எழுத்தாளர்: கௌசல்யா வெங்கடேசன்
நவீனுக்கு மண்டை உடைந்து ரத்தம் வழிந்ததுமே பயந்து போய் அவனுடைய தாத்தாவுக்கு போன் செய்கிறார் கிளாஸ் மிஸ்.ஸ்கூலுக்கு வந்து சத்தம் போடுகிறார் தாத்தா.
என்னங்க ஸ்கூல் நடத்துறீங்க நீங்க. படிக்க அனுப்புனா அவன் அடிச்சிட்டான், இவன் மண்டைய உடைச்சிட்டான்னு.
அவனே அம்மா, அப்பா இல்லாம ஏங்கிப் போய் கிடக்கான். அவன் படுற பாடு எங்களுக்குதாங்க தெரியும். யார் அந்த பையன். கூப்பிடுங்க அவனை.
யாருன்னு தெரியலை சார். நாங்க விசாரிச்சி யார்னு கண்டிச்சிடுறோம். நவீனுக்கு டாக்டர் தையல் போட்டுட்டார். நீங்க கூட்டிட்டு போங்க..
காரில் போகும் போது வருத்தத்துடன் புலம்பிக் கொண்டே வந்தார் தாத்தா..
உன் அப்பாவும் அம்மாவும் நல்லா நிம்மதியா போய் சேந்துட்டாங்க. வயசான காலத்துல கிருஷ்ணா, ராமான்னு இல்லாம உன்னை பார்த்துக்குற பொறுப்பு வேற..
எவன்டா உன் மண்டையை உடைச்சவன். அவன் பேரு சொல்லு. அவன என்னன்னு கேக்குறேன்..
அவன் பேரு ஹரீஷ் தாத்தா. ஸ்கூல்ல அவன் பேரைக் கேட்டாலே எல்லா பசங்களும் பயப்படுவாங்க. அவன் அப்பா எம்.எல்.ஏ. அதான் மிஸ் அவன் பேரு சொல்ல பயப்படுறாங்க ..
சரிடா நவீன் நீ பாட்டி கேட்டா பாத்ரூம்ல வழுக்கி விழுந்துட்டேன்னு சொல்லிடு. இல்லன்னா ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டா பாட்டி..
சரி தாத்தா..
பாட்டி இவனைக் கண்டதுமே பதறினாள். தாத்தா கூறியபடியே நவீனும் சொன்னான்..
அவனுக்கு சாப்பாடு கொடுத்து, வலிக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு வெளியே வந்து நவீனின் அப்பா , அம்மா போட்டோவைப் பார்தது அழுதாள்..
ஹரிஷ் இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, கருப்பான ஒரு புகை அவனை தட்டி எழுப்பி அவன் தலையை சுவற்றில் பிடித்து மோதியது. நவீனுக்கு உடைந்த அதே இடத்தில் அவன் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தது ஹரிஷுக்கு. ஐயோ!! அம்மா!! என்று கத்தினான். உடனே அந்த கரும்புகை மறைந்தது.
இரண்டு நாள் கழித்து தையல் பிரித்ததும் நவீன் ஸ்கூலுக்கு சென்றான். ஹரிஷுக்கு பயந்து தன் ஃபிரண்ட்டிடம் எங்கே அவன்??என்று கேட்டான். அவன் பாத்ரூம்ல வழுக்கி மண்டை உடைந்து போயிட்டாம் தையல் போட்டு இருக்காங்களாம்டா. அவனும் ரெண்டு நாள் கழிச்சி தான் ஸ்கூல் வருவானாம்..
இரண்டு நாள் கழித்து வந்த ஹரிஷ், நவீனைப் பார்த்ததுமே பயந்தான். அவன் பக்கமே தலை வைத்து படுக்க வில்லை. கைகளில் நிறைய மந்திரித்த கயிறு கொண்டு கட்டி இருந்தான். நவீனிடம் போய் பேசினான். உன்ன தெரியாம அடிச்சிட்டேன்டா மன்னித்து விடு டா என்று மன்னிப்பு கேட்டான்..
தாத்தாவிடம் ஸ்கூலில் நடந்ததைக் கூறினான் நவீன். அதற்கு தாத்தா அரசன் அன்று கொல்வான். தெய்வம் நின்று கொல்லும் என கூறியபடியே தன் மகன், மருமகள் புகைப்படத்துக்கு மாலை போட்டு மனமுருகி கும்பிட்டார்..
10-ம் வகுப்பும் சென்று விட்டான் நவீன்.
டேய் நவீன்.
என்னடா செல்வா.
உங்க அம்மா, அப்பா எப்படிடா செத்தாங்க.
ஒரு கார் ஆக்ஸிடெண்லடா.
பாவம்தான்டா நீ ரெண்டு பேருமே இல்லாம என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே நவீன் அவன் தோள்களில் சாய்ந்து அழ ஆரம்பித்தான்..
டேய், அழாதடா நீ அழுதா எனக்கும் அழுகை வருது. நீ கவலைப்படாத நவீன். இனிமே உனக்கு ஒன்னுன்னா நான் என் உயிரையும் கொடுப்பேன் என செல்வா கூறியதும் நவீனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியலை.
