காதல் பேசும் பிப்ரவரி: மனம் கொத்தி பறவை

by admin 2
136 views

எழுதியவர்: குருமூர்த்தி

அந்த கசப்பான பிரிவிற்கு பின், எதுவுமே வேண்டாம் என்று இந்த லௌகீக விஷயங்களில் இருந்து ஒதுங்கி, நான், என் வேலை, வீடு, என்று ஒரு தனி உலகத்தில், சஞ்சரித்து கொண்டிருந்தேன். அந்த சீனு மட்டுமே, நான் மனம் விட்டு பேசக்கூடிய ஒரு நல்ல “தோழராக” இருந்தான்.
மற்றவர், சினிமா, சுற்றுலா என்று ஜாலியாக டூர் அடித்து கொண்டிருந்த காலத்தில், நான், அந்த சீனுவோடு மலைப்பிரதேசங்களில் ஆன்மீக சுற்றுலா சென்று கொண்டிருந்தேன். மனதிற்கு அமைதியாக இருந்தது. என்றாலும், ஏதோ ஒரு குறை இருப்பதாகவே தோன்றியது.
இங்கே இருந்தவர்களிலேயே, சீனு மட்டும் சற்று வித்தியாசமானவன். “மனித வாடையே ஆகாது” என்ற கொள்கையுடன் தனி ஒருவனாக வலம் வந்து கொண்டிருந்த, அவன், “கொஞ்சம், பிராக்டிகலாக பேசுவோமாடா” என்று அவ்வப்போது பல உண்மைகளை நமக்கு உணர்த்துபவன். அதனாலேயே, அவனிடமிருந்து எல்லோரும் ஒதுங்கி இருந்த நிலையில், எனக்கு மட்டும் அவனிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு. பல நேரங்களில், அவனிடம் சென்று பேசி கொண்டிருப்பேன்.
ஆனால், சமீப காலமாக, நான் ஏதோ ஒரு குழப்பத்தில் இருக்கிறேன். மனம் விட்டு பேசுவதா வேண்டாமா என்று தெரியவில்லை. சில நாட்களாக, என் மனதிற்குள், ஏதோ சில உணர்ச்சிகளின் அழுத்தம் அதிகரித்திருப்பதாக தோன்றுகிறது. என் காதுகளில் எப்பொழுதும் அவளின் அந்த காந்த குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த “P.K சம்பந்தம்” படத்தில் – “காதுக்குள்ளே எதோ சவுண்ட் கேக்குதுங்க !!!” என்று கமல் சொல்வதுபோல். டெலிபோன் அடிக்கும் போதெல்லாம் அவள் தானா என்று பார்க்க விரைகிறேன், இல்லை என்றால் ஏமாற்றம் அடைகிறேன். அவள் அழைப்பில் வந்து, “சார், நான்தான்.. பேசறேன், எப்படி இருக்கீங்க.. ” எனும்போது, அந்த குரலின் கம்பீரம் என் உடம்புக்குள்ளே ஒரு
மின்னல் பாய்ச்சுகிறது…
ஆமாம், அவள் தான்தான் காரணம். அவள் ஷாஜு, எங்கள் தொழிலோடு தொடர்புடைய ஒரு கிளையில் புதிதாக சேர்ந்த வட இந்திய, இளம் பெண். சாதாரணமான தோற்றம்தான். இருந்தாலும் ஏனோ என்னை ஈர்க்கத்கான் செய்தது. துறுதுறு வென்று அந்த உற்சாகம், அந்த காந்த குரல், எனக்குள்ளே ஏதோ உணர்வுகளை தூண்டுகிறது. பெயரை கேட்டவுடன் சின்னதாக ஒரு சந்தேகம். சீனுவிடம் கேட்டேன், அவன் ஆமாம், அவங்க வேறதான், என்றான். கூடவே, “டேய், வேணாம்டா நரேஷா..”, என்றான்.
ஆனாலும், நான் முன்பை விட இப்போதெல்லாம் அதிக சந்தோஷமாக இருப்பதாக உணர்கிறேன். அலுவல் நிமித்தம் அவளோடு அதிகம் பேசத் தொடங்கினோம். எனக்கும் ஹிந்தி தெரியும் என்பதால், எங்களின் புரிதல் இலகுவாகியது. ஒவ்வொரு முறை பேசும்போதும், அழைப்பை துண்டிக்க மனமே வருவதில்லை. தேவையில்லாமல், மீண்டும், மீண்டும், அவளிடம் பேசத் தோன்றியது. ஒன்றுமில்லாத விஷயத்தை எல்லாம் பேச தொடங்கினோம். மற்றவர்களும் இதை பற்றி பேச தவறவில்லை .கொஞசம் கொஞ்சமாக, புரிதல் அதிகமாக, வெளியில் ஒன்றாக செல்ல தொடங்கினோம். அவளுக்கு பிடித்த அந்த ஷ்ரேயாவின் பாட்டு நிகழ்ச்சி வந்தது. இதுவரைக்கும், யாரிடமும் எதற்காகவும் கையேந்தாத நான், முதன் முறையாக, இரண்டு டிக்கெட் கேட்டேன். என்ன நரேஷ், உனக்கு டிக்கெட்டா, அதுவும், இரண்டா.. என்னடா சமாச்சாரம்..? என்றார்கள்.
சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல், சிரித்து சமாளித்தேன். சீனு பிடித்து கொண்டான். “நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதே, நான் எதிர்க்கலை, ஆனா இது நமக்கு சரியா வராது. நீ எப்பவுமே நடக்காத விஷயத்துக்கு ஆசைப்படறே. அவங்க, நம்பிக்கைகளில், அவங்க ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க. நாமதான் எல்லாத்தையும் மாத்திக்கிட்டோம். பார்த்துக்கோ, அப்புறம் உன் இஷ்டம்”
என்றான். கொஞ்சம், அடி வயிற்றை பிசைந்தாலும், “நன்றிடா, நான் பாத்துக்கறேன் ” என்று அங்கிருந்து நழுவினேன். அந்த பாட்டு கச்சேரி என் வாழ்க்கையின், முக்கியமான நிகழ்ச்சி. இதற்குமேல் என்னால் முடியாது என்று தோன்றியது, அந்த “சஞ்சய் ராமசாமி” போல், நானும் என் மனதை பிசைந்த அந்த அழுத்தத்தை கொட்டி தீர்த்தேன். “ஷாஜு, நாம ஏன்…. ” இதை கேட்டவுடன், அவள் கண்களில் கண்ணீர். தோளில் சாய்ந்து கொண்டாள். பிறகு சமாளித்து, “எனக்கு, கொஞ்சம் டயம் கொடுங்க..” என்றாள்.. நாம நாளைக்கு சாயந்திரம், வழக்கமான அந்த ஹோட்டல்ல பார்க்கலாம்.” என்றாள்.

மறுநாள் போவதற்கு முன் சீனுவை பார்த்தேன். கண்ணில் கண்ணீர் முட்டியது. அவன் சாதாரணமாக, என்னடா ஆச்சு என்றான். இல்லேடா, அவள் உடனே ” யெஸ்-னு” சொல்லனும்னு எதிர்பார்த்தேன், ஆனால்,
யோசிக்கனும்னு சொல்றா, என்று அழுதேன். அவன், என் கண்ணீரை துடைத்து, ஒன்னும் டென்ஷன் ஆகாதே, நான் உன்னை தடுக்கறேன்னு நினைச்சுக்காதே. ஆபீஸ் மாதிரியே, நீ எல்லாத்துக்கும் பெரிசா
ஆசைப்படறே. ஆபீஸ் வேற, வாழ்க்கை வேறன்னு புறிஞ்சுக்கோ. ஆபீஸ்ல, கட்டாயத்துனால நாங்க உனக்கு வேலை செய்வோம். வீடு அப்படி இல்லை. மத்தவங்களை அனுசரிச்சுதான் நீ போகனும். இருந்தாலும், எது நடந்தாலும், நல்லதுக்கேன்னு எடுத்துக்கோ. வேற எதுவும் தப்பா யோசிக்காதே. எதுவா இருந்தாலும், எனக்கு ஃபோன் பன்னு, நான் வரேன். பகவான் மேல பாரத்தை போட்டுட்டு போ, வாழ்த்துக்கள், என்றான். மறுநாள் மாலை.. அவள், எனக்கு முன்பே வந்து காத்திருந்தாள்.
ஹாய் ஷாஜு, எப்படி இருக்கே ஹாங்.. நல்லா இருக்கேன் நரேஷ்.
அவளே ஆரம்பித்தாள், கொஞ்ச நாளா, நானும் இந்த குழப்பத்தில தான் இருக்கேன், நரேஷ்.
இப்ப நீயே இந்த விஷயத்தை ஆரம்பிச்சிட்டே. ஆமாம் நரேஷ், எனக்குள்ளயும் அதோ மாற்றம் தெரியுது. எனக்கு இதெல்லாம், புதுசா இருந்தாலும், அல்லாஹ்வின் கருணையை யாரால தடுக்க முடியும்.
நான் – ஹும், என்றேன். உன் கிட்ட பேசும்போதெல்லாம், நான் என்னையே மறந்து போறேன். இப்பல்லாம, நான் எங்க “வாப்பா” கிட்ட, பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டேன். எனக்கே, ஏன் மேல
ஆச்சர்யமா இருக்கு. நானா இப்படின்னு… எனக்கு என்ன பண்ணனும்னு தெரியலை. இதுதான் நல்ல சந்தர்பம் என்று ஆமாம் ஷாஜு, இதுக்கு மேல யோசிக்க ஒன்னுமில்லை ஷாஜு, நம் எதிர்காலத்தை பற்றி
என்ன ப்ளான் என்றேன். நீங்களே சொல்லுங்க என்றாள்.
இப்பதான் நீ வந்ததுக்கு அப்புறம், நான் சந்தோஷத்தை பார்க்கிறன். இந்த சந்தோஷத்தை நான் இனிமேலும் இழக்க விரும்பலை, அதனால… அதனால..
நாம திருமணம் செஞ்சுக்கலாமா என்றேன் . அவள் கண்கள், தாரை, தாரையாக கண்ணீரை வார்த்தன.
அழாதே ஷாஜு, எல்லோரும் பார்க்கறாங்க, என்றேன். ரொம்ப தாங்க்ஸ் நரேஷ். அவள் பேச தொடங்கினாள். நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மைதான் நரேஷ். இந்த நாட்கள், நான் ரொம்ப
மகிழ்ச்சியா தான் இருந்தேன். என்னாலும் இதை மறுக்க முடியாது, ஆனா இதுல ஒரு முக்கியமான விஷயம், என்னன்னா, நாம ரெண்டு பேருமே இதை எதிர்பார்க்கலை. ஆனா, இப்ப திருமணம்னு வரும்போது, அது எப்படி நடக்கும்னு தான் தெரியலை. ஒரு பயம் வந்து என்னை அழுத்துது.
அது சரி நரேஷ், நாம எப்படி, திருமணம் செஞ்சிக்க போறோம், ஒடிப்போயா.. இதை நான் எதிர்பார்க்கவல்லை.. அது நல்லா இருக்காது நரேஷ், நாம ஓடி போய் திருமணம் பண்ணினா, அதுனால
உங்களுக்கு ஏதும் பிரச்சனை வந்தா, என்னால அதை தாங்கிக்க முடியாது. ஏன்னா, எங்க ஆளுங்க கொஞ்சம் ஆபத்தானவங்க. உங்களை எந்த காலத்திலும் நான் இழக்க விரும்பவில்லை.
அதுவுமில்லாம எனக்கு, ஒரே ஒரு பிரச்சனை தான். உங்களை எவ்வளவு விரும்பறேனோ, அதே அளவு என் வாப்பாவையும். அவர் மனம் வருதப்படும் படி எதையும் செய்ய விரும்பம் இல்லை.

நம்ம ஒன்னா சேரனும்னா, அது, இரு வீட்டார் சம்மதத்தோடு தான். அதை உங்களால, பிராமிஸ் பன்ன முடிஞ்சா, நாம திருமணம் செஞ்சுக்கலாம் என்றாள். அதுவுமில்லாம, எனக்கு வேற சில குழப்பங்களும் வருது. இந்த பந்தத்தின் மூலம், நாம எப்படி சேரப்போறோம், நரேஷ். புரியல, என்றேன்..
மதங்களை கடந்ததுதான் காதல்னாலும், கொஞ்சம் பிராக்டிகலா யோசிச்சா, இது இரு வீட்டின் சம்மதம் பற்றிய பிரச்சனை மட்டும் இல்லை, இது இரு வேறு நம்பிக்கைகளை பற்றிய விஷயமும் கூட. எனக்காக நீங்களோ, உங்களுக்காக நானோ, நம் நம்பிக்கைகளை துறக்க வேண்டியிருக்கும். அப்படி நம் வீட்டையும் பகைத்து கொண்டு, நம்பிக்கைகளையும் துறந்து, அந்த வாழ்க்கை எப்படி இருக்கும் என்று
நினைத்து பார்க்க முடியவில்லை நரேஷ். ஏன் ஷாஜு, திருமணத்திற்கு பிறகு நாம் நாமாக இருக்கலாமே
அது பேசுவதற்கு சுலபம் நரேஷ், ஆனால் சமுதாயத்துக்கு ஒத்து வராது. அது எப்ப சாத்தியம் என்றால், நம் நம்பிக்கைகளை கடந்து, நாம் வீட்டை மீறி திருமணம் செய்தால் மட்டுமே சாத்தியம்.
அப்படி, வீட்டையும், நம்பிக்ககளையும் பகைத்து கொண்டு, ஏதோ ஒரு குறையோடு, சந்தோஷமா இருக்க முடியுமா என்று தெரியலை, நரேஷ். என்னால அப்படி ஒரு வாழ்க்கைக்கு ஜஸ்டிஸ் பண்ணமுடியாது நரேஷ். நீ குழப்பத்தில இருக்கிறாயா ஷாஜு. உங்களை, பிடிச்சிருக்கு என்பதில் எந்த குழப்பமும் இல்லை நரேஷ். திருமணம் நம்மை பிரித்து விடுமோ என்ற பயம் மட்டுமே. என்னால யாரையும் பகைச்சுக்க முடியாது, நரேஷ். நான் ஆரம்பத்திலிருந்து அப்படித்தான். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
உன்னை விரும்பியதை தவிர நான் வேறு என்ன குற்றம் செய்தேன், ஷாஜு. இருந்தாலும் உன் நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஷாஜு, என்றேன். நானும் உனக்காக நேர்மையா முயற்சி பண்றேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.

