எழுத்தாளர் பெயர்: பாக்ய லட்சுமி
மழை இல்லாமல் வானவில் ஏது. வானத்தை அழகாக்கும் அந்த வானவில்லை ரசித்தபடி நின்றிருந்தாள் கண்ணம்மா. கண்ணம்மா அழகான பெயர். பெயருக்கு ஏற்றார் போல் அவள் குணமும் சரி அவள் தோற்றமும் சரி அழகுதான். பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்துவிட்டு தன் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கிய படி இருந்தாள் கண்ணம்மா.
வீட்டு வேலையிலும் படு சுட்டி ,மீன் குழம்பு வைப்பதில் பி.எச்.டி பட்டம் வாங்கியவள் என்று பட்டம் சூட்டலாம் அந்த அளவு காரசாரமான மீன் குழம்பு வைப்பதில் திறமைசாலி. உணவை சுவைத்து சாப்பிடும் போதே அதில் என்ன பொருள் சேர்த்துள்ளார்கள் என்பதை தெளிவாக புரிந்து கொள்வாள்.
“உன்ன கட்டிக்க போறவன் கொடுத்து வச்சவன்” என்பார் அவளுடைய பாட்டி ராக்காயி.
“அது சரி இல்லையா பின்ன” என்று சுட்டி யாய் பதில் தருவாள் கண்ணம்மா.
தேர்வு முடிந்து வீட்டில் உள்ளவளுக்கு பொழுது போகவில்லை. தன்னுடைய அத்தை வீட்டில் தங்கி விட்டு வருவதாக கூறிவிட்டு நகர்ந்தாள். அவள் அத்தை விடு நல்ல வசதி வாய்ப்பு படைத்த வீடு. பல ஏக்கர் சொத்துக்கள் இருந்தன. அவை அனைத்துக்கும் ஒரே வாரிசு அத்தை மகன் பாண்டி.
“டேய் பாண்டி யார் வந்துருக்கா பாரு” என்று அவன் அம்மா அழைத்ததும் ஓடி வந்து பார்த்தான் அந்த வேட்டி சட்டை அணிந்த முறுக்கு மீசைக்காரன் பாண்டி.
“என்ன புள்ள இம்புட்டு பேரும் வந்து இருக்க முன்னாடி எல்லாம் வரவே மாட்டியே” என்றான் பாண்டி.
“அடப் படிப்பு படிப்புன்னு ரொம்ப பிசியா இருந்த மாமா இப்பதான் எனக்கு ஓய்வு கிடைச்சிருக்கு வீட்ல இருக்குறதுக்கும் ரொம்ப போர் அதான் இங்க வந்தேன்” என்றாள் கண்ணம்மா.
“அது சரி இங்க மட்டும் உன் கூட போட்டி போட்டு விளையாட எந்த புள்ள இருக்கு. இங்கயும் உனக்கு செம போர் அடிக்கும்”என்றான் பாண்டி.
“எனக்கு ஏன் போர் அடிக்குது அதான் தோட்டம் தொரவெல்லாம் இருக்கே அதெல்லாம் சுற்றி காட்ட மாட்டீங்களா என்ன? டெய்லி அத்தை கையால ருசியா சாப்பிட போறேன் அப்புறம் வேற என்ன வேணும்” என்றாள் கண்ணம்மா.
“அப்படி சொல்லுடி என் மருமகளே” என்றார் அத்தை கீதாஞ்சலி.
அவள் எதிர்பார்த்தது போல் அத்தை கையால் ருசியான சாப்பாடு, உறங்குவதற்கு நல்ல பஞ்சு மெத்தையும். கோவில் தோட்டம் தொரவு என்று எல்லாவற்றையும் சுற்றி காண்பித்து அவளை உற்சாகப் படுத்தினாள் கீதாஞ்சலி.
