எழுத்தாளர்: சங்கீதா ராம்நாத்
” வாடா உதயா என்ன இன்னைக்கு தூங்க கொஞ்ச நேரம் ஆயிடுச்சு போல இவ்வளவு நேரம் கழிச்சு வந்திருக்க? “
” ஆமாப்பா ஆனா என்னோட கனவுல நீங்க எப்படி? “
“டேய் நீ நேர்ல தான் பேசமாட்ட சரி உன் கனவுல வந்து பேசலாம்னு வந்தேன்,அது மட்டும் இல்லாம இன்னைக்கு நீ கொஞ்சம் கவலையில இருக்க போல என்னோட முகம் நூல்ல நான் போட்ட பதிவுக்கு நீ விருப்பம்னு போட்டு இருக்க என்கிட்ட பேசணும்னு உனக்கு தோனியிருக்கு ஆனா பேச முடியல அதான் நானே பேச வந்துட்டேன்”
” எல்லாம் என் பையன பத்தி தான் அப்பா”
” என்ன உன்னைய எதிர்த்து பேசிட்டானா! அப்படி சொல்றதை விட எடுத்துறிஞ்சு பேசிட்டான்னு சொல்லலாம் சரிதானே”
” ஆமாப்பா அது தான் உண்மை”
“உதயா எல்லாருக்கும் தெரிஞ்ச கதை இப்போ உனக்கு சொல்றேன்”
“அது என்ன கதைப்பா சொல்லுங்க?”
” முதல் முறையா என்கிட்ட ஆர்வமா கேக்குற சொல்றேன் காட்டுல ஒரு சிங்கத்த குரங்கு ரொம்ப நாளா தொல்ல பண்ணிக்கிட்டே இருந்துச்சு சிங்கம் தூங்குற நேரமா பார்த்து அத காத இழுத்துட்டு ஓடிடும் ஒரு நாள் அந்தக் குரங்க பின்னாடியிலிருந்து நரிகள் தாக்க வந்துச்சு இத தெரிஞ்ச சிங்கம் ஒரே போடு தான் நரி கூட்டமே அலறிட்டு போயிட்டு அப்போதான் குரங்கு பயத்துல கேட்டுச்சு “எனக்கு பின்னாடி வந்த நரி கூட்டமே தெரிஞ்சிருக்குனா நான் வந்தது உங்களுக்கு தெரியாமையா இருந்திருக்கும்? “”கண்டிப்பா தெரியும் இருந்தாலும் உன்னோட சந்தோசத்துக்காக நான் அமைதியா இருந்தேன் அது மாதிரி தான் உதயா பசங்க என்ன பண்றீங்கன்னு எங்களுக்கு தெரியும் இருந்தாலும் நாங்க உங்களுக்கு ஏதாவது ஆபத்துனா எங்களால சும்மா இருக்க முடியாது “
” நீங்க சொல்லவர்றது எனக்கு புரியுது அப்பா நானும் இனிமே சிங்கமாயிருக்க போறேன்” இருவரும் பேசிக் கொண்டுயிருக்கையிலே ஒரே நேரத்தில் கடிகார அலாரமும் ஒலித்தது,வாசல் கதவு மணியும் ஒலித்தது
“ஏங்க… ஏங்க…மாமா வந்திருக்காங்க”
” அப்பா வந்திருக்காங்களா?” என்று சொல்லிக்கொண்டே ஒரு சிறு பிள்ளையை போல குதித்து ஓடினான் அதை வாசலில் நின்ற அவன் தந்தைக்கு தன்மகன் சிறுவயதில் தான் கடைக்கு செல்லும் பொழுது நானும் வருவேன் என்று ஓடிவந்த ஞாபகம் வந்தது
“அப்பா என்ன இவ்வளவு தூரம் சொல்லியிருந்தா நானே வந்து இருப்பேன்ல”
” இல்ல உதயா உன் ஞாபகமா இருந்துச்சு அதான் வந்துட்டேன்”
” வாங்கப்பா உங்ககிட்ட நிறைய விஷயம் பேசணும் என்று சொல்லிக்கொண்டு தன் தந்தையின் தோள்மேல் கையை வைத்து உள்ளே அழைத்து சென்றான்
முற்றும்.
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!