ஒரு பக்க போட்டிக்கதை: பாசத்தின் மறுபக்கம்

by admin
80 views

எழுத்தாளர்: எம். சங்கர்

ஷேர் சர்ட்டிஃபிகேட் தொலைந்த விஷயத்தை பதிவு செய்ய வாழ்க்கையிலயே முதல் முறையாகபோலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியிருந்தது

தயங்கியபடிவாசலைஅணுகியபோது வாசலிலிருந்த ஒரு கான்ஸ்டபிள் விஜாரித்து ரைட்டரை பார்க்க உள்ளே அனுப்பினார்

உள்ளே ஒரு மேஜை நாற்காலி போட்டு அதில் பனியன் லுங்கியுடன் ஒருவர் அமர்ந்திருந்தார்அவர்தான் ரைட்டர் என்று பின்னர் அறிந்து கொண்டேன். மேஜை முழுவதும் ஃபைல்கள் தூசுடன் குவிந்திருந்தன மேலே ஒரு பழைய மஞ்சள் நிற ஃபேன் மெதுவாக சுழன்று காற்றை விட சப்தத்தை அதிகம் தந்துகொண்டிருந்தது. அவர் எதிரில் வீட்டு வேலை செய்பவள் போன்ற தோற்றமுடைய ஒரு நடுத்தர வயது பெண். ஏதோ காரசாரமான  அந்த அறையின் கடைசி மூலையை காட்டி காட்டி கண்ணீருடன் ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள். அவள்காட்டிய மூலையில் வெற்றுடம்புடன் ஜெட்டியுடன் தலை கவிழ்ந்து முட்டியை கட்டியபடி ஒரு இளைஞன் குந்தியிருந்தான் முதுகிலும் கால்களிலும் அடித்தழும்புகள்

“ என்ன வேல பண்ணிட்டாம்மா உம் மவன். இதுக்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா?” ரைட்டர் அவளிடம் கேட்டார்

“ ஐயா நீங்க என்ன தண்டன வேணாலும் கொடுங்க. இந்த பாவி பய பண்ணதுக்கு மன்னிப்பே கிடையாது. நான் அவங்க வீட்ல பத்து வருஷமா வேல பாக்கறேன். அவுங்க என்ன வேலைக்காரி மாதிரியே நெனக்கல. அவங்க குடும்பத்தில ஒத்தி மாதிரிதான பளகினாங்க. அந்த சின்ன புள்ள எங்கிட்ட எவ்வளவு ஆசையா இருக்கும். தாயா புள்ளையா பளகிச்சே?” என்றவள் அந்த இளைஞனை பாத்து “பத்து வயசு கூட ஆகலையேடா அதுக்கு? அந்த பச்ச புள்ளய பாத்து உனக்கெப்படிடா அந்த கொடூர புத்தி வந்துச்சு? எ வவுத்தில பொறந்து எ பால குடிச்ச ஒனக்கு அந்த வெறி நாய் புத்தியா?  சீ..தூ.. உம் மூஞ்சீல காறித் துப்பனும்டா. உன்ன பாத்தாலே எனக்கு பத்திகிட்டு வருது.. உன்ன..உன்ன..” என்று நற நற வென்று பல்லை கடித்தபடி சட்டென யாரும் எதிர்பார்க்காத கணத்தில் ரைட்டர் டேபிளிலிருந்த தடித்த உருளை கட்டையை எடுத்து குனிந்திருந்த அந்த இளைஞனின் பின் தலையில் மடார் மடார் என்று ஓங்கி அடித்து பின் “ ஒன்ன பெத்த பாவத்துக்கு நானும் போட்டுக்கறேன்” என்று சொல்லி தன் தலையிலும் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு இரண்டு பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். நொடியில் நடந்த இந்த எதிர்பாரா நிகழ்வினால் ஸ்டேஷன் சற்று ஸ்தம்பித்து பின் கலவரமாயிற்று.

கண்ணெதிரில் பார்த்த அந்த தாயின் உக்கிரம் என்னையும் கலக்கியது. மகனின் இழிச்செயலை கண்டும் அந்த தாய் மனம் வெகுண்டெழுமென்று என்று இப்போது உணர்ந்தேன் ! தன் மகனை சான்றோனென கேட்கும்போது பெரிதுவக்கும் தாய் என்று அந்த தாய் பாசத்தை ஒரு குறுகிய வட்டத்தில் அடைப்பது எவ்வளவு தவறு? பெற்ற பிள்ளைமேல் பாசத்தை பொழிவது இயற்கைதானே? ஆனால் தன் பிள்ளையே ஆனாலும் தவறு செய்தால் தண்டிக்க தயங்காத தாயுள்ளமும் போற்றத்தக்கதுதானே?

ஆனால் தாயின் இந்த குணத்தை அதிகம் புகழ்வதில்லையே? தன் மகன் புறமுதுகு காட்டிவிட்டானோ என்ற சந்தேகத்தை கூட தாங்க முடியாமல் அவனுக்கு பால் அளித்த தன் முலைகளை அறுத்தெறிந்த அந்த புறநானூற்றுத் தாய் அதிகம் பேசப்படுவதில்லையே?

நான் வந்த விஷயம் நடைபெறவில்லையென்றாலும் தாய் பாசத்தின் மறு பக்கத்தை பார்த்த அசாதரண அனுபவத்தை அசை போட்டவாறே ஸ்டேஷனிலிருந்து வெளியேறினேன்.

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!