‘இதெல்லாம் நான் யாருக்காக செய்றேன் எனக்கு மருமகளா வரப்போற பொண்ணுக்காக தானே செய்ற இதெல்லாம் எனக்கு சந்தோஷம்தான் என்று மனதில் நினைத்துக் கொள்வாள் கீதாஞ்சலி’
ஆனால் பாண்டி மனசில் கண்ணம்மா பற்றி எந்த ஒரு சிந்தனையும் இல்லை அவன் எதார்த்தமாக தான் பழகுகிறான் ஆனால் கீதாஞ்சலியோ தன் மகனுக்கு கண்ணம்மாவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக தான் இருக்கிறார். பலமுறை கீதாஞ்சலி இதைப் பற்றி பேசும்போதெல்லாம்…
“மா கண்ணம்மா சின்ன பொண்ணு இதெல்லாம் வேணாம் மா எனக்கு பொண்ணு கிடைக்காமையா போகப்போது விடுமா “ என்று பிடிப்பில்லாமல் பேசுவான். சொல்லப்போனால் கண்ணம்மா மனதிலும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக தெரியவில்லை.
நாட்கள் இப்படி ஏன் மெதுவாக கடந்தது அவளுடைய தேர்வு முடிவுகள் வரும் நாளும் வந்தது.
“பாண்டி மாமா நான் ரிசல்ட் பாக்கணும் என் கூட வரியா என்றாள் கண்ணம்மா”
“நெட் சென்டர் போகணுமா”
“இல்ல மாமா போன்லயே பார்க்கலாம் ஆனா எனக்கு ஓபன் பண்ணி பார்க்க ரொம்ப பயமா இருக்கு நீ கொஞ்சம் பார்த்து சொல்லு” என்று தன்னுடைய ரெஜிஸ்டர் நம்பரை கொடுத்துவிட்டு பார்க்க சொன்னாள். அவனும் அவள் கூறிய வலைதளத்தில் சென்று ஓபன் செய்து பார்த்தான். அந்த நிமிடம் கண்ணம்மாவுக்கு திக் திக் திக் என்றது மனது.
“கண்ணம்மா டென்ஷனா இருக்கியா?”
“ஆமா மாமா” என்றபடி அவன் கையை மெல்ல பிடித்தாள்.
“இங்க பாரு கண்ணம்மா இங்க நல்லவங்க கெட்டவங்க எல்லாம் ஒன்னும் நம்ம எடுக்குற மார்க்க வெச்ச எல்லாம் யாரும் முடிவு பண்ண போறதில்ல இந்த மார்க்கெல்லா வெறும் வேலைக்கு போறதுக்கும் மேல் படிப்பு படிக்கிறதுக்கு மட்டும்தான் யூஸ் ஆகும். இதெல்லாம் நெனச்சு ஏன் இவ்வளவு டென்ஷன் ஆகுற” என்று தைரியம் கூறினான் பாண்டி.
அவளுடைய மார்க் லிஸ்ட் ஓபன் ஆனது எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்றிருந்தாள் அது மட்டுமல்ல நல்ல மதிப்பெண் எடுத்திருந்தாள்.
“கங்க்ராட்ஸ் கண்ணம்மா” என்று முதலில் கை கொடுத்தவன் அவன் தான்.
600 க்கு 525 மதிப்பெண். நல்ல மதிப்பெண் தான் அவள் இஷ்டப்படும் கல்லூரியில் சீட் கிடைக்கும். அவள் விருப்பம் என்ன என்பதை அவளிடம் கேட்டறிந்தான் பாண்டி.
“மாமா, நான் கேட்டரிங் அண்ட் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கனும் ஆசைப்படுறேன். எனக்கு chef ஆக ஆசையா இருக்கு மாமா”
“ஹாஹா நல்ல யோசனை தான். சரி வா முதல்ல நம்ம எல்லார் கிட்டயும் சொல்லுவோம் “ என்று அவளை அழைத்துக்கொண்டு அவள் வீட்டுக்கு சென்றான்.
முதலில் ஓடிச் சென்று தன் தந்தையை கட்டி அணைத்தாள் கண்ணம்மா. அப்பா நான் பாஸ் ஆயிட்டேன் பாப்பா ஆனது மட்டுமில்ல நல்ல மார்க் எடுத்து இருக்கேன்பா அடுத்து நான் கேட்டரிங் படிக்கணும்னு ஆசைப்படுகிறேன் பா என்றாள் கண்ணீர் மல்க..
“என்ன? அடுத்து படிக்க போறியா”என்றார் தந்தை கஜேந்திரன்.
அந்த கேள்வியில் உறைந்து போனாள் கண்ணம்மா.
