எழுத்தாளர்: நித்யா
“ஆரம்பத்திலேயே, நம்ம முதல் சந்திப்பிலேயே தெளிவாச் சொல்லிடறேன் பரத். எனக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா இல்லை.!”
சூடான கட்லெட்டை முள் கரண்டியால் பாகப் பிரிவினை செய்தவாறே தயங்கின குரலில் சொல்லிவிட்டு அவனது முகபாவனையை அடிக் கண்ணால் நோட்டமிட்டாள் நிகிதா.
காளான் சில்லி சாப்பிட்டுக் கொண்டிருந்த பரத்.. மெல்லுவதை நிறுத்திவிட்டு அவளை வியப்பும், அதிர்ச்சியும் கலந்து பார்த்தான்.
இதற்கு, தான் என்ன பதில் சொல்லுவது என்பது தெரியாமல் அப்படியே உட்கார்ந்திருந்தான். நிகிதா, தான் இயல்பாக இருப்பதை அவனுக்கு உணர்த்த வேண்டும் என்பது போல ரோஸ்மில்க் எடுத்து ஒரு வாய் அருந்தினாள்.
“எப்போ இருந்து இந்த மாதிரி..” பேச வேண்டுமே என்பதற்காக பரத். குரல் எங்கோ அடி ஆழத்தில் இருந்தது.
“சரியா சொல்லத் தெரியலை.”. பறந்த முடிக்கற்றையை காதோரம் சிறைப் படுத்தி விட்டுத் தொடர்ந்தாள். ”எட்டாவதோ, ஒன்பதாவதோ ஸ்கூல்ல படிக்கும் போது நூலகத்துல இருந்த ஒரு புத்தகம் படிச்சேன். எனக்குள்ள பல கேள்விகளை எழுப்பின புக் அது. சில கேள்விகளுக்கு விடையும் கிடைச்சது.”
அது என்ன புத்தகம், யார் எழுதினது என்று கேட்க விரும்பவில்லை பரத்.
இருவரும் காதலர்கள். ஒரே இடத்தில் பணிபுரிவதால் உண்டான நெருக்கத்தில், சுமாரான புரிதலில் அல்லது புரிந்து கொண்டதாக நம்பப்பட்டதில் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் காதலை பரஸ்பரம் வெளிப்படுத்தி சந்தோசித்தவர்கள். சரியாகச் சொன்னால் காதலர்களான பிறகு இதுதான் அவர்களது சரியான, தெளிவான முதல் சந்திப்பு.
அதுவே இத்தனை அதிர்ச்சி தரும் என்று அவன் நினைக்கவில்லை. அவளுக்கோ முதல் சந்திப்பிலேயே தன்னைப் பற்றிய முரண்களை அவனது மனதி ஏற்றிவிட்டால் வரும் காலங்களில் சந்தோசமாக காதலிப்பதை மட்டும் தொடர்ந்தால் போதுமே என்ற உணர்வே முன்னிலையாக இருந்தது. அதனால் அதிரடியாக கொட்டி விட்டாள்.
உண்மையில் அவளது இதுமாதிரியான தனித்துவ குணங்கள் தான் அவனை ஈர்த்திருந்தன. கும்பலில் சேர மாட்டாள். வித்தியாசமான உடைகளில் வலம் வருவாள். காதில், கழுத்தில் வினோத அணிகலன்கள். ஆனால் இந்த மாதிரியான மாறுபட்ட குணங்களே இப்படியான சிக்கல்களுக்கு அடிக்கல் நாட்டும் என்பது இப்போது தான் அவனுக்குப் புரிய வந்தது..
என்ன செய்யலாம் என்று அவசரமாக யோசித்தான். “உங்க வீட்டுல யாரும், எதுவும் சொல்லலையா..? அம்மா..”
“இல்லை, அந்த அளவுக்கெல்லாம் நான் தீவிரவாதி இல்லை. என் குணத்துக்கு மாறுபாடான கடவுளை திட்டறதோ, அந்த எண்ணத்தைப் பத்தி தேவையில்லாம மத்தவங்க கூட வாக்குவாதம் பண்றதோ கிடையாது. என்னோட உணர்வை ஒருத்தர் மதிக்கும் போது அவங்க நம்பிக்கையை கிண்டல் பண்றது அயோக்கியத்தனம்ன்னு புரியும் எனக்கு.! கோவிலுக்குப் போக மாட்டேன். வழிபடமாட்டேன். தட்ஸ் ஆல்..”
இந்தக் காலத்து அதி நவீனப் பெண்களுக்கு இதெல்லாம் ஒரு ஸ்டைல் போல. ஃபேசன் போல. பெருமூச்சு விட்டான். “ம்.. அப்புறம்..?”
“எனக்கு என்னவோ ஆரம்பத்திலிருந்தே கடவுள் மேலே ஒரு ஈர்ப்பு இல்லை. என்னை நம்பறேன். எனக்கான நல்லதும், கெட்டதும் என்னை மீறி நடந்திடாது ன்றதுல உறுதியா இருக்கேன். வாழ்க்கையில நடக்கிற எல்லா விசயங்களுக்கும் கடவுள் மேல பழிபோடறதோ, அவரைக் கொண்டாடறதோ கூடாதுன்றது என் எண்ணம். அலகு குத்தறதும், தீ மிதிக்கறதும், மொட்டை போடறதும், மண் சோறு சாப்பிடறதும் அதிகப்படியான சுய துன்புறுத்தல்கள்ன்னு தோணுது. கடவுள் தன் பக்தன் இம்சைப்படறதை விரும்புகிற சாடிஸ்ட்டா என்ன.?”
‘சரிதான்’ என்பதாகத் தலையாட்டினான். பாதி எலுமிச்சம்பழத்தின் சாற்றினை சில்லியின் மேல் பிழிந்தபடியே ஆரம்பித்தான்.
“நீ சொன்ன விசயங்கள்ல நானும் உடன்படறேன் நிகிதா. ஆனா என்னை மீறின ஒரு சக்தி இருக்கு. அது என்னை இயக்குதுன்னு உறுதியா நம்பறேன். அதுக்கு கடவுள்ன்னு ஒரு பெயர் இருந்தா சரின்னு ஏத்துக்கறேன். மனசுக்கு உறுத்தலா ஒரு விசயம் செய்கிற சூழ்நிலைல தள்ளப்படும் போது ‘கடவுள் நம்மை கவனிச்சுட்டுத் தான் இருக்காரு, இப்படி செய்யக் கூடாது’ன்னு மனசுல பதிய.. அந்தத் தவறை செய்யாம தவிர்த்திடறேன்..”
“கரெக்ட். ஆனா நீங்க கடவுள்ன்னு சொல்றதை நான் மனசாட்சின்னு சொல்லுவேன்..” என சிரித்தாள்.
தக்காளி சூப் வந்தது. அதற்குப் பின்னால் ஒரு மோசமான மெளனம் இருவருக்குள்ளும் நிகழ்ந்தது. அடுத்துப் பேசுபவர்கள் தோற்றுவிட்டதாக அர்த்தம் நேரிடுமோ என தப்பான உணர்வு நெருட நிகிதாவே ஆரம்பித்தாள்.
“என்ன பேச்சையே காணோம். ஒண்ணும் பிரச்சனையில்லையே…”
“தெரியலை, ஆனா கடவுள் நம்பிக்கையில்லாத ஒரு பெண்ணை என் வாழ்க்கையில முதல் முறையா இப்பத் தான் சந்திக்கிறேன்..”
நிகிதாவுக்கு எரிச்சல் உண்டானது. ‘அப்படி உங்க வாழ்க்கையில எத்தனை பெண்களைத் தான் சந்திச்சிருக்கீங்க’ என்று சூடாக கேட்க வேண்டும் போலத் தோண்றியது. புன்னகைத்து மழுப்பினாள்.
“எங்க வீட்டுல.. அம்மா கொஞ்சம் தீவிரமான சாய்பாபா பக்தை. வியாழக் கிழமைகள்ல மெளனவிரதம் இருப்பாங்க. வருசத்துக்கு ஒரு தடவை புனே போயாகனும். அப்பா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் அடிமை. மூணு மாசத்துக்கு ஒருதடவை அவருக்கு கிரிவலம் போயாகனும். இதுதான் எங்க வீட்டு நிலைமை.”
“ஓ..” என்றாள்.
“இன்னும் வேற ஏதாவது இந்தமாதிரி மாறுபட்ட குணாதிசியங்கள் உன்கிட்ட இருக்கா.?”
முதல் சந்திப்பே ஒருமாதிரி விரும்பத்தகாத வகையில், இணக்கமாக, சுமூகமாக செல்லாதது உறுத்தலாக, வருத்தமாக இருந்தது இருவருக்குமே.
‘முதல் சந்திப்புன்றது புது காதலர்களுக்கு முக்கியமான விசயம்டா. ரெண்டு பேருக்கும் ஒத்துப் போகிற சாதாரண, பொதுவான விசயங்களை மட்டும் பேசுங்க. முரண்பாடான விசயங்களை அலசுறதை நிப்பாட்டுங்க. ஏன்னா ஒவ்வொரு த்தரோட வளர்ப்பும், சூழல்களும், அவங்கவங்க சந்திக்கிற மனிதர்கள் தந்த பாதிப்பும் அழுத்தமா அவங்கவங்க மனசுல இருக்கும், தான் வாழ்கிற வாழ்க்கை தான் சரின்னு உறுதியா அதை நம்புவாங்க. சில கொள்கைகள்ல பிடிவாதம் இருக்கும். அது சீர்குலையறதை அவங்க விரும்ப மாட்டாங்க. புரிஞ்சு நடந்துக்கோ.
அபிப்ராயப் பேதம் வரும். பிடிச்சதும், பிடிக்காததும் மாறும். இன்னைக்கு போதையா இருக்கிற ஒரு விசயத்தை காலம், சில தினங்களிலேயே அலட்சியப் படுத்தறதா மாத்தும். பொறுமை தேவை எல்லாத்துக்கும். ஆனா எப்பவும் மாறாதது ஒண்ணு தான். அது அன்பு.’
உளவியல் நண்பன் உட்கார வைத்து பொறுமையாக வகுப்பு எடுத்தும் அவனது மனம் தடுமாறியது. ஜாதி, பொருளாதார, அந்தஸ்து, கெளரவங்கள் தாண்டியும் இதுமாதிரியான வேறுபட்ட குணங்களும் தனது காதல் திருமணத் திற்கு தடையாக வருமோ என யோசிக்கத் துவங்கியிருந்தான்.
இதை எதிர்கொள்ளுவது எப்படி என சிந்தனை ஓடியது. இவளை மாற்றுவது கடினம் எனத் தோண்றியது. ஆனாலும் இந்த ஒரு காரணத்திற்காக இவளது காதலை முறித்துக் கொள்ளுவது அபத்தம் எனவும் பட்டது. சரி, கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். இப்போதைக்கு இதுபற்றிப் பேச வேண்டாம்.
இந்த சந்திப்பு முடிந்து சீக்கிரம் வீட்டுக்கு ஓடினால் போதும் என்றிருந்தது. அதற்கடுத்து அதிகம் பேசிக் கொள்ளாமல், அல்லது வெகு சாதாரணமான விசயங்களைப் பற்றி மட்டுமே கவனமாகப் பேசிக் கொண்டார்கள். ஏனோ இருவர் மனதிலும் ஒரு பயம் இருந்தது.
பில் வர ’முதல் செலவு நான் பண்றேனே’ என்றாள் ஆசையாக. தோள் குலுக்கி, விட்டுத் தந்தான்.
“ஞாயிற்றுக் கிழமைகள்ல என்ன பண்ணுவீங்க.” பேசினபடி வெளியே வந்தார்கள்.
“க்ரிக்கெட், டீவி, நண்பர்களோட சந்திப்பு, மதியத் தூக்கம், சின்ன உலா.. இப்படிக் கரைஞ்சிடும்..”
‘நீ என்ன பண்ணுவே.’ எனத் திரும்ப கேட்கவில்லை அவன்.
“நான் கிளம்பவா. நேரமாச்சு.” ஹெல்மெட் மாட்டிக் கொண்டு வண்டியேறி கிளம்பிவிட்டான். சில நொடிகள் அவனது முதுகையே பார்த்தபடி நின்றிருந்தாள்.
இப்படித் தான் காதலிப்பார்களா. முதல் சந்திப்பிலேயே முரண்பாடான விசயம் பேசி மூட் அவுட் செய்து விட்டேனோ. சில சந்திப்புகள் கடந்து, இன்னும் கொஞ்சம் மனசு நெருங்கி, சமய, சந்தர்ப்பம் பார்த்து, அவனது மூட் புரிந்து, மெல்ல விசயம் ஆரம்பித்து.. ப்ச். சொல்லியாகிவிட்டது. பேசி முடித்ததை ரப்பர் கொண்டு அழிக்க முடியுமா.?
ஏதோ யோசனைகளுடன் ஸ்கூட்டி நோக்கி வந்தாள். ஹேண்ட் பேக் திறந்து சாவி தேடினாள். திக்கென்றது.
சாவி இல்லை. மீண்டும் கைகளை எல்லா இடங்களிலும் நுழைத்து தேடினாள். இப்போதும் அகப்படவில்லை. டேபிள் மேல் வைத்து விட்டோமா.?
வேகமாக உள்ளே நுழைந்தாள். ஒரு கும்பல் வெளியேறியதை கவலையுடன் பார்த்தாள். இவளது டேபிளுக்கு சர்வ் செய்தவர் ”என்னம்மா..” என்றார்.
வண்டி சாவி டேபிள் மேல் இல்லை. குனிந்து கீழே பார்த்தாள். செல்போன் டார்ச் அடித்தாள். குழப்பமாக இருந்தது. எங்கே தொலைந்தது..? அவரும் சேர்ந்து துழாவினார். ’கை கழுவ வாஸ்பேசின் போனீங்களா. பாத்ரூம் போனீங்களா.’ என்றார் கேள்விகளாக.
சுற்றியிருந்தோர் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இதை வேடிக்கை பார்க்கத் துவங்க.. இவளுக்கு அவமானமாக இருந்தது. தன் கவனமின்மை குறித்து எரிச்சல் உண்டானது. பதட்டத்தில் ஹேண்ட்பேகை அப்படியே டேபிள் மேல் கொட்டினாள். அப்புறம்தான் தனது அவசர புத்தி உறைத்தது.
ஒரு பெண்ணின் ஹேண்ட் பேகில் என்னவெல்லாம் இருக்கும் என்று ஆர்வத்தில் சிலர் எட்டிப் பார்க்க வெட்கத்துடன் வாரியிறத்ததை அப்படியே பழையபடி பேகில் திரும்பக் கொட்டினாள். சாவி கிடைக்கவே இல்லை.
வீட்டில் கூடுதல் சாவி இருந்தது. அப்பாவிற்கு போன் செய்து சொன்னால் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்துவிடுவார். ஆனால் அவர் ஊரில் இல்லை. நேற்றே மதுரை கிளம்பிவிட்டார். ஜோனல் மீட்டிங்கில் பேச.
அம்மாவிடம் சொன்னால் திட்டு தான் கிடைக்கும். டென்சன் பார்ட்டி.
பரத்தை திரும்ப அழைத்தால் என்ன.? இக்கட்டை சொன்னால் உதவுவானே. ரொம்ப தூரம் போயிருக்க மாட்டான்.
ம்ஹூம் வேண்டாம். ஒரு மூன்றாந்தர திரைப்படத்தின் மோசமான காட்சி போல இருக்கும் அது.
சரி, நேராக ஆட்டோ பிடித்து வீட்டுக்குப் போய் விடலாம். ஆட்டோவை வெயிட்டிங் போட்டுவிட்டு சாவி எடுத்துக் கொண்டு இங்கே திரும்ப வந்து வண்டி எடுத்துக் கொண்டு..
“அடுத்த தெருவுல தான் டூப்ளிகேட் சாவி ரெடி பண்றவங்க இருக்காங்க. நம்ம கடை கஸ்டமர் தான். கமால்ன்னுட்டு. வரச் சொல்லட்டுமா” என்றார் கடைக்காரர்.
“என்னோடதும் அதே வண்டி தான். இந்தாங்க, இந்த சாவியைப் போட்டுப் பாருங்க.”
எல்லோரும் அவள் அடுத்து என்ன செய்யப் போகிறாள் என்பது போல ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சாவி கிடைக்காவிட்டாலும் கூட அந்த இடத்திலிருந்து சீக்கிரம் கிளம்பினால் போதும் என்றிருந்தது அவளுக்கு. தான் வேடிக்கைப் பொருளாக இருப்பது பெருத்த அவமானம் தந்தது.
வெளியேறி வண்டி அருகில் வந்து அதன் சீட்டின் மேல் குத்தினாள் கோபத்துடன். குலுங்கியது வண்டி. க்ளிங் என்றொரு சப்தம்.
சாவி சத்தம்!
உட்காரும் இடத்தின் பாதாள அறையைத் திறந்தவள் சாவியை எடுக்க மறந்து.. பக்கவாட்டில் நீட்டிக் கொண்டிருந்தது அது. தலையில் அடித்துக் கொண்டாள். முட்டாள் பெண். ‘சாவியை வெளியே எடுக்கவே இல்லையா நான். இதையா இவ்வளவு நேரமாகத் தேடிக் கொண்டு..’ துருத்திக் கொண்டிருந்த சாவியை வெளியே உருவி எடுத்தாள்.
தன் அலட்சியம் குறித்து அவமானமாக இருந்தாலும் சிக்கலிலிருந்து தப்பித்த சந்தோசம் அதை முறியடித்தது. சாதாரண மகிழ்ச்சிக்கும், தொலைந்து போன ஒன்று திரும்பக் கிடைக்கும் போது உண்டாகும் மகிழ்ச்சிக்கும் இடைப்பட்ட உணர்வு வித்தியாசமாக இருந்தது.
சாலையை வெறித்தாள்.
அடேயப்பா எத்தனை மனிதர்கள்! வண்டி, வாகனங்கள்! நொடிக்கு அம்பது நூறு பேர் சாதாரணமாக கடக்கும் பிசி ரோடு. ஒருவர் கூடவா என் வண்டியை, அதில் தொங்கும் இந்த சாவியை கவனிக்கவில்லை.?
என்ன மாதிரியான ஒரு நிகழ்தகவின் புள்ளிவிவரம் இது. பக்கத்தில் ஒரு கும்பல் கடும் அரட்டையில் இருந்தது. அவர்கள் கூடவா.?
‘நமக்கு மேல ஏதோ ஒண்ணு இருக்கு. அது சில அதிசயங்கள் பண்ணும். நம்பமுடியாதை செய்து காட்டும்! அதை கடவுள்ன்னு நம்பறேன் நான்..’
பரத் சில நிமிடங்களுக்கு முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது.
கடவுள் இருப்பதை ஏற்க மறுப்பதன் மூலம் நான் என்ன இழக்கிறேன், எனக்கு என்ன நட்டமாகப் போகிறது என யோசிக்க ஆரம்பிக்கிறாள் நிகிதா.
‘கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்..’
பொருத்தமான நொடியில் மிதந்து வருகிறது, கடைக்குள்ளிருந்து பண்பலை பாடல்.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.