ஒரு பக்க போட்டிக்கதை: நான் இருக்கேன்! 

by admin
66 views

எழுத்தாளர்: சந்திரா மனோகரன் 

இடைப்பாடி பெரிய நகரமுமில்லை கிராமமுமில்லை.

காத்திருந்து… காத்திருந்து…

ஒருவழியாக பிருந்தாவுக்கு அங்கு வேலை கிடைத்து விட்டது.

டீச்சர் வேலை.அதுவும் அரசுப் பள்ளியில்.விட முடியுமா…

அவள் இருக்கும் ஊத்துக்காடு கிராமத்துக்கும் இடைப்பாடிக்கும் கிட்டத்தட்ட 

எழுபது கிலோமீட்டர் தொலைவு.

“என்ன பிருந்தா… என்ன செய்யப் போறே?”என்றான் அவள் கணவன் 

மோகன்.

“என்னங்க இது கேள்வி… போய்ச் சேரவேண்டியதுதான்… கவர்ன்மென்ட் போஸ்டிங்…சல்லிக் காசு செலவில்லாம கெடைச்சிருக்கு… யார் செய்த புண்ணியமோ..”என்றாள் புதிய உத்வேகத்துடன்.

“உங்களுக்கு பிரச்சினை இல்லே… கம்ப்யூட்டர் ஜாப்.. குக்கிராமத்தில் 

இருந்தும் செய்யலாம்… பெரிய பாஷ் ஏரியாவிலிருந்தும் செய்யலாம் 

இன்னும் சொல்லப்போனா டவுன் பக்கம் நீங்க நல்லாவே ஃபோகஸ் ஆயிருவீங்க.. இப்ப டி.டி.பி ஒர்க்ஸ்க்கு ரொம்ப டிமாண்ட் வேற”

“ஆமா…நீ சொல்றது சரிதான்… மூட்டையக் கட்டவேண்டியதுதான்..

இங்கே நமக்கு எந்தப் பாத்தியதையும் இல்லே.. அம்மா! என்ன சொல்றீங்க?”என்றான் மோகன்.

“எனக்கு என்ன இருக்கு… ரயில் இஞ்சினுக்குப் பின்னாலே பொட்டி

போற மாதிரி வர வேண்டியதுதான்..கிடைச்ச வேலையெ விடக்கூடாது… அதுவும் டீச்சர் வேலை…அப்படி இது ஒண்ணும் தூரமும் இல்லே… பாவம், பொட்டைப் புள்ளைங்க இதை விடக் கஷ்டப் படறாங்க..உடனே வாடகைக்கு ஒரு வீட்டைப் பாருங்க “என்றாள் மோகனின் தாயார் பூரணியம்மாள்.

டீச்சர் வேலையில் சேருவதற்கு முன்பு, இருவரும் இடைப்பாடிக்கு

வந்து வீடு தேடினார்கள்.எப்படியோ அலைந்து குலைந்து ஒரு வீட்டைக் கண்டுபிடித்து விட்டார்கள்.

அந்த வாடகை வீடு நெருக்கமான விவேகானந்தர் வீதியில் இருந்தது.

முன் பக்கமுள்ள போர்ஷனில் உரிமையாளர் கந்தவேல் குடியிருந்தார்.மளிகைக் கடை வியாபாரம்.கடையும் முன் பக்கம் வாசலை ஒட்டியிருந்தது.பின் பக்கமுள்ள போர்ஷன் வாடகைக்குக்

கிடைத்தது.

ஒரு புதன்கிழமை பார்த்து பால் காய்ச்சி மூவரும் குடி வந்தார்கள்.

பூரணியம்மாளுக்கு வயது முதிர்வின் தொடர்பான பிரச்சினைகள் 

அவ்வப்போது தலை தூக்கும்.சுகர் ஒன்று இருந்தால் போதும்.இணை

நோய்களுக்குப் பஞ்சமில்லை.

