சித்திரைத் திருவிழா போட்டிக்கதை: செவலையும் சின்ன மணியும்

by admin
96 views

எழுத்தாளர்:  ராஜகுமார் சிவன்

காலை ஏழு மணி தோட்டத்திற்கு  கருப்பையா  கிளம்புகிறார் .அந்த கிராமத்தில் அதிகமாக விவசாய குடும்பங்களே அதிகம் அடுத்த தலைமுறையை படிக்க வேண்டும் என்பதில் பெற்றோர்கள் சிரத்தை எடுத்து படிக்க வைக்கிறார்கள் கருப்பையாவுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் , மூத்த மகனும் மகளும் பக்கத்து ஊரில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பதினோராவது வகுப்பு படிக்கிறார்கள் .கடைசி மகன் உள்ளூரில் எட்டாம் வகுப்பு படிக்கிறான். கருப்பையா கணவனும் மனைவியும் காலையில் தோட்டத்திற்கு சென்றால் மாலை  ஐந்து மணிக்கு தான் வீடு திரும்புவார்கள் காளை மாட்டு வண்டியும், ஒரு பசு மாடும் அவர்கள் உடனே மேச்சலுக்கும் சென்று வரும்.

      கடைசி மகன் பெயர் சின்னமணி ரொம்ப சுட்டி பையன் எப்பவும் நண்பர்களோடு விளையாடுவது தான் அவனுக்கு பிடிக்கும் எப்பொழுதாவது புத்தகத்தை எடுத்து படிப்பான் .அன்று சனிக்கிழமை பள்ளி விடுமுறை அக்காவும் அண்ணனும் ஸ்பெஷல் கிளாஸ் என்று பள்ளிக்கு சென்று விட்டார்கள் .மணியின் அம்மா தோட்டத்துக்கு கூப்பிட்டு பார்த்தாள் நான் வரவில்லை என சொல்லிவிட்டு நண்பர்களோடு தெருவில் பம்பரம் விளையாட சென்று விட்டான் .பக்கத்து வீட்டு பெரியம்மா ஏன்டா… மணி இங்கே வா பிள்ளையார் கோயில் கிட்ட இருக்க டீ கடையில போயி 20 ரூபாய்க்கு டீ வாங்கிகிட்டு, உனக்கு ஒரு முறுக்கு வாங்கிக்கோ … என அனுப்புகிறாள். மணியும் முறுக்கு என்றதும் உடனே செல்கிறான்.அந்த  கடையில் போய் டீ வாங்கிக் கொடுத்துவிட்டு முறுக்கை கடித்துக் கொண்டே வெளியே வருகிறான் . எதிர்வீட்டு செவலை இவனை பார்த்து விட்டது ,படுத்து இருந்த செவலை இவனை நோக்கி உறுமியவரே மெல்ல வருகிறது, மணி பயத்தில் நின்று விட்டான். செவலை மீண்டும் குறைத்துக் கொண்டு வருகிறது .மணி பயத்தில் ஓடுகிறான். செவலையும் விடாது விரட்டி செல்கிறது. ஒரு கையில் முறுக்கை பிடித்துக் கொண்டு ஓடுகிறான் .செவலையும் கொஞ்ச தூரம் விரட்டிச்  விட்டு வந்தது.

                  அந்த தெருவின் முனையில் இருக்கும் பிள்ளையார் கோவில் வந்து மூச்சு வாங்க அமர்ந்து கொண்டான் .முறுக்கு முழுவதும் உட்கார்ந்து தின்று விட்டான், செவலை மீண்டும் தன் இடத்தில் வந்து படுத்துக் கொண்டது. மணியோ மதியம் எப்படி வீடு செல்வது என யோசித்த படியே இருந்தான் . செவலைக்கு ஏன் நம்மை கண்டா கோபம்….தீபாவளி அன்று சீனி வெடியை கொளுத்தி செவலை மேலே எறிந்து விரட்டியது ,கிணற்றில் போய் குளிக்க போகும் போது செவலையையும் கூட்டிட்டு போய் அதையும் கிணற்றில் தூக்கி போட்டு விளையாடியது, செவலை தூங்கும் போது காதுக்குள்ளே பூசரமர குழல் செய்து  பீ…பீ.. ஊதி விட்டது, என செவலையோடு மணி விளையாடிய விளையாட்டுகளின் பட்டியல் இது,  இதனால் செவலை அடைந்த துன்பங்கள் அதிகம் .மணியை பார்த்தாலே செவலை கோபத்தோடு உறுமுவது வாடிக்கையாகிவிட்டது. ஆனாலும் ஒரு முறை கூட செவலை மணியை கடிக்க வில்லை. செவலையிடம்  எப்படி சொல்ல, இனி நான் உன்னை துன்புறுத்த மாட்டேன். நல்ல நண்பர்களாக இருப்போம் என்று சொன்னாலும் கேட்கப் போவதில்லை. மணியின் நண்பர்கள் பார்த்து சிரித்து விட்டு செல்கிறார்கள். செவ்வலைக்கு பயந்து மணி ஒளிந்து  இருக்கான்டா வெடி போட்டு நாயை அச்சுறுத்தியவன் இப்போது படியில் அமைதியாக இருக்கிறான் என்று கிண்டல் செய்கிறார்கள்.

   மதியம் ஆகிவிட்டது வயிறு பசி, எப்படியாவது வீடு சென்று விட வேண்டும் என நினைக்கிறான் . ஆனால் செவலையை நினைத்தால் பயமாக இருக்கிறது. இதே போலவே மற்ற நாய்களையும் அச்சுறுத்தியது உண்டு. நாய்களை துன்பப்படுத்துவதில்  மணிக்கும் அவன் நண்பர்களுக்கும் ஒரு சந்தோசம் .  இது வயது கோளாறாக கூட இருக்கலாம். சில நாய்கள் இவர்களை தூரத்தில் கண்டாலே ஓட ஆரம்பித்து விடும். கல் எறிந்து விரட்டிய நாய்களின் எண்ணிக்கை அதிகம். இதனாலே சில வீடுகளுக்கும் மணி வீட்டுக்கும் சண்டை வந்தது உண்டு. கால் நொண்டியபடி நாய்கள் நடக்கும் காட்சி மனதை உருக வைக்கும் ,குட்டி நாய்களை காதை பிடித்து திருகி தூக்குவது மணிக்கு ரொம்ப பிடிக்கும் அவை கால்களை ஆட்டிக் கொண்டு கத்துவதை கண்டு சிரித்துக் கொண்டே கீழே போட்டு விடுவான் . எல்லாம் ஒரு விளையாட்டாகவே நினைத்துக் கொள்வான் . நாய்களின் வலியை மணி புரிந்து கொள்வதில்லை .செவலைக்கு பயந்து ஓடி ஒளிவது தன் நண்பர்களுக்கு இனியும் தெரிந்தால் கேலியும் கிண்டலும் செய்வார்களே,  என நினைத்து கவலை அடைந்தான். செவலையை ஏதாவது செய்யணும்…… என்ன செய்வது , என யோசித்தான்.

  இன்று எப்படியாவது வீடு சென்று விடுவோம் . நாளை ஞாயிற்றுக்கிழமை எல்லோரும் வீட்டில் இருப்பாங்க இனியும் செவலையை பார்த்தால் ஓட முடியாது. எல்லாரும் சிரிப்பாங்களே என யோசிக்கும் போது , கருவாடு வியாபாரி கோவில் அருகே சைக்கிளில் வருகிறார். வாரத்தில் ஒரு நாள் சனிக்கிழமை மட்டும் தான் வருவார் . மணி வீட்டு தெருவில் தான் ரோட்டு ஓரமாக கடை போட்டு மாலை வரை வியாபாரம் செய்வார் . அவர் சைக்கிள் பின்னாலே மணி நடக்க ஆரம்பித்தான். பின்னால் கட்டிருக்கும் கருவாட்டுக் கூடையில் முகத்தை மறைத்துக் கொண்டே சென்றான். கருவாடு நாத்தம் இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டான் . அவரும் கருவாடு…. கருவாடு…. என கத்திக்கொண்டே சென்றார் . மணிக்கு பயம் கருவாடு வாசம் அறிந்து செவலை மீண்டும் வந்து விட்டால் என்ன செய்வது மீண்டும் செவலை விரட்டி விடுமோ…. என அச்சத்தோடு மறைந்து மறைந்து சென்றான் .சில நாய்கள் கருவாடு வாசத்திற்கு இவர்களை பின்தொடர ஆரம்பித்து அவற்றுக்கு இடையே சண்டையும் வந்துவிட மணிக்கு இன்னும் பயம் கூடியது. இவன் நினைப்பது போல செவலையும் கருவாடு வாசத்திற்கு வந்துவிட்டது .மற்ற நாய்களை பார்த்து அதுவும் குறைக்க ஆரம்பித்துவிட்டது. மணிக்கு கை கால் நடுக்கம் கொடுத்து விட்டது . கருவாட்டுக்கு கூடையை இறுக்க பிடித்துக் கொண்டான் .செவலை இப்போது சைக்கிள் அருகே வந்துவிட்டது. இன்று எப்படியும் கடித்துவிடும் , கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. பயத்தில் ஓடி விடலாமா என தோன்றுகிறது ,ஆனால் கடித்து விடுமோ என அச்சமும் இருக்கிறது. பயத்தில் நடுங்கிய மணிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் கருவாடு வியாபாரியின் அருகே நின்று கொண்டான் .

அவன் எண்ணமெல்லாம் செவலை துரத்தினால் என்ன செய்வது தெருவில் உள்ளவர்கள் எல்லோரும் சிரிப்பார்களே …அவர்களின் கேலி பார்வைக்கு நாம் ஆளாகி விடுவோமே… இப்போது ஒரு கல் எடுத்து எறிந்து செவலையை விரட்டி விடுவோமா… கல் ஏதும் கண்ணுக்கு எட்டும்  தூரத்தில் தெரியவில்லை . கட்டை  ஏதாவது கையில் வைத்திருந்தால் அடித்து துரத்தி விடலாம் அதுவும் இப்போது இல்லை. வீட்டுக்குள் போய் எடுத்து வரும் முன் கடித்து விட்டால் என்ன செய்வது? செவலையின் பின்னங்கால்கள் இரண்டையும் பிடித்து தூக்கி அடித்து கொன்று விடலாமா ? செவலை கனமாக இருக்கும் தூக்கி விட முடியாது. கிணற்றில் தூக்கிப் போட்ட போது கனமாக இல்லையே என பலவாறு யோசித்துக்கொண்டு நிற்கிறான். செவலை கருவாடு வியாபாரியின் அருகே வாலை… வாலை… ஆட்டிக் கொண்டு நிற்கிறது .அவர் அதன் தலையை வாஞ்சையோடு தடவிக் கொண்டிருக்கிறார்,  தன் முன்னங்கால் இரண்டையும் தூக்கி அவர் இடுப்பில் வைத்துக் கொள்கிறது. ஏய் கீழே இறங்கு , போ….போ.. என அன்பாக சொல்கிறார்.  செவலையும் கீழே இறங்கி கொள்கிறது . கருவாடு வியாபாரி ஒரு துண்டு கருவாடை எடுத்து செவலைக்கு போடுகிறார் . ஒரே வாயில் எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடி விடுகிறது.  மணிக்கு இப்போது சந்தோஷம் ஒரு ஆபத்திலிருந்து கருவாடு வியாபாரி காப்பாற்றி விட்டது ஆயிரம் நன்றிகள் மனதிற்குள் சொல்லிக் கொண்டிருக்கிறான். வீட்டுக்குள் ஓடிவிட்டான் ,எப்படி கருவாடு வியாபாரி கூட வரும்போது செவலை உறும்மவில்லை என அவனையே கேட்டுக்கொள்கிறான் .

   ஆனாலும் செவலைக்கு பயந்த மணியென  நண்பர்கள் பள்ளிக்கூடத்தில் கேலி செய்வார்களே அதை  எப்படி சமாளிப்பது? அதை ஒரு தலைகுனிவாக நினைத்தான். மீண்டும் அவன் செவலையை பழி வாங்கி அவர்களிடம் கெத்து காட்ட வேண்டுமென  அவனுக்குள்ளே உறுதி கொள்கிறான் . எப்படியாவது செவலையை கொன்று விட வேண்டுமென  நினைக்கிறான். கருவாட்டுக்கு மட்டும்தான் செவலை மயக்கும்,  நம்மை கண்டால் குறைக்காது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டான். கருவாடு வாங்க இருபது ரூபாய் வேண்டும் . எப்படி இருபது ரூபாய் சேர்ப்பது என யோசிக்கிறான்.  கருவாடு வாங்கி மணிக்கு வாசனையை காட்டிவிட்டு அதை அப்படியே தோட்டத்திற்கு கூட்டிட்டு , போற வழியில் இருக்கிற பழைய கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்று விட வேண்டும். என்பதுதான் மணியின் திட்டம் ஆனால் இருபது ரூபாய் இருந்தால் தான் கருவாடு வாங்க முடியும் .அப்பாவிடம் கேட்டால் தரமாட்டார் அண்ணனிடம் கேட்டு தான் பணம் எடுப்பார். அப்பா வரும் முன்னே அம்மாவிடம் கேட்டு வாங்கி இன்று எப்படியாவது கருவாடு வாங்கி விட வேண்டும். செவலையை கூட்டிக் கொண்டு போய் கிணற்றில் தூக்கிப்போட்டு தான் யார் என்பதை நண்பர்களுக்கு காட்ட வேண்டுமென உறுதி கொள்கிறான் .

மாலை ஐந்து மணிக்கு எல்லாம் தோட்டத்திலிருந்து அம்மா வரும் வழியில் நிற்கிறான் .மணி ….என்னடா இங்க வந்து நிற்கிற மதியம் சாப்டியா என அம்மா கேட்கிறாள் . சாப்பிட்டேன் மா…. எனக்கு 20 ரூபாய் வேண்டும். திங்கட்கிழமை பள்ளிக்கூடத்தில் புத்தகம் வாங்கனும் என்கிறான். போன வாரம் தானே ஐம்பது ரூபாய் வாங்கிட்டு போன அதுக்குள்ள இப்பவும் 20 ரூபாய்க்கு கேட்கிற சரி அப்பா வரட்டும் வாங்கி தாரேன் என்கிறாள். இல்லைம்மா இன்னைக்கு சாயந்திரம் பள்ளிக்கூடத்தில் பணம் கொடுக்கணும். நீ கொடு என்கிறான். படிக்காதவள் நான் எனக்கு என்ன தெரியும் ? என சொல்லிக்கொண்டே முந்தானையில் இருந்த கசங்கிய இரண்டு பத்து ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுக்கிறாள். உனக்கு தெரியாது மா ….அறிவியல் புத்தகத்துக்கு பத்து ரூபாய் சயின்ஸ் புத்தகத்துக்கு பத்து ரூபாய் எனச் சொல்லிக் கொண்டே பணத்தை வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பி கருவாட்டு கடையை நோக்கி சென்றான்.

  ஒரு சில ஆட்கள் கருவாடு வாங்கி சென்று கொண்டிருக்கிறார்கள். வெட்டி கழித்த கருவாடுத்  துண்டுகளை இரண்டு பூனைகள் கடித்துத் தின்றுக் கொண்டிருக்கிறது . மணி கருவாடு வியாபாரியிடம் சென்று எங்க அம்மா இருபது ரூபாய்க்கு  கருவாடு வாங்கி வரச் சொல்லி இருக்கிறார்கள். நல்ல கருவாடா கொடுங்கள் என கேட்கிறான். வீட்டு அருகே சென்றால் என்னயென கேட்பார்களே யென  யோசித்தான். தெரு முனையில் நின்று பார்த்தான் செவலை வாசலில் நின்று கொண்டிருந்தது. எப்படி தோட்டத்திற்கு கூட்டிச் செல்வது ஒரு துண்டு கருவாடை போட்டால் வாலை…வாலை  ஆட்டிக் கொண்டு வரும் அப்படியே கூட்டிக்கொண்டு போய்விடலாம் ..என வீட்டுக்கு அருகில் வந்தான் .செவலை இவனைப் பார்த்து உறுமியது ..மணி ஒரு துண்டு கருவாடை எடுத்து தூக்கி போட்டான். ஓடி வந்து செவலை கருவாடை தின்றது. மணி மீண்டும் கொஞ்ச தூரம் சென்று கொண்டு செவலையை கூப்பிட அது வாலை ஆட்டிக் கொண்டு வந்தது. கருவாடு பொட்டலத்தை செவலைக்கு முகர காண்பித்தான் .கருவாடு வாசத்தில் செவலை பின்தொடர ஆரம்பித்தது .மணிக்கு சந்தோசம் செவலை கதை இன்றோடு முடிந்துவிடும். நாளைக்கு எவனும் என்னை கேலி செய்ய மாட்டான் . செவலை இன்னும் அன்போடு மணியிடம் நெருங்குகிறது .மணிக்கு முன்னும் பின்னும் ஓடுகிறது. வா வா என கேவலப்படுத்திட்டல எல்லாம் இன்னைக்கு உன்னை வட்ட கிணத்துல தூக்கி போட்டுவிட்டு வந்துவிடுகிறேன். என மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டு கிணற்றை நோக்கில் நடந்து செல்கிறான். செவலையும் கிணத்துக்கு அருகே வந்து விட்டது .தரையில் இருந்து இரண்டடி உயர சுற்றுச்சுவர் உள்ள வட்டக்கிணறு, உள்ளே ஆட்கள் இறங்குவதற்கு உயரப் படிக்கட்டுகள் இருக்கிறது. தண்ணீரும் தெளிவாக இருக்கிறது . செவலை சற்று தூரத்தில் மணியை பார்த்து இன்னும் ஒரு துண்டு கருவாடு போடுவானா யென ஏக்கத்தோடு நிற்கிறது.  மணி கிணற்றுக்குள் செவலை எப்படி தூக்கி போடுவது? தூக்கும்போது கடித்துவிட்டால் என்ன செய்ய யென யோசிக்கிறான்.  சரி முதலில் ஒவ்வொரு துண்டாக போட்டு அருகில் வரவைப்போம் . இன்னும் ஒன்பது துண்டு கருவாடு இருக்கிறது .அதற்குள் செவலையை கிணற்றில் தூக்கி போட்டு விடனும் . செவலையும் கருவாடு வாசத்தில் நெருங்கி வர தயாராக நிற்கிறது . முதலில் ஒரு துண்டை எடுத்து வீசினான், செவலை கடித்துத் தின்று விட்டது .அடுத்த துண்டை கையில் வைத்துக் கொண்டு கூப்பிட்டான் செவலை வரவில்லை. இன்னும் பக்கத்தில் போட்டான் வந்து சாப்பிட்டது. நான்கு….ஐந்து   துண்டுகளை போட்டு விட்டான். கிணற்றில் ஏதோ  டமாரென விழத்தது. மணி கிணற்றுக்குள்  எட்டிப் பார்த்தான்.

          அருகில் இருந்த பனை மரத்திலிருந்து பனம் பழம் ஒன்று விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தது . கிணற்றில் அலை மோதியடிப்பதை  பார்த்துக் கொண்டிருந்தான்.  என்ன விழுந்தென அவன் நிதானிக்கும் முன்பே செவலை  மொத்த கருவாட்டையும்  தூக்கிக்கொண்டு ஓடிவிட்டது. கீழே இரண்டு துண்டுகள் விழுந்து கிடந்தது. ச்சே… ஏமாந்து விட்டோமே…. மீண்டும் எச்சலோடு கீழே கிடந்த கருவாடுத் துண்டுகளை கிணற்றுக்கள் தூக்கி எறிகிறான். மீன்கள் அதை மொத்தமாக வந்து கடித்துச் சாப்பிடுகின்றன. செவலையால் ஏமாற்றப்பட்டு விட்டோமோ .்..செவலை நம்மை ஏமாற்றி விட்டதே என கோபத்தோடு முகத்தை வைத்துக்கொண்டு.்். இறுக்கமான முகத்தோடு வீடு நோக்கி நடந்து வருகிறான் . மீண்டும் அவனுக்கு செவலை மேல கோபம் அதிகரிக்கிறது. தனியாக வந்த சமயம் கிணற்றில் தூக்கிப்போட்டு கொன்று இருக்க வேண்டும் நூலிழையில்  தப்பித்து விட்டதே…. எங்கு போய் விடுவ எப்படியும் வீட்டுக்கு தானே வந்தாகணும் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.   எப்படியும் செவலையை பழிவாங்கிடவே வேண்டுமென உறுதிகொள்கிறான்.

   ஏன்டா பெரியவன தம்பி மணி இருபது ரூபாய் புத்தகத்துக்கு கொடுக்கணும் வாங்கிட்டு போனான் டா என்ன புத்தகம் என்று எனக்கு சொல்ல தெரியலயே என தன்  மூத்த மகனிடம் சொல்கிறாள்.   ஏம்மா …கொடுத்த அவனுக்கு எல்லா புத்தகமும் வாங்கி கொடுத்தாச்சு அப்புறம் எதுக்கு கொடுத்த…. அவன் எதற்கோ ஏமாத்தி வாங்கிட்டு போயிட்டான். எதற்கென தெரியலையே எங்கே போனான்…. எனச் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே மணி வீட்டுக்குள் நுழைகிறான். என்னடா புத்தகம் வாங்க பணம் வாங்கின… என அண்ணன் கேட்க பள்ளிக்கூடத்தில் வாங்கி வரச் சொன்னாங்க… சரிடா…. இன்னைக்குத் தான் உனக்கு பள்ளிக்கூடம் கிடையாதே பணத்தை எங்க என அண்ணன் கேட்கிறான். டவுசர் பையில் வைத்திருந்தேன் கீழே விழுந்து விட்டது எங்கு விழுந்ததுன்னு தெரியல…. என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே மணியின் அப்பா எழுந்து வந்து மணியின் கையை முறுக்கி பிடித்துக் கொண்டு…. அடேய் நான் பட்ட கஷ்டம் நீங்க படக்கூடாது, என்று வெயில் ,மழை ,இரவு ,பகலென பாராமல் காட்டுல வேலை செய்து…. சரியான சாப்பாடு, தண்ணீர் கிடைக்காமல் உங்களை படித்து நல்ல நிலைமைக்கு கொண்டு வரணும்னு தானே இவ்வளவு கஷ்டப்படுகிறோம்.

நாங்க செய்கிற  மண்வெட்டி, உழவு வேலையெல்லாம் உங்களுக்கு சரிவராது , நீங்க நல்லா படிச்சு வெளியூர்ல நல்ல வேலைக்கு போகணும்னு நினைச்சா ….நீ இப்பவே பொய் சொல்லிக்கொண்டு சரியா படிக்காமல் , படிப்பறிவு இல்லாத எங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்க…. என முதுகிலும் ,கன்னத்திலும் அடிக்கிறார் . மணி பயந்து வெளியே ஓடி வருகிறான் . மணியின் அப்பாவும் விடாமல் ஓடி வந்து அடிக்கிறார். எதிர் வீட்டில் படுத்திருந்த  செவலை மணியின் குரல் கேட்டு வெளியே வருகிறது. மணியை பார்த்து வாலை.. வாலை ஆட்டுகிறது . அவன் அடி தாங்காமல் அழுகிறான்.  இப்போது செவலை மணியின் அப்பாவை பார்த்து ஆவேசமாக குறைக்கிறது. அவரை மேலும் அடிக்க விடாமல் நெருங்கி வருகிறது.  மணியின் அப்பா செவலையின் கோபத்தை பார்த்து வீட்டுக்குள் சென்று விடுகிறார். செவலை மணியின் காலடியில் வாலை  ஆட்டிக் கொண்டு நிற்கிறது. மணியும் வாஞ்சையோடு செவலையின் தலையை தடவுகிறான். செவலையை பழிவாங்க நினைத்தவன் பாசத்தை காட்ட , மணியும்  செவலையும் இப்போது நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள்.

முற்றும்.

அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள்  கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

https://aroobi.com/%e0%ae%85%e0%ae%b0%e0%af%82%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5/

You may also like

Leave a Comment

error: Content is protected !!