திகில் போட்டிக் கதை: யாரடி அந்த மோகிநி

by admin 2
54 views

மூச்சு வாங்கியது எனக்கு. இருந்தும் நில்லாது ஓடினேன் நான்.
ஆம் முன்னால் போகும் என் மகள் சுப்ரஜாவைத் தொடர்ந்து–
காட்பாடி இரயில் நிலையத்தில் ஏற்காடு எக்ஸ்பிரஸ்  வந்து
நின்றுவிட்டது. சென்னையிலிருந்து  முதல் வகுப்பில் வரும் என் கணவர்
இளங்கோவுடன் நாங்கள் சேர்ந்து கொள்ள வேண்டும். சுப்ரஜாவின் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நான் மட்டும் வேலூருக்கு வந்தேன். நிகழ்ச்சி முடிந்து நாங்கள் வருவதற்கு தாமதமாகிவிட்டதால் இப்படி மூச்சிரைக்க ஓட வேண்டியதாயிற்று.
முன்னே சென்ற சுப்ரஜா முதல் வகுப்பு பெட்டியின் கதவைத் திறந்து உள்ளே சென்றவள் சென்ற வேகத்திலேயே கீழே இறங்கி “அம்மா, அம்மா,அங்கே  அப்பா இறந்து கிடக்கிறார். வண்டியை நிறுத்துங்கள்” என்று அலறியவாறு  கண்களில் நீர் வழிய என்னை நோக்கி ஓடி வந்தாள். உடனே சிகப்பு கொடியைக்காட்டி இரயிலை நிப்பாட்டிய ஸ்டேஷன் மாஸ்டரும் இரயில்வே போலீசாரும் அவளுடன் அந்த பெட்டியை நோக்கி விரைந்தனர். அதிர்ச்சியில்  என்னால் ஓட முடியவில்லை
அப்படியே தரையில் சாய்ந்துவிட்டேன்.யாரோ முகத்தில் தண்ணீர் தெளித்ததில் எழுந்து  சுப்ரஜா நின்ற இடத்திற்கு வேகமாக போனேன்.
என் கணவர் இளங்கோ ஒரு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி. ஆறு மாதத்திற்கு முன்  முக்கியமான வழக்கு ஒன்றில் ஒரு நபர் கமிஷன் நீதிபதியாக அரசால் நியமிக்கப்பட்டார். இறுதி அறிக்கையை தயாரித்து அடுத்த 15 நாட்களுக்குள் அரசுக்கு சமர்ப்பிக்கவிருந்தார். ஈரோட்டில் மறுநாள் நடைபெறவிருந்த அவரது அண்ணன்
மகளின் திருமணத்திற்கு நாங்கள் மூவரும் போவதாக திட்டமிட்டு இருந்தோம். எல்லாம் தவிடுபொடியாகி  அவரது உடலை எடுத்துக் கொண்டு போகும்படியாகிவிட்டது.
போலீஸாரின் சம்பிரதாய சடங்குகள் முடிந்து சென்னை திரும்பி அவருக்கு செய்ய வேண்டிய ஈமச் சடங்குகள் முடிந்தன.
ஒரு வாரம் சென்று தினேஷ் தன்னை அந்த கேசில் புலன் விசாரணை அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம்  வந்தார். போஸ்ட்மார்ட்ட அறிக்கைப்படி
இளங்கோ கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றும் அதுபற்றி விசாரிக்கவே வந்ததாக சொன்னதும் நான் அதிர்ந்து போனேன்.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு யாருடனும் விரோதம் இல்லை. மனசாட்சிக்கும் கடவுளுக்கும் மட்டுமே அஞ்சி நேர்மை தவறாமல் வாழ்ந்தவர் என்று நான் கூறியதை பொறுமையாக கேட்டுவிட்டு “அவருக்கு பெண் தொடர்பு ஏதும் இருந்ததா?” என்று
தினேஷ் கேட்டதும் “அவர் அடிக்கடி சொல்வது போல போலீசாருக்கு இப்படித்தான் புத்தி போகும்” என்று எரிச்சலோடு சொல்லிவிட்டு  எழுந்தேன்.

“மன்னித்துக் கொள்ளுங்கள் அம்மா. அன்று அவர் பயணித்த முதல் வகுப்பு பெட்டியில் ஒரு துப்பட்டா இருந்ததால்தான் சந்தேகப்பட்டு கேட்டேன் என்றார்” தினேஷ்.
“கண்ணியமாகவும் கட்டுப்பாட்டுடனும் வாழ்ந்த என் கணவனின் மீது இதுபோன்ற சந்தேகங்களை கிளப்பி பத்திரிகைகள் மூலம் அவரை கேவலப்படுத்தாதீர்கள்” என்று சொன்னேன்.
“இல்லையம்மா. இது இரகசிய விசாரணை. ஊடகங்களில் கசிய விடமாட்டோம். உண்மையான குற்றவாளியைப் பிடிக்க வேண்டும் என்று அலையும் போது ஒவ்வொன்றையும் பொருத்தி எல்லா கோணங்களிலும் பார்க்க வேண்டுமல்லவா? 
வேறு ஏதேனும் முக்கியமான தகவல் கிடைத்தால் என்னுடைய தனிப்பட்ட மொபைல் எண்ணுக்கு தெரிவியுங்கள்” என்று தனது மொபைல் எண்ணை கொடுத்து விட்டு
சென்றார். 15 நாட்கள் ஓடி விட்டன. அன்று அவருடைய புத்தக அலமாரிகளை தூசி தட்டி துடைத்துக் கொண்டிருந்தேன்.
அதில் ஒரு அலமாரியில்  பொருத்தமில்லாத அளவில் ஒரு சிறிய கையடக்க டயரி இருந்ததைப் பார்த்தேன். அது இந்த ஆண்டின் டயரி.  என்ன எழுதியிருக்கிறார் என்ற  ஆவலில் அந்த  குறிப்புகளைப் படித்தேன். அவர் பதவியேற்ற பத்தாவது நாளில் டைப்பிஸ்டாக பதவியேற்ற ஜுலியைப் பற்றி முதல் நாளே “வெரி ஸ்மார்ட்” என்று
பதிவிட்டிருந்தார். ஒரு மாதத்திற்கு பின் ஒவ்வொரு குறிப்பிலும் ஜூலியின் திறமையைப் பாராட்டி அழகோடு அறிவும் நிறைந்தவள் என்று எழுதியிருந்தார். ஒருவேளை அவளிடம் சபலப்பட்டிருப்பாரோ என்று எண்ணினேன். மேலும் புரட்டியபோது இரண்டு முறை மதிய உணவுக்காக ஜூலியுடன் வெளியே போனதாகவும் அவை இனிமையான நாட்களாக இருந்ததாகவும் எழுதப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனேன். ஒருவேளை தினேஷ் சந்தேகப்பட்டது போல் இளங்கோவுக்கு இந்த ஜூலியுடன் தொடர்பு இருந்திருக்கலாமோ என்று தோன்றியது. அதனால் ஜூலியைப் பற்றி  தினேஷிடம் சொல்வது உசிதம் என்று அவரை அழைத்தேன்.
“அன்று உங்கள் கணவரின் பெண்கள் தொடர்பு குறித்து நான் கேட்டபோது வெகுண்ட நீங்கள் இன்று எந்த ஆதாரத்தை வைத்து இப்படி ஜூலியுடன் தொடர்பு இருக்கலாம் என்று சொல்லுகிறீர்கள்?” என்று கேட்ட தினேஷிடம் அந்த டயரியைக் காட்டினேன். 
அந்த சந்தேகம் அன்று இளங்கோவின் பர்சில் ஜூலியின் ஃபோட்டோவைப்
பார்த்ததுமே இருந்ததாகவும் ஆனால் துப்பட்டா பற்றிக் கேட்டதற்கே நான்
கோபப்பட்டதால் என்னை மேலும் வருத்தப்படவைக்க வேண்டாமென்றே
சொல்லாமல்  மறைத்ததாக சொன்னார்.
“அம்மா, இதிலுள்ள குறிப்புகள் இந்த கேசில் துப்பு துலக்க உதவலாம் என்று
எண்ணுகிறேன். ஆகவே இது என்னிடம் இருக்கட்டும்” என்று கூறி வாங்கிப் போனார்.

இரண்டு நாட்கள் சென்று  என்னைப் பார்க்க வந்த தினேஷ் “ஜூலியிடம்
விசாரித்ததில் அவர்களுக்கிடையே தவறான தொடர்பு ஏதும் இருந்ததாக
தெரியவில்லை.  அவருக்கு அரசியல்வாதிகள் பலரிடமிருந்து அழுத்தமும் மிரட்டலும் இருந்ததாக தெரிகிறது. பெருந்தொகை தருவதாக சொல்லி அவரை வீழ்த்தப்பார்த்தவர்களும் உண்டாம்.
இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை இறுதி செய்து அரசுக்கு அளிக்கவிருந்ததாக சொன்னாராம்.
” இந்த டயரியில் சில பக்கங்களில் “மோ?” என்றும் சிலவற்றில் “நீ?” என்றும் “கி?” என்றும் வலது மூலையில்  கேள்விக் குறியிட்டு சிகப்பு மையில் எழுதியிருக்கிறாரே?  அதுபற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா? என்று கேட்டதற்கு உதட்டைப் பிதுக்கி “தெரியாது” என்றேன்.
” இதே கேள்வியை ஜூலியிடமும் கேட்டேன். அவளும் தெரியாது
என்றாள்.அனாவசியமாக ஒரு எழுத்தை  கேள்விக்குறியிட்டு சிகப்பு நிறத்தில் குறிப்பதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். சரி பார்க்கலாம்” என்று விடைபெற்று சென்றார்.
சில நாட்களுக்குப்பின் திடீரென்று ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. உடனே தினேஷை அழைத்தேன்.
ஒருநாள் காலை தங்கள் ஊரில் பள்ளி ஆண்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அவரை அழைப்பதற்காக நித்தியானந்தம் என்பவர் சில ஆசிரியர்களோடும் மாணவர்களோடும் வந்திருந்தார். 
அவர்கள் சென்ற பின்னர் என்னிடம் “இந்த நித்தியானந்தம் ஒரு அயோக்கியன். இவனோடு இன்னும் சில அயோக்கியர்களும் பெரிய மனிதர்கள் போர்வையில் சமூகத்தில் செய்யாத குற்றங்களே கிடையாது. இனி இதுபோல யாராவது வீட்டிற்கு வந்தால் அலுவலகத்தில் வந்து பார்க்குமாறு சொல்லி அனுப்பிவிடு” என்று என்னிடம் கடிந்து கொண்டார்.  கூடவே செக்யூரிட்டியிடமும் உத்தரவிட்டார்.  ஒருவேளை நி என்ற குறிப்பு நித்தியானந்தமாக இருக்கலாமோ என்று அவரை அழைத்ததாக சொன்னேன். தினேஷ்  ஜூலியிடம்  நித்தியானந்தம் என்ற பெயரில் யாராவது அந்த வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா என்று கேட்க அவள் உடனே “ஆம். நித்தியானந்தம் என்பவரை பலமுறை விசாரித்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறாள். அது மட்டுமல்ல. அந்த டயரில் “நி” என்று குறிக்கப்பட்டிருந்த எல்லா நாட்களிலும் 
நித்தியானந்தம் விசாரணைக்கு ஆஜராகியிருக்கிறார் என்பதையும்  தெரிந்து கொண்டார்.
ஜுலியுடன் அலுவலகப் பதிவுகளைத் துருவித்துருவி ஆராய்ந்ததில் மோஸஸ் என்பவரும் கில்பர்ட் என்பவருங்கூட நித்தியானந்தத்தைப் போலவே பலமுறை விசாரிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதால் அவர்களைத்தான் “மோ” என்றும் “கி” என்றும் குறித்திருக்க வேண்டும் என்று முடிவு செய்தார் தினேஷ்.

அவர்களது முகவரிகளை வாங்கிக்கொண்டு CCTVயில் பதிந்திருந்த அவர்களது உருவங்களையும் மனதில் பதித்துக் கொண்டார்.
அந்த மூவரில் யாரோதான் இளங்கோவை கொலை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் வலுத்தது தினேஷுக்கு.  ஆனால் சரியான தடயமின்றி மூன்று பிரமுகர்களையும் நெருங்க முடியாதே என்று குழம்பினார். நிதானமாக கொலை நடந்த அன்றைய சென்ட்ரல் ஸ்டேஷனின் CCTV  கேமரா பதிவுகளில்   ஏதாவது துப்பு
கிடைக்காதா என்று துழாவினார்.. அதில்  இளங்கோ இரண்டு காவலர்கள் பாதுகாப்புடன் வந்து பெட்டியில் ஏறுவது தெரிந்தது. இரயில்  நகரத் தொடங்கியதும்  ஒரு போர்ட்டர் வேகமாக ஓடி வந்ததைப்
பார்த்தான்.  அவன் தலையில் கட்டியிருந்த துணி வித்தியாசமாகவும் இளங்கோவின் பிணத்தினருகே இருந்த துப்பட்டாவைப் போலவும் தோன்றியது.  போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கிறார் என்றிருந்ததும் நினைவுக்கு வந்தது. ஒரு வேளை இவன் இந்த துப்பட்டாவைப் பயன்படுத்தி கொலை செய்திருக்கலாமோ என்று ஐயப்பட்டார்.
அதனால் கேமரா பதிவுகளை மீண்டும்ஆராய்ந்தார்.  இரயில் புறப்படுவதற்குமுன் அந்தப் போர்ட்டருடன் ஒதுக்குப்புறமாக நின்று  இரகசியமாக பேசிக் கொண்டிருந்தவர்  நித்தியானந்தம் போல தெரிந்தது.  மறுநாள் காலையில் ஜூலியிடம் காட்டி அது நித்தியானந்தமே என்று உறுதி செய்து கொண்டான்.
இரயில்வே அதிகாரிகளிடமும் மற்ற போட்டர்களிடமும் விசாரித்து அது பதிவு பெற்ற போர்ட்டர் அல்ல என்பதை அறிந்து கொண்ட பின்  போலீஸ் மூலம்  அது கூலிப்படை சேவியர் என்பதை தெரிந்து கொண்டார். ஆகவே நித்தியானந்தந்தான் சேவியர் மூலம் கொலை செய்திருக்கக்கூடும் என்று தீர்மானித்தார்.
நித்தியானந்தத்தின் வங்கி கணக்கிலிருந்து  கொலை நடப்பதற்கு  ஒரு வாரம் முன்பு 30 லட்சமும் கொலைக்குப் பின் 5 நாட்கள் சென்று 20 லட்சமும் சேவியரின் கணக்கிற்கு அனுப்பப்பட்டிருந்ததையும்
அதே நாட்களில் அவனுடைய கணக்கில் மோஸஸ் மற்றும் கில்பர்ட்டிடமிருந்தும் 50லட்சம் பெறப்பட்டிருந்ததையும் கண்டுபிடித்தார். இந்த ஆதாரங்களை  உறுதிப்படுத்திக் கொண்ட பின்  சேவியரை கைது செய்தார். பணத்திற்கு ஆசைப்பட்டு நித்தியானந்தத்தின் திட்டப்படியே கொலை செய்ததாகவும் போலீசாரின் கவனத்தை திசை திருப்பவே துப்பட்டாவையும் பர்சில் ஜூலியின் ஃபோட்டோவையும் வைத்ததாகவும் ஒப்புக்கொண்டான். அவனிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற்ற பின்  மற்ற மூவரையும் கைது செய்தார் தினேஷ்.
நால்வரும் தற்போது புழல் சிறையில். இந்த மோகிநி விளையாட்டால் இன்ஸ்பெக்டர் தினேஷுக்கு வெற்றியே.
ஆனால் எனக்கும் சுப்ரஜாவுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று நிருபர்களிடம் கூறிவிட்டு கண்ணீரைத் துடைத்தபடி உள்ளே சென்றேன்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள:

https://aroobi.com/14625-2/

10 வரி கதை போட்டியில் கலந்து கொள்ள வேண்டுமா?! https://aroobi.com/10%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!