அவளைப் பார்த்து விசாரித்துப் போவதற்கு உறவுகள் கிராமத்திலிருந்து வந்த வண்ணம் இருந்தனர்.வீட்டிருந்தவாறே

கம்ப்யூட்டர், பிரிண்டர், ஸ்கேனர் என்று மோகன் அவனுக்குத் தெரிந்த தொழில்நுட்ப வேலையில் பிஸியாக இருந்தான்.அது சம்பந்தப்பட்ட 

கஸ்டமர்கள் வேறு வந்த வண்ணம் இருந்தனர்.யார் வந்தாலும் வீட்டு 

ஓனர் கந்தவேலுக்குத் தெரியாமல் பின்பக்கம் போகமுடியாது.

இது அவருக்குக் கொஞ்சம் சங்கடமாகப் பட்டது.

இரும்புக் கிராதியை ‘க்ரீச் க்ரீச்’ என்று திறப்பதும் மூடுவதும்… வெளியே வாகனங்களை தாறுமாறாக ‘குறுக்கே மறுக்கே’ நிறுத்துவதும்…

கந்தவேல் கவனிக்க ஆரம்பித்தார்.பொறுமையிழந்தவராய் கறாராகச் சொல்லிவிட்டார்.

“தம்பி!இது… சரியில்லை… ஒரு பக்கம் உன் அம்மாவைப் பார்க்க வந்துட்டே இருக்காங்க… அப்புறம் உன் ஒர்க்ஸ் சம்பந்தப்பட்டவங்க..”

மோகனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

“அம்மா சீக்கிரம் தேறிவந்துருவாங்க… அப்புறம் கூட்டமெல்லாம் 

குறைஞ்சிரும்..”

“தம்பி, ஒரு யோசனை…இதே லைன்ல ஒரு சின்ன ரூம் இருக்கு..

உன்னோட வேலைக்கு அது போதும்… பேசாம அங்கே போயிரு..

அது ரோட்டுப் பக்கம் இருக்கறதுனாலே வர்றவங்களுக்கும் வசதி “

மோகனுக்கும் அது சரியெனப் பட்டது.

ஒரு நாள் காலையில்__

ஹவுஸ் ஓனர் கந்தவேல் அவசரமாக மோகனைக் கூப்பிட்டார்.

“தம்பி! உனக்குத் தேவலாம்…இத்தனை உறவுக்காரர் இருக்காங்க..

எனக்கு இந்த ஊருலே யாருமில்லே… என்னோட சங்காத்தப்பட்டவங்க எல்லாமே திருநெல்வேலி பக்கம் இருக்காங்க… அடிச்சுப்போட்டாக்கூட வர்றதுக்கு நாலு நாளைக்கு மேலாகவும்.. இப்ப உன்னாலே ஒரு உதவி ஆகணும் தம்பி” என்றார் தயக்கத்துடன்.

“சொல்லுங்க பார்ப்போம்” என்றான் மோகன்.

“இங்கே ஊட்டுக்காரிக்கு ஒடம்பு முடிலே.. ரொம்ப வெயிட் போட்டுட்டா.. மெல்ல நடந்து வீட்டு வேலை பார்க்கக்கூட முடிலேன்னு

வச்சுக்கோயேன்… சுகர் இருக்கு…தைராய்டு பிரச்சினை வேற.. ஒத்தாசைக்கு ஒரு பொம்பளை ஆளு இருந்தாப் பரவாயில்லைன்னு

தோணுது…உங்க உறவுக்குள்ளே யாராச்சும்….” 

கந்தவேல் சொல்லி முடிப்பதற்குள் __

வாசலில் நிழலாடியது.

மோகனின் அம்மா பூரணியம்மாள் !

“நான் இருக்கேன்! எந்த வேலைன்னாலும் இந்த ஒடம்புல தெம்பு இருக்கற வரைக்கும் நான் செய்யறேன்!” என்றாள் பூரணியம்மாள்

உற்சாகத்துடன்.

சற்றும் எதிர்பார்க்காத மோகனும் கந்தவேலும் அசைவற்று நின்றனர்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!