ஒரு பக்க போட்டிக்கதை: கடன்காரி

by admin
77 views

எழுத்தாளர்: சிவசங்கரி நெல்சன்

கிட்டத்தட்ட 45 வயதைக் கடந்த பாரதிக்கு இந்த உலகத்தை தனியாக கையாள்வது இதுவே முதல் முறை.பேருந்தின் ஜன்னல் இருக்கையில் அமர்ந்து கொண்டு இந்த உலகத்தை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 இதுவரை முறுக்கு விற்பவரையும், வெள்ளரிக்காய் விற்பவரையும், பிச்சை எடுப்பவரையும் எதார்த்தமாய் கடந்த அவளால் இன்று அப்படிக் கடக்க முடியவில்லை ஜன்னல் கம்பியில் தலை சாய்த்துக் கொண்டு கண்களை மூடினாள்.

“ஏமா கவலப்படுற பிள்ளைங்க இருக்காங்க நாங்கெல்லாம் இருக்கோம் உன்னை கைவிடவா போறோம்“

என்ற சொந்தங்கள் மூன்றாம் நாள் காரியம் முடிய காணாமல் போனது.

“இவ்வளவு கடனை எப்படி சரி செய்வது”

 என்ற பிள்ளைகளின் உரையாடல்களில் தான் தினமும் அவளது இரவுகள் முடங்கிப் போனது.

“ இவ்வளவு கடனை எப்படி அடைக்கப் போற உன்னை யாரு பாக்க போறா?” அவள் கணவனின் கடைசி குரல் தூங்கவிடாமல் அவளது இரவுகளை முழுவதுமாய் ஆக்கிரமித்துக் கொண்டது.

“ ராணி போல் தன்னை பார்த்துக் கொண்ட கணவன் இந்த பாழாய்ப்போன புற்றுநோய் மட்டும் வராமல் இருந்திருந்தால் இன்று இந்த கடன் பிரச்சனையும் இல்ல என் ராசாவும் என்ன விட்டு போயிருக்க மாட்டாரே “

என்று சத்தமின்றி அழுது புலம்பி தன் இரவுகளைக் கடத்தினாள்.

நாட்கள் உருண்டோடத் தற்காலிக இரக்கங்கள் கொண்ட மனிதர்கள் கதவைத் தட்ட ஆரம்பித்தார்கள். பதில் சொல்ல முடியாமல் பிள்ளைகள் தவிப்பதையும், மருமகள்கள் முனங்குவதையும் கண்டு உடைந்து சுக்குநூறாய் போனாள்.

“ அம்மா சாப்பிட வாங்க”

“ வேணாம்பா பசிக்கல “

செருப்பை மாட்டிக் கொண்டு பாரதி விறுவிறுவென நடந்தாள். வழிந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வெகு தூரம் நடந்து கொண்டே இருந்தாள்.

“ ஏ பாரதி அக்கா என்ன நான் வரது கூட தெரியாம எங்க இப்படி போய்க்கிட்டு இருக்க”

 விரக்தியில் நடக்க ஆரம்பித்தவள் மெல்ல நிதானத்திற்கு வந்தாள். “அய்யோ சுந்தரி நான் கவனிக்கலப்பா”

பாரதியின் தடுமாற்றத்தைப் புரிந்துக் கொண்ட சுந்தரி 

 “சரிக்கா வா ஒரு டீ குடிப்போம்” “இல்லப்பா அதெல்லாம் ஒன்னும் வேணாம்”

“அட வாக்கா நான் வாங்கித் தந்தா சாப்பிட மாட்டியா? எத்தனை நாள் உன் வீட்ல என் பசியைத் தீர்த்துருக்கேன்.

 டீயையும் வடையையும் வாங்கி  கொடுத்தாள். இருவரும் டீயை குடித்துக் கொண்டு குடும்ப சூழல்களை விசாரித்துக் கொண்டனர். யாரிடம் கொட்டித் தீர்ப்பது என்று அடக்கி வைத்திருந்த அனைத்தையும் சொல்லி முடித்தாள் பாரதி.

