எழுத்தாளர்: தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்
அந்த மேல்நிலைப் பள்ளியின் எட்டாங் கிளாஸ். சலசலவென சத்தம் அமைதியான காட்டில் கேட்கும் நீரோடை போல வகுப்பறை முழுதும் வியாபித்திருந்தது. கணக்கு போட்டுக் கொண்டிருந்த ஆசிரியை திரும்பி சத்தம் உற்பத்தியான திசையில் பசங்களை அதட்டினார். இப்போது சலசல மேஜிக் போல் காணாமல் போயிற்று.
” இந்தக் கணக்கை வீட்டில போட்டுட்டு வந்து நாளைக்குக் காட்டணும்… என்ன… “
லேசா அதட்டிட்டு மதிய உணவுக்கு நேரமாகி விட்டதா என கடிகாரத்தைப் பார்த்தார். உணவுக்குப் பிறகு அறிவியலும் அவரே எடுப்பார். வகுப்பாசிரியையும் அவரே. லஞ்ச் நேர த்துக்கான மணி அடித்தது.
பசங்கள் புத்தகங்களைப் பைக்குள் வைத்துவிட்டு லஞ்ச் பாக்ஸ்களைக் கையில் எடுத்தனர். விதேஷ் மீண்டும் மீண்டும் பைக்குள் துழாவினான். ம்ஹூம்… லஞ்ச் பாக்ஸ் இல்லை. அம்மா கொடுத்த லஞ்ச் பாக்ஸை பைக்குள் வைக்க மறந்து தனது ஸ்டடி டேபிள்லேயே மறந்து வைத்துவிட்டு வந்துவிட்டது இப்போதுதான் அவனுக்கு ஞாபகத்துக்கு வந்தது. இப்போது லஞ்சுக்கு என்ன பண்ணுவது; கையில் காசும் இல்லை. சுய இரக்கத்தில் கண்கள் கசிந்தன. பக்கத்திலிருந்த நளன் இவனது நிலையை உடனே புரிந்து கொண்டு “சரி… வா… நான் மூனு சப்பாத்தி கொண்டு வந்திருக்கிறேன். பாதி பாதி சாப்பிடுவோம். சாயந்தரமா வீட்டுக்குப் போனவுடனே அம்மாட்ட சொல்லி ஏதாவது சாப்பிட்டுக்கலாம்”.
இருவரும் ஒன்னரை ஒன்னரை சப்பாத்தி வீதம் சாப்பிட்டுட்டு அரை வயிறுடன் பெஞ்சில் உட்கார்ந்தனர். விதேஷ் நளனுக்கு நன்றி கூறினான்.
வகுப்பாசிரியை உள்ளே நுழைந்தார்.
” பசங்களா… நீங்கள்லாம் நல்லா படிச்சா மட்டும் போதாது; நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்ளணும். நல்லா படிக்கிற பசங்க யாருன்னு ரேங்க் அட்டைலயே தெரியும் உங்களுக்கு… ஆனா நல்ல பண்புள்ள மாணவர்களை இன்னைக்கு அடையாளம் கண்டு பிடிப்போம். ஒவ்வொருத்தரும் எழுந்து நின்னு நல்ல பண்புடைய ஒரு மாணவன் அல்லது மாணவி பெயர் சொல்லிட்டு உட்காரணும்… சரியா..? “
ஒவ்வொரு மாணவனா எழுந்து ஒரு பெயரைச் சொல்லிட்டு உட்கார்ந்தனர். முப்பது பேர் இருக்கிற வகுப்பிலே பத்து பேருக்கு மேலே நளன் பெயரையே சொன்னார்கள். பென்சில், பேனா போன்ற தேவையான பொருட்களை வேண்டியவர்களுடன் பகிர்ந்து மகிழ்ந்துள்ளான் நளன். ஆசிரியைக்கும் ஆச்சரியம். நளனைக் கூப்பிட்டு ” இந்த நல்ல பழக்கங்களையெல்லாம் எங்கிருந்து படித்தாய்” என விசாரித்தார்.
“எங்கம்மாவும் அப்பாவும் பக்கத்து வீட்டிலே உள்ளவங்களுக்கும் சொந்தக்காரங்களுக்கும் சின்ன சின்ன உதவிகள் பண்ணியதைப் பார்த்திருக்கிறேன் டீச்சர்; ரெண்டு பேருமே அறிவுரைகளையும் கதைகளா சொல்லுவாங்க டீச்சர்”.
இவனுடைய மனசு தாயுள்ளத்தையும் மிஞ்சுதே என மனசுக்குள் வியந்தார் ஆசிரியை. “இப்படிப்பட்ட தாயுள்ளங்கள்தாம் நம் நாட்டுக்குத் தேவை. எல்லோரும் நளனுக்காக ஒரு தடவை கைதட்டுங்க” என மாணவர்களிடம் கூறினார். வகுப்பறையே கலகலத்தது. நளன் சிறிது வெட்கத்துடன் மனசெங்கும் பூரிப்பாக நின்று கொண்டிருந்தான்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: