எழுத்தாளர்: தரணி
நள்ளிரவு 1 மணி.
வாசுகியின் 7 மாத குழந்தை பாலுக்காக அழுது கொண்டிருந்தது. தூக்கத்தில் இருந்து எழுந்த வாசுகி அரை தூக்கத்தில் நடந்து கொண்டே பால் காய்ச்சுவதற்காக சமையலறைக்குள் நுழைந்தாள். அதுவரை பசி பொறுக்காத குழந்தை இன்னும் அதிக ஸ்வரத்துடன் வீறிட்டு அலறியது.
இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த அசோக், “என்னடி பண்ணிக்கிட்டு இருக்க நடு ராத்திரியில்ல? – என்று வாசுகியை கத்தினான்.
ஒரு அஞ்சு நிமிஷம் இதோ வந்துடுறேன் குழந்தைக்கு பால் காய்ச்சிட்டு இருக்கேன் – எதிர்க்குரல் சமையலைறையிலிருந்து.
தூக்கம் கலைந்த கோபத்தில் எழுந்த அசோக், குழந்தையின் அழுகையை நிப்பாட்டுவதற்காக தொட்டிலின் அருகே சென்றவனைப் பார்த்த குழந்தை இன்னும் அதிக ஆற்றலுடன் ஓவென்று அழுக ஆரம்பித்தது .
இதுக்கு தான் சொன்னேன் நமக்கு குழந்தை வேணாம்னு, இப்ப பாரு? நடுராத்திரில அழுது நம்ம தூக்கத்தை கெடுக்குது என்று முனகினான் அசோக்.
சும்மா இருங்க, என்று சொல்லிக்கொண்டே வாசுகி வாங்க தங்கம்! பாப்பாக்கு பசிக்குதா? அம்மா பால் கொண்டு வந்துட்டேன் சாப்பிடலாமா என குழந்தையை தன் மடியில் கிடத்தி சமாதானப்படுத்தி பால் புட்டியை வாயில் வைத்தாள்.
“பசி வந்திட பத்தும் பறந்து போகும்” என்பதற்கேற்ப தீரா பசியில் இருந்த குழந்தை பால் புட்டியை காலி செய்து விட்டு மறுபடியும் தூக்கத்திற்கு சென்றது.
ஏன் வாசுகி நீ எனக்காக இவ்வளவு கஷ்டப்படணும் நடுராத்திரியில தூக்கத்தை தொலைச்சிட்டு,காலையில வீட்டு வேலை செஞ்சுட்டு முழு நேரமும் குழந்தையை பார்த்துட்டு இதெல்லாம் உனக்கு தேவையா?
இதுல என்னங்க கஷ்டம்… நம்ம குழந்தைக்கு நான் பண்றேன் . கொஞ்ச நாள் ஆச்சுன்னா எல்லாம் சரியா போயிடுங்க என மனதின் அடி ஆழத்திலிருந்து பேசினாள் வாசுகி.
என்னமோ போ! என்று கூறிக்கொண்டே தன் படுக்கையில் பொத்தென்று விழுந்த நேரத்தில் கண் அயர்ந்தான் அசோக்.
வாசுகி குழந்தையின் டயப்பரை செக் செய்து விட்டு, பால் புட்டியை சுடு தண்ணீரில் கழுவி காய வைத்துவிட்டு வந்து படுக்க மணி 2:30 ஆகிவிட்டது.
காலை 5 மணிக்கு அலாரம் வைத்தது போல மறுபடியும் அலறியது குழந்தை. திடுக்கிட்டு எழுந்த வாசுகி சமையலறையிலிருந்து பால் காய்ச்சி கொண்டு வந்தாள். பாலை குடித்த குழந்தை உடனடியாக அதை வெளியேற்றவும் செய்தது.
டையப்பரை மாற்றி விட்டு குழந்தையை ஆசுவாசப்படுத்தி தூங்க வைத்தாள். குழந்தை தூங்க ஆரம்பித்தபோது அசோக் விழித்துக் கொண்டான்.
வாசு,ஆபீஸ்க்கு டைம் ஆச்சு டீ கொண்டு வா!! என சொல்லி முடிக்கும் முன்னரே கையில் டீயும் நியூஸ்பேப்பரும் ஆக வந்தாள்.
நேத்து ராத்திரி நீ தூங்குனியா? வரவர உன் முகத்தை பார்க்கவே ரொம்ப இறுக்கமா இருக்கு. குழந்தையை பாத்துக்க ஆள் வச்சுக்கலாம்னு சொன்னாலும் கேட்க மாட்டேற.எங்க அப்பா அம்மாவை உதவிக்கு கூப்டலானாலும் விடமாட்டேற.
நீயா தனி ஆளா கிடந்து கஷ்டப்படணும்னு என்ன உன் தலையெழுத்தா- என ஈனசுவரத்தில் பேசினான்.
இங்க பாருங்க, நம்ம இப்போ வாழ்ந்துட்டு இருக்க வாழ்க்கைக்கு அர்த்தம் இருக்குனா அதுக்கு காரணம் நம்ம குழந்தை.
இவ்வளோ பேசுறீங்களே! நீங்களே சொல்லுங்க? இந்த குழந்தைக்காக,நம்ம எத்தன கோயில்,ஹாஸ்பிடல்-னு அலஞ்சிருப்போம். எதாவது நல்லது நடந்துச்சா?
ஊர்ல எல்லாருமே என்னை மலடி சொல்றப்போ என் கூட சேர்ந்து நீங்களும் தான அழுதீங்க, இப்போ நீங்களே இப்படி சொல்லலாமா? என தன் மனக்குமுறலை கொட்டினாள்.
எல்லாம் சரிதான், ஆனா இதுக்காக நீ ஏன் இவ்வளோ மெனக்கெடனும் வாசு.
நீங்க என்ன வேணாலும் நினைச்சுகுங்க.என்னை பொறுத்தவரை இந்த குழந்தையை நான் கடவுள் கொடுத்த வரமாத்தான் பாக்குறேன். உங்க தம்பியும் தம்பி பொண்டாட்டியும் சின்ன வயசுல இறந்து போவங்கனு நம்ம கனவுல கூட நினைச்சு பாத்திருக்க மாட்டோம். அவங்க நம்மல விட்டுபோன குறையை தீர்க்க தான் கடவுள் இந்த குழந்தையை அனுப்பி வச்சிருக்காரு. எங்கேயோ போக வேண்டிய உசுரு நம்மல பாக்க வரப்போ போயிருக்கு.ஆஸ்பத்திரியில மலர் என் கையை பிடிச்சிட்டு என் குழந்தையை பாத்துங்கக்கானு சொன்னது இப்ப வரை என் காதுல கேட்டுட்டே இருக்கு.
இப்ப சொல்லுங்க!! இப்படி ஒரு நிலைமையில நம்ம கையில வந்த இந்த குழந்தையை எப்படிங்க விட முடியும். இதுக்குஅப்புறம் நமக்கு குழந்தையே பொறந்தாலும் சரி, என்னை அம்மாவாக்குன இவதான் என் தலை பிள்ளை.
பிரசவ வலி வந்து மலரை ஹாஸ்பிடல் கொண்டு போறப்போ நான் தான் பக்கத்துல இருந்தேன். அவளோட வலிய நேர்ல பாத்தவ நான். டெலிவரி முடிஞ்சு நான் தான் முதன் முதலா இந்த குழந்தையை தொட்டு தூக்குனேன். அந்த பிஞ்சு விரலோட ஸ்பரிசம் பட்டதுமே எனக்கு சிலிர்த்து போச்சு.
ஏதோ முன் ஜென்மம் பந்தம் இருக்க மாதிரி ஒரு உணர்வு. என் உடம்பால இந்த குழந்தையை பெத்துக்கலனாலும் முழு மனசோட நான் இந்த குழந்தையை ஏத்துக்கிட்டேன். என் உடம்புல உயிர் இருக்க வரைக்கும் நான் இந்த குழந்தையை பார்த்துப்பேன் நான் மட்டும் தான் பாத்துப்பேன், என முடித்தாள் வாசுகி.
குழந்தையின் அழுகை ஆரம்பித்தது.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு:
️