எழுத்தாளர்: நந்தினி மோகனமுருகன்
இருட்டு அறையில் ஆடை இன்றி போர்வை மூடிப் படுத்திருக்கிறேன், மின்னல் போல் ஒரு வெளிச்சம் என்மேல் வந்து வந்து போகிறது ஆனால் கண்களை மட்டும் திறக்க முடியவில்லை.
என் கைகளை யாரோ இறுகப் பற்றுகிறார்கள் ஆம் அது என்னவர் தான், “மாலதி, ஒன்னும் கவலைப் படாதமா எல்லாம் சரி ஆகிவிடும் சீக்கிரம் பழைய நிலைமைக்கு வந்திடுவன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்று ஆறுதல் கூறுகிறார்.
சில ஆறுதல்கள் நம் இதயத்திற்கு இதமளிக்குமே தவிர மூளைக்கு அல்ல, ‘உன்னால் பழைய நிலைக்கு இந்த வாழ்வில் திரும்பவே முடியாது’ என்று என் நினைவில் வந்து மூளை உணர்த்தியது.
ஆம் மூளை கூறுவதும் உண்மைதானே என் கர்ப்பப்பையை வெட்டி எடுத்துவிட்டார்கள், என் பிள்ளைக்கு பாலூட்டிய மார்பையும் அகற்றிவிட்டார்கள், இனி எவ்வாறு பழைய நிலைக்கு திரும்புவேன்.
என் விரல்களில் ஏதோ ஊசியை வைத்துக் குத்துகிறார்கள் என்னால் உணர முடிகிறது ஆனால் கத்த முடியவில்லை. என்ன நடக்கிறது எனக்குள் புரியாமல் தவிக்கிறேன்.
யாரோ என் கன்னத்தை தட்டுகிறார்கள், “மாலதி, உங்கள் மகள் உங்களை பார்க்க வந்திருக்கிறாள்” என்று செவிலியர் கூறுகிறார். “அம்மா, நான் பேசுவது உங்களுக்கு கேட்குதாமா. என்ன ஆச்சுமா உங்களுக்கு சீக்கிரம் எழுந்து வாங்க” என்று கதறுகிறாள் என் பெண்.
அவள் பேசுவது எனக்கு நன்றாக கேட்கிறது, ஆனால் பதிலுக்கு எந்த உணர்வையும் அவளிடம் தெரிவிக்க முடியாமல் இருக்கிறேன்.
மீண்டும் அவள் தான் என் மகள் என் அருகில் வந்து என் கையை எடுத்து அவள் கைக்குள் வைத்து அழுத்துகிறாள்.
“அம்மா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும், நேற்று பள்ளியில் என் ஆடை எல்லாம் இரத்தக் கறை ஆகிவிட்டது. எல்லாரும் நான் பெரியவள் ஆகிட்டேன்னு சொல்றாங்க, அப்படினா என்னமா எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அழுகிறாள்.
அவள் கூறியதைக் கேட்டு என் பெண் பெரியவள் ஆகிவிட்டாள் என்று மகிழ்வதா இல்லை அவளுக்கு எதுவும் செய்யமுடியாமல் இருக்கும் என் நிலையை எண்ணி வருந்துவதா என எண்ணி கண்ணீர் வடிக்கிறேன்.
என்னை அறியாமலே நான் வடித்த என் கண்ணீர் என் கண்களில் இருந்து வெளியே வழியத் தொடங்கியது.
என் கண்ணீரை கண்ட அவளோ, “அம்மா அழறாங்க! அப்பா அம்மா அழறாங்க ஆனா கண்ணை திறந்து என்னை பார்க்க மாட்டேங்கறாங்க” என்று என்னவரிடம் அழுகிறாள்.
“ஏன் எனக்கு மட்டும் இத்தனை துயரம்? அவளுக்காக தானே இவ்வளவு நாளும் அனைத்து வேதனையையும் தாங்கிக் கொண்டேன்.
கீமோதெரபி சிகிச்சையில் தலைமுடி எல்லாம் உதிர்ந்து போனது ஏன் என் கண் இமைமுடி கூட உதிர்ந்து போனது, தோலின் நிறமும் கருமையாக மாறியது, என்னைப் பார்க்க எனக்கே பிடிக்காமல் போனது அனைத்தையும் யாருக்காக பொறுத்தேன் என் பெண்ணுக்காக அல்லவா. அப்படி இருக்க இந்த புற்றுநோய்யின் பிடி மட்டும் ஏன் என்னை விட்டு அகலவில்லை.
ஏதோ ஒரு மாற்றம் எனக்குள், என்னால் மூச்சு விட முடியவில்லை,என் உடலுக்குள் ஏதோ நடக்கிறது அதை என்னால் உணர முடிகிறது. வித்யாசமாய் மூச்சு விடுகிறேன்.
“அவுங்களால மூச்சு விட முடியல, செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கிறது மேலும் இதயத் துடிப்பும் குறைந்துக் கொண்டே வருகிறது. எங்களால முடிந்தவரை முயற்சி செய்கிறோம்” என்று மருத்துவர் என் குடும்பத்தினரிடம் கூறுகிறார் என் காதின் வழியே நானும் அதை கேட்கிறேன் .
மருத்துவர் கூறியதைக் கேட்ட என் கணவர், “மாலதி, என்னைத் தனியா தவிக்க விட்டுவிட்டு போய்விடாதே பொட்டப் பிள்ளையை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வேன்” என்று என் அருகில் வந்து மன்றாடுகிறார்.
“அம்மா, இனி நான் உங்ககிட்ட அது வாங்கி தா இது வாங்கி தான்னு கேட்கவே மாட்டேன்மா எனக்கு நீங்க மட்டும் போதும் ப்ளீஸ் சீக்கிரம் எழுந்து வாங்கமா” என்று மகள் கண்ணீர் விட்டு அழுகிறாள்.
அனைத்தையும் என் காதின் வழியே கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் ஆனால் என்னால் அதற்கு எந்த உணர்ச்சிகளையும் வெளிப்படுத்த முடியாமல் இருக்கிறேன்.
முன்பை விட மிகுதியான இருளை இப்பொழுது நான் உணர்கிறேன், வெளிப்புற இறைச்சல்கள் மெதுவாக குறையத் தொடங்குகுறது, என்னை சுற்றி யார் பேசுவதும் எனக்கு கேட்கவில்லை, தூக்கம் வருவதை போல் உணர்கிறேன். ஏன் இவ்வாறு நடக்கிறது ஒரு வேளை நான் இறந்துக் கொண்டிருக்கிறேனா? இவை எல்லாம் அதன் அறிகுறி தானா! ஒரு வேலை அது உண்மை என்றால்….! இல்லை நான் இறக்கக் கூடாது நான் இல்லையேல் என் பெண் என்ன செய்வாள் அம்மா இல்லாமல் அவள் பல துயரங்களை சந்திப்பாள் அல்லவா, அவளுக்காக நான் உயிர்வாழ வேண்டும்.
இளம் வயதில் தாயை இழந்து நான் பட்ட துயரங்களை வார்த்தைகளால் சொல்ல இயலாது, நான் என் வாழ்வில் மிகவும் காயப்பட்ட சொல் இப்பொழுதும் என்னைக் காயப்படுத்திக் கொண்டிருக்கும் சொல் ‘அம்மா இல்லாதவள்’. அந்த சொல் எனக்கு ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது.
என் பள்ளி பருவத்திலே என் தாயை இழந்தவள் நான்! இன்றோடு இருபத்தி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் எனக்கான அந்த அடையாளம் இன்னும் மாறவில்லை.
வெளியில் சென்றால், காதில் விழும்படியே ‘இவள் தாயற்றவள்’ என்று புறம் பேசினார்கள். அது இவளுக்கு தாய் இல்லையே என்ற பரிவா இல்லை ஏளனமாக எண்ணும் என்னமா தெரியவில்லை. ஆனால் அவை என் மனதை புண்படுத்தியது.
மேலும் சிலர் ஆறுதல் கூறுவதாய் நினைத்துக் கொண்டு என்னிடமே வந்து “உனக்கு அம்மா இல்லையா மா! எப்படி இறந்தாங்க, என்ன ஆச்சு “ போன்ற கேள்விகளை கேட்டு புண்ணான நெஞ்சை மேலும் புண்படுத்தினார்கள்
மேலும் சில உறவினர்கள் நான் செய்யும் சிறு தவறையும் சுட்டிக் காட்டி “இவளுக்கு அம்மா இல்லை அதான் இப்படி பண்றா, அம்மா இருந்திருந்தா நல்லா வளர்த்தி இருப்பாங்க “ என்று நெரெதிரே கூறினர்.
விதியின் விளையாட்டோ, வினைகளின் பயனோ தாயை இழந்து தவித்தேன்.
ஆனால் நான் பட்ட துயரத்தை என் மகள் அனுபவிக்க விடமாட்டேன், நான் சாக கூடாது. என்னுடைய பெண்ணின் எதிர்காலத்திற்காக நிச்சயமாக நான் உயிர்வாழ வேண்டும். அவ்வளவு எளிதாய் என் மகளை விட்டு நான் போக மாட்டேன், நான் உயிர் பிழைக்க வேண்டும். யாரோ சிலர் என் மீது கையை வைத்து அழுத்துகிறார்கள் இதயம் உடைவது போல் வலிக்கிறது.மேலும் மேலும் அழுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது மீண்டும் வெளிப்புற சத்தங்கள் மெதுவாக கேட்கத் தொடங்குகிறது , கண்களில் வெளிச்சம் தோன்றுகிறது, கண் விழிகளை அசைக்க முடிகிறது, கண்களை மெதுவாக திறக்கிறேன். ஆம் நான் பிழைத்து விட்டேன், என் மகளுக்காக மீண்டும் உயிர் பிழைத்து விட்டேன். எதிரே நிற்கும் என் மகள் ‘அம்மா ‘ என்று ஓடி வந்து என்னைக் கட்டிக் கொள்கிறாள்.
என் மகழுக்காக நான் மீண்டும் பிறந்து வந்தேன்…. என் நோய்க்கு நானே மருந்தாகி போனேன்!!
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: