ஒரு பக்க போட்டிக்கதை: ஒரு துளி அமிர்தம்

by admin
114 views

எழுத்தாளர்: பானுமதி கண்ணன்

இன்றைக்கு பஸ் கிடைக்குமா என்று தெரியவில்லை. பல்லவனில் திடீர் ஸ்ட்ரைக். யாரோ ஸ்டூடண்ட் யாரோ கண்டக்டரின் சட்டையைப் பிடித்து விட்டானாம். மின்னல் வேகத்தில் செய்தி பரவி ஓடிக்கொண்டிருந்த பஸ்களை அங்கங்கே அப்படியப்படியே நிறுத்தி விட்டார்கள்.

ஆட்டோக்களுக்கு அடித்தது லக். மனிதர்களைத் திணித்துக்கொண்டு முழு வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. காலி ஆட்டோ ஒன்றும் கண்ணில் படவே இல்லை.

வழக்கம் போல் ஐந்து மணிக்கு ஆபீஸ் முடிந்து பஸ் ஸ்டாண்ட் வந்தவள் திகைத்துப் போனாள். இப்போது என்ன செய்வது? குழந்தையை வீட்டில் பேபி சிட்டரிடம் விட்டு விட்டு வந்திருக்கிறாள்!  இவள் போய் தான் அவளை அனுப்ப வேண்டும். குழந்தை வேறு இவளுக்காகக் காத்திருக்கும்!

தினமும் ஆறு மணிக்குள் வீட்டுக்குப் போய் விடுவாள். உடனேயே உடம்பைச் சுத்தம் பண்ணிக்கொண்டு தரையில் அமர்ந்து குழந்தையை வாரி நெஞ்சில் இட்டுக்கொண்டால் இவள் மார்பின் அழுத்தம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய அதன் வயிறு கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பும். உடனேயே ஒரு துளி அமிர்த‌ தாரையோடு அது சிரிக்கும் பாருங்கள் ஒரு சிரிப்பு..கோடி பொன் பெறும்!

இப்போதோ வீட்டுக்குப் போக வழியில்லை. அங்கே குழந்தை என்னமாக இருக்கிறதோ?

தெருவில் ஒரு பஸ் கூட தென்படவில்லை. பாரீஸ் கார்னரிலிருந்து புறப்படவே இல்லை என்றார்கள். வந்த சிலவும்  ஜி.எச். அருகே சடன் ப்ரேக் போட்டு வரிசையாக  நின்று விட்டன. டிரைவர்களும் கண்டக்டர்களும் எதிர்பாராது கிடைத்த ஓய்வில் சிரித்து மகிழ்ந்து டீ சிகரெட் என்று‌ அதைக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். சிலர் அவர்களை அணுகி விவரம் கேட்க அருள் கூர்ந்து வாய் திறந்தார்கள்.

“நிலைமை எப்ப சீராவும்னு எங்களுக்கே தெரியாதும்மா.

மறு உத்தரவு வரும்வரை வண்டியை எடுக்க மாட்டோம். அவ்வளவு தான்!”

“யூனிஃபார்ம்ல இருக்கிற பப்ளிக் செர்வன்ட் மேல் கை வைக்க எவ்வளவு தில் இருக்கணும் அவனுக்கு? நாளைக்குக் கூட வண்டியை எடுக்கக்கூடாது காம்ரேட்! அதுதான் சரியான பாடம் இவன்களுக்கு!”

இவளுக்கு மார்பு மிகவும் வலித்தது. பால் நிறைந்து வலி உயிர் போய் விடும் போலிருந்தது. வலித்த மார்பை  ஆறுதலாகத் தொட்டபோது அந்த அழுத்தம் கூடத் தாங்காமல் சட்டென்று புடவையின் மேற்புறம் நனைந்து விட்டது! கடவுளே..

பக்கத்தில் இருந்த பெண் நிமிடத்தில் நிலைமையை அவதானித்து விட்டாள். “என்னம்மா.. பால் கட்டிக்கிச்சா?”

“ம்”  என்று தலையசைத்தாள். கண்களில் நீர்‌ துளிர்த்து விட்டது.

“பாட்டில் வெச்சிருக்கியா?”

“உம்..”

“இங்க வா சொல்றேன்..”  என்று ஷட்டர்கள் இறக்கப்பட்டு காலியாக நின்று கொண்டிருந்த பல்லவன் அருகில் அழைத்துச் சென்றாள். “உள்ள போய் பாட்டில்ல பிழிஞ்சு எடுத்துடு!”

“ஐயோ..பஸ்சுலயா?”

“ஷட்டர் மூடித்தானே இருக்கு. சட்டுனு போய் பிழிஞ்சு எடுத்துட்டு வா! இந்த  வலி தாங்குறது கஷ்டம்!”

“யாராவது வந்துட்டா?”

“நான் பார்த்துக்கறேன். சீக்கிரம் போ!”

குழந்தைக்கு புட்டிப்பால் இன்னும் பழக்கவில்லை. காலையில் ஆபீசுக்கு வரும்போது பம்ப் செய்து தாய்ப்பாலை ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு வருவாள். பேபி சிட்டர் தேவைப்படுகிறபோது  ரூம் டெம்பரேச்சருக்குக் கொண்டு வந்து புகட்டி விடுவாள். ஆபீசிலும் சிலசமயம் இப்படியாகி விடும். அப்பொழுது ரெஸ்ட் ரூம் போய் பம்ப் செய்து வாஷ்பேசினில் ஊற்றி விடுவாள். ஆனால் இன்று நடுத்தெருவில் நிற்கும் பஸ்ஸில்!  வேறு வழி?

பாட்டில் நிறைந்ததில் போன உயிர் திரும்பி வந்தது. அந்தப் பெண்ணுக்கு நன்றி சொல்லி விட்டு கணவனுக்குப் ஃபோன் செய்தாள். அவனுக்கு அம்பத்தூரில் ஆபீஸ்.

“எங்க இருக்க?” என்றான்.

சொன்னாள்.

“சரி அங்கேயே இரு. இன்னும் அரைமணில வந்து பிக்கப் பண்ணிக்கறேன்.”

•••

பக்கத்தில் ஏதோ குழந்தை அழுகிற சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தாள். பிளாட்பாரத்தில் ஒரு பிச்சைக்காரி குழந்தையோடு மல்லாடிக் கொண்டிருந்தாள். வற்றிப் போன அவள் மார்பைச் சப்பி பால் வராமல் அந்தக் குழந்தை ரகளை பண்ணிக் கொண்டிருந்தது.

“என்னாச்சு?” என்றாள்.

“பாலுக்கு அழுவுது. அவங்கப்பன் தம்புசெட்டிச் தெருவில் மூட்டை தூக்கப் போயிருக்கான். அவன்‌ எப்போ வந்து துட்டு கொணாந்து இதுக்கு நான் பால் வாங்கி ஊத்தறது?”

சட்டென்று மனதில் ஒரு மின்னலடித்தது. கைப்பையில் நிறைந்திருந்த பால் பாட்டிலை வெளியே எடுத்தாள். “குழந்தைக்குக் கொடுங்க. நல்ல பால் தான். தாய்ப்பால்!”. கூடவே நூறு ரூபாயும்.

அந்தப்பெண் இவளைக் கையெடுத்துக் கும்பிட்டு பாட்டிலைக் குழந்தையின் வாயில் வைத்த கணம் காணாததைக் கண்டது போல் அது வேகவேகமாக உறிஞ்சி சப்பி நிமிடத்தில் புட்டி  காலியானது. இவள் ‌மனம்  நிறைந்து தளும்பியது.

•••

“பஸ்சுக்கு வெயிட்  பண்ணி எரிச்சலா இருப்பேன்னு நினைச்சேன். பரவாயில்லை. சந்தோஷமாத்தான்  தெரியுறே?” என்றான் கணவன்.

“வீட்டுக்கு வாங்க சொல்றேன்!” என்று‌ புல்லட்டில் ஏறியமர்ந்து அவன் தோள்களைத் தழுவிக் கொண்டாள். தன் குழந்தை எப்படியும் பசியாறியிருக்கும் என்று தோன்றியது.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!