காதல் உலா
காற்றையும் நீரையும் உறிஞ்சி
பெருத்து மிதக்கும்
கொண்டல்களின் ஆட்சியால்
ஆகாயம் தன் வண்ணம் இழந்து
வெண்பஞ்சு பொதிகளையும்
கரும்பஞ்சு பொதிகளையும்
உலவ விட்டு வேடிக்கை பார்க்க…
விண் முட்டி நிற்கும்
மலைச் சிகரங்களின்
அழகினை கூட்டிட
முகில்கள் குன்றுகளை உரசி
பேரழகாக உயர்ந்து நிற்க…
கரும்பச்சை விருட்சங்கள் ஓங்கி
உயர்ந்து வளர்ந்து நிற்க
அவை செழித்து வளர
நீல வண்ண உடையணிந்து
ஆழி தேவதை பரந்து
பாரதமெங்கும் விரிந்து பாய்ந்தோட…
கொள்ளை கொள்ளும்
இப்பேரழகு இயற்கையை ரசித்திட
பௌவத்தை களைந்து
அலைகளுடன் மோதி
நுரைகளை நுரைக்க தள்ளி
தடைகளை தகர்த்தெறிந்து
நகர்ந்திடும் ஓடத்தில்
நீயும் நானும் மட்டும்
காதல் உலா
செல்வோம் பேரன்பே…!
✍️அனுஷாடேவிட்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)