எழுத்தாளர்: கௌசல்யா வெங்கடேசன்
மூன்று மாத காலமாக தன்னை கணவன் விழுந்து விழுந்து கவனித்ததன் காரணம் புரிந்ததுமே குழலி மனம் உடைந்து போகிறாள்.
” காசுக்காக இந்த பிழைப்பு பிழைப்பதற்கு பேசாமல் செத்துப் போகலாம் .. ” என்று எண்ணிக் கொள்கிறாள்.
“நான் கூட அவர் அத்தான் திடீரென இறந்து விட்ட காரணத்திற்காகத்தான் இவர் திருந்தி விட்டார் என்று எண்ணினேன். கடைசியில் அந்த காரணத்திற்காகத்தான் இவர் என்னை பலி கொடுக்கப் போகும் ஆட்டிற்கு மஞ்சள் தண்ணீர் ஊற்றி மாலை போடுவதைப் போல கவனித்து இருக்கிறார். நான் இதற்கு ஒத்துக் கொள்ளா விட்டால் என்ன செய்வார். “
உடனே அவள் மனம் பேசுகிறது. “வேணாம்டி குழலி அவன் உன்னை அடிச்சே கொன்னுடுவான் .. “
“ஆமா இதுவரை வாங்காத அடியா. இதற்கு மேல்தான் புதிதாக அடி வாங்க போகிறேனா. என்ன ஆனாலும் நான் இன்று மறுத்துதான் பேசப் போகிறேன்..” மனதிற்குள் முடிவு எடுக்கிறாள்.
வழக்கம் போல தீர்த்தம் அதிகமாகவும் முழு போதையில் வீட்டிற்குள் நுழைகிறான். உள்ளே நுழையும் போதே கோபமான குரலில் கத்துகிறான்.
அவனுக்கு தன் மனைவியைப் பற்றி முழுக்க முழுக்க தெரியும் .இப்படி செய்தால்தான் அவள் பயந்து தன் பேச்சைக் கேட்பாள் என .
“ஏய் குழலி, உன்னை நான் கிளம்பி தயாராக இருக்க சொன்னேனே. இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறாய்.. ” அவள் இன்று தைரியமாக தான் பேசுகிறாள்.
” நான் உங்களுக்கு சாப்பாடு செய்து கொண்டு இருக்கிறேன்..”
” உன்னை யாருடி அதையெல்லாம் கேட்டா .நான் வரும் போதே சாப்பிட்டு விட்டேன் .உனக்கு தாமதம் ஆகிவிடும் என்று .இங்கிருந்து போவதற்கு வேற அரை மணி நேரத்துக்கு மேலாகும். “
” ஏங்க இது உங்களுக்கே நியாயமா இருக்கா .அது எப்படிங்க தினமும் ராத்திரி என்னை கொண்டு போய் அங்க விட்டா ஊர்ல பாக்குறவங்க தப்பா பேச மாட்டாங்க .. “
” யாருடி பேசப் போறா. நீ என்னுடைய அக்கா வீட்டுக்குதான போகப் போகிற .. “
“உங்களுக்கும், எனக்கும் அங்கு தான் போக போகிறோம் என்று தெரியும். ஆனால் ஊர் மக்களுக்கு இந்த இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் நீங்கள் அழைத்துப் போவதை பார்த்தால் என்னை தான் தவறாக பேசுவார்கள் .. “இப்படி பேசினாலாவது மனம் மாறி அனுப்பாமல் இருப்பானே என மனம் ஏங்குகிறது.
அவன் சொன்ன பதிலைக் கேட்டதும் ” ச்சீ நீ எல்லாம் ஒரு மனிதனா ..”என எண்ணிக் கொள்கிறாள்.
“எனக்கு யார் எது சொன்னாலும் கவலை இல்லைடி.உன்னுடைய பெயர் கெட்டுப் போனால் எனக்கு என்ன .எனக்கு தேவை பணம் .நீ அங்க போய் அக்காவை கவனிக்கும் விதத்தில் கவனித்தால் தான் பணம் நிறைய கொட்டும்.நீ முதலில் இங்கே இருந்து கிளம்பி அங்கே போகும் வழியை பாரு. இன்னும் பத்து நிமிடம் தான். அதற்குள் நல்ல புடவையாக கட்டிக் கொண்டு பளிச்சென்று கிளம்பு..”
இறுதியில் அவன் தான் ஜெயிக்கிறான் அடி வாங்கி முகம் வீங்கிப் போய் அதற்கு பிறகு தான் புறப்படுகிறாள். போகும் வழி எல்லாம் கடவுளை வேண்டிக் கொள்கிறாள்.
” இவர் தான் இப்படி என்றால் அதற்கு மேல் என்னுடைய நாத்தனார் கோபக்காரர். கறார் பேர்வழி,அவர் உண்டு அவர் வேலை உண்டு என்று இருப்பார். எல்லாவற்றிலும் ஒழுங்கை எதிர்பார்ப்பார். அதுவும் இந்த மனிதனிடம் வாழ்க்கைப்பட்டு என்னுடைய தோற்றமும் வாழ்க்கை முறையும் மாறிப் போனதிலிருந்து அவர் என்னை மதிப்பதே கிடையாது.
இப்பொழுது கணவர் இறந்த பிறகு தனியாக இருக்கிறேன் என தம்பியிடம் கூறி இருக்கிறார் .அதற்கு துணையாக தான் என்னை அழைத்துச் செல்கிறார். இது மனிதாபிமான செயல்தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் முழுக்க முழுக்க அவருடைய சொத்தை எங்கள் பெயருக்கு மாற்றும் திட்டம் தான் இது.. “
” கொஞ்சம் விட்டால் என் நாத்தனாருக்கு விஷம் வைத்துக் கொன்று சொத்து பத்திரங்களை மாற்றிக் கொண்டாலும் மாற்றிக் கொள்வார் இந்த மனிதன். காசின் மீது அவ்வளவு பேராசை. ஒரு முறை முழு குடிபோதையில் இதை உளறி வைத்தார். குடியினால் சொன்னாரோ அல்லது மனதிற்குள் உள்ளதை சொன்னாரோ தெரியவில்லை..”
“வேறு என்ன செய்வது. எல்லாம் என் தலையெழுத்து. அவர் என்ன சொல்கிறாரோ அதைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டியது தான். எவ்வளவு அடிவாங்கினாலும் நான் எங்கே ஜெயிக்கிறேன். இந்த மனிதன் தானே ஜெயிக்கிறார் .. ” எண்ணி முடிப்பதற்குள் நாத்தனாரின் வீடும் வந்து விடுகிறது.
மாலினி அக்காவுக்கு தன் முரளி தம்பியை பழக்க வழக்கங்கள் ஒழுங்கில்லாதது, வேலை இல்லாதது எல்லாம் சேர்ந்து கொஞ்சம் கூட பிடிக்காமல் போனது. அவருக்கு சொத்துக்கள் ஏராளம். குழந்தைகளும் கிடையாது. கொரோனாவில் செத்துப் போகப் போகிறோம் என்று தெரிந்ததுமே பத்தே நாட்களில் எல்லா சொத்துக்களையும் மனைவியின் மீது எழுதி வைத்துதான் இறந்தார் மாலினியின் கணவர்.
அத்தான் போனதிலிருந்து அக்காவிடம் நெருங்கிப் பேசி சரி செய்து வைத்திருக்கிறான்.
“அக்கா நீ தனியா இருந்து ஏன் கஷ்டப்படுகிற .பேசாமல் என் வீட்டுக்கு வந்துவிடு. நான் உன்னை மகாராணி மாதிரி பார்த்துக் கொள்கிறேன்..”
” இல்லடா உன் வீடெல்லாம் எனக்கு வசதிப்படாது. என்னால அங்க ஒரு மணி நேரம் கூட இருக்க முடியாது . என் வீட்டை பார்த்தாயா, வீடு முழுக்க ஏசி .உங்கள் வீட்டில் அறையில் கூட ஏசி கிடையாது.. ” தன் ஸில்வர்ஸ்பூன் வாழக்கை முறையை காட்டுகிறாள் மாலினி.
” சரிக்கா இல்லா விட்டால் நானும் அவளும் இங்கே வந்து விடட்டுமா .. “
“எதற்கு உங்கள் இரண்டு பேருடைய தரித்திரமும் எனக்கு ஒட்டிக் கொள்வதற்கா. எனக்கு கணவன் இல்லையே தவிர, வசதி வாய்ப்புகள் நிறைய இருக்கிறது .அவர் இல்லாத வெறுமையை எண்ணி வருத்தப்பட்ட படியே நான் இந்த வாழ்க்கையை வாழ்ந்து பழகிக் கொள்வேன். எனக்கு யாருடைய தயவும் தேவை கிடையாது..” சொன்னவர் ஒரு வாரம் பல்லை கடித்துக் கொண்டு ஓட்டுகிறார் .
பகலெல்லாம் உதவி செய்வதற்கு வேலையாட்கள் .எல்லா வேலைகளையும் ஆட்களை வைத்துக் கொண்டு எஜமானி அம்மாவை போல உட்கார்ந்து நிர்வாகம் செய்கிறார். ஆனால் இரவு நேரத்தில் தனியே படுத்து தூங்குவதற்கு அத்தனை பயமாக இருக்கிறது .
ஒரு காலகட்டத்திற்கு மேல் தம்பியிடம் பேசுகிறார் . “முரளி நீ சொன்னதை நான் கொஞ்சம் யோசிச்சு பார்த்தேன். ஆனா நீ வந்தா சரிப்பட்டு வர மாட்டேன்னு நினைக்கிறேன். அதனால உன் மனைவியை மட்டும் இங்க துணைக்கு அனுப்பி விடுறியா .அதுவும் இரவு நேரத்துக்கு மட்டும் அனுப்பி விட்டால் போதும் .பகலெல்லாம் இங்கே ஆட்கள் இருக்கிறார்களா சமாளித்துக் கொள்வேன்..”
இந்த அளவிற்கு அக்கா இறங்கி வந்ததே பெரிய விஷயம் என மனைவியிடம் சந்தோசமாக சொன்னதுமே குழலி அதற்கு ஒத்துக் கொள்ள மறுக்கிறாள்.
“அது என்ன இரவு நேரத்திற்கு மட்டும் மாலினி அக்கா துணைக்கு கூப்பிடுகிறார்கள். நாள் முழுவதும் என்றாலும் நான் ஒத்துக் கொள்வேன். எனக்கு என்னவோ போல இருக்கிறது. வேண்டுமானால் வீட்டோடு இருக்கும் படியாக வயதான பாட்டியையோ யாராவது ஆளையோ வைத்து பார்த்துக் கொள்ள வேண்டியதுதானே.. ” சொல்லி முடிப்பதற்குள் அவளுக்கு தலையை சுற்றி குருவிகள் பறக்கின்றன.
பளீரென்று ஒரு அறையை விடுகிறான். “எங்க அக்காவுக்கு எதுவும் தெரியாது பாரு. நீ அறிவுரை கூறியபடி நடப்பதற்கு. அறிவு கெட்டவளே உனக்குதான்டி ஒண்ணுமே தெரியாது. நான் இத வச்சு தான் பெரிய பணக்காரன் ஆகணும்னு முடிவு செய்து இருக்கேன். நீ தினமும் போய் அக்காவுக்கு பணிவிடை செய்வதிலேயே அக்காவுக்கு உன் மீது ஆசை வந்து நமக்கும் பாதி சொத்து கொடுக்கணும். அப்படி கவனிச்சிக்கணும் என்ன சரியா. அப்புறம் கொஞ்ச நாள்ல உன்னை பகல்லயும் அங்கேயே இருக்க சொல்லிடுவாங்க பாரேன். வீட்டு வேலையையும் பார்த்துகிட்டு அக்காவையும் நல்லா கவனி. ” அவள் இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை .
முரளி எப்படியும் இவளை பொறுமையாய் சரி செய்து விடலாம் என மூன்று மாதங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு அவளுக்கு தேனும் பாலும் வாங்கி ஊட்டி விட்டு வளர்க்கிறான் .அவளுடைய தோற்றப் பொலிவு மாறுவதற்காக.
இப்பொழுது குழலி பார்ப்பதற்கு அழகாகத்தான் இருக்கிறாள் .
கொண்டு போய் விட்டதுமே மாலினிக்கு ஒரே ஆச்சரியம் .அட குழலியா இது. எலும்பும் தோலுமாய் பார்ப்பதற்கு அசிங்கமாக இருப்பாள் .அதற்காகத்தான் என் வீட்டிற்கு அவளை கூப்பிடவே மாட்டேன். இப்பொழுது பணக்காரப் பெண்ணை போல மாறிவிட்டாளே. அப்படி என்னடா செய்தாய் உன் மனைவியை பரிவுடன பார்த்துக் கொள்கிறாயோ.. ” என்றதும் பெருமையுடன் ஆமாம் என்றும் தலையசைக்கிறான்.
” சரி சரி காலையில் வந்து அழைத்து போ.”
“அக்கா இனி நீ நிம்மதியாக தூங்கலாம்.. இவள் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வாள். ” என்று விட்டு புறப்படுகிறான்.
வீட்டிற்கு வந்ததிலிருந்து குழலிக்கு அந்த வீட்டின் பேச்சுதான். “அது என்னங்க அந்த வீடு ஜில்லுனு இருக்கு. எங்க பாத்தாலும் அப்படியே இருக்கு . எனக்கு ரொம்ப ஜாலியா இருந்தது. நம்ம வீட்டுக்கும் இதே போலவே செய்து வைக்கணும்ங்க..”
முரளிக்கு கொஞ்சம் பொறாமையாகத்தான் இருக்கிறது. அவள் சொல்வதைக் கேட்டு .”இந்த அக்காவுக்கு தான் அறிவே இல்லை. ஏன் என்னையும் அங்கே தங்க விட்டால் என்ன. நான் என்ன அவள் தலையில் கல்லையா போட்டுக் கொல்லப் போகிறேன்..”
” சரி சரி நீ சும்மா வேலைக்காரியாக தான் போயிருக்கிறாய். எஜமானியாக இல்லை .ரொம்ப பெருமை அடித்துக் கொள்ளாதே . வீட்டில் வேலைகளை கவனி..” அதற்குப் பிறகு வாயை திறக்காமல் வேலைகளை கவனிக்கிறாள்.
எப்படியும் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது அந்த வீட்டின் பெருமைகளை பேசி கணவனிடம் திட்டும் வாங்கிக் கொள்கிறாள் .
முதல் நாள் போனபோது மாலினி குழலியை கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. “காசிற்காக தானே துணைக்கு வந்து படுத்திருக்கிறாள். ” என்ற இறுமாப்பு அவளுக்கு.
மறுநாள் காலையில் எழுந்து இங்கு வருவதற்குள் அவள் படுத்து இருந்த அறையை கோவிலை போல தூய்மையாக மாற்றி விட்டு தான் வருகிறாள் .தூங்கி எழுந்த மாலினிக்கு தன்னுடைய அறையாய் இது என ஆச்சரியமாய் இருக்கிறது. தான் படுத்து இருந்த பெட்டை தவிர மற்ற எல்லா இடங்களும் துடைத்து வைத்த வெள்ளி விளக்கை போல மின்னுகிறது.
” பரவாயில்லையே இந்த பெண்.எனக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. எப்படித்தான் இத்தனை அமைதியாக வேலை செய்தாளோ..”என மனதிற்குள் பாராட்டிக் கொள்கிறாள்.
அன்று இரவு குழலி வந்ததுமே , “ஏன்டி நான் உன்னை என்ன சொன்னேன். நீ துணைக்கு தானே வர சொன்னேன் .நீ ஏன் இவ்வளவு வேலைகளை இழுத்து போட்டு செய்து வைத்திருக்கிறாய். என்னை இப்படி எல்லாம் செய்து மயக்க முடியாது தெரியுமா..” சிரித்தபடியே தான் கேட்கிறாள்.
அதற்கு குழலி, ” அக்கா நம்ம குடியிருக்கும் வீட்டை நம்ம தானே சுத்தம் செய்யணும் .எனக்கு நீங்கள் தூசியில் படுத்து கிடப்பதை பார்த்ததும் பாவமாக இருந்தது. நேத்து வந்ததுமே சுத்தம் செய்யத் தொடங்கினால் இரண்டு பேருமே தூங்க முடியாது எனதான் நீங்கள் தூங்கிய பிறகு அதிலிருந்து சுத்தம் செய்ய ஆரம்பித்தேன் .உங்களுக்கு சத்தமே காட்டாமல்.. “
” அடிப்பாவி அப்படி என்றால் நீ தூங்கவே இல்லையா..”
” இல்லக்கா இங்கிருந்து அங்கே போனதும் உங்க தம்பி வேற அவ்வளவு வேலைகள் வைத்து விட்டார்.இன்றைக்கு மீன் குழம்பு வேற வைக்க சொன்னாரா. உங்களுக்காக மீன் குழம்பையும் கொஞ்சம் பிசறி வைத்த மீனையும் கொண்டு வந்து ஃப்ரிட்ஜில் வைத்திருக்கிறேன் .நாளைக்கு சூடாக பொறித்து சாப்பிட்டுக் கொள்கிறீர்களா. அல்லது நான் பொறித்து வைத்துவிட்டு போகட்டுமா..”
” இவள் என்ன நான் எதுவுமே கேட்காமலே இப்படி செய்கிறாளே. உண்மையிலேயே குழலி ரொம்ப நல்ல பெண்தான் போல.. ” என மாலினிக்கு மனம் இளகுகிறது .இதுவரை இரும்பு இதயமாய் இருந்த என்னையே இவள் இளக வைத்து விடுவாள் போலயே.”
” அக்கா உங்களுக்கு தூக்கம் வந்தா தூங்குங்க. நானும் படுக்கிறேன் …என தரையில் தன் புடவை முந்தானையை விரித்து போட்டு படுக்கப் போகிறாள்.
அதைப் பார்த்த மாலினிக்கு அதிர்ச்சியாகிறது .குழலி நேற்றும் இப்படித்தான் வெறும் தரையில் தூங்கினாயா . என்னை எழுப்பி கேட்டிருக்கலாமே. “
சிரித்தபடியே, ” ஆமாம் அக்கா படுத்து தூங்கவும் முடியவில்லை. குளிரத் தொடங்கியது. அதனால் தான் எழுந்து இந்த வேலையை செய்தேன்..” என்றதும் இருவருமே சிரிக்கிறார்கள் .
“சாரி டி எனக்கு தான் அறிவே இல்லை.என்னை சொல்லி குற்றமில்லை டி .நான் இப்படியே தனியாக இருந்து பழகி விட்டேன் .தவறாக எடுத்துக் கொள்ளாதே..”
“அக்கா இவ்வளவு பெரிய அறையில் எனக்காக இடம் கொடுக்கிறதே பெருசு. இங்க படுக்காத ,வெளியே போய் படுத்துக்கொள் என்று சொன்னாலும் அதற்கும் நான் தயாராக தான் இருக்கிறேன்..”
” ஐயோ நான் அந்த அளவு எல்லாம் கல்நெஞ்சகாரி இல்லடி. இங்கு வா என் பக்கத்திலே படுத்துக்கொள் ..”என்றதுமே குழலி பதறுகிறாள் .
“வேண்டாம் அக்கா .அவங்களுக்கு தெரிஞ்சா என்ன ஏசுவாங்க. அக்காவுக்கு சமமா நீ படுத்து தூங்குகிறாயா என்று.. “
” அவன் கிடக்கான், எனக்கு உடனே தூக்கம் வராது .கொஞ்ச நேரம் நீ பேசு உன் வெகுளித்தனமான பேச்சை கேட்பதற்கு நன்றாக
இருக்கிறது .. “
குழலிக்கு தன்னையும் உயர்வாக ஒருவர் பேசுகிறாரே என க இருக்கிறது .ஓரத்தில் ஒடுங்கி கொண்டு உட்கார்ந்தபடியே பேசுகிறாள். கலகலவென சிரிக்கிறாள் அவள் பேசும் பேச்சுக்களை எல்லாம் கேட்டு.
” குழலி நான் இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன்டி .இது மாதிரி நான் சிரிச்சி எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா. என் கணவரும் நானுமே இயந்திரத்தனமான வாழ்க்கை தான் வாழ்ந்தோம். இத்தனை வருஷ காலத்துல இன்னைக்கு தான் மனசு விட்டு சிரிச்சு இருக்கேன்..” சொன்ன நேரத்துக்கு தூங்கி விடுகிறாள். குழலியும் நேற்று தூங்காததால் மெத்தையில் போர்வை எல்லாம் கொடுக்கவும் சுகமான தூக்கம் வருகிறது.
வீட்டிற்கு போனதும் முதல் வேலையாக நடந்த அனைத்தையுமே கூறுகிறாள். முரளி இதைக் கேட்டதுமே கோபத்தில் கத்துகிறான்.
“உன்னை ஜோடி போட்டுகிட்டு தூங்க சொன்னாங்களா. அக்காவுக்கு தான் அறிவு இல்ல .உனக்கு எங்க போனிச்சி. போனோமே , தூங்கினோமா, வந்தோமான்னு இருக்கணும் . அனாவசிய பேச்செல்லாம் பேசி அவளை மயக்க பார்க்காத..”முரளிக்கு பயம் வந்து விடுகிறது . எங்கே முதலுக்கே மோசம் ஆகி விடப்போகிறதோ என்று.
“நீ நாளைல இருந்து அங்க போக வேண்டாம். அவ குடுக்குற பணத்தால தான் நம்ம வசதியாக போறமா. இங்கேயே இரு.”
ஏன் இவர் இப்படி பேசுகிறார் என்று குழலிக்கு எதுவுமே புரியவில்லை. “சரிங்க இன்னைக்கு போய் நான் அக்காவிடம் சொல்லிவிட்டு வரேன். இல்லன்னா அவங்க என்னை எதிர்பார்த்து காத்துகிட்டு இருப்பாங்க..” என்றதும் எரிச்சலாகிறான்.
” சரி சரி இன்னைக்கு போறதுக்கு தான் கடைசி .இனிமேல் போக கூடாது. அப்படி போனா திரும்ப இங்க
வந்துடாத .. “இப்படி மிரட்டினால் தான் மனைவி பயப்படுவாள் என்று அவனுக்கு நன்றாக தெரியும்.
இரவு வந்ததும், “அக்கா உங்க தம்பி ஏசுவார்னு சொன்னேன்ல. அதேபோல பேசுறாங்க..” என்றதும் நடந்த அனைத்தையும் மாலினி கேட்கிறாள்.
“தனக்காக பாவப்பட்டு கொண்டு மனைவியை இங்கே அனுப்பவில்லை அவன் பணத்திற்காகத்தான் அனுப்பி இருக்கிறான். அவன் கொஞ்சம் கூட மாறவே இல்லையே. கடைசியில் எங்கள் இருவரையும் எப்படி தவறாக எண்ணி விட்டான். அவனுக்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் .. “
குழலியிடம் வீட்டுக்குப் போய் இப்படி பேசு என சொல்லிக் கொடுக்கிறாள். அவளோ பயப்படுகிறாள் .அவர் அடிப்பார் அக்கா என.
“அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ பேசிவிட்டு வா..” அன்றும் இருவரும் சந்தோஷமாக கதை பேசியபடிதான் தூங்குகிறார்கள் .
மறுநாள் வீட்டுக்கு போனது “ம், என்னடி உங்க அக்கா கிட்ட இனிமே வரமாட்டேன்னு சொன்னாயா . “
” ஆமாங்க சொல்லிட்டேன்..” பேசிக்கொண்டே தன்னுடைய உடைமைகள் ,துணிமணிகள் எல்லாவற்றையும் பெட்டிக்குள் அடுக்கி வைக்கிறாள்.
” எதற்காகடி எல்லாத்தையும் எடுக்கிற . உனக்கு அம்மா வீடு கூட கிடையாதே..” கேலி செய்கிறான்.
“அம்மா வீடு இல்லன்னா என்னங்க. எனக்கு அக்கா வீடு இருக்கு. நான் அங்கே போக போகிறேன். அக்கா என்னை அங்க வர சொல்லிட்டாங்க ..”என்றதும் அவளை இழுத்துக் கொண்டு அக்கா வீட்டில் இறக்கி விடுகிறான் .அங்கே இருவரையும் தரக்குறைவாக பேசுகிறான்.
” கடைசில நீங்க இரண்டு பேரும் இவ்வளவு கேவலமாக போவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை .உங்க ரெண்டு பேரையும் போலீஸ்ல பிச்சு கொடுத்தா என்ன .பொம்பளையும் பொம்பளையும் கல்யாணம் செய்துக்க போறீங்களோ.. “
மாலினி, ” நீ என்ன வேணா சொல்லிக்கடா. அதைப் பற்றி எல்லாம் எனக்கு கவலையே கிடையாது. குழலி உன்ன பத்தி எல்லாமே சொல்லிட்டா .நீ என்ன கொன்னுட்டு இந்த சொத்தை எல்லாம் அனுபவிக்கணும்னு ஆசைப்படுவது வரைக்கும். நீ அவளை என்ன பாடு படுத்தி இருக்க. அவ இனிமேலாவது நிம்மதியா இருக்கட்டும். இப்ப இங்கே இருந்து போகலன்னா நீ என்ன கொலை செய்ய முயற்சி செய்ததா போலீஸ் கிட்ட பிடிச்சு கொடுத்துடுவேன். இங்கே இருந்து போகிற வழி பாரு. “
மனைவியிடம் சென்று பேசுகிறான். “உனக்கு என்னடி இந்த வசதியான வாழ்க்கை ரொம்ப புடிச்சி போச்சா. நான் இல்லாம உன்னால இருக்க முடியுமா..”
” அக்கா என்னை இங்கே வர சொன்னதுல இருந்து தானே என்னை அடிக்காமல் பாலும் தேனுமா வாங்கி ஊட்டி வளர்த்தீங்க. அதற்கு முன்னால் என்ன பாடுபடுத்துனீங்க. உங்களுக்கு தேவை என்றால் மட்டும் எதுவானாலும் செய்வீங்க அப்படித்தானே. நீங்க எப்படி வேணாலும் பேசுங்க .எங்களை S இல்லன்னா K எப்படி வேணாலும் சொல்லுங்க .நாங்க அத பத்தி எல்லாம் கவலை பட மாட்டோம் ..”
அடேங்கப்பா இவ்வளவு தூரம் இவளுக்கு தெரிகிறதா என அயர்ந்து போகிறது அவனுக்கு.
” என்னடி வர முடியுமா முடியாதா கடைசியா கேட்கிறேன் .. “
“நானும் கடைசியா சொல்றேன். நானும் அக்காவும் நிறைய திட்டங்கள் போட்டு இருக்கோம். என்ன மாதிரி புருசன்கிட்ட கஷ்டப்படுற பெண்களுக்கு எல்லாம் நிறைய உதவிகள் செய்யறதுக்கு அறக்கட்டளைகளை நாங்கள் தொடங்க போகிறோம். அதற்கான வேலைகளை நாளையிலிருந்து ஆரம்பிக்க போகிறோம். இங்க இருந்து நீங்க கிளம்புங்க. இன்னும் கொஞ்ச நாள் உங்களுக்கு விவாகரத்து பத்திர அனுப்பி வைக்கிறேன்..”
முரளி தன்னையே நொந்து கொண்டு தலையை தொங்க விட்டபடி செல்கிறான்.
பெண்களை தரக்குறைவாக நடத்தும் ஆண்களுக்கு இது சரியான சாட்டை அடி.குழந்தையை பொறுத்த வரை உண்மையிலேயே இது ஒரு நல்ல மாற்றம் தான்.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.