எழுத்தாளர்: தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன்
என் கல்யாணத்துக்கு எல்லா சொந்தக்காரர்களும் தவறாமல் வந்து வாழ்த்தினர். என் அப்பா இறந்து இரண்டு வருடங்கள் கழிந்துவிட்டன. அப்பா உறவுகளுடன் நெருக்கம்
குறைந்துவிட்டதோ என கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போ நிம்மதி. அத்தை, சித்தப்பா, பெரியப்பா மூவருமே தத்தம் குடும்பத்தோடு வந்து வாழ்த்தினர். பெரியப்பாவும் பெரியம்மாவுந்தான் சடங்குகளை நடத்தி வைத்தனர்.
அத்தை யாரிடமோ ” செல்வன்… நடக்றது, தலையசைக்கிறது, அன்பா பாக்குறது… பாசத்துல… எல்லாத்துலேயும் அவங்க அப்பாவைப்போலவே” என சொல்லிக்கொண்டிருந்தார். இத்தனைக்கும் அப்பா இறப்பதுவரை நான் அப்பாவிடம் நிறைய பேசியதில்லை, கொஞ்சியதில்லை, விளையாடிய தில்லை. எல்லாமே அம்மாவிடந்தான். பள்ளிக்கூட அட்டைல மட்டும் கையெழுத்து வாங்க அப்பாவிடம் போவேன். பக்கோடா, சேவு என வாங்கி வந்தால் அன்போடு கூப்பிட்டு கொடுப்பார். அவர் குரலே அன்பை சுலபமாக வெளிப்படுத்தும். அந்த அன்புக்குரல் வேறு யாரிடமும் கேட்டதில்லை நான்.
அம்மா அடிக்கடி அப்பாவைக் குறை சொல்வது ஒரே ஒரு விஷயத்துக்காகத்தான். “ஏஞ் செயினை பாலிஷ் பண்ணி அண்ணன் பொண்ணு கலியாணத்துக்குப் போட்டாரு… அதுக்குப் பதிலா புதுசு வாங்கியே தரலை” என நானும் சின்னப்பிள்ளைலருந்து அப்பா சாகிறவரை ஒரு இருநூறு தடவையாவது கேட்டு கேட்டு அம்மா மேல பரிதாபமும் அப்பாகிட்டே சின்னதா…. கடுகளவு வெறுப்பும் ஆழ்மனசுல அடைக்கலமாயின. அது தப்பா சரியான்னு புரியாத வயசுல அம்மா சொன்னது ஆழ்கடல் சிப்பி போல பதிஞ்சிட்டது.
என் தம்பி கலியாணத்தையே நான் நடத்திவச்சபோதுதான் அப்பா பண்ணியது இயல்பான ஒன்றுதான்; அம்மாவின் புலம்பல் தேவையற்றது என உணர்ந்தேன். வீட்டிலே பிள்ளைகளுக்கு சாப்பாடு, படிப்பு, துணி மணிகளுக்கு மற்றும் வீட்டுவாடகை போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கே அப்பா சம்பாத்தியம் போதுமானதாயிருந்து. இதுலே புதுசா நகை எங்கே வாங்க?. எனக்கு புரிந்தபோது தந்தை இந்த உலகத்திலேயே இல்லை. அவரிடம் மன்னிப்பு கேட்க கூட வழியில்லை. நினைக்க நினைக்க என் கண்கள் ஈரமாயின. கல்யாணம் முடிஞ்சபிறகு அப்பாவிடம் கேட்கமுடியாத மன்னிப்பை பெரியப்பா முன் கைகூப்பி நின்று மனசுக்குள் கேட்டபோதுதான் எனது மனசே நிர்மலமானது.
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!