எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன்
மகனின் ஸ்பரிசத்தில் கண் விழித்தாள் தாய். விடிந்து நேரம் ஆகியதை உணர்ந்து பரபரப்பாக எழுந்து மகனைக் காண கண்களில் கண்ணீருடன் பசிக்கிறது என்று அழ ஆரம்பித்தான், அவளின் இரண்டு வயது மகன்.
மகனின் கண்ணீரைக் கண்டதும் அவனை வாரி அணைத்து உச்சியில் இதழ் பதிக்க, இரவில் கணவன் அடித்ததில் கிழிந்த உதட்டிலிருந்த காய்ந்த இரத்தம் வலித்தது.
விரக்தியாய் சிரித்துக்கொண்டு, எழுந்து முகம் கழுவி, மகனுக்கு பசியாற்ற என்ன இருக்கிறது என்று சமையல் மேடையில் ஆராய்ந்தாள்.
நல்ல வேளையாக கணவன் தட்டி விட்டும் கொட்டிடாத பழைய சோறு கொஞ்சம் இருக்க, அதை பிழிந்து மகனுக்கு வைத்து சாப்பிட கொடுத்து, வேக வேகமாக குளித்து தயாரானாள் வேலைக்குச் செல்ல.
பக்கத்து குடிசையிலேயே மாமியார் இருக்க, மகனை அங்கே விட்டுவிட்டு வீட்டு வேலைக்குச் செல்லும் பழக்கத்தை உடையவள், மாமியார் அவரின் மகளின் வீட்டிற்குச் சென்று இருப்பதால், இன்று மகனையும் அழைத்துக் கொண்டே வேலைக்குச் சென்றாள்.
அவள் குடிசையில் இருந்து வெளியே செல்லும்போது பாவமாக சில பார்வைகளும், காமமாக பல பார்வைகளும் அவளை தொடர்ந்தது. அனைத்தையும் தன் மகனை அணைத்து தைரியமாக கடந்து சென்றாள்.
தாமதமாக வந்தவளை திட்டி விட்டு, சீக்கிரம் வேலையை முடி என்று சொல்லிவிட்டு, அவர் வேலைக்கு கிளம்பச் சென்று விட்டாள் வீட்டு எஜமானி.
வெளியே இருந்த தரையில் மகனை உட்காந்து விளையாடும் படி செய்துவிட்டு, வேகமாக வீட்டிற்குள் சென்று சமையல் வேலையையும், பாத்திரம் கழுவும் வேலையையும் செய்து, வேலைக்குச் செல்லும் எஜமானிக்கு காலை உணவையும், மதிய உணவையும் தயாராக எடுத்து வைத்துவிட்டு மற்ற வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பித்தாள்.
அந்த வீட்டு எஜமானன் கையில் செய்தித்தாளை வைத்துக் கொண்டு வேலைக்காரி தானே, என்ன செய்திட முடியும் என்று பார்வையால் கற்பழித்துக் கொண்டிருந்தார்.
வேலைக்கு தயாராகி வந்த எஜமானி, சும்மா உட்கார்ந்து இருக்கும் கணவனிடம் நீங்கள் என்று வேலைக்குச் செல்லவில்லையா? என்றதும், இன்று தாமதமாகத்தான் செல்ல வேண்டும் என்று சட்டமாய் கால் நீட்டி அமர்ந்து கொண்டார்.
அவர் உட்கார்ந்த தோரணையை கண்டதும் ராக்கம்மாவின் வயிறு பயத்தில் கலங்கியது. அவள் பயந்தது போலவே மனைவி வேலைக்குச் சென்றதும் இவளிடம் சில்மிஷம் செய்ய ஆரம்பித்த எஜமானனிடமிருந்து, எப்படியோ தன் மகனை முன்னிறுத்தி, தன் கர்ப்பை காப்பாற்றிக் கொண்டு, மகனையும் தூக்கிக் கொண்டு அடுத்த வீட்டு வேலைக்கு சென்றாள்.
அங்கு வயதான தம்பதியர் இருவருக்கும் இரண்டு வேலையும் உணவு சமைத்து வைத்துவிட்டு, வீட்டையும் ஒதுங்க வைத்துவிட்டு வீட்டிற்கு வர மதியம் ஆகிவிட்டது.
கடையில் கடன் சொல்லி அரிசி வாங்கி வந்து சமைத்து, கத்திரிக்காய் போட்டு புளி குழம்பு வைத்து முடிக்க மணி மூன்று ஆகிவிட்டது. காலையில் சென்ற கணவன் இனி எப்பொழுது வருவானோ? என்று மகனுக்கு சூடாக சாப்பாடு ஊட்டி அவளும் உண்டு முடித்தாள். இருவரும் நிம்மதியாக சாப்பிடும் ஒருவேளை சாப்பாடு.
பின்னர் சாயங்காலம் இரண்டு வீடுகளில் வேலை முடித்து இரவு வீட்டிற்கு வர மணி எட்டு ஆகிவிட்டது.
அவளின் மகனோ தூக்கத்திற்கு அழ, அவனுக்கு உணவு கொடுத்து உறங்க வைத்து, கணவனுக்காக காத்திருந்தாள்.
வழக்கம்போல் முழுவதும் குடித்துவிட்டு வந்து அவளிடம் சண்டை போட ஆரம்பித்தான், அவளின் குடிகார கணவன். அவனின் வாய் பேசியதை விட கைகள் பேசியதே அதிகம். என்னடி.. ஒரு நல்ல குழம்பு வைக்கத் தெரியாதா? என்று அடித்து சட்டிப்பாணைகளை தூக்கி எறிந்தான்.
முடிவில் அவளை உடல் ரீதியாக முரட்டுத்தனமாகவே நாடினான். அவளின் விருப்பு வெறுப்பு எதுவும் கேட்காமல் தன் தேவையை மட்டும் முடித்துக் கொண்டு தள்ளி படுத்து விட்டான்.
கண்களில் கண்ணீருடன் என் வயிற்றில் இன்னொரு குழந்தை பிறந்து இந்த நரகத்தில் வாழ வேண்டாம் என்று கடவுளை வேண்டிக் கொண்டு கண்ணீரோடு மகனை அணைத்து படுத்துக் கொண்டாள் அந்த அபலைத் தாய்.
ஒர் நாள் கழிந்தது.
முற்றும்.