சிறகுகளை விரித்துப் பறக்கும்
பறவைகளின் எச்சத்திலிருத்து
விடுவிக்கப்பட்ட விதைக்கரு
எப்படியாவது மீண்டெழுந்துவிடலாமென
நம்பித்தான்
மண்ணை முத்தமிட்டது
விழுந்த கணமே
மறு பிழைப்பு மறுக்கப்பட
மண்வாசம் நுகர முடியாமல்
குன்றாய்க் குவிக்கப்பட்ட
குப்பைகளின் கைகளின் குடுவையுருத் தாவரத்தின்
உள் செலும் பூச்சியாய்
பரிதவித்து வீழும் நேரத்தில்
திடீரென முகிலின் தூறலில்
மண் வாசனையின் வாசத்தால்
சுவாசம் பெற்ற பின்
முளைத்து வளர முடியுமா?
கேள்விகளே வேள்வியாக
வதை பட்டாவது
வளர்ந்து விட வேண்டுமென
வெறிகொண்டு இடம் கண்டு
ஒழுகு நீர் நுணங்கறல் போல
நிலமதில் பாய்ந்து
மதிலாய் வேரமைத்து
குப்பைகளின் மையத்தில்
மையம் கொண்டு
மெது மெதுவாய்
உயிர் பெற
சுமக்கப்பட்ட சுமைகள்
எத்தனை?எத்தனை?
மண்மணம்
குப்பை மேடுகளால் மணமிழக்காவிடில்
விதைக்கப்படும்
விதைகளெல்லாம்
விருட்சப் பயணத்தில்
வாகை சூடும்!
ஆதி தனபால்