எழுத்தாளர்: சினேகிதா
மரியம்மா சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை மீண்டும் ஒருமுறை பார்த்தாள். சிறிய முள் எட்டை நெருங்கி இருந்தது. பெரிய முள் பதினொன்றை தாண்டி இருந்தது.மூத்தவள் பியூலா வயது 10 இளையவள் ஷீலா வயது 7 இருவரும் கண்களை தழுவிய உறக்கத்தை வயிற்றைப் புரட்டிப்போடும் பசியின் கொடுமையோடு போராடி உறங்காதே தவித்து தவிர்த்து கொண்டிருந்தனர்.
ஏதோ காலையில் வயிற்றை காலியாய் விடாமல் கஞ்சியும் தண்ணியுமாக கொஞ்சமாய் குடித்தது மதிய உணவும் உண்ணவில்லை இரவு 8 மணி வரை பசியுடன் போராடியதே பெரிய விசயம் இப்படி இருக்க தாய் மரியம்மாவோ அப்பா இப்ப வந்துருவாங்கடா அரிசி வாங்கிட்டு வந்ததும் சமைச்சு சாப்பிடலாம்
கொஞ்சம் பொறுத்துக்கோங்க இதே பதிலையே மாலை ஆறு மணி முதல் சொல்லிக் கொண்டிருக்கிறாள் ஏதோ செய்யவியலா சமாதானத்தை சமாதானமாய் சொல்லிக்கொண்டிருந்தாள்
அவளுக்கும் பசி வயிற்றுக்குள் பெருங்குடலும் சிறுகுடலும் பெரும் போராட்டமே நடத்திக் கொண்டிருந்தது.
அவர்களுக்கு இது ஒன்றும் புதிதில்லை என்றாலும் பழகிக் கொள்ள இயலவில்லை பசியின் கொடுமை மரியம்மாவின் கணவன் ரத்தினம் கொத்த வேலை செய்பவர் நல்ல வேலைக்காரர் நல்ல சம்பளமும் கிடைக்கும் நல்ல குடிகாரனும் கூட குடித்துவிட்டு மீதமுள்ள பணத்தில் அரை கிலோ அரிசி வாங்கிக் கொண்டு இரவு ஒன்பது மணி சுமாருக்கு வருவார் வந்தபின் சமைத்து பத்து மணி பதினோரு மணிக்கு சாப்பிட்டு விட்டு தூங்குவர் வாரத்தில் பாதி நாள் இப்படித்தான் கழிந்தது.
ரத்தினம் ஒன்றும் ஆரம்பத்தில் இருந்தே குடித்துக் கொண்டிருப்பவன் அல்ல எப்படித்தான் இந்த பாழாய் போன குடியை பழகினானோ தெரியவில்லை கடந்த இரண்டு வருடங்களாக தான் குடித்துக் குட்டிச்சுவராகி குடும்பத்தோடு போராட்டமும்
குடிக்காத நேரத்தில் அவன் போல் அருமையான மனிதனை பார்க்க இயலாது. குடித்து விட்டாலோ அவனைவிட கேடுகெட்டவனை பார்க்க இயலாது.
குடும்பமே மறந்து போகும் குழந்தைகள் கூட நினைவில் இருப்பதில்லை பலவேளைகளில் வீட்டில் நடக்கும் சண்டைக்கு தெருவே கூடிவிடும். கடிகாரத்தில் மணி 8 35 காட்டியது இளையவள் ஷீலா பசி மயக்கத்தில் உறங்கிப் போனாள். மூத்தவள் கண்களில் உறக்கக் கலக்கமாய் விழிமூடாதே இமையுடன் வீம்புசெய்த தருணம் தள்ளாடியபடி தந்தை வாசலில் வந்ததை கவனித்தாள்.
உறக்கம் தழுவிய கண்களில் பயம் தொற்றிக் கொண்டது பயத்துடன் அம்மா அப்பா என்று கூறியவள் ஒரு ஓரமாய் போய் அமர்ந்து கொண்டாள். தந்தையோ தான் கொண்டு வந்த அரிசி பொட்டலத்தை மனைவியிடம் கொடுத்துவிட்டு சிறிய பொட்டலத்தில் இருந்த பட்டாணி கடலையை பெரிய மகளின் கைகளில் கொடுத்து அருகில் அமர்ந்து கொண்டார்.
சற்றுக்குறைவாக குடித்துவிட்டு வரும் நாட்களில் பெரிதாக சண்டை ஏதும் போடுவதில்லை என்றாலும் பியூலாவுக்கு அப்பா குடித்துக் கொண்டு வந்தாலே மனதுக்குள் பயம் வந்து குடிகொண்டுவிடும். இன்றும் அப்படித்தான் பயந்து கொண்டே அருகில் அமர்ந்த அப்பாவோடு பசியினை தணிக்க கடலையை எடுத்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள். தாய் உலையிலிருந்த வெந்நீரில் அரிசியைக்களைந்து போட்டு கையால் பானைக்குமேலே சிலுவை வரைந்தபடி ஏதோ முனுமுனுத்தாள்.
பின் இரண்டு காய்ந்த மிளகாயும் சிறுவெங்காயம் நாலும் அடுப்புத்தணலில் சுட்டெடுத்து தேங்காய் சிரட்டையில் போட்டு தேவைக்கு உப்பும் புளியும் சேர்த்து கையால் பிசைந்து வைத்தாள் அதற்குள் அரிசியும் முக்கால் வாசி வெந்திருந்தது பட்டாணியும் பாதிக்குமேல் தீர்ந்திருந்தது. ரெத்தினம் மனைவியிடம் சின்னபுள்ள பசியாதான படுத்திருப்பா அவளையும் எழுப்பி விடு கஞ்சி வேகற வரைக்கும் கடலை சாப்பிடட்டும் என்றான்.
இளையமகள் ஷீலாவை தாய் மரியம்மாள் தூக்கி தோளில் போட்டு தட்டிக்கொடுதது எழுப்பினாலே எழுப்ப இயலும் இல்லை என்றால் அழுது ஊரை கூட்டி விடுவாள் எழுப்பிக் கொண்டு கடலையின்முன் அமரவைத்தாள் மரியம்மாள்
ஷீலாவுக்கு பசிக்கிற பசி பக்கத்துல இருக்குறவங்களையே சாப்பிட்டிடுவாள் போலிருந்தது அப்படி இருக்கும்போது கடலையை விட்டா வைப்பாள் மென்றும் மெல்லாமலும் விழுங்கினாள் பட்டாணியையும் பசியையும் பட்டாணி தீர்ந்தது.
பசி தொடர்ந்தது தன் வேலையை ஒருவாறு கஞ்சியும் தயாரானது சுடச்சுட கஞ்சியும் பிசைந்து வைத்த இடையன் கூட்டும் வயிற்றை நிரப்பியது வழக்கம் போலவே இன்றைய பொழுதும் நிறைவடைந்தது. மறுநாள் காலை தண்ணியும் பருக்கையுமாய் பிள்ளைகளுக்கு ஊற்றிக்கொடுத்தவள், வெறும் வயிற்றோடே பள்ளிக்கு அழைத்துச் சென்றாள். போகும் வழியில் மனவோட்டம் பலவாறு ஓடியது. இன்றைக்கு இந்த மனுசங்கிட்ட எப்படியாவது பேசி ரேசன் கார்டை திருப்பித் தர சொல்லனும் அது இருந்தவரை வேளாவேளைக்கு கஞ்சியாவது குடிக்கமுடிந்தது சண்டாளன் அதையுமா அடமானம் வச்சி குடிச்சித்தொலைப்பான் என வாய்விட்டுத்திட்டிவிட்டாள்.
பள்ளிவாசலில் பிள்ளைகளை கொண்டுவிட்டவளை இளையவள் திரும்பி பார்த்துக்கேட்டாள் அம்மா இன்னைக்காவது நாங்க வரும்போது சாப்பாடு இருக்குமா இவள் எப்போதும் இப்படிதான் துடுக்காய் எதையாவது கேட்டுவிடுவாள். சிறுபிள்ளைதானே மரியம்மாள் மனம் பொறுக்காமல் ஏதோ கோபத்தில் உங்கப்பன் பாட்டில் பாட்டிலா குடிக்கிறான்ல அவன்கிட்ட கேளு என உரக்க உரைத்துவிட் டு விறுவிறுவென்று நடந்துவிட்டாள்.
பகல் முழுவதும் தாய் தங்கைபிடம் கூறிய வார்த்தையே பியூலா காதில் ஒலித்துக் கொண்டிருந்தது
அவளால் பசிதாங்கவியலாது இத்தனை நாள் அனுபவித்த கொடுமைக்கு இன்று ஒரு தீர்வு காண வேண்டுமென தீர்க்கமாய் முடிவு செய்தாள்.எப்படியும் தந்தையிடம் கேட்டிடனுமென
ரத்தினத்துக்கு பியூலாவை மிகவும் பிடிக்கும் ஆனால் பியூலா தந்தை குடித்துக் கொண்டிருக்கும் போது பேச பயப்படுவாள்.
பிறநேரங்களில் நன்றாக பேசுவாள் அவள் அறிந்தவரை குடிக்காமல் பார்த்த நேரம் தான் குறைவு இன்று உறுதியாகமுடிவு செய்து கொண்டாள் குடித்திருந்தாலும் பரவாயில்லை தைரியமாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேச வேண்டுமென்று அதே எண்ணத்தோடு வீடு வந்து சேர்ந்தாள். வீட்டு வாசலில் பாயைவிரித்து காலை கையை நீட்டி படுத்திருந்தார் தந்தை ரத்தினம் வாரத்தில் இரண்டு நாள் மூன்று நாள் வேலைக்கு சென்று விட்டு மீதமுள்ள நாட்கள் குடித்த போதை தெளியாமல் இப்படித்தான் மீதம் உள்ள மதுவை குடித்துவிட்டு படுத்திருப்பார். பயந்தபடி உள்ளே நுழைந்தவளிடம் பயப்படாத சும்மாதான் படுத்திருக்காங்க என்றாள் மரியம்மாள்.
தாயைப் பார்த்து என்னாச்சு என புருவம் உயர்த்தினாள் ஷீலா தலைவலி என்று வேலைக்கு போயிட்டு திரும்பி வந்துட்டாங்க என்றாள் மரியம்மாள். உடனே பதறியபடி இளைய மகள் அம்மா அப்பனா இன்னைக்கு சோறு கிடைக்காதா என்றாள்
தாய்மரியம்மாள் பதில் சொல்ல தெரியாமல் விழித்தாள்
யாரும் எதிர்பாராத நேரத்தில் மூத்தவள் தந்தை அருகில் போய் அமர்ந்து உலுக்கி எழுப்பினாள்.
அப்பா அரிசி வாங்க காசு கொடுங்க சோறு வைக்கணும் காசெலாம் இல்ல தொந்தரவு பண்ணாம தள்ளிப்போ என கண் விழிக்காமலே உறக்கக் கலக்கத்தில் உளறினார். சற்று வேகமாக உலுக்கி உரத்த குரலில் கூறினாள் காசு கொடுக்க முடியுமா முடியாதா
அருகில் நின்ற தாயும் இளையவளும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தனர். அவள் போட்ட சத்தத்தில் பதறி எழுந்து அமர்ந்தார் ரத்தினம் அப்பா காசு கொடுக்க முடியுமா முடியாதா எங்களுக்கு பசிக்குது சோறு பொங்கணும் அம்மாவ அரிசி வாங்கிட்டு வர சொல்லுங்க ரத்தினம் அன்பொழுகிய குரலில் என்கிட்ட காசு இல்லடா செல்லம் என்ன பண்றது என்று கொஞ்சினார்.
உடனே தன் பிஞ்சு கரத்தால் தந்தையை பிடித்திருந்த கையை உதிரி தள்ளிவிட்டு வேகமாக எழுந்திருந்து கையில் இருந்த ஸ்கூல் பேக் ஐ ஒருபுறம் தூக்கிபோட்டுவிட்டு உள்ளறை நோக்கி இன்னும் வேகமாக நடந்து சென்றாள். போன வேகத்திலேயே திரும்பி வந்தாள் கையில் மது பாட்டிலுடன் அனைவரும் பதறியபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர் செய்வதறியாமல் ரத்தினம் திருதிருவென விழித்துக் கொண்டிருந்தார் தான் வைத்திருப்பது தன் மனைவி மரியம்மாளுக்கு கூட தெரியாது இவளுக்கு எப்படி தெரியும் அப்பா இத குடிக்கிறதுனாலதான உங்களுக்கு பசிக்க மாட்டேங்குது நாங்களும் இது குடிக்கிறோம் அப்ப எங்களுக்கும் பசிக்காதில்ல தினமும் பசியோட கொடுமையை எங்களால் தாங்கிக்கவே முடியல என்று கூறியவள்
அனைவரும் சுதாரிக்கும் முன் பாட்டிலை திறந்து வாயில் ஊற்றத்தொடங்கினாள்.
ரத்தினம் பதறியபடி எழுந்து ஓடிப்போய் கையில் இருந்து பாட்டிலை தட்டிப்பறித்து வெளியில் தூக்கி வீசினார். சலங்சலங்கென பாட்டில் விழுந்து நொறுங்கி சிதறியது ரத்தினத்தில் உள்ளம் நொறுங்கியது போலவே மகளை வாரி அணைத்து தழுவிக் கொண்டவன் உன் சத்தியமா கண்ணு இனிமே இந்த கருமத்தை தொடவே மாட்டேன்.
நான் இப்பவே போய் உங்களுக்கு கன்டிராக்(கான்டிராக்டர்) கிட்ட காசு வாங்கிட்டு போய் அரிசி பருப்பு வாங்கிட்டு வரேன் இனிமே உங்களுக்கு பசி வராத மாதிரி பார்த்துக்கிறேன் இது சத்தியம் என மூவரின் தலையிலும் தன் உள்ளங்கையை பதித்தார் உளமார மரியம்மாளுக்கு உள்ளுக்குள் மிகுந்த ஆனந்தம் எத்தனை நாள் எத்தனை துன்பம்
இதுநாள் வரையிலும் தான் சரி செய்ய முடியாத ஒன்றை தன் மகள் இவ்வளவு எளிதாக சரி செய்து விட்டாளென
ரத்தினம் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டு இடுப்பில் கட்டியிருந்த லுங்கியை இறுக்கி கட்டிக் கொண்டு விறுவிறுவென வெளியே நடந்தார். திரும்பி வரும்போது ஒரு பை நிறைய காய்கறி பருப்பு அரிசி என உணவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்டு வந்தார்.
வெகு நாட்களாக பசியும் பட்டினியுமாக இருந்த குடும்பத்தில் இன்று இரவு காய்கறி கூட்டும் பருப்பு குழம்பு என விருந்தென உணவு வயிறார உண்டபின் அனைவரும் அமர்ந்து பேசி மகிழ்ந்து கொண்டிருந்தனர். அப்போது இளையவள் ஷீலா அப்பாவிடம் அப்பா அப்பா கறி சோறு சாப்பிட ஆசையா இருக்கு கறி எடுத்து கொடுப்பீங்களா ஒரு நாள் என்றாள் மழலை மொழியில்
சரி செல்லக்குட்டிமா அடுத்த வாரம் அப்பா வேலைக்கு போயி காசு வாங்கிட்டு வரும்போது உங்களுக்கு வாங்கி கொடுக்கிறேன் என்றார்
ஐயா ஜாலி ஜாலி என்றாள் இளையவள் மகிழ்ச்சியாய் அந்த மகிழ்வில் மூத்தவளும் கலந்து கொண்டாள்.
அதன் பின் வந்த நாட்கள் பசி அறியாத நாட்களாகவே கழிந்தன. அதன் பின் ரத்தினம் ஒரு போதும் மது குடிக்கவில்லை வீட்டிற்கும் நேரத்தோடு வந்தான். சிலநாட்களுக்கு பின் ஒரு மாலை வேளை கலைச்செல்வி கான்வன்ட் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் நடந்து வந்த மரியம்மாள் பள்ளி பெயர் பலகையை பார்த்ததும் வாசல் முன்வந்து நின்றாள். அவளுக்கு முன்னதாகவே இன்னும் சில பெற்றோர் காத்திருந்தனர் இதற்கு முன்பெல்லாம் இவ்விடத்தில் நிற்கும் போது கூனிக்குறுகி குற்ற உணர்வோடு நிற்பாள் பள்ளி கட்டணம் கட்டாமல் இரண்டு மூன்று மாதம் தவணை கேட்டு..
இப்போது அப்படி இல்லை தன் கணவன் ஒழுங்காக வேலை செய்து சம்பளத்தை கையில் கொடுப்பதால் பள்ளிக்கு எந்த பாக்கியும் இல்லாததால் கம்பீரமாகவே நின்றாள் பள்ளி கடைசி மணியடித்தது தங்கள் பிள்ளைகளின் வரவை எதிர்நோக்கி தயார் நிலையில் நின்றனர் அனைத்து பெற்றோரும்
பியூலாவும் வகுப்பறை விட்டு வெளியேவந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் ஷீலாவின் வகுப்பறை அருகில் சென்று அவளது பேகையும் வாங்கிக்கொண்டு தங்கையின் கையைப் பிடித்தபடி தாய் நிற்கும் இடம் நோக்கி நடந்து வந்தனர்.
மரியம்மாள் இருவரின் பையையும் வாங்கிக் கொண்டு சின்னவளை இடுப்பில் தூக்கிக் கொண்டாள். பியூலா வழக்கம் போலவே அம்மாவின் முந்தானையை பிடித்துக் கொண்டு நடந்தாள். சின்னவன் அம்மாவின் கழுத்தை கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவாறே அம்மா பாப்பாக்கு பசிக்கு என்ன சமைச்சிக்கீங்க என்றாள்.அப்பா மதியம் சிக்கன் வாங்கி வந்தாங்க பாப்பாக்கு பிடிக்கும் இல்ல ப்ரை பண்ணி வச்சிருக்கேன் என்ற தாயிடம் ஷீலா நாக்கை சுழற்றியவாறே ரொம்ப பிடிக்கும் சீக்கிரம் போலாமா வீட்டிற்கு என கீழ் இறங்கி வேகமாக நடக்க தொடங்கினாள். ஜாலி ஜாலி வீட்டில் போய் நிறைய சாப்பிடுவேன் என்றாள் பெரியவள் பியூலா பிள்ளைகள் சாப்பிட ஆர்வமாய் இருக்கவே மார்க்கெட் வழியா போலாமாடா? சீக்கிரமா போயிடலாம் என்றாள் தாய் மரியம்மா.
மார்க்கெட் பின் வாசல் வழியாக அம்மாவுக்கு முன் சகோதரிகள் இருவரும் கைகோர்த்தபடி வேகமாய் நடந்தனர். உள்ளே நுழைந்ததும் முதலில் கறிக்கடை அதை கடந்து வரும்போது ஷீலா பியூலாவைப் பார்த்து அக்கா அங்க பாரு என்றதும் திரும்பி பார்த்த பியூலாவிடம் என்ன பண்றாங்ககா என்றாள் சின்னவள். கோழியின் கழுத்தை அறுத்து தோல் உரித்துக் கொண்டிருந்தனர். அக்காவிடம் பதில் வரல மீண்டும் அவளே எதுக்கு கத்தியால வெட்டுறாங்க வலிக்கும்ல என்றாள்.
தங்கையிடம் என்ன பதில் சொல்ல என புரியவில்லை தமக்கைக்கு அடுத்து மீன் கடை காய்கறி கடை என இன்னும் பலகடைகள் கடந்து சென்றனர் அமைதியாகவே பிள்ளைகள் உடைமாற்றி வரும் முன் அம்மா டைனிங் டேபிளில் சுடச்சுட உணவு எடுத்து வைத்தாள் இருவரும் வந்தனர் சிக்கன் ப்ரை பார்த்ததுமே சகோதரிகள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்.
மார்க்கெட் சம்பவம் நினைவில் வந்தது அப்படியே ஒதுக்கி விட்டு மற்ற உணவுகளை சாப்பிட்டு கை கழுவினர் மரியம்மா எதுவும் புரியாமலே இருவரையும் ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டு நின்றாள்
மாற்றம் மட்டுமே மாறாததறிவோம் இக்குடும்பத்தில் தொடர் மாற்றங்கள் மகிழ்வின் ஆரம்பமே நாமும் பிற உயிரையும் மதித்து நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்வாய் வைத்திருக்க முயல்வோம்.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.