ஒரு பக்க போட்டிக்கதை:  பைத்தியக்காரி

by admin
90 views

எழுத்தாளர்: சாந்தி ஜொ

“தான் பெத்த பிள்ளைக்கு ஆபத்து வரும்போது அம்மா காப்பாத்துவாங்க சரி. ஆனா அந்த நிலமைல இருந்த அவங்க எப்படி உன்ன காப்பாத்துனாங்க? எனக்கு தெரியல, ஏன்னு நீயே சொல்லிறு பொம்மு.”

“நம்ம குழந்த பிறந்ததும் சொல்றே. சரியா, என்றாள் பொம்மு.”

“அப்பா…! பிரசவத்துக்கு இன்னும் ஒரு மாசம் கிடக்கே பொம்மு. சரி குழந்த பிறந்ததும் பதில சொல்லு” என்று சிரித்த முகத்துடன் பொம்முவிடம் கணவர் சொன்னார்.

கும்பகோணத்தில் இருந்த எங்கள் வீட்டின் எதிர் வீட்டிற்கு புதிதாக அவள் குடி வந்தாள். நான் தெருவில் விளையாடி கொண்டிருக்கும் போது தன் 8 வயது மகளின் கையை பிடித்துக்கொண்டு அவள் தெருவில் நடந்து செல்வதை பார்ப்பேன். மகளை கொஞ்சி கொண்டே  சிரித்த முகத்துடன் அவள் செல்வாள். மகளுக்கு சாக்லெட் வாங்கிக்கொடுக்கும் போது விளையாடி கொண்டிருக்கும் எங்களுக்கும் வாங்கி கொடுப்பாள். ஆனால், சில நாட்களுக்கு பிறகு தன் வீட்டுத் திண்ணையில் அவள் மட்டும் அமர்ந்து முடி எல்லாம் விரித்து போட்டுக் கொண்டு தனியாக பேசி சிரித்து கொண்டிருப்பதை பார்த்து பயந்து அம்மாவிடம் கேட்டேன்.

“அம்மா.. அம்மா அந்த எதிர் வீட்ல இருக்க அவங்க தனியா யாரோட பேசுறாங்க? ஏன் அப்படி ஆகிட்டாங்க? பயமா இருக்குமா அவங்கள பார்த்த”

“கொஞ்ச நாள் முன்னாடி நம்ம கும்பகோணத்து ஸ்கூல் தீப்பிடிச்சி நிறைய பிள்ளைங்க செத்துபோனதுல அவங்க பிள்ளையும் கருகி செத்து போய்ருச்சி. பிள்ளையோட கருகிபோன உடம்ப பார்த்ததுல இருந்து அவங்களுக்கு பைத்தியம் பிடிச்சிருச்சி. அதுனால தான் தனியா இப்படி பேசிட்டு இருக்கு பொம்மு பாப்பா” என்று அம்மா சொன்னார்.

நாங்கள் விளையாடும் போது அவள் எங்களை அழைத்து தலையை சீவி விடுவது கன்னத்தில் முத்தமிடுவது போன்றவைகளை அவள் செய்தாலும் பைத்தியக்காரி என்று சொல்லி அவளை தள்ளிவிட்டு ஓடி போவோம். அப்போதும் அவள் சிரித்துக்கொண்டே வரச் சொல்லி கொஞ்சுவாள். அப்படி ஒருநாள் தெருவில் நானும் என் தம்பியும் விளையாடி கொண்டிருந்த போது எங்கோ இருந்து மூன்று வெறி பிடித்த நாய்கள் பாய்ந்து எங்களை நோக்கி கடிக்க வந்தது. நாங்கள் கத்துவதை கேட்டு நாய்கள் எங்கள் அருகில் வருவதற்கு முன்  பைத்தியக்காரி ஓடிவந்து எங்களை அவள் சீலையால் சுற்றி நாய்களுடன் சிரித்துக்கொண்டே போர் புரிந்தாள். கைளாலே நாய்களை தள்ளிவிட்டு எங்களை கடிவாங்க விடாமல் அவளே நாய்களிடம் கடி வாங்கினாள். அவளுடைய இரத்தம் கட்டிபிடித்த எங்கள் மீது வழிந்தது. சற்று நிமிடத்தில் ஜனங்கள் நாயை விரட்டினார்கள். பிறகு கட்டிபிடித்துக்கொண்டே  “அம்மா” என்று அந்த பைத்தியக்காரியை நான் அழைத்ததும் நாய்களிடம் கடிவாங்கிய போதும் சிரித்து கொண்டே இருந்த அவள் அப்போது கதறி அழ ஆரம்பித்தாள். என் கையை பிடித்துக் கொண்டே கண்களை மூடினாள்.

“நம்ம குழந்த உன்ன மாதிரியே இருக்கு பொம்மு. குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்.”

“வாசுகி” என்றாள் பொம்மு

“இது நீ சொன்ன அந்த பைத்தியக்காரி பெயரு தானே. ஆமா அந்த நிலமைல இருந்த அவங்க எப்படி உங்கள  காப்பாத்துனாங்கனு கேட்டேன் இப்ப பதில சொல்லு” என்று கணவர் கேட்டார்.

“அவங்க என்னைய பெத்த தாய இல்லாம இருக்கலாம். பைத்தியக்காரியா இருக்கலாம். ஆனா அவங்களும் ஒரு தாய் தானே!”

முற்றும்.

ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!

மேல் விபரங்களுக்கு:

https://aroobi.com/2024%e0%ae%86%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%87-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/

You may also like

Leave a Comment

error: Content is protected !!