ஒரு பக்க போட்டிக்கதை: தாய்ப்பால்

by admin
58 views

எழுத்தாளர்: முனைவர் அ.இலங்கேஸ்வரன்

விரித்த பாயில் போர்வை மேல் இரட்டைத் தலையணையின் மீது தலைவைத்து குரு பலவீனமாகப் படுத்துக்கொண்டிருந்தான். பொற்கலை மின் விசிறி இல்லாத வீட்டில் மகனுக்கப் புழுங்கக் கூடாது என விசிறி மட்டையால் விசிக் கொண்டிருந்தாள்.

”அம்மா! வளரப் பாக்கணும் போல இருக்குமா”

”எப்டிடா வருவா? நீ கொஞ்சமா தொந்தரவு குடுத்த? ”

”ஏம்மா! நான் அப்டி என்ன பண்ணிட்டேன்? என் விருப்பத்துக்குத் தகுந்த மாதிரி இருக்குறது தப்பா?“

”யார்ரா குடிக்கல? எல்லாருந்தான் குடிக்கிறாங்க. ஆனா நீ கொஞ்ச நஞ்சமா குடிக்கிற? அவ உன் மேல ஆசப்பட்டு, சொந்த பந்தத்த விட்டுட்டுதான வந்தா? உங்களுக்கு உங்க பெரிய அக்கா வீட்டுக்காரரும் மாமாங்க எல்லாமும் சேந்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. உனக்கு மூனு வருசம் கழிச்சி, ஒரு பொம்பளப் புள்ள பொறந்துச்சி. இப்ப அவளுக்குப் பதினெட்டு வயசு. எவ்ளோ தெறமையான பொண்ணு. அவளப் படிக்க வைக்கவாவது நீ வேலக்கிப்போகணும். அதவுட்டுட்டு முழு நேரமும் குடிச்சிக்கிட்டு இருந்தா எவ உங்கூட இருப்பா? அதான் உம் பெண்டாட்டி பத்து வருசத்துக்கு முன்னாடியே உன்ன விட்டுப்போயிட்டா. அப்பனும் குடிகாரன், அம்மாவும் போயிட்டா. வயசுப் பொண்ணு என்ன பண்ணுவா? இந்த வயசுலயே அவ வாழ்க்கய அவளே தேடிக்கிட்டா”

”எம்மா என்னால குடிக்காம இருக்க முடியலமா. என் வாழ்க்கய நானே அழிச்சிக்கிட்டேன். கெடச்ச கவர்மெண்ட் வேலயக் கூட குடிச்சிக் குடிச்சி அழிச்சிட்டேன்.” எனக் கதறி அழுகிறான் குரு.

”எப்பா அழுவாதப் பா! நீ அழுவுறது என் அடிவயித்துல பாறாங்கல்லால குத்துறமாதிரி இருக்கு. உன் நடு அக்கா வீட்டுக்காரு எத்தனமொற ஒனக்கு மஞ்சாக் காமாள வந்தப்போ கூப்டுபோய் நாட்டு மருந்து கொடுத்து சரி பண்ணாரு. அப்பயும் நீ திருந்தலயே!”

“எம்மா! நான் அன்னங்கக் கூடயே இருந்திருந்தா ஒழுங்கா இருந்திருப்பேன். நீயும் அப்பாவும் தனியா கூப்டு வந்துட்டீங்க. தப்பான பசங்கக் கூட பழகி நான் இப்டி ஆயிட்டம்மா”

”சரி உடு! ஒனக்கு சீக்கிரம் ஒடம்பு செரியாப்போயிடும்! சாப்டுறியா?”

”வேணாம்மா! சோறு எறங்கல, மோரு இருந்தாக் குடுமா!”

”சாப்டா தானப்பா ஒடம்புல தெம்பு இருக்கும்.”

”எம்மா! என்னால சாப்ட முடியலம்மா! சோறு தொண்டயிலயே நிக்கிதுமா”  என குரு தேம்பித் தேம்பி அழுததில், அவனுக்குச் சோறு எடுக்கவில்லை என்பதை உணர்ந்துகொண்டாள் பொற்கலை. 

”எப்பா! நீ இரு நாம்போயி , கடையில மோர் வாங்கிட்டு வந்துடுறேன்” மகனை ஆசுவாசப் படுத்திவிட்டு சுருக்குப்பையை எடுத்து  இடுப்பில் செருகிக்கொண்டு கடையை நோக்கி நடந்தாள் பொற்கலை.

குருவுக்கு இருப்புக் கொள்ளவில்லை. எந்நேரமும் சாராயக் கடைக்கு நடந்தவனால் கொஞ்ச நேரம் கூட உட்கார முடியவில்லை. இடுப்பை உயர்த்தி எழ முயன்றான். வயது நாற்பத்து ஆறைத் தொட்ட போதிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவன். உடலுக்கு திறனைக் கொடுத்து எழ நினைத்த போது தன் உடம்பு தன்னை மறந்து சிறு நிரைக் கழித்தது. தான் இன்னும் எத்தனை மணி நேரம் உயிரோடு இருப்போம் எனத் தெரிந்து கொள்ள முடியாத குரு தன் நிலையை எண்ணி அழமுடியாமல் கனிந்துக் கனிந்து அழுதான். காலையிலிருந்து மோர் மட்டுமே குடித்துக்கொண்டிருந்தவன் கழித்த சிறுநீர் பள்ளமாக இருந்த வாசலின் ஓரமாக, குளமாகக் காட்சியளித்தது. எழ முயன்றவன் கால் வழுக்கிக் கீழே குப்பற விழுந்தான்.

காலையில் தன் மனைவியும் மகளும் வீட்டிற்கு வந்து வீட்டுப் பத்திரத்தைக் கேட்டுத் தன்னுடைய அம்மா பொற்கலையின் தலைமுடியை இழுத்து அடித்தது அவன் அரை நினைவுக்குள் வந்து வந்து போனது.

கதவைத் திறந்து பொற்கலை உள்ளே வந்தாள். ஏழு பிள்ளைகளைப் பெற்ற என்பது வயது கிழவி தன் கடைக் குட்டி குப்புற விழுந்து கிடந்ததைக் கண்டு பதறி அடித்து, தூக்க முடியாமல் தூக்கித் திருப்பிப் படுக்க வைத்தாள்.

”எம்மா! நடு மாமாவப் பாக்கணும் போல இருக்குமா!”

”மாமா வேலக்கிப்போயிருக்காரு! ரெண்டு மணிக்கா வருவாராம்… நடு அக்கா சொல்லிச்சி. இந்தா நீ மோர் குடி!”

அடைத்துப்போன தொண்டைக்குள் மெதுவாக மோர் இறங்கிக் கொண்டிருந்தது. அப்படியே உறங்கிப்போனான்.  பொற்கலை வரண்டு போன தன் தொண்டையை நனைக்க தண்ணீர் தேடினாள். மகனின் உயிர் நீராக அரைபாட்டில் தண்ணீர் மட்டுமே மீதம் இருந்தது. கடிகாரத்தைப் பார்த்தாள். கடிகார முள் 1.30 ஐத் தொட்டிருந்தது. வெளியே கோடை காலத்து வெயில் சுட்டெரித்துக்கொண்டிருந்தது. இரவெல்லாம் உறக்கமில்லாத பொற்கலை பசிமயக்கத்தால் கண்ணயர்ந்த நேரம்.

”எம்மா! வயிறு எரியுதும்மா! வயிறு எரியுதும்மா!” என வயிற்றைப் பிடித்துகொண்டு அழுதான் குரு.  துடித்துப்புடித்து எழுந்த பொற்கலை மகனை மடியில் இழுத்து வைத்துக்கொண்டு மோரை வாயில் ஊற்றினாள். அரைமணி நேரம் துடித்தவன் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.  தனது பெரிய மகள் காரைக்காலில் இருந்தது வந்துகொண்டிருந்தாள். வளர்விழி தன்னை அடித்த பஞ்சாயத்தை முடித்துவைத்துவிட்டு நடு மகளும் ஊருக்குச் சென்றிருந்தாள். ஞாயிற்றுக் கிழமையானதும் தனது இரண்டாவது மகள் எடுத்துவரும் கறிக் குழம்பிற்கு ஏங்கிக் காத்திருக்கும் மகன் இப்போது சோற்றை விழுங்க முடியாமல் மோரைத் தவிர எதுவும் குடிக்காமல் படுத்த படுக்கையாய்க் கிடப்பதைப் பார்த்து கண்ணீர் வடிந்த முகத்தோடு தூங்கிப்போனாள் பொற்கலை. திடீரென உறக்கம் தப்பியவள் விழித்துப்பார்த்தாள்.

”எம்மா மோரு குடும்மா!”

எனக் கேட்க, பாக்கெட்டைப் பிரித்து மோரை வாயில் ஊற்றினாள். மோர் மெதுவாக இறங்கியது. சற்றும் எதிர்பாராத விதமாக தன் உதிரத்தைக் குடித்து வளர்ந்தவன் கைகால்களை உதைத்தபடி வலிப்பு வந்து இழுத்துக்கொண்டிருந்தான். செய்தறியாது திகைத்தவள் அவனிடம் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தாளே தவிர வேறெதுவும் செய்யவில்லை. முப்பது நொடிகளில் அவள் கொடுத்த மோர் வாய் வழியாக வழிந்தது. நிலையைப் புரிந்துகொண்டவள் கதறி அழுதுகொண்டு தன் புடவைத் தலைப்பால் வழிந்ததைத் துடைத்தாள். அறுவருடன் பிறந்து வளர்ந்தவன், மனைவி மகளுடன் வாழ்ந்தவன், இறுதி நொடிகளில் கடைசி மூச்சை விட்டவனின் கண்கள் தனக்குத் தாய்ப்பால் புகட்டிய தாயின் முகத்தைப் பார்த்தபடி திறந்தே கிடந்தன.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!