ஓடி வந்து அவன் கை மேல் படுத்துக்கொண்டு அப்படியே தலையை சாய்த்து, முகத்தை திருப்பி அவனைப் பார்க்கும். அவனிடம் இருக்கும் போது பாதுகாப்பாக உணரும்.. இப்போதெல்லாம் சாரதாவை பார்த்து கூட அது பயந்து பெட்டிக்குள் ஒடுக்குவதில்லை .அஞ்சு என்ற பெயரும் வைத்தான். ..

நன்றாக வளர்ந்த அஞ்சு இப்போது சுதந்திரமாக  ரூமில்  சுற்றிக் கொண்டிருக்கும் ..சஜன் மட்டும் அதற்கு பயந்து கொண்டு மாடிக்குப் போக மாட்டான்.

இப்போது  பெரிய அணிலாக வளர்ந்து விட்டது.. வெளியே போய் வர ஆரம்பித்தது ..சரியாக மாலை 7:00 மணிக்கு சஞ்சய் பள்ளியிலிருந்து  வரும்போது அதுவும் வந்துவிடும்  ..ஒரு நாள் வெளியே போனது இரண்டு நாட்களாக திரும்ப வரவில்லை…

சஞ்சய் ” ..அம்மா அஞ்சு வளர்ந்துடுச்சு.. இனிமே அதுக்கு என் பாதுகாப்பு தேவையில்ல.. நானே அத பள்ளிக்கூடத்தில இருக்கிற மரத்தில் கொண்டு விட்டுடனும்னு நெனச்சேன். ஒருவேளை அதோட தாய் இத இனம் கண்டு கொண்டு சேர்ந்துக்கிடலாம்..”

அது வராததில் மகிழ்ந்தது சஜன்தான் ” அப்ப்ப்பா நல்ல வேளை போய் தொலைஞ்சது ..  “

அஞ்சுவை க் காணாமல் சஞ்சய்  பரிதவிப்பது தாயுள்ளதிற்கு புரிந்தது ..

மறுநாள் காலை எழுந்தவனுக்கு இன்ப அதிர்ச்சி..  மேஜை மேல் அவனைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தது அஞ்சு  அதற்கும் அவனைப் பார்க்காமல் இருக்க முடியவில்லையோ.. தன்னைக் காப்பாற்றி, உணவளித்து,  உயிர் கொடுத்த தாயல்லவா ..ஓடி வந்து அவன் மேலேறி, அவன் நெஞ்சில் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டது ..சஞ்சய் மனதில் அப்படி ஒரு பரவசம் .. தன் செல்ல அஞ்சு வை தடவிக் கொடுத்தான் ..அவன் கண்கள் கண்ணீரால் நனைய.. மனம் பாசத்தால்  நிறைந்திருந்தது. தாய் பிள்ளை பாசம் மனிதர்களில் மட்டும்தான் இருக்க வேண்டுமா?

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d %e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!