மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீரின் அழகியல் உணர்வு மிளிரும் நாவல் “எங்க உப்பப்பாவுக்கொரு யானை இருந்தது“; தமிழில் மொழிபெயர்த்திருப்பவர் குளச்சல் மு. யூசுப்.
இந்நாவலின் மைய கதாபாத்திரம் குஞ்ஞுனுபாத்துமா. வயிற்றில் கருவை சுமக்கும் குருவியிடம் காட்டும் அன்பு, குளிக்கும் போது தன் உடலில் ஒட்டிக் கொண்டு ரத்தத்தை உறிஞ்சும் அட்டையை மீண்டும் நதியிலேயே விட்டுவிடும் மனது என குஞ்ஞுனுபாத்துமாவின் உலகம் குழந்தைமையின் அன்பால் நிறைந்தது; நாவல் முழுவதும் இத்தன்மை தான் இழையோடி நிற்கிறது.
குருவிகளுக்கான சண்டையை நிறுத்த “தூஸ்..தூஸ்…”என குரலெழுப்பும் அணிலுடன் சேர்ந்து குரல் கொடுக்கும் எளிய மனம் கொண்டவள் குஞ்ஞுனுபாத்துமா. இந்த நாவலில் குழந்தைப் பருவத்திலிருந்து, திருமணப் பருவம் வரை காட்டப்படும் குஞ்ஞுனுபாத்துமாவின் உலகம் நம்முள் உள்ள குழந்தைமையைத் தீண்டி பூ மலர்வது போல் மலரச் செய்கிறது.
குழந்தைத்தனமான, கள்ளமில்லாத மனம் கொண்ட குஞ்ஞுனுபாத்துமாவின் உலகத்தில் வன்முறைக்கு இடமில்லை. குழந்தைகளின் கண்களால் பார்க்கப்படுபவை அவளது உலகம். இத்தகைய அரிய குணாதிசயங்களால் என்னைக் கவர்ந்த கதாபாத்திரமாக மிளிர்கிறாள் குஞ்ஞுனுபாத்துமா.