எழுத்தாளர்: திருமதி ப்ரஸன்னா வெங்கடேஷ்
“டேய் கணேசா, கொஞ்சம் இங்க வாடா. இந்த இட்லி வடையெல்லாம் கொண்டு மூர்த்தி கடைல கொடுத்துட்டுப் போ” என்று தன் மகன் கணேசனைக் கெஞ்சினாள் லட்சுமி. “ போம்மா, எனக்கு வெளையாடப் போகணும். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் எனக்காக காத்திட்டிருப்பாங்க” என்று கிரிக்கெட் மட்டையுடன் ஓடி விட்டான் கணேசன். திருமணமாகி மூன்றே வருடங்களில் கணவனை இழந்து விட்டாள் லட்சுமி. கையில் இரண்டு வயதுக் குழந்தை கணேசன். பிறந்த வீட்டிலும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. அதனால், இட்லி, வடை, கலவை சாதம் என்று செய்து கடைகளுக்குத் தந்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தாள் லட்சுமி.
கணேச இப்போது ஒன்பதாம் வகுப்பு தான் படிக்கிறான். பன்னிரெண்டாவது முடித்ததும் ஏதாவது பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்த்து விட்டால், சீக்கிரம் வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இரவும் பகலும் லட்சுமிக்கு தன் மகன் கணேசனின் வாழ்க்கை பற்றிய கவலை தான். அவனோ பொறுப்பு இல்லாமல் சதா விளையாட்டு , நண்பர்கள் என்று இருந்தான். தாயின் கஷ்டம் புரிந்து , படிப்பில் அவன் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு இருந்தால் நன்றாக இருக்கும் என்று லட்சுமி நினைத்தாள்.
இன்று காலையிலிருந்தே அவளுக்குக் கொஞ்சம் தலைசுற்றலாக இருந்தது. நாலு நாட்களாய் ப்ரெஷர் மாத்திரையைப் போடவில்லை. கையில் இருந்த பணத்தில் கணேசனின் ஸ்கூல் ஃபீஸ், அரிசி, உளுந்து என்று சாமான்களும் வாங்கி விட்டாள். மாத்திரை வாங்க பணம் இல்லை. அதனால் தினமும் காலையில் எழுந்திருக்கும் போதே தலைசுற்றல் இருந்தது. இன்றைக்கு எப்படியும் மூர்த்தியிடமோ வேறு ஏதாவது வாடிக்கையான கடையிலிருந்தோ கொஞ்சம் பணம் வாங்கி ப்ரஷர் மாத்திரையை வாங்கியே ஆக வேண்டும்.
இட்லி வடைகளைத் தந்துவிட்டு “ மூர்த்தி அண்ணே , ப்ரஷர் மாத்திரை வாங்கணும். ஒரு இருநூறு ரூபா அட்வான்ஸா தந்தா நல்லா இருக்கும் : என்று லட்சுமி கேட்டாள். “ இங்க பாரு லட்சுமிம்மா, இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சு வா. இப்ப கடைல எப்பிடி கூட்டம் இருக்கு பாரு” என்று சொன்னார். “ சரிண்ணே. அப்புறம் வரேன்” என்று சொல்லி விட்டுக் கிளம்பினாள்.
பன்னிரண்டு மணிக்கு தக்காளி சாதம், எலுமிச்சை சாதம் என்று தூக்குகளில் நிறைத்துக் கொண்டு மூச்சு வாங்க வெய்யிலில் சென்று மூர்த்தி கடையில் தந்தாள். “ இந்தா லட்சுமிம்மா, நீ கேட்ட பணம். . மொதல்ல மாத்திரையை வாங்கி சாப்பிடு. உடம்பைப் பாத்துக்க” என்று சொல்லி, இருநூறு ரூபாயை அவள் கையில் மூர்த்தி தந்தார். அப்போதே லட்சுமி தள்ளாடியபடியே விழ இருந்தாள். “ என்னம்மா நீ, இவ்வளவு நாளா மாத்திரை வாங்காம இருப்ப. ஏடாகூடமா உனக்கு ஏதாவது ஆச்சுன்னா என்ன செய்வான் உன் புள்ள ?” என்று அக்கறையுடன் கேட்டு தண்ணீர் கொடுத்தார் மூர்த்தி. ஐந்து நிமிஷம் உட்கார்ந்த லட்சுமி, “ என் பையன் ஸ்கூல்லேந்து பசியோட வருவான் அண்ணே” என்று எழுந்து சென்றாள்.
கணேசன் வரும்போதே முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு வந்தான். சாப்பிடக் கூப்பிட்டாலும் வரவில்லை. “ என்னடா தங்கம், உடம்பு சுகம் இல்லியா?” என்று கரிசனத்துடன் லட்சுமி கேட்டாள். “ எனக்கு எதுவும் வேணாம். வர்ற ஞாயித்துக்கிழமை கிரிக்கெட் மேட்ச் இருக்கு. எங்க டீம்ல எல்லாரும் மொத்தமா பணம் போட்டு எல்லாருக்கும் புது கிரிக்கெட் பேட் வாங்கி தராங்க . ஆனா, என்னால ஒரு பைசா கூட குடுக்க முடியல. எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு” என்று கோபத்தோடு தரையைக் குத்தியபடி சொன்னான். லட்சுமி அவன் தலையைக் கோதி, “ என்னடா செய்யறது? நம்ம நிலைமை அப்பிடித் தானே இருக்கு “ என்று சொன்னாள். ஆனால் , அவன் சமாதானமாகிற மாதிரி தெரியவில்லை. சாப்பிடாமல், பேசாமல் ஒரு மூலையிலேயே உட்கார்ந்திருந்தான்.
லட்சுமி, “ சரி கணேசா, ஒரு இருநூறு ரூபா தரேன். மொதல்ல சாப்பிடு” என்று சொல்ல, கணேசனின் முகம் மலர்ந்தது. மகனுடைய சிரித்த முகத்தைப் பார்த்ததும் தான் லட்சுமிக்கு நிம்மதியானது. சோற்றை அள்ளி விழுங்கி விட்டு, பணத்தை எடுத்துக் கொண்டு கணேசன் சென்றான். வழியில் மூர்த்தி அண்ணன் அவனைப் பார்த்து, “ என்னப்பா, உங்க அம்மாவுக்கு ப்ரஷர் மாத்திரை வாங்க போறியா? பாவம், இன்னிக்குக் கூட ப்ரஷர் அதிகமாகி மயங்கி விழ இருந்துச்சு. இருநூறு ரூபாய் தான் கேட்டுச்சு மாத்திரை வாங்க. இன்னும் வேணும்னா சொல்லு. பாவம், உனக்காகத் தான் லட்சுமிம்மா இவ்வளவு உழைக்குது” என்று சொல்ல, கணேசன் அதிர்ந்தான்.
சே!! பாவம் அம்மா. மாத்திரை வாங்க வைத்திருந்த காசை எனக்குத் தந்து விட்டாளே. அவள் உழைத்து ஓடாய் தேய்வது எனக்குத் தானே. தன் நோயைப் பற்றி நினைக்காமல், என் சந்தோஷம் , என் வாழ்க்கை முக்கியம் என்று வாழும் அந்தத் தாயின் உள்ளத்தை நான் புரிந்து கொண்டு நடக்காமல், எப்படி தன்னலத்துடன் இருக்கிறேன் என்று மனதுக்குள் புழுங்கினான்.
நேரே வீட்டுக்குச் சென்று, “ அம்மா, மொதல்ல மருந்துச் சீட்டைக் குடு. நான் போய் ப்ரஷர் மாத்திரையை வாங்கிட்டு வரேன். இனிமே உனக்கு எந்த கஷ்டமும் கொடுக்காம நல்லா படிக்கிறேன்மா” என்று தன் கைகளைப் பிடித்துக் கொண்டு அழும் மகனை ஆனந்தக் கண்ணீருடன் பார்த்தாள் லட்சுமி.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: