எழுத்தாளர்: தஸ்லிம்
“என்னப்பா குமாரு நல்லா இருக்கியா? வியாபரமெல்லாம் எப்படி போகுது?”.
“ம். நல்லா இருக்கேன்னே.. மளிகை கடைக்கு ஏற்ற மாதிரி ஏதோ போகுது”..
“இவ்வளவு நாளும் வெளிநாட்டுல சம்பாதுச்சுக்குட்டு நல்லா தானப்பா இருந்த.. திடீர்னு ஏன் ஊர்லையே கடை போடணும்னு முடிவுபண்ணி வந்துட்ட”..
“என்னன்னே பண்றது.. எத்தனை நாளுக்கு அங்கேயே தனியா கிடந்து அல்லாடிக்கிட்டு கிடக்கிறது.. ரெண்டு புள்ளைகளும் வளர்ந்துட்டானுங்க.. மூத்தவங்க ரெண்டு பேரும் வேலைக்கு படிக்கண்ணு வெளியூருக்கு போயிட்டானுங்க.. சரி சின்னவன் வினோத் கூடவாது கொஞ்ச நாள் ஒண்ணா செலவழிக்களாமேன்னு பார்த்தேன்.. அவன் இப்போ தான் ஒன்பதாவது போறான்”..
அதை சொல்லு.. எத்தனை சம்பாதுச்சாலும் புள்ளைங்களோட இருக்குற மாதிரி வராது பாரு. சரி பொழப்பைப்பாரு நான் வரேன்னு” சென்று விட்டார் அவர்..
குமார் தான் சிறு வயதில் இருந்தே குடும்ப பாரத்தை தலையில் ஏற்றவர்.. மலேசியாவில் ஹோட்டலில் வேலைக்கு சேர்ந்தவர் நெருப்பில் வெந்து நொந்து பணம் அனுப்பி தன் குடும்பத்தை ஓரளவுக்கு மேம்படுத்தினார்..அவரின் மனைவி சாரதா குடும்ப சூழ்நிலை உணர்ந்து அதற்கேற்றபடி குடும்பத்தை நடத்தி வருபவர். அவர்களுக்கு மூன்றும் மகன்கள்..
வினோத் வழக்கம் போல பள்ளிக்கு சென்றான்.. வினோத் படிப்பில் ஆஹா ஓஹோ ரகம் கிடையாது.. ஏதோ சுமாராக படிப்பவன்.. அவன் நண்பர்கள் சபரி,மணி,விஜய்,சிவா என்று இவனோடு சேர்ந்து ஐந்து பேர்.. அவர்கள் ஒன்று சேர்ந்தால் வகுப்பறையை கதி கலங்கும். சேட்டைகள் பல செய்தாலும் எந்த கெட்ட பழக்கத்தையும் பழகாமல் தான் இருந்தனர் அவர்களுடன் பரணி என்று ஒருவன் வந்து சேரும் வரை..
அவர்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கத்தை அறிமுகப்படுத்தி வைத்தான்.. அங்கங்கு மறைமுகமாக நின்று இவர்கள் குழு புகைப் பிடிக்க ஆரம்பித்தது.. அப்படி ஒரு முறை இவர்கள் புகைத்துக் கொண்டிருக்கும் போது அந்த பக்கமாக சென்ற வேலு என்பவர் பார்த்துவிட்டார்.. “டேய் இந்த வயசுல என்னடா பண்ணிக்கிட்டு தெரியுரிங்க?” என்று சத்தம் போட இவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தனர்..
வேலு, “இது நம்ம குமார் மவன்ல” என்று யோசித்தவர் அன்றே சென்று குமாரிடம் நேரடியாகவே தகவல் சொல்ல அவருக்கோ கடும் அதிர்ச்சி.. அவரை பொறுத்த வரையில், “வினோத் ரொம்பவும் அமைதியானவன்.. அதிர்ந்து கூட பேசாதவன்.. ஏதாவது சொன்னாலும் சரிப்பா என்று கேட்டுக் கொள்பவன்.. அப்படிப்பட்டவனா இந்த வயதிலேயே சிகரெட்டை குடிக்கிறான்” என்று உள்ளுக்குள் மருகியவருக்கு கடும் சினம் மூண்டது.. வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, “வினோத்.. டேய் வினோத்.. எங்க இருக்க?” என்று கோபமான குரலில் கேட்டுக் கொண்டே வந்தார்..
