ஒரு பக்க போட்டிக்கதை: சீர்வரிசை

by admin
86 views

எழுத்தாளர்: லீலா ராமசாமி

“முரளி! இன்னிக்கி உங்க அத்தை வீட்டுக்குப் போய் அகிலாவைப் பொண்ணு பாத்து, பேசி முடிச்சிட்டு வந்துருவோம். நீ ஆபீஸில் லீவு சொல்லிடு.”

என்றாள் விசாலம்.

“சரி பாட்டி”. என்றான் பேரன் முரளி.

“ஏம்மா, பார்வதி! சரிதானே? நீ பிள்ளையைப் பெத்தவ. உன் முடிவும் முக்கியம்.”

தனது மருமகளைப் பார்த்துக் கேட்டாள். பார்வதி அப்போது யாரிடமோ அலைபேசியில்  பேசிக்கொண்டிருந்தாள்.

“என் பையன் வழிப் பேரனுக்கும், என் பொண்ணு வயித்துப் பேத்திக்கும் கல்யாணம் முடிஞ்சா அதை விடச் சந்தோஷம் எனக்கு என்ன இருக்கு? என்னடா சீனு, நான் சொல்றது சரிதானே?”

மகன் சீனுவாசனிடம் சொல்வது போல் அவனுடைய சம்மதத்தைக் கேட்டாள் விசாலம்.

“சரிதாம்மா. என் ஒரே தங்கச்சி பொண்ணு என் வீட்டுக்கே மருமகளா வர்றது சந்தோஷம் மா.” என்றார் சீனுவாசன்.

“அப்போ ஃபோன் பண்ணி சாயந்திரம் வர்றதாச் சொல்லிடு.”

“பார்வதி! யாருகிட்ட போன்ல பேசிட்டிருக்கே? சாயந்திரம் கிளம்புற வழியைப் பாரு.”

“ஏங்க, எங்க அண்ணன் பொண்ணு மாலா அழகா இருப்பா. படிச்சிருக்கா. எனக்கு எப்படி நூறு பவுன் போட்டு, உங்களுக்குக் கட்டிவைச்சாங்களோ, அதே மாதிரி எங்க அண்ணன் நூறு பவுன் போடுறதுக்குத் தயாரா இருக்கார். உறவா இருந்தும்கூட  நீங்க நூறு பவுன் வாங்கிட்டுத் தானே என்னைக் கட்டிக்கிட்டீங்க! அதனால நானும் தீர்மானமா இருக்கேன். என் பையனுக்கு நூறு பவுன் போட்டுட்டு வர்ற பொண்ணுதான் எனக்கு மருமகளா வேணும்.”

“பார்வதி! அந்தக்காலத்தில அம்மாதான் பிடிவாதமா இருந்தாங்க. அதையே நீயும் செய்யலாமா? இப்ப நான் என் தங்கச்சி வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர்றோம்னு சொல்லவா, வேண்டாமா?”

“சொல்லுங்க. சாயந்தரம் நாம போகலாம். அங்கே நான் கேக்கறதுக்கு ஒத்துக்கிட்டா, மேற்கொண்டு பேச்சு வார்த்தை நடத்துவோம். இல்லன்னா, இருக்கவே இருக்கா எங்க அண்ணன் பொண்ணு.”

மாலை பெண் வீடு.

அகிலா மிதமான அலங்காரத்தில் அழகாக இருந்தாள்.

விசாலம், “என்ன சீனு! மேற்கொண்டு விஷயங்களைப் பேசலாமா? முரளியைக் கேட்டுச் சொல்லு.”

“பெரியவங்க எது செஞ்சாலும் நல்லதாத்தான் இருக்கும்.”

என்றான் முரளி. அதிலேயே தன்னுடைய சம்மதத்தை நாசூக்காக வெளிப்படுத்தினான்.

“பார்வதி என்ன சொல்றேம்மா?”

“நான் என்ன அத்தை சொல்லப் போறேன். நான் உங்க வீட்டுக்கு என்ன மாதிரியான சீர் கொண்டு வந்தேனோ, அதே மாதிரியே என் மருமக என் வீட்டுக்குக் கொண்டு வந்தால் சரி.”

“பார்வதி! நாம எல்லாம் சொந்தக்காரங்க! முன்னே பின்னே  பாத்து முடிச்சிக்கலாம்மா.”

“அதெப்படி, உங்க பொண்ணு குடும்பம்னா மட்டும் இப்படிப் பேசுறீங்க. அந்தக் காலத்தில எங்கப்பாவை எவ்வளவு கஷ்டப்படுத்தி சீர்வரிசை வாங்குனீங்க? உங்க சொந்தம்னா ஒரு நியாயம்; வேற பொண்ணுன்னா வேற நியாயமா?”

விசாலம் வாய் திறக்க முடியவில்லை.

பார்வதி அகிலாவைத் தனியே உள்ளே அழைத்துச் சென்றாள்.

வெளியில் வந்த அகிலா வாய் திறந்தாள்:

“பெரியவங்க இருக்கும்போது நான் பேசுறதுக்கு மன்னிக்கணும். ஒரு வீட்டில் பெரிய மருமக எப்படிச் சீர் கொண்டு வந்தாங்களோ, அதே மாதிரி அடுத்த மருமகளும் கொண்டு வந்தாத்தான் அவளுக்கு மரியாதை. அதனால நான் அப்படிப்பட்ட சீர்வரிசையோடதான் உங்க வீட்டுக்கு வருவேன்.”

விசாலத்தின் முகம் கலக்கத்தை வெளிப்படுத்தியது.

திருமணம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. நூறு பவுன் நகையுடன் சீர்வரிசையில்  குறையில்லாமல் அகிலா மாமியார் வீடு வந்தாள்.

விசாலத்துக்கு வசதியில்லாத தன் பெண்ணும் மாப்பிள்ளையும் எப்படி இதையெல்லாம் சமாளித்தார்கள் என்று ஒரே பதைப்பு. தன் மகள் வீட்டை விற்று விட்டார்களோ? லக்ஷ்மியை அழைத்துக் கேட்டாள். அவள், “அண்ணா அண்ணி

வரட்டும்மா” என்றாள்.

பார்வதியும் சீனுவாசனும் வந்தவுடன் லக்ஷ்மி அவர்கள் காலில் விழுந்தாள்.

“அம்மா! அண்ணி உண்மையிலேயே கருணையில் பார்வதிதேவிதான்! பொண்ணு பாக்க வந்த அன்னைக்கே போன் பண்ணி தான் கேக்குறதுக்கு எல்லாம் ஒத்துக்கச்  சொல்லிட்டாங்க. அவங்கதான் தன்னுடைய நூறு பவுன் நகையையும் அகிலாவுக்குப் போட்டு, இந்தக் கல்யாணத்தையும் நடத்துனாங்க. இப்படி ஒரு மாமியார் கிடைக்க அகிலா பூர்வஜென்ம புண்ணியம் செய்திருக்கணும். அவங்க அகிலாவுக்கு இன்னொரு தாய்தான்!

நீங்கதாம்மா அவங்களைக் கசக்கிப் பிழிஞ்சு சீர்வரிசை வாங்கினீங்க.”

விசாலத்துக்கு வெட்கமாகப் போய்விட்டது. பார்வதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு,

“பார்வதி! நீ ரொம்பவும் உசந்தவம்மா! நான்தான் பிடிவாதமா உன்னையும் உன் குடும்பத்தையும் ரொம்பக் கஷ்டப் படுத்திட்டேன். என்னை மன்னிச்சிடும்மா.” என்றாள்.

சீனிவாசன் பார்வதியைப் பிரமிப்புடன் பார்த்தார்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!