“என்ன பாக்குற? அடுத்து உன்னை படிக்க வைக்கிறேன்னு நான் சொல்லவே இல்லையே. இங்க பாரு உனக்கு கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன் மாப்பிள்ளை பார்த்துட்டு இருக்கேன். நல்ல வரன் அமைஞ்சா உடனே கல்யாணம்தான்” என்றார் கஜேந்திரன். அவள் மனதில் வைத்திருந்த கனவு எல்லாம் ஒரு நிமிடத்தில் நொறுங்கிப் போனது பித்து பிடித்தது போல் நின்றிருந்தாள் கண்ணம்மா.
“அடியே இப்ப எதுக்குடி இப்படி வாயை பிதுங்கி நின்னுட்டு இருக்க அதான் நல்லா வீட்டு வேலை எல்லாம் நல்லா செய்றியே கல்யாணம் பண்ணிட்டு போனா எல்லாம் நல்ல பேரு தான் எடுப்ப” என்றார் பாட்டி ராக்காயி.
“சரியா சொன்ன ஆத்தா. நல்லா புத்தி மதி சொல்லு உன் பேத்திக்கு “ என்றார் கஜேந்திரன் .
“என்னங்க அவசரப்படாதீங்க என்றாள் மனைவி மீனாட்சி.
“நீ சும்மா இரு உனக்கு ஒன்னும் தெரியாது எல்லாத்துக்கும் வந்துருவ”என்றார் கஜேந்திரன். இதையெல்லாம் பார்த்த பாண்டிக்கு மனம் விட்டு போனது. தன்னுடைய இருசக்கர வாகனத்தை கிளப்பிக்கொண்டு வீட்டுக்கு திரும்பினான் போகும் வழியில் அவன் மண்டைக்குள் என்னென்னவோ ஓடிக் கொண்டிருந்தது. அவன் கண் முன்பு தெரிவதெல்லாம் கண்ணம்மா அல்ல கண்ணம்மாவின் கனவு தான். நல்ல படிப்பு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று தன் காதலையே விட்டுக் கொடுத்தவன் பாண்டி. ஆம் அவனுடைய காதலி மேல்நாடு சென்று படிக்க ஆசைப்படுவதாக கூறி காதலிளிருந்து நழுவி அவனை விட்டு பிரிந்து விட்டாள்.
“உன் கூட இருந்தா நான் பத்து பாத்திரம் தான் விளக்கிட்டு இருக்கணும்”என்று அவன் காதலி சொன்னது இன்றும் சுருக்கென்று இருந்தது அவனுக்கு. இல்லை இல்லவே இல்லை கண்ணம்மா படிக்கனும் அதுக்கு நான் எதாவது செய்யனும் என்று யோசித்தபடி வீட்டுக்குள் நுழைந்தான்.
“மா உன் கிட்ட ஒன்னு பேசனும்”
“என்னடா சொல்லு”
“அம்மா ரொம்ப நாளா நீ கண்ணம்மாவ கட்டிக்க கட்டிக்க கேட்டுட்டே இருந்தியே இப்போ அதுக்கான எண்ணம் எனக்கு வந்துருச்சு நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன். நீ போய் கஜேந்திர மாமா கிட்ட பொண்ணு கேளுமா” என்றான் பாண்டி.
“என்னடா திடீர்னு இவ்ளோ நாளா கல்யாணமே வேண்டாம் அதுவும் கண்ணம்மா சின்ன பொண்ணு அது இதுன்னு சொல்லிட்டு திரிவ இப்ப என்ன ஆச்சு”
“அட என்னமோ ஆச்சி விடு போய் பொண்ணு கேளு “
“டேய் சும்மா எல்லாம் போய் கேட்க முடியாது அதுக்கு எல்லாம் நல்ல நாள் பாக்கணும் இவ்வளவு அவசரம் எதுக்குடா” என்றார் கீதாஞ்சலி.
“இது என்னமா புதுசா இருக்கு நீங்க வேணும்னு சொல்லும்போது நாங்க வேண்டாம்னு சொன்னா திட்டுறீங்க ஆனா நாங்க வேணும்னு கேட்டா மட்டும் எல்லாத்தையும் தள்ளி போடுறீங்க”என்றான் பாண்டி.
இப்ப வரைக்கும் எனக்கு என்ன பிரச்சனைன்னு சுத்தமா புரியலடா ஆனா ஒன்னு, மனசு மாறி இருக்க பாத்தியா அத நினைச்சு எனக்கு சந்தோஷம் தான் சரி வர வெள்ளிக்கிழமை நான் போய் கண்டிப்பாக பொண்ணு கேட்கிறேன் என்றார் கீதாஞ்சலி.
கீதாஞ்சலி மனதில் ஒரே குழப்பம் இது என்னடா புதுசா இருக்கு நம்ம பையன் வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தவன் இப்போ அவளை தான் கட்டிக்கணும்னு சொல்றான். சரி எது எப்படியோ நான் நினைச்சா மாதிரி கண்ணம்மாவும் பாண்டியும் கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லது தானே.
மகன் ஆசைப்பட்டது போல ஒரு நல்ல நாள் அன்று கண்ணம்மாவை பெண் கேட்டு சென்றார் கீதாஞ்சலி.
“அண்ணே உன் பொண்ணுக்கும் பையனுக்கும் பொருத்தம் எல்லாம் சரியா தான் இருக்கு. என் வீட்டு மருமகளா ஆக்கிக்க எனக்கு ரொம்ப ஆசை நீ மனசு வச்சா உடனே அதற்கான ஏற்பாடு பண்ணலாம்” என்று நேரடியாக தன் விருப்பத்தை கூறினாள் கீதாஞ்சலி.
“யாருக்கோ கட்டிக் கொடுக்கிறது என் தங்கச்சி மகனுக்கு கட்டிக் கொடுத்தா நல்லது தான். ஆனா என் பொண்ணுக்கு சம்மந்தமான கேட்டு சொல்றேன்” என்றார் கஜேந்திரன்.
‘ஐயோ இது என்னடா புது பிரச்சனையா இருக்கு அப்பா வேற பாண்டி மாமாக்கு கட்டி வைக்கிறேனு சொல்றாரு ஏதோ மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறாரு கொஞ்சநாள் அப்படியே நாள் கடத்தலாம்னு பார்த்தா உடனே கல்யாணம் நடந்துரும் போல இருக்கே அப்போ என் படிப்பு என்று யோசித்தாள் கண்ணம்மா’
“மாமா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
“என்ன கண்ணம்மா”
“இல்ல உங்களுக்கே தெரியும் நான் படிக்கணும்னு ஆசைப்படுறேன் இப்போ திடீர்னு கல்யாணம்னா எனக்கு எப்படி ஏத்துக்கிறதுன்னு தெரியல. நான் கண்டிப்பா படிக்கனும் “ என்று பேச்சை நிறுத்தினாள் கண்ணம்மா.
“உன் மனசுல இப்ப என்ன ஓடிட்டு இருக்குனு எனக்கு நல்லாவே புரியுது கண்ணம்மா. நீ கண்டிப்பா படிச்சு ஆகணும்னா அதுக்கு ஒரே வழி என்னை கல்யாணம் பண்ணிக்கிறது தான்” என்று பாண்டி கூறியவுடன் ஆச்சரியமாக அவனை பார்த்தாள்.
“என்ன அப்படி பார்க்கிற கண்ணம்மா? நீ வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்கிட்டனா கண்டிப்பா உன்னால மேற்கொண்டு படிக்க முடியாது குடும்பம் குழந்தைகள் அப்படியே உன் வாழ்க்கை போயிடும். சொல்லப்போனால் உன்னை கல்யாணம் பண்ணிக்கனும்னு நான் ஆசைப்படுறதே உன்னோட கனவை நிறைவேற்றனும்னு தான். நீ சாதிக்கனும்னு நினைக்கிறதை சப்போர்ட் பண்ண தான் உன் கழுத்துல தாலி கட்டப்போறேன். “
“மாமா…..” என்று அணைத்தாள் கண்ணம்மா.
“நீ படி தங்கம் கஜேந்திரன் பொண்ணா இல்லை இந்த பாண்டியோட பொண்டாட்டியா. நீ ஒரு நல்ல நிலைக்கு வர வரைக்கும் உன்னை எதுக்கும் கட்டாய படுத்த மாட்டேன். நான் சொல்றது உனக்கு புரியும் நினைக்கிறேன் “ என்றான் பாண்டி.
பாண்டியின் அன்பு அவளை மெய்சிலிர்க்க வைத்தது.
முற்றும்.
அறிவிப்பு: சித்திரைத் திருவிழா சிறுகதை போட்டியில் கலந்துக்கொள்ள விரும்புபவர்கள் லிங்க்கை கிளிக்செய்யவும்.