சாரதா, “ஏங்க, என்னங்க ஆச்சு? எதுக்கு இப்படி கத்திக்கிட்டே வர்றீங்க?” என்று கேட்க..
குமார், “எல்லாம் உன்னை சொல்லனும்டி.. உன்னை நம்பி பிள்ளைகளா விட்டா ஒருத்தனையும் உருப்படியா வளர்க்காம கெடுத்து வச்சிருக்க” என்று ஆவேசங்கொண்டு கத்த..
சாரதா, “ஏங்க இப்படி கத்துறீங்க.. உடம்புக்கு ஏதாவது வந்துட போகுதுங்க” என்று பதற..
குமார், “ஆமா இனிமேல் தான் எனக்கு வரப்போகுதா.. எங்க உன் புள்ளை?”..
சாரதா, “யாரு வினோத்தையா சொல்லுறீங்க.. அவன் ரூம்ல தான் இருக்கான்.. இருங்க கூப்புடுரேன்” என்று சொல்லி விட்டு வினோத்து டேய் வினோத்து என்று கத்திக் கொண்டே ஓடினார்..
அவனும் சாரதா சத்தம் கேட்டு, “என்னம்மா” என்று வெளியே வர..
“அப்பா உன்னை கூப்பிடுறாரு என்னடா பண்ணி தொலைச்ச” என்று கேட்க..
“நான் என்னம்மா பண்ணேன்” என்று சொன்னபடி வந்து, “என்னப்பா கூப்பிட்டீங்களா?” என்று கேட்டான்..
குமார் இறுகி போன முகத்துடன், “காலைல ஸ்கூலுக்கு போறதுக்கு முன்னாடி எங்க போன” என்று அழுத்தமாக கேக்க..
அவனுக்கு அவர் எதை குறிப்பிடுகிறார் என்று புரிந்து விட பயத்தில் எச்சில் விழுங்கியவன், “அது வந்து ஸ்கூலுக்கு” என்று இழுக்க..
“பொய் வேற சொல்றியா” என்று பக்கத்தில் கிடந்த வெளக்கமாரை எடுத்து அது உடைந்து போகும் வரை அடி பின்னி எடுத்து விட்டார்..
வினோத்தோ, “இனிமே செய்ய மாட்டேன் பா” என்று அழுது கதறி துடித்தான்.. இடையில் அடிக்காதிங்க என்று தடுக்க வந்த சாரதாவிற்கும் அடிகள் கிடைத்தது.. அத்தோடே கோபத்தோடு வெளியில் சென்று விட்டார்..
இவனும் அழுது கொண்டே தூங்கி விட .. இரவு வந்தவர் வினோத்தை தேடி சென்று பார்க்க அவனோ வலியில் முனகியபடி தூங்கிக் கொண்டிருந்தான்.. அதை பார்த்தவருக்கு மனம் பதைபதைத்தாலும் இப்பவே அவனை இப்படி திருத்தவில்லை என்றால் அவன் வேறு தீய பழக்கங்களையும் கற்று விடுவான் என்று நினைத்தவர் அவனை அடித்ததுதான் சரி என்று மனதில் நினைத்தபடி சென்று படுத்தார்…
மறுநாள் பள்ளிக்கு சென்றவனை அவன் நண்பர்கள் வழக்கம் போல புகைப்பிடிக்க தள்ளி செல்ல அவன் முடியவே முடியாது என்று உறுதியாக மறுத்து விட்டான்..
“அப்பா நேத்து அடி பின்னிட்டாருடா.. எனக்கு வேண்டாம்.. யாராவது பார்த்தா சொல்லி கொடுத்துடுவாங்க”..
சிவா, “டேய் ஏண்டா இப்படி பயப்புடுற.. இதெல்லாம் இந்த வயசுல சகஜம் தானடா.. நம்ம வேணும்னா யாருக்கும் தெரியாம அந்த காட்டு பாதை இருக்குல்ல.. அது வழியா போய் குடிச்சுட்டு வந்துடலாம்.. யாருக்கும் தெரியாது” என்று நம்பிக்கை கொடுக்க வினோத்தும் சரி என்று ஒத்துக் கொண்டான்…
அதற்கு பிறகு அவர்களின் தவறான நேரங்கள் காட்டு பாதையில் தொடர்ந்தது.. ஒரு வழியாக பத்தாவதும் முடிந்தது.. எப்படியோ வெற்றியும் பெற்று பதினொன்றாவதில் காலெடுத்து வைத்தான்.. ஒரு நாள் அவர்கள் யாரும் வராத அந்த முட்புதர்கள் சூழ்ந்த காட்டு பாதையில் புகைப்பிடித்து கொண்டிருக்கும் போது பரணி, “டேய் நான் ஒரு புது ஐட்டம் கொண்டுட்டு வந்துருக்கேன் டா” என்று தன் கையில் உள்ளதை காட்ட..
சிவா, “டேய் என்னடா இது ஏதோ பவுடர் மாதிரி இருக்கு”..
பரணி சிரித்துக் கொண்டே, “ஆமாடா பவுடர் தான் ஆனா வெறும் பவுடர் இல்ல ஸ்பெஷல் பவுடர்” என்றான்..
சபரி, “அப்படி என்னடா ஸ்பெஷல்” என்று அதை தொட்டுப் பார்த்துக் கொண்டே கேக்க..
பரணி, “இது அப்படியே நம்மள சொர்க்கத்துக்கே கூட்டிட்டு போகும்” என்று சிலாகித்துக் கூற..
விஜய், “என்னடா சொல்ற ஒண்ணுமே புரியல” என்று அவன் கையில் வைத்திருந்ததை கொஞ்சம் எடுத்து தன் கையில் வைத்து சொல்ல..
பரணி, “அதை அப்படியே உருஞ்சு இழு மச்சி அப்போ புரியும்” என்று அதை அவன் மூக்கின் அருகில் அவன் கையை நகர்த்தி விட சில நிமிடங்களிலேயே சுய நினைவை இழந்தான் அவன்..
மணி, “டேய் என்னடா பவுடர் இது ஏன் இப்படி கிடக்கிறான் இவன்” என்று பதறியபடி கேட்க..
பரணி, “ஏன் மச்சி பதறுற.. அவனுக்கு ஒன்னுமெல்லாம் ஆகல.. அவன் ரொம்பவே சந்தோஷமா தான் இருக்கான்.. வேணும்னா நீயும் டிரை பண்ணி பாரு” என்று அவன் மூக்கின் அருகில் கொண்டு செல்ல..
அதை தள்ளி விட்ட மணி, “முதல்ல அது என்னன்னு சொல்லுடா”..
பரணி, “இன்னும் உனக்கு புரியலையா மச்சி இது கஞ்சா மச்சி” என்று சந்தோஷமாக சொல்ல.. அங்கிருந்த அனைவருக்கும் பதற்றத்துடன் கூடிய அதிர்ச்சி..
மணி, “டேய் என்னடா இவ்வளவு அசால்ட்டா சொல்ற.. கஞ்சாலாம் ரொம்ப தப்பு மச்சி.. உனக்கு இது எங்க இருந்து கிடைச்சது.. இனி இது யூஸ் பண்ணாத” என்று அவன் கண்டிப்பாக கூற..
பரணி, “உனக்கு வேனாம்னா போடா.. எனக்கு இது இல்லாம இருக்க முடியாது” என்று சொல்ல..
இது தப்பு என்று அவன் எவ்வளவோ சொல்லி பார்த்தும் பரணி கேட்பதாக இல்லை.. பரணி அப்போதே அவன் வைத்திருந்த கஞ்சாவில் கொஞ்சம் எடுத்து கொண்டு அப்படியே மட்டையாகி விட்டான்.. “சொன்னா கேக்க மாட்ட எப்படியோ போ” என்று எழுந்த மணி, “வாங்கடா போவோம்” என்று கூற.. மற்ற மூவரும் எழுந்து கொள்ளாமல் அங்கேயே அமர்ந்திருந்தனர்..
மணி, “டேய் என்னங்கடா எழுந்துக்கோங்க. இங்கிருந்து போயிடலாம்” என்று சொல்ல மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டனர்..
மணி, “என்னடா நான் பேசிகிட்டு இருக்கேன் மூணு பேரும் மாத்தி மாத்தி பார்த்துகிட்டு இருக்கீங்க? கிளம்புங்கடா” என்று மீண்டும் சொல்ல..
சிவா, “கொஞ்சமா ட்ரை பண்ணி பார்க்கலாம் ஒரு தடவை மட்டும்” என்றதும்..
மணி, “பைத்தியம் மாதிரி பேசாதீங்கடா.. ஒரு தடவை யூஸ் பண்ணிட்டோம்னா விடவே முடியாது.. சிகரெட்டயே நம்மனால விட முடியல.. இதெல்லாம் வேணாண்டா எந்திரிச்சு வாங்க” என்று மீண்டும் அவன் வற்புறுத்த..
சபரி, “நீ போறதுன்னா போ மச்சி நாங்க ஒரு தடவை ட்ரை பண்ணி பார்த்துட்டு வர்றோம்” என்று சொல்ல..
மணி, “டேய் வினோத் நீயுமா அதை செய்யப் போற.. உங்க அப்பா சிகரெட் பிடிச்சதுக்கே எப்படி வெலுத்தாருண்ணு பார்த்தீள.. இதெல்லாம் தெரிஞ்சா உன்ன கொன்னே போட்டுடுவாரு கெளம்புடா”..
வினோத், “அது அவருக்கு தெரிஞ்ச புடிச்சதுனால தான் மச்சி மாட்டுனேன்.. அதுக்கப்புறம் அவர் கண்ணுல படாம குடிச்சு இருக்கேன்.. அவருக்கு தெரியலல.. இதுவும் அதே மாதிரியே சமாளிச்சுடலாம்” என்றான்..
“போங்கடா” என்று சொல்லிவிட்டு மணி அங்கிருந்து சென்று விட்டான்.. இவர்கள் பரணி செய்தது போலவே செய்து அப்படியே கீழே சரிந்தார்கள்..
இதுவே பின் நாட்களில் அவர்களுக்கு பழக்கமாக மாறியது.. புகை பிடிப்பதற்காக ஒதுங்குபவர்கள் இப்பொழுது எல்லாம் கஞ்சா குடிப்பதற்காக ஒதுங்குகிறார்கள்.. அவர்கள் செல்லும் அந்த காட்டு பாதையில் யாருமே வர மாட்டார்கள் என்ற தைரியத்தில் இருந்தவர்களை ஒரு நாள் அந்தப் பக்கமாக வந்த ஒரு நண்பர் கூட்டம் பார்த்து விட்டது.. அதில் வினோதின் அப்பா குமாருக்கு தெரிந்த ஒருத்தரும் இருக்க உடனே சென்று குமாரிடம் தகவலை சொல்லிவிட்டார்..
ஆனால் அதற்குள் அவன் முழுமையாக அதற்கு அடிமையாகி இருந்தான்.. அப்போ அப்போ சாரதா விடம் காசு கேட்டு வாங்கியவன் பின்னாட்களில் கேட்காமலே எடுத்து சென்று விடுவான்.. தான் இதையெல்லாம் குமாரிடம் சொன்னால் எங்கு அன்று அடித்தது போல் தன் மகனை அடிப்பாரோ? என்று பயந்த சாரதா அதில் சொல்லாமலேயே மறைத்து விட்டார்.. அது அவர் மகனுக்கு தான் கேடாக முடிந்தது..
வீட்டுக்கு வந்ததும் குமார் வினோத்திடம் சத்தமிட்டு, “என்னடா பண்ணி தொலச்சி இருக்க நாயே” என்று அடிக்க செல்ல.. அவர் ஓங்கி கையே அவன் பிடித்து தூர தள்ளி விட்டான்.. இந்த அடிக்கிற வேலையெல்லாம் வச்சிக்கிற வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.. இவர் தான் அப்படியே சிலையாக உறைந்து நின்றார்.. சாராதாவிற்கும் அது அதிர்ச்சியே.
அதற்கு அடுத்து வந்த நாட்களில் அவனுடன் பேசவே முடியாதது போல எப்போதும் போதையிலேயே கிடந்தான்.. அவனின் அறாஜகத்திற்கு அளவில்லாமல் போய் கொண்டிருந்தது.. படிப்பிற்கு சுத்தமாக முழுக்கு போட்டு விட்டான்.. இடையில் எத்தனை முறை அவனிடம் அதை நிறுத்த சொன்னாலும் கடைசியில் அது கைகலப்பிலையிலையே முடிந்தது.. இப்படியே இரண்டு வருடங்களும் கழிந்தது.. வினோத் வாழ்க்கையில் மட்டும் முன்னேற்றமே இல்லை..
குமாருக்கு கடைசியாக வாய்த்த இவன் மட்டும் தான் இப்படி இருக்கிறான் என்று பார்த்தால் மூத்தது இரண்டும் அவர்களின் வழியை பார்த்து கொண்டு போய் விட்டது.. மகன்களின் செயலால் நொய்ந்து போய் விட்டார் மனிதர்.. விரக்தியின் உட்சத்தில் இருந்தார்.. ஒருவரையும் ஊரில் நிமிர்ந்து பார்த்து பேச முடியவில்லை.. அவரை பார்த்தாலே மரியாதையாக பார்த்த உறவுகள் இன்று பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்க முடியாத துப்புக் கெட்டவன் என்ற அலட்சிய பாவனையோடு பார்ப்பது போல தெரிந்தது..
ஆனால் வினோத் போதையுடன் ஏக போக வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தான்.. கூடவே அவனை உசுப்பேத்தி விடும் நண்பர் கூட்டம் வேறு..
ஒரு நாள் போதையில் வீட்டினுள் படுத்துக் கிடந்தவன் கொஞ்சம் போதை தெளிந்து எழுந்ததும் பணம் எங்காவது இருக்கிறதா என்று ஒவ்வொரு இடுக்கிலும் தேடிக் கொண்டிருந்தான்.. அப்போது அவன் பெற்றோரின் அறைக்கு அருகில் வரும் போது அவன் தந்தையின் அழுகை குரல் அவனுக்கு கேட்டது.. குமார் பேசிய வார்த்தைகள் அவனை திணறடித்தது..
குமார், “இதுக்கு மேல என்ன இருக்கு சாரதா.. நான் எவ்வளவு வெந்து நொந்து போயி அவங்களோட ஏச்சுக்கும் பேச்சுக்கும் நடுவுல சம்பாதிச்சு யாருக்காக அவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை அனுப்பினேன்.. என் புள்ளைங்க நல்லா இருக்கணும் தானே.. ஆனா எவனுமே இப்ப என் கூட இல்லையே.. மூத்தவன் என்னன்னா அங்க அவங்க முதலாளி வீட்டு பொண்ணுக்கு கல்யாணம் முடிச்சு வைக்கிறேன்னு சொன்னாங்களாம் அதோட இவனும் ஒத்துக்கிட்டானாம் அதுக்கு அவங்க வச்ச நிபந்தனையே நம்மள சேர்த்துக்க கூடாதுன்னு தானாம்.. உடனே அதுக்கும் ஒத்துக்கிட்டானாம் அதை தைரியமா நம்ம கிட்டயே போன் பண்ணி வேற சொல்லுறான் என்னத்த சொல்ல அவனுக்கு நம்ம கௌரவ கொறச்சலாம்.. இது ஒரு பக்கம் இருக்க இரண்டாவது அவனாவது படிக்க வச்சா ஒழுங்காக நம்மள காப்பாற்றுவான்னு பார்த்தால படிக்கப் போன இடத்துல காதலிச்சு கல்யாணத்தை முடிச்சிட்டு ஓடி போயிட்டான் எங்கே இருக்கிறான்னு கூட ஒன்னும் தெரியல.. இந்த வினோத் மேல நான் எவ்வளவு நம்பிக்கை வச்சிருந்தேன்.. அம்புட்டையும் ஒன்னும் இல்லாம ஆக்கிட்டானே.. என்னால தாங்கிக்கவே முடியல.. ஊருக்குள்ள தல நிமிர்ந்து நடக்க முடியல.. எனக்கு இதுக்கு மேல உயிரோடவே இருக்க முடியாது.. அதுக்கு தான் இந்த விஷத்தை வாங்கிட்டு வந்துருக்கேன்..
அதுவரை அழுது கொண்டே கேட்டுக் கொண்டிருந்த சாரதாவும், “உங்க முடிவு தான் என் முடிவும்.. எனக்கு இயற்கையாகவே சாவே வராதான்னு நானே தவிச்சுகிட்டே இருக்கேன்” என்று அழுது கதறினார்…
“அழாத சாரதா நம்ம சாவுலயாவது நிம்மதியா இருப்போம்” என்று சொல்லியபடி விஷத்தை திறக்க.. அதுவரை மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருந்த வினோத் விஷயத்தின் வீரியத்தை அப்போதுதான் உணரவே செய்தான்.. ஏன் இந்த ரெண்டு அண்ணன்களும் ஊருக்கு வரவே இல்லை என்று அவனுக்கு அதுவரை நினைக்க கூட தோணவில்லை.. இப்போது தான் அதன் காரணமே அவனுக்கு தெரிந்தது.. வேகமாக அறைக்குள் ஓடி வந்தவன் அவர் கையில் இருந்த விஷபாட்டிலே தட்டி விட்டான்.. அதை பார்த்தவர் தன் கண்ணீரை துடைத்தபடி, “ஏன்டா தட்டிவிட்ட?.. என்னை நிம்மதியா சாகக்கூட விட மாட்டியா?” என்று அழுக ஆரம்பிக்க..
“அப்பா அழாதப்பா” என்றான்..
அவன் அப்பா என்று கூப்பிட்டே இரண்டு வருடங்கள் ஆகி இருந்தது.. அதைக் கேட்டு ஓவென்று கதறி அழுதார் மனிதர்.
அவரை இறுக தழுவி கொண்டவன், “மன்னிச்சிருப்பா” என்று கெஞ்சினான்.. “அப்பா நான் இனிமே அதை தொடவே மாட்டேன் பா” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவன் கைகள் நடுங்க தொடங்கியதை கவனித்தவர், “ஐயோ என்று மீண்டும் கதறி அழுதார்”..
“அப்பா ப்ளீஸ்பா.. என்னை நம்புப்பா.. இனி நல்லபடியா உன்னை பாத்துக்குவேன் அம்மா உன்னையும் தான்” என்றவன் கைகளை இறுகபற்றிக் கொண்டார்.. அந்த இரவை எப்படியோ கழித்தவர்கள் மறுநாளே அதற்கான முயற்சியை எடுத்து மறுவாழ்வு சிகிச்சை மையத்திற்கு போய் சேர்ந்தான்..
ஆறு மாத படிப்பினைக்கு பிறகு மீண்டும் அவர்களிடம் பாசமுடன் இருக்கும் பழைய வினோத் ஆகவே மாறி வந்து சேர்ந்தான்.. குமாரின் கண்ணீர் அவனை மாற்றியது.. அவன் சொன்னபடியே குமாரின் கிடையவே நிர்வகித்து வணிகத்தை பெருக்கி அவர்களை நன்றாகவே பார்த்துக் கொண்டான்..
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.