ஆனால் நம் நம்பிக்கைகளை பொருத்தவரை, இதுல யாராவது ஒருத்தர் விட்டு கொடுத்துதான் ஆகனும். அப்பத்தான் வாழ்க்கை இலகுவாக இருக்கும். “நான் காத்திருக்கேன்…. “
இது என் வாழ்க்கையின் மிக பெரிய இழப்பு தான், நரேஷ் என்றாள் அவள். அல்லாஹ் கருணை இருந்தால் ஒன்றாக சேருவோம். நரேஷ் காத்திருக்கிறான்.
சில காலம், கழித்து, ஷாஜு, வேறு எங்கோ திருமணம் முடித்ததாகவும், ஆனால் அதுவும், மன வேறுபாட்டால் பிரிந்து, இப்போது தனித்து கஷ்டப்படுவதாக, பின்னாளில் சீனு சொன்னான்.
சீனுவின் நச்சரிப்புக்கு பின் நரேஷ் இப்போது புதிய வாழ்கையை தொடங்கியிருந்தான். சில வருடங்களுக்கு பிறகு..
நரேஷ்க்கு இப்போது மிகுந்த வயதாகியிருந்தது. வேலை காலம் முடிந்திருந்தான். இப்பவும் தனியாகத்தான் இருந்தான். பிறகு எப்போதோ ஒரு நாளில் ஷாஜுவை எங்கோ வழியில் பார்த்துவிட்டு, அடையாளம் தெரியவில்லை. அந்த ஷாஜுவா இவள். அதிர்ந்தான். நலம் விசாரித்தான். எப்படி இருக்கே ஷாஜு.. ஷாஜு, அவனை கட்டி பிடித்து ஓவென கண்ணீர் விட்டு அழுது தீர்த்தாள். அப்பா எப்படி இருக்காங்க, ஷாஜு. யாரும் இல்லை நரேஷ். காலம் கடந்திருந்தாலும், ஷாஜுவை இப்போது அவன்தான், பார்த்து கொள்கிறான், கார்டியனாக.. , மனைவி அனுமதியுடன்..

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!