ஒரு பக்க போட்டிக்கதை: தலைப்பிரசவம்

by admin
56 views

எழுத்தாளர்: குட்டி பாலா

வீட்டு வாசலில் நின்றிருந்த வசந்தாவிடம் “உன் மகள் மல்லிகாவை மாடு முட்டிவிட்டது. அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கூட்டிப் போயிருக்கிறார்கள்” என்றதும் கையிலிருந்த காய்கறிக்கூடையை கீழே போட்டு விட்டு சாலையில் இறங்கி ஓடினாள் வசந்தா.
ஆஸ்பத்திரியில் மல்லிகாவின் கணவனும் சில நண்பர்களும் மட்டுமே இருந்தனர். மல்லிகாவின் அண்டை வீட்டுப் பெண்கள் இருவர் உடன் இருந்தனர். அவர்களிடமிருந்து மல்லிகாவை அவசர சிகிச்சை பிரிவுக்கு கூட்டிப் போயிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாள்.
அப்போது ஐ.சி.யூவிலிருந்து வெளியே வந்த டாக்டரிடம் ஓடிச் சென்று “நான் அவளின் அம்மா. இப்போது எப்படி இருக்கிறாள்?” என்று பதற்றத்தோடு கேட்டாள்.

டாக்டர் “மாடு முட்டியதில் ஏராளமான இரத்தம் சேதமாய் இருக்கிறது. உடனடியாக இரத்தம் செலுத்த வேண்டும்.  அதுவும் அவளுடையது அரிதான குரூப். எளிதில் கிடைக்காது. அவள் கணவன் உட்பட உடன் வந்தவர்கள் யாருடையதும் சேரவில்லை. நாங்கள் எல்லா இரத்த மையங்களுக்கும்  தகவல் அனுப்பியிருக்கிறோம்” என்றார்.

உடனே “ஐயா நான் அவளைப் பெற்றவள்.  என் இரத்தம் கண்டிப்பாக சேரும். என் மகளையும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் எப்படியாவது காப்பாற்றுங்கள். என் உடம்பில் கடைசிச்சொட்டு இரத்தம் வரையும் எடுத்துக் கொள்ளுங்கள். நான் வாழ்ந்து முடித்தவள். அவளும் குழந்தையும் வாழ வேண்டியவர்கள்”  என்று கெஞ்சினாள்.
பார்த்துக் கொண்டேயிருந்த மல்லிகாவின் கணவன் அவளிடம் வந்து கைகூப்பிவிட்டு அவளை “வாங்க அத்தை” என்று இரத்தப்  பரிசோதனை அறைக்கு அழைத்துச் சென்றான்.

வசந்தா சொன்னவாறு அவளுடைய இரத்தம் சேர்ந்து ஒருவாறு மல்லிகா பிழைத்துக் கொண்டாள். “குழந்தை பிறக்க ஒரு வாரமோ 10 நாட்களோ ஆகலாம். மருந்து மாத்திரைகள் ஒழுங்காக எடுத்து ஓய்வில் இருக்க வேண்டும். இரண்டு நாட்கள் சென்று வீட்டுக்கு போகலாம்” என்று சொன்னார் டாக்டர்.

வீடு திரும்பிய வசந்தாவிடம் ” அந்த ஓடுகாலி எப்படி போனால் என்ன? நீ ஏன் போனாய்?” என்று எரிந்து விழுந்த கணவனிடம் “பெண்ணாகப் பிறந்திருந்தால் உங்களுக்கு புரிந்திருக்கும்” என்று சொன்னாள். தொடர்ந்து “மல்லிகா பிரசவம் வரை அவளுடன்தான் இருக்கப் போகிறேன். ‘தலைப்பிரசவம் தாய்வீட்டில்’ என்பர். நீங்கள் சம்மதித்தால் அவளை இங்கு கூட்டி வருவோம். இல்லையென்றால் நான் அங்கு போகிறேன்” என்றாள். எதிர்த்தே பேசாத அவளின் வார்த்தைகளில் தெரிந்த உறுதியைப் பார்த்து திகைத்துப்போனான் மாறன்.

இரண்டு நாட்களும் மகளுடன் ஆஸ்பத்திரியிலேயே தங்கி விட்டாள் வசந்தா.  அன்று ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வசந்தா மல்லிகாவுடன் வெளியே வரும் போது டாக்ஸியுடன் மாறன் நிற்பதைப் பார்த்ததும் தாய், மகள்  இருவர் கண்களிலும் கண்ணீர்.
“தலைப்பிரசவம் நம் வீட்டில்தான். மருமகனும் சம்மதித்துவிட்டார்” என்று மாறன் சொல்லவும் அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!ள

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!