ஒரு நாள் செல்வா, நவீனிடம் உன் அப்பா, அம்மாகிட்ட பேச ஒரு வழி இருக்குடா..
சொல்லுடா என்னன்னு எனக்கு ஒரே ஆசையா இருக்குடா.
ஓஜா போர்ட்.
என்னடா சொல்ற.
ஆமாண்டா முறைப்படி எப்படின்னு தெரிஞ்சிகிட்டு நம்ம ரெண்டு பேரும் ஓஜா போர்டு செஞ்சி பார்ப்போம்டா..
தேங்ஸ்டா செல்வா. உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலடா..
ஆனா என் தாத்தா ஒத்துக்க மாட்டாருடா இதுக்கு ..
அதுவும் யோசிச்சேன்டா நவீன். என் அப்பா, அம்மா ரெண்டு பேரும் அடுத்த மாசம் ஒரு கல்யாணத்துக்கு போறாங்க. அன்னிக்கு நாம செஞ்சி பார்ப்போம். அதுக்கு தேவையான திங்ஸ்லாம் தயாரா வச் சிப்போம்..
சரிடா செல்வா..
சந்தோசமாக வீடு திரும்பினான் நவீன். அந்த நாளை எதிர்நோக்கி..
நவீனின் அப்பாவும், அம்மாவும் ஆக்ஸிடெண்டில் இறப்பதற்கு முதல் நாள் இரவு பேசிக் கொண்டிருந்தார்கள்..
என்னங்க உங்க தங்கச்சி வீட்டு கல்யாணம்தான. ஏன் நவீனை அழைச்சிட்டு போக வேணாம்னு பிடிவாதம் பிடிக்கிறீங்க..
வேணாம்டி அம்மாவும், அப்பாவும் நாம விட்டுட்டு போயிட்டா தனியா இருக்குற மாதிரி பீல் பண்ணுவாங்க. நவீன் இருந்தா வீடும் கல கலன்னு இருக்கும். என்ன ரெண்டு நாள்ல திரும்பி வந்துடப் போறோம். ஏன் கவலைப்படுற..அது என்னன்னு தெரியலங்க. நவீனை தனியா விட்டுட்டுப் போறோம்னு மனசு பாரமா இருக்குங்க.
அட டா ரெண்டு நாள் பிரியிறதுக்கு போய் இவ்வளவு வருத்தப்படுறியே ஏன் மா..
கண் கலங்க ஆரம்பித்தாள். நவீனுக்கு ஒன்னுன்னா என்னால் தாங்கவே முடியாதுங்க. நான் செத்தாலும் என் புள்ளைக்கு கடைசி வரை துணையா இருப்பேன்..
என்னம்மா ஏன் இப்படிலாம் பேசுற..
ஆமாங்க அவன் என் உயிருங்க. அவன் குடும்பம், குடித்தனம்னு மனுசனா ஆனா தான் என் ஆன்மா சாந்தியடையும்..
நீ விட்டா இப்படியே தான் பேசிக்கிட்டு இருப்ப. காலையில சீக்கிரம் எழுந்து ஊருக்குப்போகணும். வாம்மா வந்து தூங்கு என அவளை தட்டிக் கொடுத்து தூங்க வைத்தார்..
ஊருக்குப் போய் கல்யாணத்தை முடித்துக் கொண்டு இரண்டே நாளில் திரும்பினார்கள்..
என்னமோ ரெண்டு நாள் உன் பிள்ளையை பிரியிறதுக்கு அவ்ளோ பேசுனியேடி. இதோ இன்னும் ஒரு மணி நேரத்துல ஊர் வந்துடும். வீட்டுக்குப் போய் உன் பிள்ளையை கொஞ்சிக்க என கிண்டலடித்தார்..
என்னங்க இப்படி கிண்டல் பண்றீங்க என வெட்கப்படவும் எதிரில் வந்த லாரி மோதவும், டமார் அந்த இடத்திலேயே டிரைவரையும் சேர்த்து மூன்று பேரும் இறந்தனர்..
எல்லா பார்மாலிட்டீஸ்சும் முடிந்து உடல்களை வாங்கினார் அழுதபடியே நவீனின் தாத்தா..
நவீன் அழுவதை அவன் அம்மா அழுதபடியே பார்த்தாள். உன் கூடவே தான், உனக்கு துணையா கடைசி வரை இருப்பேண்டா மகனே..
செல்வாவின் அம்மா, அப்பா ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. அவர்களை அனுப்பி விட்டு நவீனுக்கு போன் செய்தான் செல்வா..
தாத்தா நான் செல்வா வீட்டுக்குப் போய் படிச்சிட்டு சாயந்தரமா வரவா.
ம், சரி நவீன் பத்திரமா போயிட்டு வா. நீ வர்ரவரை நான் வாசலை பார்த்துகிட்டே இருப்பேன்..
ரொம்ப தேங்ஸ் தாத்தா. சீக்கிரமா வந்துடுவேன். பை தாத்தா.