( இருவருக்கும் இடையில் சில நிமிட மௌனங்கள் நீடித்தது.) 

“அக்கா ஒரு வேலை இருக்கு நீ போறியாக்கா? “அங்கேயே தங்கிப் பார்க்கிற வேலை மாசம் 15 ஆயிரம்  சம்பளம்.வயதான ஒரு அம்மாவை பார்த்துக்கனும்.

“ இப்பவே போறேன் கூட்டிட்டு போ சுந்தரி”

 சுந்தரியின் கண்கள் குளமாகியது எப்படி வாழ்ந்த மகராசி இன்னைக்கு இது நிலைமை இப்படி ஆயிடுச்சு என்று மனதுக்குள்ளே பேசிக்கொண்டாள்.

“ சரிக்கா நாளைக்கு துணியெல்லாம் எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துரு நான் பஸ் ஏத்தி விடுறேன்’

 காலையில்  கட்டைப் பையுடன் பிள்ளைகள் முன் நின்ற பாரதி வேலைக்கு போகப் போவதை கூறினாள். அவசரப்படாதீங்க அம்மா பாத்துக்கலாம் என்றான் மூத்தவன். ஆமா மா வேணாம் நான் லோனுக்கு ட்ரை பண்ணிட்டு இருக்கேன். அதை யாரு கட்டுவா என்றாள் 

 அவன் மனைவி.என்னை தடுக்காதீங்க பா உங்க மேல எனக்கு எந்த கோபமோ வருத்தமோ இல்ல. என் சுமையை நானே சுமந்துக்குறேன்.நான் போயிட்டு வரேன்”. 

“டிக்கெட் டிக்கெட்….. 

(மூடியிருந்தக் கண்களைத் திறந்தாள்.)

“எங்கம்மா போனும்? “

“சோளப்பட்டி ஒன்னு “

(அலைபேசி ஒலித்தது)

“ ஹலோ”

“ அப்பத்தா எங்க போனீங்க? அப்பா சொன்னாங்க நீங்க எனக்கும் அஜய்க்கும் கிண்டர் ஜாய் வாங்க போயிருக்கீங்கன்னு”

 “ஆமா சுருதி கண்ணு அது வாங்க காசு வேணும்ல அதான் அப்பத்தா வேலைக்கு போயிட்டு இருக்கேன்”

“ ஓஹோ அப்படியா தாத்தாவும் வேலைக்கு போயிட்டு வரும்போது தானே கிண்டர் ஜாய் வாங்கிட்டு வருவாங்க.தாத்தா சாமிகிட்ட போகும்போது, எங்களுக்கு வாங்கித் தரச்சொல்லி உங்ககிட்டச் சொல்லிட்டு போனாரா? தொண்டையை அடைத்த அழுகையை அடக்கிக் கொண்ட பாரதி 

“ஆமா சாமி,தாத்தா சொன்னாரு”

“ சரி அப்பத்தா நீங்க பார்த்து போயிட்டு வாங்க நான் அப்புறம் பேசுறேன்”.

அலைபேசியை துண்டித்தப் பாரதி வழிந்தக்கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள். தன் மீது தன் பேத்தி கொண்ட நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் போல தான், இந்த முறுக்கு விற்பவர் ,வெள்ளரிக்காய் விற்பவர் ,பிச்சை எடுப்பவர் பின்னாலும் ஏதோ ஒரு அன்பின் விசை அவர்களை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டாள்.

இறங்க வேண்டிய இடம் வந்தது.இனி அவளுக்கு ஆறுதலும் தேவையில்லை , அடைக்கலமும் தேவையில்லை நம்பிக்கையுடன் வீர நடை போட்டாள் இந்தப் பாரதி என்னும் தீ….

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!