எழுத்தாளர்: அ. கௌரி சங்கர்
விடிகாலை 07.30 மணி.
தினேஷ் பள்ளிக்கு செல்லவேண்டும்.
இன்னும் அவன் எழுந்திருக்கவேயில்லை.
“தினேஷ்” – ரமேஷ் மற்றும் ஹேமா தம்பதியினரின் ஒரே மகன் – வயது 12.
…….
அன்றைய தினம் அமாவாசை என்பதால், மொட்டை மாடியில் காக்கைகளுக்கு சோறு வைத்து விட்டு கணவன் குமாருக்கு தனது போன் மூலம் தொடர்பு கொண்டாள், சாந்தி.
“என்னங்க, ஐந்து நிமிஷம் மொட்டை மாடிக்கு வர முடியுமா ? உங்க கிட்ட தனியா பேசனுங்க”.
“என்ன சாந்தி, இந்த நேரத்துல மொட்டை மாடிக்கு வரச்சொல்ற. நான் குளிச்சி, டிரஸ் மாத்தி, டிபன் சாப்பிட்டுட்டு 09.00 மணிக்கு கிளம்பினா தான் 10.00 மணிக்கு ஆபிஸ் போய் சேரமுடியும். நீ இருக்குறது சென்னை. கோவில்பட்டி கிடையாது. அதை முதல்ல புரிஞ்சிக்கோ. காலைல ஏழு மணியிலேயிருந்து 11 மணி வரைக்கும், அனைத்து சாலைகளிலும் வாகனங்கள் அணி வகுத்து நிற்கும். லேட்டா போனால், அன்றைய தினம் நான் லீவு தான் போடவேண்டியது வரும். போன மாதத்துல, இரண்டு நாட்கள் இப்படி வீணாக போய் விட்டது.”
……..
அது ஒரு கூட்டு குடும்பம். கிருஷ்ணன் வங்கியில் வேலை பார்த்துவிட்டு, நான்கு வருடங்களுக்கு முன்பாக ஓய்வு பெற்றவர். 64 வயதாகி விட்டது. வயது அதிகம் என்று சொல்ல முடியாவிட்டாலும், கால் வலி மற்றும் முதுகு வலி போன்றவற்றால் அவஸ்தைப்படுவதால், அதிகமாக அவரால் நடமாடமுடியாது. முடிந்தவரை வீட்டிற்குள் உலா வருவார். இருந்தாலும், பல நேரங்களில் அவருக்கு யாராவது ஒருவர் உதவிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
கிருஷ்ணனின் மனைவி சகுந்தலா – வயது 55. அனைத்து வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வது இவர் வழக்கம். கால் வலி போன்றவை இருந்தாலும், அதை பெரிது படுத்தாமல், வீட்டில் இருந்து வெளியில் சென்று காய்கறிகள் வாங்கி வருவது, சொத்து வரி கட்டுவது, மின்சார கட்டணம் கட்டுவது – இன்ன பிற காரியங்களை ஆண் பிள்ளைகளுக்கு சமமாக செய்யவேண்டும் என்று விரும்புவார். அமைதியானவர். எந்த நேரத்திலும் தன்னிலை இழக்கமாட்டார். பகல் நேரங்களில், காலை 11.00 மணிவரை பெரும்பாலும், இவரை கடைகளில் தான் பார்க்க முடியும். காலையில் எத்தனை மணிக்கு வெளியில் செல்கிறார் என்பதே வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு தெரியாது. காய்கறிகளை பேரம் பேசி வாங்குவதில் கில்லாடி.
மாலை 04.30 மணிக்கு வழக்கம் தவறாமல், அந்த பகுதியில் உள்ள சிவன் கோவில், பெருமாள் கோவில் மற்றும் முருகன் கோவில்களுக்கு சென்று விட்டு ஆறு மணிக்கு வீட்டிற்கு திரும்பிவிடுவார். இந்த இரண்டு மணி நேரங்கள் தான் அவருக்காக அவர் எடுத்துக்கொள்ளும் நேரம். வரும்போதே வீட்டிற்கு தேவையான பழங்கள், நொறுக்கு தீனி வகையறாக்கள் போன்றவற்றை வாங்கி வந்து விடுவார்.
கிருஷ்ணன் மற்றும் சகுந்தலா தம்பதியினரின் இரண்டு மகன்கள் தான் ரமேஷ் மற்றும் குமார். ரமேஷுக்கு ஹேமாவுடன் ஏற்கனவே திருமணம் நடந்து முடிந்து 14 வருடங்கள் ஆகின்றன. அவர்களுடைய ஒரே செல்ல புத்திரன் தான் தினேஷ். பள்ளியில் 7வது வகுப்பு படிக்கிறான். ரமேஷ் சென்னை கிண்டியில் உள்ள ஒரு வங்கியில் அதிகாரியாக வேலை பார்க்கிறான். ஹேமா மாம்பலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார்.
குமார் ரமேஷை விட 12 வயது இளையவன். அவனுக்கு கடந்த மாதம் தான் சாந்தியுடன் திருமணம் முடிந்தது. சாந்தி உறவு முறை பெண். அவளும் MA படித்தவள் தான். தற்போது வரைக்கும் அவளுக்கு வேலை என்பது இல்லை.
ஆக, வீட்டில் கிருஷ்ணன், சகுந்தலா மற்றும் சாந்தி – இவர்கள் மூவரை தவிர ரமேஷ், ஹேமா, குமார் மற்றும் தினேஷ் – இவர்கள் நால்வரும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தங்களுடைய அலுவலகங்களுக்கும், பள்ளிகளுக்கும் செல்வதற்காக விடிகாலையில் எழுந்தது முதல் கால்களில் சக்கரங்களை கட்டிக்கொண்டு பறந்து கொண்டு இருப்பார்கள். காலை 9.00 மணிக்கு மேல் இவர்களை பார்க்கவே முடியாது.
மாலை நான்கரை மணிக்கு பள்ளியில் இருந்து தினேஷ் திரும்புவான்; ஹேமா ஆறு மணிக்கு திரும்புவார். குமார் மற்றும் ரமேஷ் கிட்டத்தட்ட கால் மணி நேர வித்தியாசத்தில் 7 மணியளவில் வீட்டிற்கு வந்து சேருவார்கள். மீண்டும் விடிகாலை அவர்களுடைய பயணங்கள் தொடங்கிவிடும்.
இன்று வரை ஒற்றுமையான குடும்பம். தங்களுடைய சிரமங்களை தள்ளி வைத்துவிட்டு, மற்றவர்களின் சிரமங்களுக்கு மதிப்பு கொடுத்து வாழ்பவர்கள். கிருஷ்ணன் செய்த புண்ணியம் என்றே சொல்லவேண்டும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து போவதில் எந்தளவுக்கும் செல்லக்கூடியவர்கள்.
……
என்னதான் குமார் சாந்திக்கு சமாதானம் மற்றும் சாக்கு போக்கு சொன்னாலும், அவன் மனது “திக் திக்” என்று அடித்துக்கொண்டது. இதுவரை அந்த குடும்பத்தில் பிரச்சினைகள் என்பதே இல்லை.
சாந்தி புகுந்த வீட்டிற்கு வந்து இன்றோடு 24 நாட்கள் ஆகின்றன.
“அவளுக்கு இந்த வீட்டின் நடைமுறைகள் பிடிக்கவில்லையோ? அம்மா ஏதாவது சொல்லியிருப்பார்களோ? – அவர்கள் அப்படி சொல்லக்கூடியவர் இல்லையே? அப்பாவுக்கு மட்டும் உதவிகள் தேவைப்படும். வீட்டோடு இருக்க விரும்பும் பெண் வேண்டும் என்று தானே குமார் கடந்த மூன்று வருடங்கள் தவம் இருந்தான். சாந்தியும், வேலை பார்ப்பது பற்றி தன்னுடைய விருப்பத்தை சொல்லவில்லையே?”
“என்ன தான் இருந்தாலும், அவளும் பெண் தானே. ஹேமா வேலை பார்ப்பதால் ராணி அந்தஸ்து தருகிறார்கள். நமக்கு வேலை இல்லாததால், அந்த அந்தஸ்து தர மறுக்கிறார்கள் என்று சாந்தி நினைக்கிறாளோ? அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் இல்லேயே. இதுவரை அண்ணி ஹேமா சாந்தியை கடிந்து பேசி பார்த்தது இல்லேயே. அம்மா அவர்களுக்கு என்றே சில வேலைகளை தேர்ந்தெடுத்துக்கொண்டு இந்த தள்ளாத வயதிலும் செய்து கொண்டு இருக்கிறார்களே. வெளி வேலைகளை வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு விட்டுக்கொடுக்காமல் அம்மா தானே செய்து கொண்டு இருக்கிறார். இதுவரை எந்த முணு முணுப்பும் இல்லேயே?”
“அப்படியானால் அண்ணன் அல்லது அண்ணி தினேஷை கடிந்து பேசியிருப்பார்களோ? அப்படி நடந்ததாக தெரியவில்லேயே. அல்லது பள்ளியில் பிரச்சினைகள் இருக்குமோ? அப்படி என்ன பிரச்சினைகள் தினேசுக்கு இருக்கும். ஒருவேளை சாந்தி எதாவது சொல்லியிருப்பாளோ? அல்லது அப்பா ஏதாவது சொல்லியிருப்பாரோ? கண்டிப்பாக சொல்லியிருக்க மாட்டார். பேரன் என்றால் அவருக்கு உயிர். அப்படி என்னவாகயிருக்கும் – சாந்தி, இந்த காலை நேரத்தில் வரச்சொல்லுகிறாள் ?”
விறுவிறுவென்று மொட்டை மாடிக்கு செல்லும் மாடிப்படிகளில் ஏறிச்சென்று கொண்டு இருந்த குமாருக்கு வித விதமான நினைவுகள் அலைமோதத்தொடங்கின.
……
அவன் தினேஷை தன்னுடைய மகனாகவே பாவித்து நடத்தி வந்தான். குமாருக்கு திருமணம் ஆகும் வரை, விடுமுறை நாட்களில், தினேஷ் குமாருடன் தான் ஊர் சுற்றுவான். மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, பீனிக்ஸ் மால் இப்படி அனைத்து இடங்களுக்கும் அவனை கூட்டிக்கொண்டு செல்வது குமாருக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகளுக்கு இப்படி ஒருவர் கிடைத்தால், அவர்களுடைய வாழ்க்கை சொர்க்க மயம் தான்.
….
மாற்றம் ஒன்று தான் மாறாதது. திருமணம் நடந்து முடிந்த பின்னர், குமாருக்கு தினேசுடன் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இரண்டு முறை அவன் சாந்தியுடன் தினேஷையும், மாலுக்கு கூட்டிக்கொண்டு செல்ல முயலும்போது, வீட்டில் உள்ள மற்றவர்கள் குய்யோ முறையோ என்று சத்தம் போட்டு அவனை தடுத்து விட்டார்கள். அவனை சாந்தியுடன் தான் வெளியில் செல்ல அனுமதித்தார்கள். தினேஷை வீட்டில் இருத்திக்கொண்டார்கள்.
“ஒருவேளை அந்த சந்தோசமயமான தருணங்களின் இழப்பு தான் காரணமாக இருக்குமோ?”
…
குமாரை கண்டவுடனே சாந்தி பேசத்தொடங்கினாள்.
“தினேஷ் நேற்று இரவு சரியாக சாப்பிடவேயில்லை. அவனுக்கு மூன்று இட்லிகள் வைத்தும், இரண்டை அவன் தொடவேயில்லை. நானும் முதலில் பள்ளியில் உள்ள பிரச்சினைகளோ இருக்குமோ என்று நினைத்தேன்.வீட்டில் தாத்தா, பாட்டி, மாமா மற்றும் அக்கா இவர்கள் யாரிடமும் அவன் பேசவில்லை. தாத்தா முதுகு வலியால் அவதிப்படுவதால், இவனுடைய போக்கை கண்டு கொண்டதாக தெரியவில்லை. நீங்கள் அனைவரும் வேலைகளுக்கு சென்று வந்த களைப்பில் உறங்க சென்று விட்டீர்கள். பாட்டியும் களைப்பு காரணமாக சீக்கிரமாக உறங்க சென்று விட்டார்.”
“அப்படி என்னவாகயிருக்கும். நீ எதாவது அவனிடம் சொன்னாயா ? “
“என்னங்க – நான் எப்படி அவனை குறை சொல்லுவேன் அல்லது திட்டுவேன்?”
“அப்படியே இருக்கட்டும். உன்னிடம் எப்படி அவன் நடந்து கொள்ளுகிறான்?”
“நான் நான்கு அல்லது ஐந்து முறை அவனிடம் பேசி பார்த்து விட்டேன். இரவில் பால் குடிக்கவும் மறுத்துவிட்டான். “
“சரி – உனக்கு என்ன தோன்றுகிறது?”
“அவனுக்கு என்மீது தான் கோபம் இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னை பார்க்கும்போதெல்லாம், முகத்தை ‘உம்’ என்று வைத்துக்கொள்ளுகிறான்.”
“சாந்தி, அப்படியானால், நீ இந்த வீட்டிற்கு வந்ததால், அவனால் என்னுடன் வெளியில் வரமுடியவில்லை என்று கோபமாக இருக்குமோ?”
“அப்படி இருக்காது. போன வாரம் அக்காவுடன் ஒரு பிறந்த நாள் விழாவிற்கு சென்று வந்தான். பாட்டி முடிந்தவரையில் அவனை தினமும் அவன் பள்ளியில் இருந்து வந்தவுடன், கடைகளுக்கு அல்லது கோவில்களுக்கு கூட்டிக்கொண்டு செல்கிறார்.”
“சாந்தி, நீ அவனை வெளியில் கூட்டிக்கொண்டு செல்லவேண்டும் என்று விரும்புகிறானோ ?”
“அப்படியும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் ஒரே ஒரு சந்தேகம் இருக்கிறது.”
“என்ன சந்தேகம் ?”
“தினேஷ் தற்போது ஏழாவது படிக்கிறான். உங்களுக்கு தெரியுமோ அல்லது தெரியாதோ என்று எனக்கு தெரியவில்லை. விடிகாலையில் தாத்தாவிற்கு பல் துலக்க பிரஷ், பேஸ்ட் அவன் தான் எடுத்துக்கொடுப்பான். அவன் தான் அவருக்கு காபி தருவான். அவர் முன்பு தரையில் அமர்ந்து கொண்டு, காபி ஆற்றிக்கொடுப்பான். இரவில் அவருக்கு கால் பிடித்து விடுவான். இரவில் அவன் தான் அவருக்கு பால் கொண்டு வந்து கொடுப்பான். பாலை குடித்து முடித்தபின்னர், அவர் கட்டிலில் சாய்ந்தவுடன், அவருக்கு போர்வை போர்த்திவிடுவான்.”
“அவன் படிப்பிற்கும், தாத்தாவுக்கு சேவை செய்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது ?”
“என்னங்க இப்படி சொல்லிட்டீங்க? தற்போது அவர்களுக்கு படிப்பதற்கான வேலைகள் பள்ளிகளில் அதிகம் தந்துவிடுகிறார்கள். பக்கத்து வீட்டில் அவனுடன் படிக்கும் கண்ணன் போனவாரம் என்னிடம் இது பற்றி பேசினான். பள்ளியில் இருந்து வந்தவுடனே, அவன் அவனுடைய அறைக்கு சென்றுவிட்டு, ஹோம் ஒர்க் செய்துகொண்டே இருப்பானாம். அவன் மற்றவர்களுக்கு தொந்தரவும் தருவது இல்லேயாம். அந்தளவில் வீட்டில் உள்ள அவனுடைய தாத்தா மற்றும் பாட்டி – இவர்களுக்கு அவன் உதவிகள் செய்வது இல்லையாம். அதற்கான நேரமும் அவனிடம் இல்லையாம்.”
“சரி, இப்போது அதற்கென்ன ?”
“இரண்டு நாட்களுக்கு முன்பு நான் தினேஷிடம் பத்து நிமிடங்கள் பேசினேன். இனிமேல் தாத்தாவுக்கு நீ உதவிகள் செய்யவேண்டாம். உன்னுடைய படிப்பு சம்பந்தமான வேலைகளை மட்டும் பார்த்துக்கொள். நான் — அதாவது உன்னுடைய சித்தி தாத்தாவை பார்த்துக்கொள்ளுகிறேன் – என்று.”
“அப்படியானால் ?”
“அப்போதிருந்தே, அவன் என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டான். சாப்பிடுவதும் இல்லை.”
….
அலுவலகங்களில் வேலை பார்த்து பலவிதமான பிரச்சினைகளை இலகுவாக கையாண்டு வந்த குமாருக்கு பிரச்சினை என்னவாகயிருக்கும் என்று புரிந்து விட்டது.
அவன் பக்குவமாக பேச ஆரம்பித்தான்.
“சாந்தி, நான் சொல்லுவதை கவனமாக கேட்டுக்கொள். தினேஷிடம் நீ பேசியது தவறே இல்லை. தினேஷின் பொறுப்புகளை நீ உணர்ந்து அவனுக்கு உதவிகள் செய்யும் எண்ணத்தினால் தான் நீ அப்படி பேசியிருக்கிறாய். ஆனால் அவன் வேறு விதமாக அதை மனதில் நினைத்துக்கொண்டான். மனிதர்கள் பலவிதமானவர்கள். சிலருக்கு வேலைகள் கொடுத்தால் கோபம் வரும். அவர்கள் பிறருடைய தயவில் வாழ விரும்புபவர்கள். சிலருக்கு வேலைகள் செய்யவேண்டாம் என்று சொன்னால் கோபம் வரும். அவர்களுடைய தன்மானம் எழுந்து நிற்கும். இன்னும் ஒரு சிலர் பிறருக்கு தொண்டு செய்வதை மிகவும் விரும்புவார்கள். அந்த பணியில் இருந்து அவர்களை விடுவிக்கும்போது, எதையோ இழந்தது போன்று மாறிவிடுவார்கள். அவர்களுக்கு சாப்பிடக்கூட பிடிக்காது. அவர்களை புறக்கணித்து விட்டார்களோ என்று நினைத்து மருகி விடுவார்கள். மற்றவர்களுக்கு தொண்டு செய்வதில் அவர்களுக்கு ஒரு ஆத்ம திருப்தி கிடைக்கும்.”
“கோவிலில் நீ பார்த்திருக்கிறாயா? பூஜை நடக்கும்போது, சில சிறுவர்கள் அல்லது பெரியவர்கள் கோவில் மணியை அடிப்பதற்கு போட்டி போடுவார்கள். ஒரு கட்டத்தில் அந்த வேலை அவர்கள் சார்ந்தது என்று நினைக்க தொடங்கி விடுவார்கள். பல நேரங்களில் உரிமை பிரச்சினைகளும் வந்து சேரும். அந்த வேலையை செய்வதால், அவர்களுக்கு எந்தவிதமான வருமானமும் இல்லை. ஒரு எளிமையான சந்தோசம் மட்டுமே. அந்தளவில், தினேஷ் உடம்புக்கு முடியாத அவனுடைய தாத்தாவுக்கு முடிந்தவரை சேவை செய்ய விரும்புகிறான். நீ அவனுடைய அந்த உரிமையை பறித்து விட்டதாக அவனுக்கு தோன்றி விட்டது.”
“சரி இப்போது நான் என்ன செய்யவேண்டும்? அவன் எப்போதும் போல சந்தோசமாக இருக்கவேண்டும். என்னிடம் கலகலப்பாக பேசவேண்டும்.”
“மிகவும் சுலபமான வேலை இது. நீ அவனை இன்று பள்ளிக்கு வழக்கம் போல அனுப்பிவிடு. எதுவும் பேச வேண்டாம். மாலை பள்ளியில் இருந்து அவன் வந்தவுடன், அவனிடம் கனிவாக பேசு. அவன் புரிந்துகொள்ளும்படியாக எடுத்துச்சொல். அவனிடம் இப்படி பேசு – “தினேஷ், நீ எப்போதும் போல தாத்தாவுக்கு உதவிகள் செய்து வா. ஒருவேளை உனக்கு பள்ளி வேலைகள் அதிகம் இருந்தால், நீ என்னிடம் சொல்லிவிட்டு, உன்னுடைய பள்ளிவேலைகளை செய். ” என்று. நான்கு நாட்களில் உனக்கு எல்லாம் தெளிவாகி விடும்.”
…..
ஐந்தாம் நாள். படுக்கப்போவதற்கு முன்பாக சாந்தி அவள் மனதில் தோன்றுவதை குமாரிடம் சொல்வது வழக்கம்.
“என்னங்க. தினேஷ் இப்போது என்னிடம் நன்றாக பேசுகிறான். காலையில் வழக்கம் போல தாத்தாவுக்கு உதவிகள் செய்யும் அவன், மாலையில் அவனுடைய ஹோம் ஒர்க் வேலைகளை செய்ய தொடங்கிவிடுகிறான். அவனாகவே மாலை நேரங்களில் அவனுடைய தாத்தாவை நான் கவனித்துக்கொள்ளும்படிக்கு என்னிடம் சொல்லிவிட்டான்”.
குடும்பத்தில் மீண்டும் தென்றல் காற்று வீசத்தொடங்கி விட்டது.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் கீழிருக்கும் லிங்க்கை கிளிக் செய்யவும்.