அவன் சென்றதுமே போட்டோவில் இருந்த மாலை கீழே விழுந்தது..
என்ன சகுனம் சரியாயில்லையே. இவனை அனுப்பியிருக்கக் கூடாதோ என யோசித்தார் தாத்தா..
செல்வாவின் வீடு.
வாசல் கதவை தாழ் போட்டுவிட்டு ரூமுக்குள் சென்று ஓஜா போர்டை எடுத்து வைத்தனர்.
நீ யாருகிட்ட பேசப்போற டா நவீன்..
எனக்கு அம்மாகிட்ட பேச தான்டா ரொம்ப ஆசை..ஆங்கில வார்த்தையில் amma என்று ஒரு ஒரு எழுத்தாக நகர்த்தினான்..அம்மா உன்னிடம் பேச அனுமதி கிடைக்குமா No என்று பதில் வந்தது..அம்மா உனக்கு என்னைப் பிடிக்குமா.
எஸ்
ஏன் என்கிட்ட பேச மாட்டேன்கிற பேசும் மா
No
செல்வா செம இன்ட்ரஸ்டா நவீன் செய்வதை வேடிக்கை பார்த்தான்..
நவீனின் அம்மா, தன் கணவரிடம் என்னங்க இவன் புதுசா இந்த வேலை பண்றான். ஆரம்பத்திலேயே அவனை சரி பண்ணனும். இல்லன்னா காலத்துக்கும் நம்மளை கூப்பிடுவான். அவன் வாழ்க்கையே கேள்விக்குறியா போயிடும். அவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தா தான் சரி வரும். இருங்க வரேன்..
ஜன்னல்கள்பட படவென அடிக்கவுமே செல்வாவிற்கு பயம் வந்து விட்டது. ஓஜா போர்டின் மேல் வைத்திருந்த கிளாஸ் டம்ளர், காசு மெழுகுவர்த்தியெல்லாம் மேலே பறந்தது..
செல்வா பயந்து ரூமை விட்டு வெளியே ஓடி வந்தான். நவீன் வெளியே ஓடி வருவதற்குள் அறைகதவு சாத்தப்பட்டது.
ஒரே கும்மிருட்டு நவீன் அலறினான். யாராவது கதவை திறந்து விடுங்க என்று, வெளியே செல்வா கதவை தள்ளி திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.. கதவை திறக்கவே முடியலை இருவருக்குமே. இருவருமே பயத்தில் அழ ஆரம்பித்தனர்..
டேய் செல்வா என்னை எப்படியாவது கதவை திறந்து காப்பாத்துடா..
என்னால் திறக்க முடியலடா. நான் தாத்தாகிட்ட உண்மையை சொல்லி இங்க வரச் சொல்றேன்டா. அதுவரை பயப்படாம தைரியமா இருடா..
சரிடா..
தாத்தா விஷயம் தெரிந்து வீட்டுக்குள் நுழையவும், நவீன் இருந்த ரூமில் கருப்பாக ஒரு உருவம் அந்தரத்தில் பறந்தபடி, ஓலமிட்டபடி நவீன் கிட்டத்தில் வந்தது..
தாத்தா அறை அருகே வரவும், நவீன் அலறியபடியே கதவை திறக்கவும் தாத்தா என அழுதபடியே கட்டிக் கொண்டான்..
நீ செய்றது உன்னை பெத்தவங்களுக்கு பிடிக்கலையோ என்னவோ. நவீன் இனிமே இது மாதிரி வேலைலாம் செய்ய மாட்டேன்னு சத்தியம் செஞ்சி குடு..
சத்தியமா செய்ய மாட்டேன் தாத்தா..
நவீன் காலேஜில் நல்ல மதிப்பெண்கள் பெற்றான். உடனேயே நல்ல வேலை. கைநிறைய சம்பளம்..
உடன் வேலை பார்க்கும்
ஷைலுவுடன் காதல். உடனே திருமணம்..
இரட்டைக் குழந்தைகள். ஒன்று ஆண், மற்றது பெண். ஷைலுவிடம் கூறினான் நவீன். ரெண்டு பேரையும் பாரேன் ஷைலு. அப்படியே என் அம்மா, அப்பா சாயல்.
தாத்தா உடனே சொன்னார். ஆமாடா நவீன் உன் அப்பாவுக்கு வலது கண்ணில் மச்சம் இருக்கும். அதே போலவே இந்த குட்டி பயலுக்கு இருக்கு பாருடா..
அதற்குள் பாட்டி உன் அம்மா கன்னத்தில் குழி விழும். இந்த குட்டிக்கும் விழுது பாரேன்..
ஆமாம் தாத்தா பாட்டி நான் அம்மா, அப்பாவுக்காக ஏங்குறேன்னு தெரிஞ்சி அவங்களே எனக்கு குழந்தைகளா வந்துட்டாங்க தாத்தா..
ஆனந்தக் கண்ணீர் விட்டபடியே இருவரையும் தூக்கினான். இரு குழந்தைகளுமே ஆனந்தமாக சிரித்தனர்.
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: